புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

06 February 2020

இன்றைய புனிதர் : (06-02-2020) மறைசாட்சியாளர் பவுல் மீகி மற்றும் தோழர்கள்

இன்றைய புனிதர் : 
(06-02-2020) 

மறைசாட்சியாளர் பவுல் மீகி மற்றும் தோழர்கள் Paul Miki und Gefährten SJ

பிறப்பு1565,சியோட்டோ Kyoto, ஜப்பான்

இறப்பு 5 பிப்ரவரி, 1597 நாகசாகி, ஜப்பான்

புனிதர்பட்டம்: 8 ஜூன் 1862, திருத்தந்தை 9 ஆம் பயஸ்

இவர் ஜப்பான் நாட்டில் வாழ்ந்த ஓர் கிறிஸ்தவ பெற்றோரின் மகனாகப் பிறந்தார். இவர் தனது 22 ஆம் வயதில் இயேசு சபையில் சேர்ந்தார். மிகச் சிறந்த மறையுரையாளரான இவர், ஜப்பான் நாட்டில் சிறப்பாக மறைப்பணியாற்றினார். 1587 ஆம் ஆண்டு சோகுண்டோயோடோமி ஹிடேயோஷி Shogun Toyotomi Hideyoshi என்பவர் இட்ட கட்டளையின் பேரில் இப்புனிதர் பிடிக்கப்பட்டு தனித்தீவிற்கு கொண்டுச் செல்லப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இருப்பினும் இவர் ஆற்றியப் பணி மக்களிடையே தீப்போல பரவியது. இவரின் தோழர்களும் மறைப்பணியை சிறப்பாக ஆற்றினர். கிறிஸ்தவ மக்கள் பெருகினர். இதனால் சோகுன் டோயோடோமி ஆத்திரமடைந்து 25 தோழர்களையும் பிடித்து சிறையிலடைத்தான். பின்னர் நாகசாகி நகருக்கு இழுத்துச் செல்லப்பட்டு சிலுவையில் அடித்து கொல்லப்பட்டார்கள்


செபம்:
ஆற்றல் வழங்கும் எம் தந்தையே! இன்றைய நாளில் நினைவுகூரும் இப்புனிதர்களுக்கு நீர் சிலுவையின் வழியாக உமது எல்லையில்லா பேரின்ப வாழ்வை அளித்தீர். நாங்கள் உமது விசுவாசத்தில் நிலையாக நிலைத்திருந்து, இறை நம்பிக்கையை எங்களின் இறுதி மூச்சுவரை பற்றிக்கொள்ள உம் அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சி மன்றாடுகின்றோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

இன்றைய புனிதர் (பெப்ரவரி 6) ✠புனிதர் கொன்சாலோ கார்ஸியா

† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 6)

✠ புனிதர் கொன்சாலோ கார்ஸியா ✠
(St. Gonsalo Garcia)

ஃபிரான்சிஸ்கன் சபையின் குருத்துவம் பெறாத பொதுநிலை சகோதரர் மற்றும் மறைசாட்சி:
(Franciscan Lay Brother and Martyr)

பிறப்பு: ஃபெப்ரவரி 5, 1557
வாசை, மும்பை, போர்ச்சுகீசிய இந்தியா
(Vasai, Mumbar, Portuguese India)

இறப்பு: ஃபெப்ரவரி 5, 1597
நாகசாகி, ஜப்பான்
(Nagasaki, Japan)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: செப்டம்பர் 14, 1627
திருத்தந்தை எட்டாம் அர்பன்
(Pope Urban VIII)

புனிதர் பட்டம்: ஜூன் 8, 1862
திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்
(Pope Pius IX)

நினைவுத் திருநாள்: ஃபெப்ரவரி 6

முக்கிய திருத்தலங்கள்:
புனிதர் கொன்சாலோ கார்ஸியா ஆலயம், காஸ், வாசை
(St. Gonsalo Garcia Church, Gass, Vasai, India)

பாதுகாவல்:
ரோமன் கத்தோலிக்க உயர் மறைமாவட்டம், மும்பை
(Roman Catholic Archdiocese of Bombay, East Indian Community)

புனிதர் கொன்சாலோ கார்ஸியா, போர்ச்சுகீசிய இந்தியாவில் பிறந்து, ஜப்பான் நாட்டில் மறை சாட்சியாக மரித்த ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் இருபத்தாறு புனிதர்களுள் ஒருவர் ஆவார். இவர் ஒரு ஃபிரான்சிஸ்கன் பொதுநிலையினர் சகோதரர் (Franciscan Lay Brother) ஆவார். இந்தியாவில் பிறந்து, அருட்பொழிவு செய்யப்பட்ட முதல் புனிதரும் இவரேயாவார். மும்பை நகரின் வடக்கே, சுமார் முப்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மேற்கத்திய கடற்கரை நகரான வாசை என்னுமிடத்தில் பிறந்தார். இவர் வாழ்ந்த அக்காலத்தில், அப்பகுதி போர்ச்சுகீசிய காலணித்துவ ஆட்சியின்கீழ் இருந்தது.

இவரது தந்தை ஒரு போர்ச்சுகீசிய படை வீரர் ஆவார். தாயார் “கொங்கண்” (Konkan) மொழி பேசும் ஒரு இந்தியப் பெண் ஆவார். இவர், ஜப்பான் ஃபிரான்சிஸ்கன் சபைத்தலைவரான புனிதர் பீட்டர் பாப்டிஸ்டின் வலக்கரமாக இருந்தார்.

"குன்டி ஸ்லாவுஸ் கார்ஸியா" எனும் இயற்பெயர் கொண்ட இவர், வாசையில் பணியாற்றிய 'செபஸ்தியோ கான்கால்வ்ஸ்' என்னும் இயேசு சபை குருவிடம் கல்வி பயின்றார். இயேசு சபையினரிடமே கி.பி. 1564 முதல் 1572 வரை எட்டு வருடம் பயின்றார். தனது 15ம் வயதில் குரு செபஸ்தியோவுடன் ஜப்பான் சென்றார். ஜப்பானிய மொழியை இவர் எளிதில் கற்றதால், அம்மக்களின் நன்மதிப்பைப் பெற்றார். இவர் அங்கிருந்து ஆல்கோ சென்று வணிகம் செய்தார். அது தென்கிழக்காசியா முழுவதும் பல கிளைகள் கொண்டு பரவியது.

இவரின் கனவான இயேசு சபை குருவாவது நிறைவடையாமலேயே இவர் ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலாவுக்கு பொதுநிலை மறைப்பணியாளராய் சென்றார். அங்கே ஃபிரான்சிஸ்கன் சபைக் குருவான பீட்டர் பாப்டிஸ்டினால் தூண்டப்பட்டு அச்சபையில் பொதுநிலை சகோதரராக சேர்ந்தார். தொழு நோயாளர்களோடு அங்கே பணியாற்றினார். அப்போதே அவர் அச்சபையில் திருநிலைப்பாட்டினைப் பெற்றார்.

மே 26, 1592ல் ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் எசுபானிய ஆளுனரால் அரசு சார்பாக ஜப்பானுக்கு அனுப்பப்பட்டார். அங்கே நான்காண்டுகள் பணிபுரிந்த பின்னர், அப்போது ஜப்பானிய சர்வாதிகாரியால் ஆட்சி விரோதச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் தங்கியிருந்த மியாகோ (கியோத்தோ) என்னும் இடத்திலிருந்த மடத்திலேயே 8 டிசம்பர் 1596 அன்று சிறைவைக்கப்பட்டார். சிலநாட்களுக்கு பின் மாலை செபம் செய்து கொண்டிருந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஜனவரி 3, 1597 அன்று கைது செய்யப்பட்ட 26 பேர்களுடைய இடது காதுகள் அறுத்தெறியப்பட்டன. அவற்றை கிறிஸ்தவர்கள் எடுத்து பாதுகாத்து வந்தனர்.

