புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

09 March 2020

உரோமை நகர தூய பிரான்செஸ் (மார்ச் 09)

இன்றைய புனிதர் : 
(09-03-2020) 

உரோமை நகர தூய பிரான்செஸ் (மார்ச் 09)

“மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” (மத் 25: 40)
வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் பிரான்செஸ், 1384 ஆம் ஆண்டு இத்தாலியில் இருந்த ஒரு செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு சிறுவயதிலே துறவியாகப் போகவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், இவர் வளர்ந்து பெரியவரானபோது இவருடைய பெற்றோர் இவருடைய விருப்பத்திற்கு மாறாக லொரென்சோ என்பவருக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டனர். தன்னுடைய வாழ்க்கை இப்படி மாறிவிட்டதே என முதலில் வருத்தப்பட்ட பிரான்செஸ், பின்னாளில் அதனை இறைத்திருவுளம் என ஏற்றுக்கொண்டார்.

திருமண வாழ்க்கையில் தன்னுடைய கணவருக்கு மிகவும் பிரமாணிக்கமாகவும் எடுத்துக்காட்டான ஒரு பெண்மணியாகவும் வாழ்ந்துவந்தார். குறிப்பாக இவர் ஏழை எளிய மக்களிடத்தில் காட்டிய அன்பு எல்லாரையும் வியக்க வைத்தது. ஒரு சமயம் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டபோது, பிரான்செஸ் தன்னுடைய நகைகளையெல்லாம் விற்று ஏழை எளிய மக்களுக்குக் கொடுத்து உதவி செய்தார். இன்னொரு சமயம் நாட்டில் கொள்ளை நோய் ஏற்பட்டபோது, வீடு வீடாகச் சென்று எல்லாரிடத்திலும் உணவுப் பொருட்களை வாங்கி, அதனைத் தேவையில் இருநத மக்களுக்குக் கொடுத்து உதவினார். இந்தக் கொள்ளைநோயில் பிரான்செசின் இரு பிள்ளைகளும் இறந்து போனார்கள். அப்போது அவர் அடைந்த துயரை வார்த்தைகளால் விவரித்துச் சொல்ல முடியாது.

பிரான்செஸ், எப்போதுமே தன்னுடைய வாழ்வில் ஜெபத்திற்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்துவந்தார். அவர் செய்துவந்த ஜெபம் எல்லாப் பணிகளையும் சிறப்புடன் செய்ய உதவி புரிந்தது. ஏழை நோயாளிகள் தங்க இடமில்லாமல் தவித்தபோது அவர்களையெல்லாம் தன்னுடைய வீட்டில் தங்குவதற்கு அனுமதித்தார். இப்படி அவர் எந்நேரமும் ஏழைகளைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருந்தார். அவருடைய கணவர் அவருக்கு எந்தவொரு எதிர்ப்பையும் தெரிவிக்காமல், அத்தகைய செயல்களைத் தொடர்ந்து செய்வதற்கான எல்லா ஊக்கத்தையும் அளித்தார். எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த தருணத்தில் பிரான்செசின் கணவர் அவரை விட்டுப் பிரிந்தார். இதனால் தனிமரமான பிரான்செஸ் தன்னுடைய உடமைகள் அனைத்தையும் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, ஏழைகளுக்குப் பணிசெய்வதையே தன்னுடைய முழுநேரப் பணியாக மாற்றிக்கொண்டார்.

இப்படி எந்நேரமும் ஏழைகளைப் பற்றியே கவலைப்பட்டுக்கொண்டிருந்த பிரான்செஸ், அவர்களுக்காக ஒரு சபையை நிறுவினார். அந்த சபையின்மூலம் அவர் தன்னாலான உதவிகளை ஏழைகளுக்குச் செய்து வந்தார். இப்படி ஏழைகள் வாழ்வுபெற தன்னையே கரைத்துக்கொண்ட பிரான்செஸ், 1440 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய பிரான்செசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. ஏழை எளியவரிடத்தில் அக்கறை

தூய பிரான்செசின் வாழ்வை ஒருமுறை படித்துப் பார்க்கும்போது அவர் ஏழை எளியவரிடத்தில் கொண்டிருந்த அன்பும் அக்கறையும் நமக்குப் புரியும். அவரது நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஏழை எளியவரிடம் உண்மையான் அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு ஏழைகளுக்கு நற்செய்தி, ஏழைகளே நீங்கள் பேறுபெற்றோர் என்று ஏழைகளை மையப்படுத்திய வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். அவரைப் போன்று நாமும் ஏழைகளை மையப்படுத்திய வாழ்கையை வாழ்கின்றபோது, அவரது அன்புச் சீடர்களாவோம் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது.

அன்னைத் தெரசா அவர்களுடைய வாழ்வில் நடைபெற்ற ஓர் அருமையான நிகழ்ச்சி. அன்னைத் தெரசா கன்னியர் மடத்தை விட்டுவிட்டு, கல்கத்தாவின் சேரிப் பகுதிகளில் பணிசெய்யத் தொடங்கிய முதல் நாளன்று, சாலையோரத்தில் உடல் முழுவதும் புண்களாக இருந்த ஒருவர் கவனிப்பாரற்றுக் கிடந்தார். அவரைப் பார்த்த அன்னைத் தெரசா அவரைத் தூக்கி எடுத்துக் குளிப்பாட்டி, அவருக்கு புத்தாடை அணிவித்தார். இவற்றையெல்லாம் பார்த்த அந்த நோயாளி, “அம்மா! என்னை நீங்கள் இந்தளவுக்குப் பரிமாரித்துக் கொள்கின்றீர்களே. எது உங்களை இவற்றையெல்லாம் எனக்கு செய்யத் தூண்டியது?” என்று கேட்டார். அதற்கு அன்னை அவரிடத்தில், “உன்மீது நான் வைத்திருக்கும் அன்புதான் என்னை இவ்வளவு காரியங்களையும் செய்யத் தூண்டியது” என்றார்.

ஆம், அன்னைத் தெரசா ஏழைகள், அனாதைகள், நோயாளிகள் போன்றோரிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அந்த அன்புதான் அவரை எல்லாப் பணிகளையெல்லாம் சிறப்பாகச் செய்ய தூண்டியது. நாமும் அன்னைத் தெரசாவைப் போன்று, இன்று நாம் நினைவுகூரும் தூய பிரான்செஸ் போன்று ஏழை எளியவரிடம் உண்மையான அன்பு கொண்டிருக்கும்போது, நம்மால் அவர்களுக்காக எதையும் செய்ய முடியும் என்பது உறுதி.