ஃபெப்ரவரி 5, 1597 அன்று அவர்களை சிலுவையில் அறைய ஆணை பிறப்பிக்கப்ப்பட்டது. சிலுவையில் அறையும் இடத்தை கார்சியா முதலில் அடைந்தார். அவர் முதலில் அங்கிருந்த ஒரு சிலுவையின் அருகில் சென்று, "இது எனக்கானதா?" என்றார். "இது இல்லை" என்று பதில் கூறி அவரை வேறு சிலுவையிடம் கூட்டிச்சென்றனர். சிலுவையை அடைந்ததும் முழந்தாள் பணிந்து அதனைத் தழுவினார். அவரோடு கைது செய்யப்பட்ட மற்றெல்லோரையும் சிலுவையில் அறைந்தார்கள். பின்பு அவரை இரண்டு ஈட்டி கொண்டு இதயத்தில் குத்தினர். இவர் சிலுவையில் சாகும்வரை இறை புகழ் பாடிக்கொண்டே இருந்தார். 

புனிதர் பட்டமளிப்பு:
கி.பி. 1927ல் கார்சியாவும் அவருடன் இரத்த சாட்சிகளானவர்களும் வணக்கத்திற்குரியவர்கள் என திருத்தந்தை எட்டாம் அர்பன் (Pope Urban VIII) அவர்களால் அறிவிக்கப்பட்டனர். ஜூன் 8, 1862 அன்று திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் (Pope Pius IX) அவர்களால் இவர்கள் அனைவரும் புனிதர்களாக அருட்பொழிவு செய்யப்பட்டது.

இவர் ஒரு போர்ச்சுகீசிய தந்தைக்கும், கொங்கண் தாய்க்கும் பிறந்தவராதலால் இவர் இந்தியப் புனிதராக கருதப்படுவதில்லை. இவர் கத்தோலிக்க திருச்சபையில் அதிகாரப்பூர்வ பட்டியலில் போர்ச்சுகீசிய புனிதராவார்.

இன்றைய புனிதர் † (ஃபெப்ரவரி 6) ✠ புனிதர் ஃபிரான்செஸ்கோ ஸ்பைனெல்லி

குரு:
(Priest)

பிறப்பு: ஏப்ரல் 14, 1853
மிலன், லொம்பார்டி-வெனீஷியா இராச்சியம்
(Milan, Kingdom of Lombardy-Venetia)

இறப்பு: ஃபெப்ரவரி 6, 1913 (வயது 59)
ரிவோல்டா டி'அ்டா, கிரெமோனா, இத்தாலி இராச்சியம்
(Rivolta d'Adda, Cremona, Kingdom of Italy)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திப்பேறு பட்டம்: ஜூன் 21, 1992
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

புனிதர் பட்டம்: அக்டோபர் 14, 2018
திருத்தந்தை ஃபிரான்சிஸ்
(Pope Francis)

நினைவுத் திருநாள்: ஃபெப்ரவரி 6

பாதுகாவல்:
ஆசிர்வதிக்கப்பட்ட அருட்சாதனத்தை ஆராதிக்கும் அருட்சகோதரியர் சபை
(Sisters Adorers of the Blessed Sacrament)

புனிதர் ஃபிரான்செஸ்கோ ஸ்பைனெல்லி, இத்தாலி நாட்டின் ரோமன் கத்தோலிக்க  திருச்சபையின் குருவும், "ஆசிர்வதிக்கப்பட்ட அருட்சாதனத்தை ஆராதிக்கும் அருட்சகோதரியர் சபை" (Sisters Adorers of the Blessed Sacrament) எனப்படும் சபையை நிறுவியவருமாவார். இவர், "புனிதர் கெல்ட்ரூட் காமன்சோலி"  (Saint Geltrude Comensoli) மற்றும் அருளாளர் "லுய்கி மரியா பலஸ்ஸோலோ" (Blessed Luigi Maria Palazzolo) ஆகியோரின் சமகாலத்தவராவார். மேலும், இவருக்கு காமன்சோலியுடன் முந்தைய ஒத்துழைப்பு இருந்தது. ஐவரும் காமன்சோலியும் இணைந்து "பெர்கமோ" (Bergamo) நகரில் ஒரு மத கல்வி நிறுவனத்தை நிறுவினார்கள். அதற்கு முன்னரே, இவர்களின் உறுப்பினர்களிடையே இரட்டை பிளவு காரணமாக, ஸ்பைனெல்லி தமது பணிகளை விட்டு விலக நேர்ந்தது.

கி.பி. 1853ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 14ம் நாளன்று, வடக்கு இத்தாலியின் "லொம்பார்டி" (Lombardy) பிராந்தியத்தின் தலைநகரான "மிலன்" (Milan) நகரில் பிறந்த ஃபிரான்செஸ்கோ ஸ்பைனெல்லிக்கு அவர் பிறந்த மறுதினம் திருமுழுக்கு தரப்பட்டது. அவர் தமது சிறு வயதில், தமது பெற்றோருடனும், உடன்பிறந்தோருடனும் மிலனிலிருந்து (Milan) "கிரெமோனா" (Cremona) நகருக்கு புலம்பெயர்ந்து சென்றனர். அவர், கி.பி. 1871ம் ஆண்டின் கோடை காலத்தில், "வர்கோ" நகரில், தமக்கிருந்த கடுமையான முதுகெலும்பு பிரச்சனைக்கு மருத்துவம் செய்து குணப்படுத்தினார். தனது குழந்தைப் பருவத்தில், ஏழை எளியவர்களுக்கும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் அடிக்கடி கிடைக்கும் சந்தர்ப்பங்களில் தமது அம்மாவுடன் சேர்ந்து, சக தோழர்களுக்கு பொம்மை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்ட விரும்பினார்.

அவரது ஆன்மீக வாழ்க்கைக்கான அழைப்புக்கு, அவரது தாயாரும், குருவாக இருந்த அவரது மாமா "பியேட்ரோ காக்ளியரொளி" (Pietro Cagliaroli) என்பவரும் அவருக்கு ஆதரவு அளித்தனர். பெர்கமோ நகரில் இறையியல் கற்கத் தொடங்கிய இவரை இவரது நண்பர் "அருளாளர் லுய்கி மரிய பலஸ்ஸோ"  (Blessed Luigi Maria Palazzolo) என்பவரும் ஊக்கப்படுத்தினார். கி.பி. 1875ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 14ம் தேதி, குருத்துவ அருட்பொழிவு பெற்றார். விரைவிலேயே, திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் (Pope Pius IX) அவர்களின் பொது அழைப்பினை ஏற்று, யூபிலி ஆண்டு நிகழ்வுகளில் பங்கேற்க ரோம் நகர் பயணமானார்.