ஆகவே, பிரான்செசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஏழை எளியவரிடம் அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day : (09-03-2020)

St. Frances of Rome
Frances was born in the year 1384 in a wealthy family. Her parents were Paolo Bussa and lacobella dei Roffredeschi. Her parents forced her to marry Lorenzo Ponziani, commander of the Papal Troops of Rome and she also obliged. They lived a very happy life for forty years. She with the consent of her husband exercise abstinence from sexual activities. When Rome was occupied by Neapolitan forces, her husband was severely wounded in the battle and died in 1436. Frances was gifted with powers of doing miracles and ecstasy. She founded the Olivetan Oblates of Mary on August 15, 1425, a confraternity of pious women. But the women were not cloistered or bound by any vows. When some of the women in the confraternity desired to live in a community, Frances started a monastery to allow such women to live a common life. This monastery was approved by pope Eugene-IV on July 4, 1433 and this monastery was later became known as the Oblates of Saint Frances of Rome. Frances also moved into a monastery and became the group’s president, after the death of her husband. She died on March 9, 1440.

There is a story that when Frances was alive, an angel used to light the road before her with a lantern, when she travelled outside, to safeguard her from hazards. She was canonized by pope Paul-V on May 9, 1608. She is the patron saint of all automobile drivers and all Oblates.

---JDH---Jesus the Divine Healer---

08 March 2020

தூய இறை யோவான் (மார்ச் 08)

இன்றைய புனிதர் : 
(08-03-2020) 

தூய இறை யோவான் (மார்ச் 08)
நிகழ்வு

நகரில் இருந்த நோயாளிகள், அனாதைகள், விதவைகள் போன்றோரை எல்லாம் தன்னுடைய இல்லத்திற்குக் கொண்டுவந்து, அவர்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்து வந்தார் நம் புனிதர் யோவான். இதனால் மக்களுக்கு மத்தியில் அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது.

இதற்கிடையில் யோவானின் வளர்ச்சி பிடிக்காத யாரோ ஒருவர் அவர் ஆற்றிவந்த இந்த சேவையை தவறாக அந்நகரின் ஆயருக்குத் தெரிவித்திருந்தார்கள். இதனால் ஆயர் யோவானைக் கூப்பிட்டு, “நீ உன்னுடைய இல்லத்தில் பாவிகளையும் விலைமகள்களையுமா கூட்டிக்கொண்டு வைத்து பணி செய்கின்றாய்?” என்று கேட்டார். அதற்கு யோவான் மிகவும் பொறுமையாக, “ஆம் ஆயர் அவர்களே! ஆண்டவர் இயேசு பாவிகளைத் தேடித்தானே இந்த மண்ணுலகிற்கு வந்தார். அது போன்று நானும் பாவிகளைத் தேடிச்சென்று அவர்களுக்கு என்னுடைய சேவையைச் செய்கின்றேன். மட்டுமல்லாமல், என்னை விட பெரிய பாவி இவ்வுலகில் இருக்க முடியுமா?” என்றார். ஆயரால் பதிலுக்கு எதுவும் பேசமுடியவில்லை. பின்னர் ஆயர் யோவானுக்கு மனப்பூர்வ சம்மதம் அளித்து, அவர் தன்னுடைய பணியைத் தொடர்ந்து செய்திட அனுமதி அளித்தார்.

வாழ்க்கை வரலாறு

யோவான் போர்ச்சுகல் நாட்டில் 1495 ஆம் ஆண்டு பிறந்தார். சிறு வயதிலே வீட்டை விட்டு ஸ்பெயின் நாட்டிற்கு ஓடிப் போய் அங்கிருந்த பண்ணையார் ஒருவருடைய ஆடுகளை மேய்த்து வந்தார். சிறுது காலத்தில் அதுவும் பிடிக்காமல் போய் பிரான்சு நாட்டிற்குச் சென்று இராணுவத்தில் பணியாற்றினார். அங்கேயும் அவர் நிரந்தரமாக இல்லை. மீண்டுமாக அவர் ஸ்பெயின் நாட்டிற்குச் சென்று நாடோடியாய் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார்.

ஒருநாள் அவர் அவிலா நகரைச் சார்ந்த யோவானுடைய போதனையைக் கேட்ட நேர்ந்தது. அவருடைய போதனை யோவானின் உள்ளத்தைத் தொட்டது. உடனே அவர் தன்னுடைய கடந்தகால பாவங்களை எல்லாம் நினைத்துப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். அது மட்டுமல்லாமல் ஒரு சாட்டை எடுத்து, அதனைக்கொண்டு தன்னுடைய உடல் முழுவதும் பலமாக அடித்து தன்னையே அவர் காயப்படுத்திக்கொண்டார். இதைக்கண்ட அவிலா நகர யோவானை அவரைத் தனியாக அழைத்துக்கொண்டு பொய் ஆற்றுப்படுத்தினார். “உன்னுடைய மனமாற்றத்தை வெளிப்படுத்த இது சரியான வழியல்ல, நீ மனம்மாறிவிட்டேன் என்பதைக் காட்ட விரும்பினால், உன்னுடைய பகுதியில் இருக்கும் நோயாளிகளையும் கைவிடப்பட்டோரையும் கவனித்துக் கொள்” என்றார். அவர் சொன்ன அறிவுரை யோவானின் வாழ்வில் புது ஒளியை ஏற்றியது.

அடுத்த நாளே யோவான் தன்னுடைய பகுதியில் இருந்த நோயாளிகளுக்கு உதவிகள் செய்யத் தொடங்கினார். முடியாதவர்களை எல்லாம் தன்னுடைய தோள்மேல் சுமந்துகொண்டு வந்து அவர்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்துவந்தார். குடும்பத்தாரால் கைவிடப்பட்ட முதியவர்களைக் குளிப்பாட்டி அவர்களுக்கு வேண்டியதெல்லாம் செய்துவந்தார். இத்தகைய அறப்பணிகளுக்கு அவர் தன்னுடைய சொத்துகளை எல்லாம் பயன்படுத்தினார். முடியாத பட்சத்தில் அவர் அந்நகரில் இருந்த பெரும் செல்வந்தர்களிடம் பண உதவி பெற்றுக்கொண்டார்.

யோவானின் இத்தகைய இரக்கச் செயல்களைப் பார்த்துவிட்டு நிறையப் பேர் அவரோடு சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார்கள். யோவான் அவர்கள் அனைவரையும் ஒன்றுசேர்த்து, ‘நன்மை செய்யும் சகோதரர்கள்’ என்னும் சபையை நிறுவினார். அச்சபை இன்றைக்கு நூறு நாடுகளுக்கும் மேல் பரவி துன்புறும் நோயாளிகளுக்கு பல்வேறு உதவிகளையும் மருத்துவச் சேவையும் செய்து வருகின்றது. இப்படி நோயாளிகளுக்கு மத்தியில் பணிசெய்து அவர்களுக்காகவே தன்னுடைய வாழ்வினை அர்ப்பணம் செய்த ‘இறை’ யோவான் 1550 ஆம் ஆண்டு தன்னுடைய ஐம்பத்து ஐந்தாம் வயதில் காலமானார். இவருக்கு 1690 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. இறை யோவான் என்று அழைக்கப்படும் இவர் நோயாளிகள், மருத்துவர்கள் போன்றோருக்குப் பாதுகாவலாக இருக்கின்றார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய இறை யோவானின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

நோயாளிகள் மீது அக்கறை

தூய இறை யோவான் தன்னுடைய பகுதியில் இருந்த நோயாளிகளை, கைவிடப்பட்டவர்களை சிறந்த விதமாய் கவனித்துக்கொண்டு அவர்களுக்கு கடவுளுடைய அன்பினை வெளிப்படுத்தினார் என்று அவருடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்று அறிகின்றோம். அவருடைய விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று நோயாளிகளிடம் உண்மையான அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நம்மோடு வாழக்கூடிய நோயாளிகளையும் கைவிடப்பட்டவர்களையும் கண்டும் காணாமலும்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “நான் நோயுற்று இருந்தேன், என்னைக் கவனித்துக்கொண்டாயா?” என்று. ஆம். நம்மோடு வாழக்கூடிய நோயாளிகளை, கைவிடப்பட்டவர்களை நாம் கவனித்துக்கொள்கின்றபோது நாம் நம் ஆண்டவர் இயேசுயே கவனித்துக்கொள்கின்றோம் என்பதுதான் உம்மை.

அமெரிக்காவில் தாமஸ் பிஷர் என்னும் பெரியவர் ஒருவர் இருந்தார். அவருடைய மனைவி அவரை விட்டுப்பிரிந்து பல ஆண்டுகள் ஆனதால் அவர் தனியாகயே வாழ்ந்து வந்தார். ஆனாலும் அவரிடம் ஏராளமான சொத்துகள் இருந்ததால், அவருடைய மனைவியின் பிரிவு அவருக்கு அவ்வளவு ஒன்றும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இதற்கிடையில் ஒருநாள் மாலைவேளையில் அவர் தன்னுடைய வீட்டில் அமர்ந்து செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருந்தார். அப்போது அவருடைய வீட்டின் கதவு தட்டப்பட்டது. உடனே அவர் எழுந்துசென்று கதவைத் திறந்தார். கதவைத் திறந்து பார்த்தபோது அவருக்கு எதிரில் கையில் கைத்தடியுடன் (Walking Stick) ஜோ நின்றுகொண்டிருந்தார். இந்த ஜோ ஒரு தெருவோர பிச்சைக்காரார். அவ்வப்போது அவர் தாமஸ் பிஷரின் வீட்டிற்கு வருவார். அவரும் கொஞ்சம் கொடுத்து அவரை அனுப்பி வைத்தார். அன்றைக்கும் தாமஸ் பிஷர் அவருக்குக் கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பிவைத்தார். அன்றைக்குக் குளிர் வழக்கத்திற்கு மாறாகவே இருந்தது.

மறுநாள் தாமஸ் பிஷர் தன்னுடைய வீட்டிலிருந்து இறங்கி தெருவில் நடந்து வந்துகொண்டிருந்தபோது ஓரிடத்தில் மக்கள் கூட்டமாய் இருந்தார்கள். எல்லாரையும் விலகிக்கொண்டு அவர் உள்ளே சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது அங்கே இறந்து கிடந்தது முந்தைய தினத்தில் தன்னுடைய வீட்டிற்கு வந்துபோன ஜோ என்று. ஜோவின் உடல் குளிருக்கு நன்றாக விறைத்துபோயிருந்தது. அப்போதுதான் தாமஸ் பிஷருக்கு மண்டையில் உரைத்தது, நேற்றைய நாளில் அவர் தன்னுடைய வீட்டிற்கு வந்தபோது அவருக்கு வீட்டில் தங்க இடம் கொடுத்திருக்கலாமே என்று.

அவருக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. என்ன செய்வதென்று தெரியாமல் விழித்த அவர், கனத்த இதயத்தோடு ஜோவை கல்லறைக்குத் தூக்கிக் கொண்டு போய் நல்லடக்கம் செய்தார்.

மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் ஜோவைப் போன்று எத்தனையோ ‘ஜோக்கள் உறவுகள் இன்றி, கைவிடப்பட்டவர்களாய், நோய் வாய்ப்பட்டவர்களாய் இருக்கின்றார்கள். இவர்களுக்கெல்லாம் நம்முடைய அன்பும் கரிசனையும் நிச்சயம் தேவைப்படுகின்றது.

ஆகவே, தூய இறை யோவானின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று நோயாளிகளிடமும் கைவிடப்பட்டவர்களிடமும் உண்மையான அன்பும் அக்கறையும் கரிசனையும் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

07 March 2020

பெர்பெத்துவா, பெலிசித்தம்மாள் (மார்ச் 07)

இன்றைய புனிதர் : 
(07-03-2020) 
பெர்பெத்துவா, பெலிசித்தம்மாள் (மார்ச் 07)

கிறிஸ்தவ நெறியைக் கடைப்பிடித்ததற்காக பெர்பெத்துவாவும், அவருடைய பணிப்பெண்ணான பெலிசித்தம்மாளும் சிறையில் அடைபட்டு இருந்தார்கள். அப்போது ஒருநாள் பெர்பெத்துவா ஒரு காட்சி கண்டார். அந்தக் காட்சியில் தங்கமயமான ஓர் ஏணி விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே இருப்பதைக் கண்டார். உடனே அவர் அந்த ஏணியில் வேகவேகமாக ஏறினார். இடையே ஓரிடத்தில் கொடிய பாம்பொன்று இருப்பதையும் கண்டார். அந்த பாம்பைக் கண்டதும் அவர் பயந்து நடுங்கினார். இருந்தாலும், அவர் மனதிலே தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அந்தப் பாம்போடு போராடி இறுதியில் வெற்றியும் கண்டார். பின்னர் அவர் தொடர்ந்து ஏறி, விண்ணகத்தை அடைந்தார். விண்ணகத்தில் தந்தையாம் கடவுள் அவரை இன்முகத்தோடு வரவேற்றார்.