அங்கே, மரிய அன்னை பேராலயத்திற்கும் சென்ற ஸ்பைநெல்லி, அங்கிருந்த குழந்தை இயேசு கெபியினருகே, மறையுரைச் சிந்தனைகளில் ஆழ்ந்தார். அத்துடன், நற்கருணை ஆராதணையில் பெண்கள் ஈடுபடுவதாக இவர் கண்ட திருக்காட்சி, தாம் சொந்தமாக ஒரு சபையை நிறுவ இவருக்கு உந்துசக்தியாக விளங்கியது. ரோமிலிருந்து திரும்பியதும் ஒரு மாலை பள்ளியில் கல்விப் பணிகளை நடத்தினார்.

கி.பி. 1882ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 15ம் தேதி, பெர்கமோ (Bergamo) நகரில், புனிதர் கெல்ட்ருட் காமென்சோலி (Saint Geltrude Comensoli) உடன் இணைந்து "நற்கருணை அருட்சகோதரியார்" (Sacramentine Sisters) சபையை தொடங்கினார். இது, நற்கருணைக்கு அர்ப்பணிக்கப்பட்ட இச்சபை, நற்கருணை ஆராதனைப் பணிகளில் மட்டுமே ஈடுபடும். சபையின் முதல் கான்வென்ட், "வயா சான் அன்டோனினோ'வில்" (Via San Antonino) திறக்கப்பட்டது. நகரில் ஏற்பட்ட தொடர் பேரழிவுகள் மற்றும் நிதி நெருக்கடிகளின் காரணமாக, இந்த இல்லம் தோல்வியடைந்த காரணத்தால், கி.பி. 1889ம் ஆண்டு, மார்ச் மாதம், 4ம் தேதியன்று, அதை விட்டுவிட வேண்டிய கட்டாயம் ஸ்பைநெல்லிக்கு ஏற்பட்டது.

பெர்மாமோவில் நடந்ததை எண்ணி மன வேதனையடைந்த ஸ்பைநெல்லி, "கிரெமோனா" (Cremona) நகரிலுள்ள "ரிவோல்டா டி'அ்ட்டா" (Rivolta d'Adda) எனும் இடத்துக்கு வந்து சேர்ந்தார். அவரது குருத்துவ கடமைகளை நிறைவேற்றுவதற்காக கிரெமோனாவுக்கு வருமாறும், மறைமாவட்ட ஆயர் அவரை அழைத்திருந்தார். கி.பி. 1892ம் ஆண்டு, அவர், "ஆசிர்வதிக்கப்பட்ட அருட்சாதனத்தை ஆராதிக்கும் அருட்சகோதரியர் சபையை" (Sisters Adorers of the Blessed Sacrament) நிறுவினார். இச்சபைக்கு, பின்னாளில் கி.பி. 1897ம் ஆண்டு, "கிரெமோனா ஆயர்" (Bishop of Cremona) "கெரேமியா பொனோமெல்லி" (Geremia Bonomelli) அவர்களின் மறைமாவட்ட அங்கீகாரம் கிட்டியது.

ஃபிரான்செஸ்கோ ஸ்பைனெல்லி, கி.பி. 1913ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 6ம் தேதி மரித்தார்.

கி.பி. 1926ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 11ம் நாளன்று, இவரது சபைக்கு, திருத்தந்தை அவையின் பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது. பின்னர், கி.பி. 1932ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 27ம் நாளன்று, திருத்தந்தை பதினோராம் பயஸ் (Pope Pius XI) முழு அங்கீகாரம் வழங்கினார். இவர்களது சபை, "அர்ஜென்ட்டினா" (Argentina) மற்றும் "செனெகல்" (Senegal) உள்ளிட்ட நாடுகளில் செயல்பாட்டில் உள்ளது. 2005ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, மொத்தமிருந்த 59 இல்லங்களில், 436 மறைப்பணியாளர்கள் இருந்தனர்.

05 February 2020

சிசிலியின் புனிதர் அகதா (பெப்ரவரி 5)

† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 5)

✠ சிசிலியின் புனிதர் அகதா ✠
(St. Agatha of Sicily)

கன்னி மற்றும் மறைசாட்சி:
(Virgin and Martyr)

பிறப்பு: கி.பி. 231
கேட்டனியா அல்லது பலெர்மோ, சிசிலி
(Catania or Palermo, Sicily)

இறப்பு: கி.பி. 251
கேட்டனியா, சிசிலி
(Catania, Sicily)

ஏற்கும் சபை/ சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Churches)
ஓரியண்ட்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodoxy)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)

நினைவுத் திருவிழா: ஃபெப்ரவரி 5

பாதுகாவல்:
கேட்டனியா (Catania), மோலிஸ் (Molise), மால்ட்டா (Malta), சேன் மரினோ (San Marino), ஸ்பெயின் நாட்டின் செகோவியா பிராந்தியத்திலுள்ள 'ஸமர்ரமல' என்னும் ஊர்ப்பஞ்சாயத்து (Zamarramala, a municipality of the Province of Segovia in Spain), மார்பக புற்று நோயாளிகள் (Breast cancer patients), மறைசாட்சிகள் (Martyrs), செவிலியர் (Wet Nurses), கலிபோர்னியாவின் தென்மேற்கு பிராந்தியத்திலுள்ள "பெல்" என்ற நகரை கண்டுபிடித்தவர்கள் (Bell-Founders), ரொட்டி செய்யும் தொழிலாளி (Bakers), தீ (Fire), பூகம்பம் (Earthquakes), "எட்னா" மலையின் வெடிப்புகள் (Eruptions of Mount Etna).

சர்ச்சைகள் (Controversy):
ரோமப் பேரரசர்களை வணங்க மறுத்தல்
(Rejection to worship Roman Emperors)
கட்டாயப்படுத்தப்பட்ட பாலியல் தொழில்
(Forced prostitution)
பாலியல் வன்கொடுமை, மற்றும் கன்னித்தன்மையை காத்துக்கொள்வதற்கான போர்
(Rape and conflict to maintain virginity)

புனிதர் அகதா, மறைசாட்சியாக மரித்த ஒரு கன்னியரும், கிறிஸ்தவ புனிதருமாவார். ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் திருப்பலியின்போது, கடவுளை அதி தூய அன்னை, அர்ச்சிஷ்ட்ட கன்னி மரியாளுடன் சேர்ந்து நினைவுகூறப்படும் ஏழு பெண்களில் இவரும் ஒருவர் ஆவார்.

பழங்கால கிறிஸ்தவ புராணத்தில், மிகவும் உயர்வாக போற்றப்படும் கன்னியராக மறைசாட்சியாக் மரித்த பெண்களுள் புனிதர் அகதாவும் ஒருவர் ஆவார். கி.பி. 249ம் ஆண்டு முதல் 253ம் ஆண்டு வரையான காலகட்டத்தில், ரோமப் பேரரசை ஆண்ட பேரரசன் "டேசியஸ்" (Full Name - Gaius Messius Quintus Trajanus Decius) என்பவன் கிறிஸ்தவர்களுக்கெதிரான துன்புறுத்தல் மற்றும் சித்திரவதைகளை ஆரம்பித்து வைத்த முதல் பேரரசன் ஆவான். இவனது காலத்திலேயே புனிதர் அகதா, சிசிலியில் உள்ள “கேட்டனியா” (Catania) என்னும் இடத்தில் வைத்து, தமது மிக உறுதியான கிறிஸ்தவ விசுவாசத்திற்காக கொடூரமான முறையில் வதைக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

வசதிவாய்ப்புகளுள்ள குடும்பமொன்றில் பிறந்த அகதா, ஆன்மீகத்தில் ஈடுபாடு மிகக்கொண்டிருந்தார். தமது வாழ்வின் ஒவ்வொரு தருணங்களும் இறைவனால் தீர்மானிக்கப்பட்டவை என்ற தீவிர விசுவாசம் கொண்டிருந்தார். "ஜாகொபஸ் டி வொராஜின்" (Jacobus de Voragine) என்ற கிறிஸ்தவ சரித்திர ஆசிரியரின் (Legenda Aurea of 1288 AD) எனும் இலக்கியத்தின்படி, அகதா தமது கன்னிமையை இறைவனுக்கே அர்ப்பணித்தார். இவருக்கு பதினைந்து வயதானபோது, இவர்மீது மோகம் கொண்ட ரோமன் நிர்வாக அலுவலரான (Roman prefect) "குயின்ஷியானஸ்" (Quintianus) என்பவனை தீர்க்கமாக நிராகரித்தார். ஆத்திரம் கொண்ட குயின்ஷியானஸ், இவரை இவரது கிறிஸ்தவ விசுவாசத்துக்காக துன்புறுத்தினான். பின்னர், "அப்ரோடிசியா" (Aphrodisia) என்ற விபச்சார விடுதி நடத்துபவனிடம் அனுப்பினான்.

அவரை எளிதில் கையாள முடியாது என்பதை கண்டுகொண்ட குயின்ஷியானஸ், அகதாவை பயமுறுத்தினான். அவருடன் வாதிட்டான். இறுதியில் அவரை சிறையில் அடைத்தான். சிறையில் எண்ணற்ற சித்திரவதைகளுக்கு ஆளான அகதாவின் மார்பகங்களை குறடு போன்ற இடுக்கியால் அறுத்தனர். மேற்கொண்டும் அவனுக்கு மசியாத அகதா அவனுடன் வியக்கத்தக்க வகையில் வாதிட்டு தமது மனோபலம் மற்றும் உறுதியான பக்தியைக் காண்பித்தார்.

இறுதியில், அகதாவை கூறிய மரக்குச்சுகளினால் தீயிட்டு எரித்துக் கொள்ள தீர்ப்பிடப்பட்டது. ஆனால் அவரது விதி, அவரை ஒரு பூகம்பம் மூலம் இரட்சித்தது. மீண்டும் சிறையிலடைக்கப்பட்ட அகதாவுக்கு அப்போஸ்தலரான புனிதர் பேதுரு (St. Peter the Apostle) காட்சியளித்து அவரது மார்பக மற்றும் உடலிலிருந்த காயங்களை ஆற்றினார். புனிதர் அகதா சிறையிலேயே மரித்துப் போனார். "கட்டானியா" பேராலயம் (Catania Cathedral) இவர் பெயரில் அர்ப்பணிக்கப்பட்டதாகும்.

16 August 2013

13ஆம் வாரம்

திங்கள்

முதல் ஆண்டு



முதல் வாசகம்

 தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்து விடுவீரோ?

தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 16-33

மூன்று மனிதர்களும் எழுந்து, சோதோமை நோக்கிச் சென்றார்கள். ஆபிரகாமும் உடன்சென்று அவர்களை வழியனுப்பினார்.

அப்பொழுது ஆண்டவர், ``நான் செய்ய இருப்பதை ஆபிரகாமிடமிருந்து மறைப்பேனா? ஆபிரகாமிடமிருந்தே வலிமைமிக்க மாபெரும் இனம் தோன்றும். அவன் மூலம் மண்ணுலகின் எல்லா இனத்தாரும் ஆசி பெற்றுக் கொள்வர். ஏனெனில், நீதி, நேர்மை வழி நின்று எனக்குக் கீழ்ப்படியும்படி தன் புதல்வருக்கும், தனக்குப்பின் தன் வழிமரபினருக்கும் கற்றுத்தருமாறு ஆண்டவராகிய நான் ஆபிரகாமுக்கு வாக்களித்ததை அவன் நிறைவேற்றுவான்'' என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.

ஆதலால் ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, ``சோதோம் கொமோராவுக்கு எதிராகப் பெரும் கண்டனக் குரல் எழும்பியுள்ளது. அவற்றின் பாவம் மிகவும் கொடியது. என்னை வந்தடைந்த கண்டனக் குரலின்படி அவர்கள் நடந்து கொண்டார்களா இல்லையா என்று அறிந்து கொள்ள நான் இறங்கிச் சென்று பார்ப்பேன்'' என்றார்.

அப்பொழுது அந்த மனிதர்கள் அவ்விடத்தை விட்டுச் சோதோமை நோக்கிச் சென்றார்கள். ஆபிரகாமோ ஆண்டவர் திருமுன் நின்று கொண்டிருந்தார்.

ஆபிரகாம் அவரை அணுகிக் கூறியதாவது: ``தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்து விடுவீரோ? ஒருவேளை நகரில் ஐம்பது நீதிமான்களாவது இருக்கலாம். அப்படியானால் அதிலிருக்கிற ஐம்பது நீதிமான்களை முன்னிட்டாவது அவ்விடத்தைக் காப்பாற்றாமல் அழிப்பீரோ? தீயவனோடு நீதிமானையும் அழிப்பது உமக்கு ஏற்றதன்று; நீதிமானையும் தீயவனையும் சமமாக நடத்துவது உமக்கு உகந்ததன்று. அனைத்துலகிற்கும் நீதி வழங்குபவர் நீதியுடன் தீர்ப்பு வழங்க வேண்டாமோ?'' என்றார்.

அதற்கு ஆண்டவர், ``நான் சோதோம் நகரில் ஐம்பது நீதிமான்கள் இருப்பதாகக் கண்டால், அவர்களின் பொருட்டு முழுவதையும் காப்பாற்றுவேன்'' என்றார்.

அப்பொழுது ஆபிரகாம் மறுமொழியாக, ``தூசியும் சாம்பலுமான நான் என் தலைவரோடு பேசத் துணிந்து விட்டேன்; ஒருவேளை அந்த ஐம்பது நீதிமான்களில் ஐந்து பேர் குறைவாயிருக்கலாம். ஐந்து பேர் குறைவதை முன்னிட்டு நகர் முழுவதையும் அழிப்பீரோ?'' என்றார்.

அதற்கு அவர், ``நான் நாற்பத்தைந்து பேரை அங்கே கண்டால் அழிக்க மாட்டேன்'' என்றார்.

மீண்டும் அவர், உரையாடலைத் தொடர்ந்து, ``ஒருவேளை அங்கே நாற்பது பேர் மட்டும் காணப்பட்டால் என்ன செய்வீர்?'' என்று கேட்க, ஆண்டவர், ``நாற்பது நீதிமான்களின் பொருட்டு அதனை அழிக்க மாட்டேன்'' என்றார்.

அப்பொழுது ஆபிரகாம்: ``என் தலைவரே, நான் இன்னும் பேச வேண்டும்; சினமடைய வேண்டாம். ஒருவேளை அங்கே முப்பது பேரே காணப்பட்டால்?'' என, அவரும் ``முப்பது பேர் அங்குக் காணப்பட்டால் அழிக்க மாட்டேன்'' என்று பதிலளித்தார்.

அவர், ``என் தலைவரே, உம்மோடு அடியேன் பேசத் துணிந்து விட்டேன். ஒருவேளை அங்கு இருபது பேரே காணப்பட்டால்?'' என, அதற்கு அவர், ``இருபது பேரை முன்னிட்டு நான் அழிக்க மாட்டேன்'' என்றார்.