பெர்பெத்துவா இந்தக் காட்சியை தனக்கு வேதம் போதித்து, திருமுழுக்குக் கொடுத்து, தன்னோடு சிறையில் அடைபட்டுக் கிடந்த வேதியர் சட்டைரஸ் என்பவரிடம் எடுத்துச் சொன்னபோது அவர் அவளிடம், “இந்தக் காட்சி, கிறிஸ்துவுக்காக உயிர்துறக்கத் துணிந்திருக்கும் உனக்கு, அவர் உனக்குக் கொடுக்க இருக்கும் பரிசை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது” என்று எடுத்துச் சொன்னார்.

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் விழாக் கொண்டாடும் தூய பெர்பெத்துவா, ஒரு கிறிஸ்தவ தாய்க்குப் பிறந்து, பின்னாளில் துனிசியாவில் இருந்த ஓர் உரோமை அதிகாரிக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டவர். அப்போது இவருக்கு 22 வயது. இவருடைய பணிப்பெண்தான் பெலிசித்தம்மாள். இவர்கள் வாழ்ந்த காலம் மூன்றாம் நூற்றாண்டு. இவர்களுடைய காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையும் வேதகலாபனையும் அதிகமாக நிகழ்ந்தன. கிறிஸ்தவ நெறியை பின்பற்றியவர்கள் கொடிய விலங்குகளுக்கு இரையாக்கப்பட்டார்கள்.

அப்போது உரோமையை ஆண்ட செப்டிமஸ் செவேருஸ் என்ற கொடுங்கோலன் பெர்பெத்துவாவையும் பெலிசித்தம்மாளையும் இன்னும் அவர்களோடு இருந்த ஒருசில கிறிஸ்தவப் பெண்களையும் சிறையில் அடைத்து சித்ரவதை செய்தான். அந்நேரத்தில் பெர்பெத்துவாவின் தந்தை, (அவர் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றாதவர்) பெர்பெத்துவாவிடம் வந்து, “தயவுசெய்து நீ கிறிஸ்துவை மறுதலித்துவிடு, அரசன் உன்னை விடுதலை செய்துவிடுவான். இல்லையென்றால் நீ அழிந்துவிடுவாய்” என்று எவ்வளவோ கெஞ்சிக் கேட்டார். அதற்கு அவர், அருகே இருந்த ஒரு பாத்திரத்தைச் சுட்டிக்காட்டி, “இந்தப் பாத்திரம் இருக்கிறதே, இதைப் பாத்திரம் என்றுதான் அழைக்கவேண்டும், வேறு எப்பெயராலும் அழைக்க முடியாது. அதைப் போன்றுதான் நான் கிறிஸ்தவள் என்றே அழைக்கப்படவேண்டும். அதில்தான் எனக்கு பெருமை இருக்கின்றது” என்று சொல்லி அவரை அங்கிருந்து அனுப்பி விட்டார்.

அதன்பிறகு அரசன் பெர்பெத்துவாவையும் பெலிசித்தம்மாளையும் இன்னும் அவர்களோடு இருந்த ஒரு சில பெண்களையும் கொடிய விலங்குகளுக்கு முன்பாகத் தூக்கி எறிந்தான். ஆனால் அவை அவர்களை ஒன்றுமே செய்யவில்லை. இதைக் கண்டு அரசன் வியப்புற்றான். பின்னர் அவன் அவர்களை எரியும் தீப்பிழம்பில் தூக்கி எறிந்தான். அப்போதும் அந்தத் தீப்பிழம்பு அவர்களை ஒன்றும் செய்யவில்லை. அவர்கள் அந்தத் தீப்பிழம்பின் நடுவே இறைவனைப் பாடி புகழ்ந்துகொண்டிருந்தார்கள். இதைக் கண்டு சினமுற்ற அரசன் அவர்களை வாளுக்கு இரையாக்கி கொன்றுபோட்டான். அவர்கள் தங்களுடைய வாழ்வினாலும் இறப்பினாலும் கிறிஸ்துவுக்கு சான்று பகர்ந்து இறந்தார்கள்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய பெர்பெத்துவா மற்றும் பெலிசித்தம்மாளின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவர்களிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. கிறிஸ்துவுக்காக துன்பங்களை ஏற்றல்

தூய பெர்பெத்துவாவும் பெலிசித்தம்மாளும் கிறிஸ்துவுக்காக எதையும் ஏற்கத் தயாராக இருந்தார்கள். இதை நாம் அவர்களுடைய வாழ்க்கையிலிருந்து எளிதாகக் கண்டுணரலாம். அவர்கள் அரசனைக் குறித்தோ, சாவைக் குறித்தோ பயப்படவே இல்லை. எல்லாவற்றிற்கும் துணிவுடன் தயாராக இருந்தார்கள். அதனால்தான் அவர்கள் புனிதர்கள் கூட்டத்தில் இடம்பெறுகிறார்கள்.

இன்றைக்கு அவர்களுடைய விழாவைக் கொண்டாடும் நமக்கு அவர்களிடமிருந்த துன்பத்தை, சவால்களை துணிவுடன் ஏற்றுக்கொள்ளும் மனநிலை இருக்கிறதா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் துன்பமா அது எதற்கு?, அது வேண்டவே வேண்டாம் என்று நினைக்கிறோம். துன்பங்கள்தான் இன்பத்திற்கான நுழைவாயில் என்பதை மறந்துபோய்விடுகிறோம்.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களிடம் பாடுகளைக் குறித்து சொன்னபோது பேதுரு, “ஆண்டவரே இது உமக்கு வேண்டாம்” என்று சொல்கிறார் (மத் 16: 22). காரணம் அவர் துன்பமில்லா இன்பமான வாழ்வு வாழ நினைத்தார். ஆனால் இயேசுவின் பார்வை வித்தியாசமாக இருக்கின்றது. அவர் துன்பங்கள் தான் தூயகத்திற்கான நுழைவாயில், மீட்புக்கான வழி என்பதை நன்கு உணர்ந்திருந்தார். அதனால்தான் அவர் தன்னுடைய இன்னுயிரையும் இழக்கத் துணிந்தார். இன்றைக்கு நாம் துன்பத்தை எத்தகைய மனநிலையோடு பார்க்கிறோம் என சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஆப்பிள் அதிகமாக உற்பத்தியாகும் அமெரிக்காவில் உள்ள மெயினி (Maine) என்ற இடத்தின் வழியாக ஒருவர் நடந்துசென்றுகொண்டிருந்தார். அப்போது ஓர் ஆப்பிள் தோட்டத்தில் பழங்கள் அதிகமாக விளைந்திருந்தன. இதைப் பார்த்த அம்மனிதருக்கு ஆச்சரியம் தாங்க முடியில்லை. எனவே, அவர் அந்த ஆப்பிள் தோட்டத்திற்குள் சென்று, அங்கே இருந்த விவசாயியிடம், “எப்படி ஐயா! உங்களுடைய தோட்டத்தில் மட்டும் அதிகமாக பழங்கள் ஓர் மரத்தில் காய்த்திருக்கின்றன?, இதன் இரகசியம் என்ன?” என்று கேட்டார். அதற்கு அவர், ஆப்பிள் மரத்தின் அடிப்பகுதியில் ஆங்கங்கே கொத்தி எடுக்கப்பட்டிபருப்பதைச் சுட்டிக்காட்டினார். பின்னர் அவரிடத்தில், “இப்படி ஒவ்வொரு மரத்திலும் கொத்தப்பட்டிருப்பதன் காரணம், இவை இன்னும் நன்றாக கனிகொடுப்பதற்காகவே ஆகும். ஒருவேளை இம்மரத்தின் அடிப்பகுதியைக் கொத்தாமல் விட்டுவிட்டால், அவை நன்றாக கணிகொடுக்காமலே போய்விடும்” என்றார்.

மரம் மட்டுமல்ல, மனிதர்களும் கூட தங்களுடைய வாழ்க்கையில் வலிகளைத் தாங்கிக் கொள்கிறபோதுதான், துன்பங்களை ஏற்றுக்கொள்கிறபோதுதான் உன்னதமான நிலையை அடைய முடியும் என்பது உண்மை.

தூய பெர்பெத்துவாவும், பெலிசித்தம்மாளும் கிறிஸ்துவுக்காக துன்பங்களையும் பாடுகளையும், அவமானங்களையும் ஏன் இறப்பையும் ஏற்றுக்கொண்டார்கள். அதனால்தான் அவர்கள் புனிதர்களாக உயர்ந்து நிற்கிறார்கள். நாமும் நம்முடைய வாழ்வில் கிறிஸ்துவுக்காக துன்பங்களை ஏற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saints Perpetua and Felicity, Martyrs
Late Second Century–203

March 7—Memorial (Optional Memorial if Lenten Weekday)
Liturgical Color: Red (Purple if Lenten Weekday)
Patron Saints of expectant mothers, widows, and butchers

Young mothers bleed to death in the arena as pagan eyes drink in the spectacle

Many centuries ago, in the desert lands of North Africa now populated by tens of millions of adherents of Islam, there was once a thriving Catholic Church. Dioceses, bishops, theologians, shrines, cemeteries, schools, monasteries, convents, and saints filled the towns hugging the southern coast of the Mediterranean Sea. This vibrant Catholicism gave birth to, and was inspired by, the witness of numerous martyrs. Many of their names are known, among them today’s saints, Felicity and Perpetua. Few documents in Church history can match the raw power of the first person, eye-witness account of the assassination of Perpetua and Felicity. It is a gripping narrative filled with breathtaking dramatic detail. The reader can almost feel the hot sand of the arena warming his feet, a gentle sea breeze caressing his cheeks, and the sweaty crowd pressing against him, their roar for bloodlust echoing through the dry air.

Vivia Perpetua, twenty-two years old, was married, a noblewoman, and a new mother whose baby was still nursing. Her pagan father begged his favorite daughter to renounce her Christian faith, but to no avail. Felicity was a slave and pregnant when jailed. She gave birth a few days before her martyrdom. Her child would be raised by Christian women in Carthage. Perpetua, in her own hand, recorded the events leading up to her martyrdom, while an eye-witness to her death completed the text later. When they were first thrown into the arena, Perpetua and Felicity were attacked by a rabid heifer, which was chosen because it shared the same sex as its victims. The young women were grievously injured by the mad cow and then momentarily removed from the arena until gladiators were brought in to conclude the day’s spectacle. The executioners carried out their duties quickly, though Perpetua had to guide the gladiator’s sword to her throat after he first painfully struck a bone instead of a vein. As the narration states, “Perhaps such a woman…could not die unless she herself had willed it.” Perpetua and Felicity were imprisoned together, suffered together, and died together in 203 A.D. in Carthage, North Africa, along with other noble martyrs whose names are preserved in the same account.  

The vivid description of their deaths was so moving that it was faithfully preserved down through the centuries and has come to us largely intact. Apart from the New Testament writings themselves, only a few documents from the early Church pre-date the passion narrative of Perpetua and Felicity. It invites tantalizing reflection on how many similar first hand testimonies of famous martyrdoms from the early Church have been lost! What could have been known about the final moments of Saints Paul, Cecilia, Irenaeus, and so many apostles and popes! The accounts of Perpetua, Felicity, and Polycarp must fire our imagination for all the rest. The Church in North Africa so often read the account of Perpetua and Felicity in its public liturgies that Saint Augustine, a North African bishop living two hundred years after their martyrdoms, had to remind his faithful that the narrative was not on a par with Scripture itself.

The fact that women and slaves, both mothers who loved their children, were willing to die rather than renounce their faith, is a testament to the revolutionary message of Jesus Christ. The Son of God gave us a true religion. But He also gave us a true anthropology. He has revealed to man his true origins, his high dignity, and his ultimate purpose. Jesus reveals man to himself. So when early Christians, or even present-day Christians, understand that they are made in God’s image and likeness, and that His Son died for them as much as He died for anyone else, they stand a little taller. If a Christian is told he is garbage, property, a slave, old, a prisoner, or a foreigner, he shouldn’t flinch at the insult, because under such denigrations is a deeper identity: “child of God,” “made in God’s image and likeness,” and “worthy of the blood of the Lamb.” These are the titles of a citizen of the Kingdom of God, whose shadow covers the earth and comforts all those who live in its shade. Felicity and Perpetua clung to their identity as Christians in the face of imprisonment, ridicule, torture, and pain. The newness of the faith, and the dignity it imparted, fortified them to accept death rather than a return to rough paganism. May our faith be as fresh to us today.

Saints Felicity and Perpetua, your martyrdom was an act of bravery, which moved the Christians of your age and continues to move us today. Give all who invoke your names similar courage, fortitude, and faith to overcome timidity in witnessing to Christ in difficult circumstances.