அதற்கு அவர், ``என் தலைவரே, சினமடைய வேண்டாம்; இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் என்னைப் பேசவிடும். ஒருவேளை அங்குப் பத்துப் பேர் மட்டும் காணப்பட்டால்?'' என, அவர், ``அந்தப் பத்துப் பேரை முன்னிட்டு அழிக்க மாட்டேன்'' என்றார்.

ஆபிரகாமோடு பேசி முடித்தபின் ஆண்டவர் அவரை விட்டுச் சென்றார். ஆபிரகாமும் தம் இடத்திற்குத் திரும்பிச் சென்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 103: 1-2. 3-4. 8-9. 10-11 (பல்லவி: 8ய)

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.

1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! 2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! பல்லவி

3 அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். 4 அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். பல்லவி

8 ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். 9 அவர் எப்பொழுதும் கடிந்துகொள்பவரல்லர்; என்றென்றும் சினம் கொள்பவரல்லர். பல்லவி

10 அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. 11 அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது. பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 95: 8b,7b

அல்லேலூயா, அல்லேலூயா! இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

என்னைப் பின்பற்றி வாரும்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 18-22

அக்காலத்தில் இயேசு திரளான மக்கள் தம்மைச் சூழ்ந்திருப்பதைக் கண்டு, மறு கரைக்குச் செல்ல சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.

அப்பொழுது மறைநூல் அறிஞர் ஒருவர் வந்து, ``போதகரே, நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்'' என்றார்.

இயேசு அவரிடம், ``நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை'' என்றார்.

இயேசுவின் சீடருள் மற்றொருவர் அவரை நோக்கி, ``ஐயா, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர அனுமதியும்'' என்றார்.

இயேசு அவரைப் பார்த்து, நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை

கடவுள் மனதை மாற்றும் சக்தி யாருக்கு உண்டு.

அவரை அணுகி செபிப்போருக்கு உண்டு.

ஆபிரகாம் சோதோமுகாக செபித்து, மனத்தை மாற்றினார். இறைவனும் வேண்டுதலை ஏற்றார். மனத்தை மாற்றினார்.

நினிவே நகர மக்கள் கோணியாடை உடுத்தி, சாம்பலிலே அமர்ந்து, மார்பிலே அறைந்து, அழுது மன்றாடி தங்களத பாவங்களுக்கு மன்னிப்பு கோரிய போது, மனத்தை மாற்றிக் கொண்டார். சொன்னபடி அவர்களை அழிக்காமல் மன்னித்தார்.

தன்னை நோக்கி கூப்பிடும் போது மனத்தை மாற்றி, தன் மக்கள் அழியாமல் பாதுகாப்பார்.

குடும்பங்களிலே பிள்ளைகள் கோரும் போது மன்னித்து ஏற்றுக் கொள்வதில்லையா? பெற்றோர் தங்களத மனத்தை மாற்றிக் கொள்வதில்லையா?

அம்மை அப்பனாக உள்ள இறைவனும் தன் மக்களின் மன மாற்றத்தையே விரும்புகின்றார். தண்டிக்கின்ற இறைவன் இல்லை. திருந்த விளையும் மனத்திற்கு ஆதரவாய் உள்ள இறைவனே நம் இறைவன்.

கல்லாகிப் போனதா நம்முடைய மனது. இல்லை கனிவினால் நாமும் நம்முடைய மனத்தை மாற்றிக் கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவரா?

ஆண்டின் பொதுக்காலம் 13 ஆம் வாரம்

திருப்பலி முன்னுரை
இறைத்திருமகன் அருளால் ஆண்டின் பொதுக்காலம் 13 ஆம் வாரம் ஞாயிறு திருப்பலி வழிபாட்டில் பங்கேற்க அணியமாயிருக்கும் அன்பின் சொந்தங்கள் அனைவருக்கும் பணிவான அன்பு வாழ்த்துகளைக் கூறி மகிழ்வு அடைகிறேன்.

இன்றைய நற்செய்தி வாசகத்திலே! இயேசுவைப் பின்பற்ற விரும்பியவர்கள் பலர் இருந்தனர். ஆனால் இயேசு தம்மைப் பின்தொடர விரும்புவோர் சில கோரிக்கைகளை நிறைவேற்றக் கேட்டார். வீடு, நில புலம், குடும்பம், உறவு என்னும் தடைகளால் கட்டுண்டு, இயேசுவைப் பின்செல்லத் தயங்கியவர்கள் பலர் உண்டு. அவர்களைப் பார்த்து இயேசு கூறுவார்: ''மானிட மகனுக்குத் தலைசாய்க்கக் கூட இடம் இல்லை'' இயற்கையைப் படைத்த இறைவன் உயிரனிங்கள் வாழத் தேவையானவற்றை அளிக்கின்றார். நரிகள் குடியிருக்க குழிகள் உள்ளன; பறவைகளுக்கு வீடாகக் கூடுகள் இருக்கின்றன. ஆனால், இயேசுவுக்குக் குடியிருக்க வீடு என்று ஒன்று இருக்கவில்லை. இடம் விட்டு இடம் பெயர்ந்து சென்ற நாடோடி போதகராகவே அவர் இருந்தார். இருந்தாலும். அவ்வப்போது தம் நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று அவர் விருந்து உண்டார். அப்போது கடவுளின் ஆட்சி எல்லா மனிதருக்கும் உரியதே என்பதை வெளிக்காட்டும் விதத்தில் அவர் பாவிகளோடும் தாழ்த்தப்பட்டவர்களோடும் கூட பந்தியமர்ந்தார். பிறரை நம்பி வாழ்ந்தவர் இயேசு. அதுபோலவே, இயேசுவைப் பின்செல்ல விரும்புவோரும் தமக்கென்று எதையும் சேர்த்துவைக்காமல் கடவுளை மட்டுமே நம்பி வாழ வேண்டும் என்பது இயேசுவின் போதனை.

இயேசுவின் சீடராக வாழ வேண்டும் என்றால் வீடு, குடும்பம், உறவுகள் அனைத்தையுமே துறந்துவிட வேண்டுமா என்று சிலர் கேட்கலாம். கடவுளின் ஆட்சியில் புக விரும்புவோர் அந்த உயரிய பேற்றினைப் பெற்றிட எந்த தியாகமும் செய்ய முன்வர வேண்டும் என்பதுதான் இயேசுவின் கோரிக்கை. கடவுளிடத்தில் நம் முழு நம்பிக்கையையும் வைக்க வேண்டும் என்பதே இயேசுவின் வேண்டுகோள். கடவுளுக்கு மேலாக எதையுமே நாம் மதிக்கலாகாது எனவும், எப்போதும் புதிய ஊக்கத்தோடு தம்மைப் பின்பற்ற நாம் முன்வரவேண்டும் எனவும் இயேசு நம்மிடம் கேட்கின்றார். இத்திருப்பலியில் பங்கேற்று இறையாசீர் பெறுவோம்.



முதல் வாசகம்
முதல் வாசக முன்னுரை:

அழைக்கப்பட்டவர்களே,
இன்றைய முதல் வாசகம், இறைவாக்கினர் எலிசாவின் அழைப்பை பற்றி எடுத்துரைக்கிறது. ஏர் பூட்டி உழுதுகொண்டிருந்த எலிசாவை, ஆண்டவரின் பணிக்காக எலியா தேர்ந்தெடுக்கும் நிகழ்வை இங்கு காண்கிறோம். ஆண்டவரின் அழைப்பை பெற்ற எலிசா பெற்றோரிடம் விடைபெற்று வர அனுமதி கோருகிறார். எலியா அனுமதி அளித்ததும், எலிசா உழுத கலப்பையால் ஏர் மாடுகளை சமைத்து விருந்து பரிமாறுவதைக் காண்கிறோம். அவர் பெற்றோரிடம் விடைபெற்று, எலியாவைப் பின்பற்றி இறைவாக்கு பணியாற்றுகிறார். எலிசாவைப் போன்று, நாமும் ஆண்டவரின் அழைப்பை கால தாமதமின்றி ஏற்றுக்கொள்ள வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிகொடுப்போம்.



அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19: 16, 19-21
ஆண்டவர் கூறியது: நிம்சியின் மகன் ஏகூவை இஸ்ரயேலுக்கு அரசனாக திருப்பொழிவு செய். ஆபேல் மெகோலாவைச் சார்ந்த சாபாற்றின் மகன் எலிசாவை உனக்குப் பதிலாக இறைவாக்கினராக அருள்பொழிவு செய்.எலியா அங்கிருந்து சென்று, சாபாற்றின் மகன் எலிசாவைக் கண்டார். அப்பொழுது அவர் ஏர் பூட்டி உழுதுகொண்டிருந்தார். அவருக்கு முன்னே பதினோர் ஏர்கள் இருந்தன. பன்னிரண்டாம் ஏரைத் தாமே ஓட்டிக் கொண்டிருந்தார். எலியா அவரிடம் சென்று, தம் மேலாடையை அவர் மீது தூக்கிப் போட்டார்.எலிசா அவரைக் கடந்து செல்கையில் ஏர் மாடுகளை விட்டுவிட்டு எலியாவிடம் ஓடிவந்து, "நான் என் தாய் தந்தையிடம் விடைபெற்று வர அனுமதி தாரும். அதன்பின் உம்மைப் பின்செல்வேன் " என்றார். அதற்கு அவர், "சென்று வா, உனக்கு நான் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டேன்! " என்றார்.எலிசா எலியாவை விட்டுத் திரும்பி வந்து, ஏர் மாடுகளைப் பிடித்து, அடித்துத் தாம் உழுத கலப்பைக்கு நெருப்பு மூட்டி, அம்மாட்டு இறைச்சியைச் சமைத்து, மக்களுக்குப் பரிமாற அவர்களும் அதை உண்டனர். பின்பு அவர் புறப்பட்டுப் போய் எலியாவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்யலானார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி


பதிலுரைப் பாடல்
பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
திருப்பாடல்கள் 16;1-2,5,7-11
1 இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.பல்லவி

2 நான் ஆண்டவரிடம் 'நீரே என் தலைவர்; உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை' என்று சொன்னேன். 5 ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே பல்லவி ;

7 எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.8 ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன்.பல்லவி

9 என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். 10 ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்பவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர்பல்லவி .

11 வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு.பல்லவி



இரண்டாம் வாசக முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கிறிஸ்து வழங்கிய உரிமை வாழ்வில் நிலைத்திருக்க நமக்கு அழைப்பு விடுக்கிறார். ஊனியல்பின் செயல்களுக்கு அடிமைகளாய் இல்லாமல், கிறிஸ்துவின் அன்பினால் நிறைவு காணும்படி நமக்கு அறிவுரை வழங்குகிறார். ஊனியல்பின் இச்சைகளைப் புறக்கணித்து தூய ஆவியின் தூண்டுதலுக் கேற்ப வாழ பவுல் நம்மை அழைக்கிறார். ஒருவரை ஒருவர் எதிர்த்து நிற்காமல், அன்பின் சமூகமாய் ஒன்றிணைத்து வாழ நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். ஆண்டவர் இயேசுவின் அழைப்பை உணர்ந்தவர்களாய், தூய ஆவியின் கனிகளை நம் வாழ்வில் விளைவிக்கும் வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

தூய பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1, 13-18
சகோதர சகோதரிகளே,.கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து நமக்கு உரிமை வாழ்வை அளித்துள்ளார்: அதில் நிலைத்திருங்கள். மீண்டும் அடிமைத்தளை என்னும் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொள்ளாதீர்கள். "உன்மீது நீ அன்புகூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக " என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும் நிறைவு பெறுகிறது.ஆனால் நீங்கள் ஒருவரை ஒருவர் கடித்து விழுங்குவதை நிறுத்தாவிட்டால் ஒருவரால் ஒருவர் அழிக்கப்படுவீர்கள். எச்சரிக்கை!எனவே நான் சொல்கிறேன்: தூய ஆவியின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள்: அப்போது ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்ற மாட்டீர்கள்.ஊனியல்பின் இச்சை தூய ஆவிக்கு முரணானது. தூய ஆவியின் விருப்பம் ஊனியல்புக்கு முரணானது. இவை ஒன்றுக்கொன்று எதிராய் உள்ளதால் நீங்கள் செய்ய விரும்பவதை உங்களால் செய்ய முடிவதில்லை.நீங்கள் தூய ஆவியால் வழிநடத்தப்பட்டால் திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களாய் இருக்கமாட்டீர்கள்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
- இறைவா உமக்கு நன்றி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! "நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை " என்றார்.அல்லேலூயா

நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 51-62
அக்காலத்தில் இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து,தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.அவர் எருசலேம் செல்லும் நோக்கமாயிருந்ததால் அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, "ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா? " என்று கேட்டார்கள்.அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார்.பின்பு அவர்கள் வேறோர் ஊருக்குச் சென்றார்கள்.அவர்கள் வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, "நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன் " என்றார்.இயேசு அவரிடம், "நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை " என்றார்.இயேசு மற்றொருவரை நோக்கி, "என்னைப் பின்பற்றிவாரும் " என்றார். அவர், "முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும் " என்றார்.இயேசு அவரைப் பார்த்து, "இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும் " என்றார்.வேறொருவரும், "ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்: ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும் " என்றார்.இயேசு அவரை நோக்கி, "கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல " என்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

விசுவாசிகள் மன்றாட்டுகள்:

"ஆண்டவரே உம்மை ஏத்திப்புகழ்வேன், ஏனெனில் நீர் என்னை கைதூக்கி விட்டீர்!

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

“நம்பிக்கை அளிப்பவராம் இறைவா,
உம் திருச்சபையை வழிநடத்தும்; எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், கன்னியர் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் உம் நற்கருணை பிரசன்னத்திலே, உம் வார்த்தையிலே இணைந்திருந்து உம் திருச்சபையை சிறப்புற வழிநடத்தி செல்ல வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

சீடர்களின் முழு அர்ப்பணத்தையும் எதிர்பார்க்கும் இயேசுவே,
என்னுடைய அரைகுறை அர்ப்பணத்தை எண்ணி வெட்கி, மன்னிப்பு கோருகிறேன். அனைத்திற்கும் மேலாக உம்மைத் தேடவும், உமக்கே பணிபுரியவும், உம்மை எல்லா வேளையிலும் பின்பற்றவும் எங்களுக்குத் அருள்தந்தருள வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்பின் ஊற்றாம் இறைவா,
உம் திருமகன் இயேசுவை நாங்கள் ஆழமாக அறிந்திடவும், துன்பத்தின் வழியாகவே நாங்கள் நிறைவாழ்வில் பங்கேற்க இயலும் என்பதை எங்களுக்கு உணர்த்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஞானத்தின் ஊற்றே இறைவா!
எம் பங்கு மக்கள் அனைவரும் இறைஅன்பிலும, பிறர் அன்பிலும் நாளும் வளரவும், குடும்பங்களில் சமாதானம் நிலவிடவும், பிள்ளைகள் நன்கு படித்திடவும் தேவையான அருளைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே!
பிரிவினைகளோடும், கசப்புணர்வுகளோடும், பழிவாங்கும் மனநிலையோடும், வேதனைகளோடும், விரக்தியோடும், கண்ணீரோடும் வாழும் கணவன் மனைவி அனைவர்மீதும் மனமிரங்கி அவர்களின் அன்பு தூய்மையானதாகவும், நிலையானதாகவும் இருக்கவும், அவர்கள் தாங்கள் பெற்றுக்கொண்ட அழைப்பிற்கேற்ப பிரமாணிக்கமாய் வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திடவேண்டுமென்று தயவாய் உம்மை மன்றாடுகின்றோம்.