06 March 2020

தூய கொலேட் (மார்ச் 06)

இன்றைய புனிதர் :
(06-03-2020) 

தூய கொலேட் (மார்ச் 06)
நிகழ்வு

ஒரு சமயம் கொலேட் இருந்த பகுதியில் இருந்த ஒரு விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த பெண்ணொருத்திக்கு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தை குறைமாதக் குழந்தையாக பிறந்து உடல் நலம் குன்றியிருந்தது. இதைப் பார்த்த அந்தக் குழந்தையின் தந்தை, குழந்தைக்குத் திருமுழுக்குக் கொடுத்தால் உடல் நலம் தேறிவிடும் என்ற நம்பிக்கையில், குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஆலயத்திற்கு ஓடினார். ஆலயத்திற்கு சென்று, அங்கிருந்த குருவானவரிடம் காட்டியபோது, அக்குழந்தை ஏற்கனவே இறந்திருந்தது குருவானவருக்குத் தெரியவந்தது. எனவே குருவானார், குழந்தையின் தந்தையிடம், “குழந்தை ஏற்கனவே இறந்துபோய்விட்டது. இறந்த குழந்தைக்கு திருமுழுக்குக் கொடுப்பது நல்லதல்ல” என்றார். இதைக் கேட்டு அந்த குழந்தை தந்தை கதறி அழுதார்.

அவருடைய அழுகையைப் பார்த்து மனமுருகிப் போன குருவானவர் அவரிடம், “பக்கத்தில் கொலேட் என்ற பெண் துறவி ஒருவர் இருக்கின்றார். உன்னுடைய குழந்தையை அந்தத் துறவியிடம் நீ எடுத்துக்கொண்டு போனால், கட்டாயம் அவர் உன்னுடைய குழந்தையை உயிர்பித்துத் தருவார்” என்றார். குருவானார் சொன்னதை நம்பி, அவர் தன்னுடைய குழந்தையைத் தூக்கிக்கொண்டு கொலேடிடம் ஓடினார். அவரைச் சென்று சந்தித்து நடந்தவற்றையெல்லாம் விளக்கிச் சொன்னார். உடனே அவர் தான் அணிந்திருந்த மேலாடையை (Habit) எடுத்து, அந்தக் குழந்தையின் மீது போர்த்தி, அந்தக் குழந்தைக்காக இறைவனிடம் ஜெபித்தார். பின்னர் அவர் அந்த மனிதரிடம், “உன்னுடைய குழந்தை நிச்சயம் பிழைத்துக்கொள்ளும். அதனால் இக்குழந்தையை எடுத்துக்கொண்டு போய் குருவானவரிடம் காட்டி, திருமுழுக்குக் கொடு” என்றார்.

கொலேட் சொன்ன வார்த்தைகளை நம்பி, அந்த மனிதர் குழந்தையைத் தூக்கிக்கொண்டு குருவானவரிடத்தில் சென்றார். ஆச்சரியம் என்னவென்றால், குழந்தை போகிற வழியிலே பிழைத்துக்கொண்டது. உயிர்பிழைத்த அந்தக் குழந்தையை குருவானவரிடத்தில் காட்டி, திருமுழுக்குக் கொடுத்தார். பின்னாளில் அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவளாகி, கொலேட்டின் சபையில் சேர்ந்து துறவியானது.

வாழ்க்கை வரலாறு

கொலேட், 1381 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் தேதி, பிரான்சில் உள்ள கார்பி என்ற கிராமத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோருக்கு நீண்ட நாட்களாகக் குழந்தையே இல்லை. எனவே, அவர்கள் தூய நிக்கோலாசிடம் இடைவிடாது ஜெபித்துவந்தார்கள். ஒருகட்டத்தில் அவர்களது ஜெபம் கேட்கப்பட்டது. ஆம், அவர்களது ஜெபத்தின் பயனாக கொலேட் பிறந்தார். கொலேட் பிறக்கும்போது அவருடைய தந்தைக்கு 60 வயது.

கொலேட் வளரும்போதே பக்தியோடும் ஒழுக்கத்தோடும் வளர்ந்து வந்தார். அவருடைய வளர்ச்சியைக் கண்டு, அவருடைய பெற்றோர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். இப்படி எல்லாமே நன்றாகப் போய்கொண்டிருந்த தருணத்தில், கொலேட்டின் பெற்றோர் இருவரும் இறந்துபோனார்கள். இதனால் கொலேட் அடைந்த துயரத்திற்கு அளவே இல்லை. ஆனாலும் அவர் மனம்தளராமல், தனக்குச் சொந்தமான சொத்துகளை எல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையில் சேர்ந்து துறவியானார்.

துறவற மடத்தில் இருந்த சமயத்தில், ஒருநாள் அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது தூய அசிசியார் அவருக்குக் காட்சி கொடுத்தார். அந்தக் காட்சியில் அசிசியார் கொலேட்டிடம், கிளாரா சபையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டு மறைந்துபோனார். கொலேட்டுக்கு தொடக்கத்தில் ஒன்றும் புரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் எல்லாம் புரிந்தது. உடனே அவர் கிளாரா மடத்தில் மாற்றங்களைக் கொண்டு வரத் தொடங்கினார். அதற்கு பலரிடமிருந்தும் எதிர்ப்புகள் வந்தன. ஆனாலும் கொலேட் அதனை எல்லாம் பொருட்படுத்தாமல், சபையை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டார். இறுதியில் அதில் வெற்றியும் பெற்றார்.

கொலேட் சபையை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசென்ற அதே வேளையில், ஏழை எளியவரிடத்திலும் மிகவும் அக்கறை கொண்டு வாழ்ந்துவந்தார். சபையில் யாரும் செய்யத் துணியாத மிகவும் சாதாரண பணிகளையும் செய்தார். இதனால் எல்லாருடைய நன்மதிப்பையும் பெற்றார். இப்படிப்பட்டவர் 1447 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1807 ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பயஸ் புனிதர் பட்டம் கொடுத்தார்.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தூய கொலேட்டின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்தல்

தூய கொலேட்டின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது அவர் எப்போதும் இறைவனுக்கு உகந்த வாழ்க்கையை வாழ்ந்துவந்தார் என்பது நமக்குப் புரியும். அவர் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்து வந்ததால், இறைவன் அவர் வழியாக பல வல்ல செயல்களைச் செய்தார் என்பதை அவருடைய வாழ்க்கை குறிப்பிலிருந்து நாம் அறிந்துகொள்கின்றோம்.