கருணையின் தேவா!
எம் பங்கிலுள்ள இளைஞர்கள், இளம் பெண்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளை வீணடித்து விடாமல், எதிர்கால வாழ்வை திட்டமிட்டு செயல்படுத்திட தேவையான அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை
வாழ்க்கையில் தாமதம் வளர்ச்சியின் தடை.

இந்த மூன்று மனிதர்களுக்கும் நல்ல வாழ்வு வேண்டும்,நான்குபேருக்கு நல்லது செய்யவேண்டும் என்ற நல்ல ஆசை. ஆண்டவன் அருள் வேண்டும், அவர் தரும் ஆற்றலால் அன்புப் பணிபுரிந்து மகிழவேண்டும் என்ற நல்ல எண்ணம்.

ஆனால் மூவரும் மூன்று காரணங்களால், நல்ல எண்ணம் செயலாக்கம் பெறாமல் முடமாகிவிடுகின்றனர். ஆயினும், இயேசு அவர்களை முறைப்படுத்துவதைப் பார்க்கிறோம். இரு மனம் கொண்டவன் முதல் மனிதன்.அதுவும் வேண்டும் இதுவும் வேண்டும், இறைவனும் வேண்டும் அலகையும் வேண்டும், அருளும் வேண்டும் பொருளும் வேண்டும். வெளியே ஒன்று உள்ளே மற்றொன்று. உள்ளத்தை ஊடுறுவி கண்ட இயேசு, அவனது எண்ணமெல்லாம் சொத்து சுகம், வசதி வாய்ப்பு,பணம் பதவி இவற்றைச்சுற்றி வட்டமிடுவதை உணர்த்தி, நிவர்த்தி செய்ய அறிவுரை கூறுகிறார்.

இரண்டாமவன், கடமை உணர்வை ஒரு சாக்குப்போக்காகச் சொல்கிறான். பெற்றோரைப் பேணவேணடும், இறந்தால் அடக்கம் செய்ய வேண்டும். இப்படிச் சொல்லியே ஆண்டவனுக்கும் அயலானுக்கும் பணிசெய்யும் வாய்ப்பைக் கடத்திவிடுகிறான்.

மூன்றாமவன், ஏதாவது வாய்ப்பு கிடைக்காதா என்று காத்திருந்ததுபோல, விடைபெற்று வர அனுமதி கேட்டு வாய்ப்பை நழுவ விடுகிறான். ஓன்று தெழிவாகிறது. ஆண்டவனுக்கும் அயலானுக்கும் அன்புப் பணி செய்வது மனித இயல்பு. எனவேதான் சந்தித்த எவரிடமும் சரி, அப்படியானால் வேண்டாம், பிறகு பார்த்துக்கொள்ளலாம், நீ வேண்டாம் என்று இயேசு சொல்லவில்லை. மாறாக மூவரின் குறைகளையும் நிவர்த்திசெய்து பணிசெய்து மகிழ ஆலோசனை சொல்கிறார்.

ஏன்நிலையலும் எப்பொழுதும் என்னால் முடிந்த அன்புப்பணிசெய்ய முன்வருவேனாக.
மன்றாட்டு:
இறைவா! எப்பொழுதும் என்னால் முடிந்த அன்புப்பணிசெய்து வாழ அருள்தந்தருளும். ஆமென்.
சூன் 29


புனிதர்கள் பேதுரு, பவுல் - திருத்தூதர்கள் பெருவிழா


திருநாள் திருப்பலி


முதல் வாசகம்

ஏரோதின் கையிலிருந்து ஆண்டவர் என்னை விடுவித்துக் காத்தார் என்று நான் உண்மையாகவே அறிந்துகொண்டேன்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 12: 1-11

அந்நாள்களில் ஏரோது அரசன், திருச்சபையைச் சார்ந்த மக்கள் சிலரைப் பிடித்துக் கொடுமைப்படுத்தினான். யோவானின் சகோதரரான யாக்கோபை வாளால் கொன்றான். அது யூதருக்கு மகிழ்ச்சி அளித்ததைக் கண்டு அவன் தொடர்ந்து பேதுருவையும் கைது செய்தான். அது புளிப்பற்ற அப்ப விழா நாள்களில் நடந்தது. அவரைப் பிடித்துச் சிறையில் அடைத்துக் காவல் செய்யுமாறு நான்கு படைவீரர் கொண்ட நான்கு குழுக்களிடம் அவன் ஒப்புவித்தான். பாஸ்கா விழாவுக்குப் பின் மக்கள் முன்பாக அவரது வழக்கை விசாரிக்கலாம் என விரும்பினான். பேதுரு இவ்வாறு சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்த போது திருச்சபை அவருக்காகக் கடவுளிடம் உருக்கமாக வேண்டியது. ஏரோது அவரது வழக்கைக் கேட்பதற்கு முந்தின இரவில், பேதுரு படைவீரர் இருவருக்கு இடையே இரு சங்கிலிகளால் கட்டப்பட்டுத் தூங்கிக்கொண்டிருந்தார். காவலர்கள் வாயிலுக்கு முன் சிறையைக் காவல் செய்து கொண்டிருந்தார்கள்.

அப்போது ஆண்டவரின் தூதர் அங்கு வந்து நின்றார். அறை ஒளிமயமாகியது. அவர் பேதுருவைத் தட்டியெழுப்பி, ``உடனே எழுந்திடும்'' என்று கூற, சங்கிலிகள் அவர் கைகளிலிருந்து கீழே விழுந்தன. வானதூதர் அவரிடம், ``இடைக் கச்சையைக் கட்டி மிதியடிகளைப் போட்டுக்கொள்ளும்'' என்றார். அவரும் அவ்வாறே செய்தார். தூதர் அவரிடம், ``உமது மேலுடையை அணிந்துகொண்டு என்னைப் பின்தொடரும்'' என்றார்.

பேதுரு வானதூதரைப் பின்தொடர்ந்து சென்றார். தூதர் மூலமாக நடந்தவையெல்லாம் உண்மையென்று அவர் உணரவில்லை. ஏதோ காட்சி காண்பதாக அவர் நினைத்துக்கொண்டார். அவர்கள் முதலாம் காவல் நிலையையும், இரண்டாம் காவல் நிலையையும் கடந்து நகருக்குச் செல்லும் இரும்புவாயில் அருகே வந்தபோது அது அவர்களுக்குத் தானாகவே திறந்தது. அவர்கள் வெளியே வந்து ஒரு சந்து வழியாகச் சென்றார்கள். உடனே வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

பேதுரு தன்னுணர்வு பெற்றபோது, ``ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பி ஏரோதின் கையிலிருந்து என்னை விடுவித்து, யூத மக்கள் எதிர்பார்த்த எதுவும் நிகழாதவாறு என்னைக் காத்தார் என்று நான் உண்மையாகவே அறிந்துகொண்டேன்'' என்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8 (பல்லவி: 4b)

பல்லவி: எல்லா வகையான அச்சத்தினின்றும் ஆண்டவர் என்னை விடுவித்தார்.

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். பல்லவி

3 என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம். 4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். பல்லவி

5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. 6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். பல்லவி

7 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவர். 8 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். பல்லவி

இரண்டாம் வாசகம்

இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 6-8, 17-18

அன்பிற்குரியவரே, நான் இப்போதே என்னைப் பலியாகப் படைக்கிறேன். நான் பிரிந்து செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார்; நீதியான அந்த நடுவர் எனக்கு மட்டுமல்ல, அவர் தோன்றுவார் என விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே தருவார். நான் அறிவித்த செய்தி நிறைவுற்று, அனைத்து நாட்டவரும் அதனைக் கேட்கவேண்டுமென்று ஆண்டவர் என் பக்கம் நின்று எனக்கு வலுவூட்டினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் என்னை விடுவித்தார். தீங்கு அனைத்திலிருந்தும் அவர் என்னை விடுவித்துத் தம் விண்ணரசில் சேர்த்து எனக்கு மீட்பளிப்பார். அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 16: 18

அல்லேலூயா, அல்லேலூயா! உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

உன் பெயர் பேதுரு; விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்.

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-19

அக்காலத்தில் இயேசு பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, ``மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?'' என்று கேட்டார்.

அதற்கு அவர்கள், ``சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்'' என்றார்கள்.

``ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?'' என்று அவர் கேட்டார்.

சீமோன் பேதுரு மறுமொழியாக, ``நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்'' என்று உரைத்தார்.

அதற்கு இயேசு, ``யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
12ஆம் வாரம்

வெள்ளி

முதல் ஆண்டு



 முதல் வாசகம்

 உடன்படிக்கை இதுவே: உங்களுள் ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். சாரா ஆபிரகாமுக்கு ஒரு மகனைப் பெறுவாள்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 17: 1, 9-10, 15-22

ஆபிராமுக்கு வயது தொண்ணூற்றொன்பதாக இருந்தபொழுது, ஆண்டவர் அவருக்குத் தோன்றி, ``நான் எல்லாம் வல்ல இறைவன். எனக்குப் பணிந்து நடந்து, மாசற்றவனாய் இரு'' என்றார். மீண்டும் கடவுள் ஆபிரகாமிடம், ``நீயும் தலைமுறைதோறும் உனக்குப் பின் வரும் உன் வழிமரபினரும் என் உடன்படிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும். நீங்கள் கடைப்பிடிக்குமாறு உன்னோடும் உனக்குப்பின் வரும் உன் வழிமரபினரோடும் நான் செய்து கொள்ளும் உடன்படிக்கை இதுவே: உங்களுள் ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும்'' என்றார்.

பின்பு கடவுள் ஆபிரகாமிடம், ``உன் மனைவியைச் `சாராய்' என அழைக்காதே. இனிச் `சாரா' என்பதே அவள் பெயர். அவளுக்கு ஆசி வழங்குவேன். அவள் வழியாக உனக்கு ஒரு மகனையும் தருவேன். அவளுக்கு நான் ஆசி வழங்க, அவள் வழியாக நாடுகள் தோன்றும். மக்களினங்களுக்கு அரசர்களும் அவளிடமிருந்து உதிப்பர்'' என்றார்.

ஆபிரகாம் தாள்பணிந்து வணங்கி, நகைத்து, ``நூறு வயதிலா எனக்குக் குழந்தை பிறக்கும்? தொண்ணூறு வயது சாராவா குழந்தை பெறப் போகிறாள்?'' என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.

ஆபிரகாம் கடவுளிடம், ``உம் திருமுன் இஸ்மயேல் வாழ்ந்தாலே போதும்'' என்றார்.

கடவுள் அவரிடம், ``அப்படியன்று. உன் மனைவி சாரா உனக்கு ஒரு மகனைப் பெறுவாள். அவனுக்கு நீ `ஈசாக்கு' எனப் பெயரிடுவாய். அவனுடனும் அவனுக்குப் பின்வரும் அவன் வழிமரபினருடனும் என்றுமுள்ள உடன்படிக்கையை நான் நிலைநாட்டுவேன். இஸ்மயேலைப் பற்றிய உன் வேண்டுதலை நான் கேட்டேன். அவனுக்கு ஆசி வழங்கி, அவனை மிகப்பெருமளவில் பலுகச் செய்வேன். பன்னிரு இளவரசர் களுக்கு அவன் தந்தையாவான்; அவனிடம் இருந்து ஒரு பெரிய நாடு தோன்றும். ஆனால், சாரா உனக்கு அடுத்த ஆண்டு இதே காலத்தில் பெறப்போகும் ஈசாக்கிடம் என் உடன்படிக்கையை நிலைநாட்டுவேன்'' என்றார்.

அவருடன் பேசி முடித்தபின், கடவுள் ஆபிரகாமை விட்டுச் சென்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 128: 1-2. 3. 4-5 (பல்லவி: 4)

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர் ஆசி பெற்றவராய் இருப்பார்.

1 ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! 2 உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! பல்லவி

3 உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். பல்லவி

4 ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். 5 ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 8: 17

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

நீர் விரும்பினால், என் நோயை நீக்க உம்மால் முடியும்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-4

அக்காலத்தில் இயேசு மலையிலிருந்து இறங்கியபின் பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள். அப்பொழுது தொழுநோயாளர் ஒருவர் வந்து அவரைப் பணிந்து, ``ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்'' என்றார்.

இயேசு தமது கையை நீட்டிஅவரைத் தொட்டு, ``நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!'' என்று சொன்னார். உடனே அவரது தொழுநோய் நீங்கியது.

இயேசு அவரிடம், ``இதை எவருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை

ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் ஆசீர் பெறுவர்.

இரண்டு வாசகங்களிலும் அண்டவருக்கு அஞ்சி நடந்தவர்கள் ஆசீர் பெற்றனர் என்பதனை பார்க்கின்றோம்.

வளர்ந்த உலகில் இன்று ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோர் எண்ணிக்கை குறைந்த வருகின்றது. ஏன் அஞ்ச வேண்டும் என்று கேட்கின்றனர். ஏன் அஞ்ச வேண்டும் என்று கேட்போருக்கு என்ன பதில்?

படைத்தவருக்கு மாத்திரமே அஞ்சுங்கள் என்ற வார்த்தையை அறியாத உள்ளங்கள் பரிதாபத்திற்குரியவர்களே. அவரால் இயலாதது எதுவுமில்லை. எனவெ அவருக்கு மட்டும் அஞ்சி வாழ்வது தான் வாழ்வு. அஞ்சுவது என்பது பயந்து நடுங்குவத இல்லை, பணிந்து, கீழ்ப்படிந்து செயல்படுவதுவேயாகும். இவர்கள் ஆசீர் பெறுவார்கள். விவிலியமும். பராம்பரியமும், திருஅவை வரலாறும் இதனை உறுதிப்படுத்துகின்றது. அறிந்து, பணிந்து, அறிக்கை செய்து, ஆசீர் பெறுவோம்.