ஒருமுறை அவர் திருத்தந்தை பெனடிக்டைச் சந்திக்க நைசை நோக்கிப் பயணம் செய்தபோது, நண்பர் ஒருவரது வீட்டில் தங்கினார். அந்த நண்பரின் மனைவியோ எப்போது வேண்டுமானால் குழந்தையைப் பிரசவிக்கும் தருணத்தில் இருந்தார். இரவில் எல்லாரும் தூங்கப் போன சிறிதுநேரத்தில் நண்பரின் மனைவி பிரசவ வேதனையில் அலறினார். உடனே கொலேட் அருகில் இருந்த ஆலயத்திற்குச் சென்று அந்தப் பெண்ணுக்கு சுகப் பிரசவம் நடக்க வேண்டும் என்று இறைவனிடம் ஜெபித்தார். அவர் ஜெபித்துக் கொண்டதற்கு ஏற்ப அந்தப் பெண்ணுக்கு சுகப் பிரசவம் நடைபெற்றது. அதனால் எல்லாரும் இறைவனைப் போன்று மகிழ்ந்தார்கள்.

இப்படி பல்வேறு நிகழ்வுகளின் வழியாக கொலேட் ஆண்டவரின் கைவன்மையைப் பெற்றவராய் இந்த உலகில் வலம்வந்தார். தூய கொலேட்டைப் போன்று நாமும் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்கின்றபோது, இறைவனால் ஆசிர்வதிக்கப்படும் என்பது உறுதி.

ஆகவே, தூய கொலேட்டைப் போன்று நாமும் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

05 March 2020

சபை நிறுவுநர் ராபர்ட் ஸ்பைஸ்கே Robert Spiske march 5

இன்றைய புனிதர்
2020-03-05
சபை நிறுவுநர் ராபர்ட் ஸ்பைஸ்கே Robert Spiske
பிறப்பு
29 ஜனவரி 1821,
பிரேஸ்லவ் Breslau, போலந்து
இறப்பு
5 மார்ச் 1888,
பிரேஸ்லவ் Breslau, போலந்து

இவர் தான் ஓர் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட பின்பு ஊர் ஊராகச் சென்று மறைப்பணியை ஆற்றினார். பேராலயங்களில் சிறப்பான மறையுரை ஆற்றி, பலரை மனந்திருப்பினார். திருப்பலிக்கு வராத மக்களையும் தன் அழகிய மறையுரையால் கவர்ந்து இறை இல்லம் நாடி வரச் செய்தார். இளைஞர்களின் மனதை மிக எளிதாகக் கவர்ந்தார், கைவிடப்பட்ட இளைஞர்களுக்கு இல்லம் ஒன்றை எழுப்பி, அவர்களை பராமரித்து வந்தார்.

இவர் அக்குழந்தைகள் மற்றும் இளைஞர்களை கவனித்து பராமரிப்பதற்கென்று, எட்விக் சகோதரிகள் என்ற பெயரில் சபை ஒன்றை நிறுவினார். 1892 ஆம் ஆண்டு இச்சபை, திருத்தந்தை அவர்களால் துறவறச் சபை என்ற அங்கீகாரம் அளிக்கப்பட்டது. ராபர்ட் ஸ்பைஸ்கே "காரித்தாஸ் அப்போஸ்தலர்" (Apostel Caritas) என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவர் இறந்தபிறகு, இவரால் தொடங்கப்பட்ட சபையிலேயே அடக்கம் செய்யப்பட்டார்.


செபம்:
படைப்பனைத்திற்கும் பாதுகாவலே! இன்றைய உலகில் வாழும் இளைஞர்களை ஆசீர்வதியும். இவர்கள் தெளிந்த சிந்தனையுடன் தங்களது வாழ்வை வாழ உதவி செய்யும். நல்லதோர் எதிர்காலத்தைப் பெற்று, நாட்டிற்கும் வீட்டிற்கும் எம் திருச்சபைக்கும் பிரமாணிக்கமுள்ளவர்களாக வாழ வழிகாட்டிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

திருக்காட்சியாளர் ஒலிவியா Olivia
பிறப்பு : 2 ஆம் நூற்றாண்டு, பிரேசியா Brescia, இத்தாலி
இறப்பு : 2 ஆம் நூற்றாண்டு, பிரேசியா Brescia, இத்தாலி


துறவி கொன்ராட் ஷோய்பர் Konrad Scheuber
பிறப்பு : 1481, ஆல்ட்பெல்லன் Altfellen
இறப்பு : 5 மார்ச் 1559 ஒல்ஃபன்சீசன் Wolfenschießen, சுவிஸ்

தூய சிலுவை யோவான் ஜோசப் (மார்ச் 05)

இன்றைய புனிதர் : 
(05-03-2020) 

தூய சிலுவை யோவான் ஜோசப் (மார்ச் 05)
“மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” (மத் 20:28)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் சிலுவை யோவான் ஜோசப், இத்தாலியில் உள்ள இஸ்கியா என்னும் இடத்தில் இருந்த ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் 1654 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 ஆம் நாள் பிறந்தார். சிறுவயதிலே பக்தியிலும் நற்பண்புகளிலும் சிறந்து விளங்கிய இவர், தனது பதினாறு வயதில் பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்து, 1677 ஆம் ஆண்டு குருவானார். குருவானவராக மாறிய இவர் அதிகமான ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொண்டார். அதோடு நீண்டநேரம் இறைவனிடத்தில் ஜெபித்து வந்தார். இவருடைய ஜெபவாழ்க்கை இவரை மேலும் மேலும் உயர்த்தியது. எந்தளவுக்கு என்றால் தொடக்கத்தில் நவதுறவிகளுக்கு பொறுப்பாளராக இருந்த இவர், படிப்படியாக உயர்ந்து துறவற மடத்தின் தலைவரானார்.

துறவுவாழ்க்கையில் இயேசுவைப் போல வாழ முயற்சி செய்தார். பணிவிடை பெறுவதல்ல, பணிவிடை புரிவதே மேலானது என்றும் தன்னையே இறைவனுக்கு முழுமையாகக் கையளிப்பதும்தான் துறவற வாழ்வின் மேலான குறிக்கோள்கள் என்பதை உணர்ந்து, அதற்கேற்ப வாழ்ந்து வந்தார். இவருடைய கைகளால் நிறைய வல்ல செயல்கள் நடைபெற்றன. தீராத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இவரிடத்தில் வந்தபோது, இவர் தனது கைகளை வைத்து ஜெபித்தபோது அவர்கள் நோய் நீங்கி நலமடைந்தார்கள். இவர் வசதியான குடும்பத்திலிருந்து வந்தபோதுகூட எப்போதும் ஏழ்மையையே கடைப்பிடித்து வந்தார்.

ஏழ்மை, தாழ்ச்சி போன்ற புண்ணியங்களில் சிறந்துவிளங்கிய சிலுவை யோவான் ஜோசப் மரியன்னையிடம் மிகுந்த பக்திகொண்டு வாழ்ந்து வந்தார். தன்னுடைய வாழ்க்கையில் துன்பங்களும் இன்னல்களும் சூழ்ந்த நேரத்தில் மரியாளிடத்தில்தான் இவர் மிகுந்த பக்திகொண்டு ஜெபித்துவந்தார். மரியாவும் இவருக்கு மிகப்பெரிய ஆறுதலாய் இருந்து வந்தார். இப்படிப் பல்வேறு பணிகளைச் செய்துவந்த சிலுவை யோவான் ஜோசப் 1734 ஆம் ஆண்டு உடல்நலம் குன்றி, மரணப்படுக்கையில் விழுந்து அப்படியே இறந்து போனார். இவருக்கு 1839 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த எட்டாம் பயஸ் என்பவரால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய சிலுவை யோவான் ஜோசப்பின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. சேவை செய்து வாழ்தல்

தூய சிலுவை யோவான் ஜோசப்பிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடம், சேவை செய்து வாழ்ந்த வாழ்க்கையாகும். ஆண்டவர் இயேசு சொன்ன, ‘மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றவும் பலருடைய மீட்புக்காக தம் உயிரையும் கொடுக்க வந்தார்’ என்ற வார்த்தைகளை அடிக்கடிச் சொல்லி அதன்படியே இவர் வாழ்வதற்கு முயற்சிகள் செய்து வந்தார். இவருடைய விழாவைக் கொண்டாடும் நாம் நல்ல மனதோடு, அர்ப்பண உள்ளத்தோடு சேவை செய்ய முயற்சி செய்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் அடுத்தவர் நமக்குச் செய்ய வேண்டும் என்ற நினைப்பில் இருக்கின்றோமோ ஒழிய, நாம் அடுத்தவருக்குச் சேவை செய்ய முன்வருவதில்லை. இத்தகைய சூழ்நிலையில்தான் தூய சிலுவை யோவான் ஜோசப் நமக்கு மிகச் சிறந்த முன்மாதிரியாக இருக்கின்றார்.

ஒருசமயம் ரோட்னி ஸ்மித் என்ற வெளிநாட்டுக்காரர், அன்னை தெரசா நடத்தி வந்த அனாதை இல்லத்திற்கு சென்றிருந்தார். அங்கே அவர் கண்ட காட்சி அவரை ஆச்சரியப்பட வைத்தது. ஏனென்றால், அனாதை இல்லத்தில் இருந்த ஒரு பணியாளர், அங்கிருந்த நோயாளி ஒருவர் வாந்தி எடுத்து வைத்ததை கழுவிச் சுத்தம் செய்துகொண்டிருந்தார். இதைப் பார்த்த ரோட்னி ஸ்மித் அந்தப் பணியாளரிடம் சென்று, “எப்படி உங்களால் இந்த வேலையெல்லாம் செய்ய முடிகின்றது?” என்று கேட்டார். அதற்கு அந்தப் பணியாளர், “யாராவது பிள்ளைகள் ‘அசுத்தம்’ செய்து வைத்ததை சுத்தம் செய்யும்போது அதனை வேலை என்று சொல்வார்களா? இல்லைதானே... அதுபோன்றுதான் நானும் இதை வேலையாகச் செய்யாமல் கடமையாகச் செய்கின்றேன்” என்றார். அந்தப் பணியாளர் பேசும்போது வார்த்தைகளில் வெளிப்பட்ட அன்பையும் கண்களில் தெரிந்த ஒளியையும் கண்டு வியந்துபோய் நின்றார்.

தான் செய்த ‘பணியை’ ஏதோ கடமைக்காகச் செய்யாமல், உள்ளார்ந்த அன்புடன் செய்ய, அந்தப் பணியாளரின் செயல் உண்மையில் நமது பாராட்டுக்குரியதாக இருக்கின்றது. நாமும் அர்ப்பண உள்ளத்தோடு சேவை செய்யவேண்டும் என்பதுதான் ஆண்டவர் நம்மிடமிருந்து எதிர்பார்க்கின்ற ஒன்றாக இருக்கின்றது.

ஆகவே, தூய சிலுவை யோவான் ஜோசப்பின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று அர்ப்பண உள்ளத்தோடு ஆண்டவருக்கும் அவரது அன்பு மக்களுக்கும் சேவை செய்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.Saint of the Day : (05-03-2020)

St. John Joseph of the Cross

He was born on August 15, 1654, on the date of the Feast of Assumption, in the island of Ischia near Naples. His father was Joseph Calosirio and mother Garguilo. His birth name was Carlo Gaetano. He entered in to the Franciscan Order of the strictest observance or Reform of St. Peter of Alcantara, at Naples at the age of 16 years. He was happy in performing menial offices in the convent. Even at his young age he was devoted to poverty and fasting. His obedience brought him good name in the convent. He was chosen as the Master of the Novices at the young age of 24 years. He devised a cross about a foot length set with rows of sharp nails and fastened the cross tight over his shoulder so that it gives much pain to the shoulder, as a means of penance. He was appointed Vicar Province of the Alcantarine Reform of Italy in the year 1702. It seems he also knew his date of death. One week before his death, when he talked to his brother, John Joseph requested his brother to specially pray for him without fail on next Friday and he actually died on that very Friday on March 5, 1739.

St. John Joseph of the Cross was beatified in the year 1789 and canonized by pope Gregory-XVI on May 26, 1839.

---JDH---Jesus the Divine Healer---

04 March 2020

தூய கசிமிர் (மார்ச் 04)

இன்றைய புனிதர் : 
(04-03-2020) 
தூய கசிமிர் (மார்ச் 04)

“மனிதன் உலகம் முழுவதும் தனதாக்கிக் கொண்டாலும் தன் ஆன்மாவை இழப்பானெனில் அதனால் வரும் பயனென்ன? (மத் 16: 26)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் கசிமிர், போலந்து நாட்டு மன்னர் நான்காம் கசிமிர் என்பவருக்கு மகனாக 1458 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 3 ஆம் நாள் பிறந்தார். சிறு வயதிலே மிகுந்த பக்தியோடு வளர்ந்து வந்த கசிமிர், துளுகோஸ் என்பவரிடம் அனுப்பி வைக்கப்பட்டபோது பாடங்களை கற்று வந்தார்.

இந்த சமயத்தில் துருக்கி நாட்டவரால், ஹங்கேரி நாட்டு மக்களுக்கு பயங்கர அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதனால் ஹங்கேரி நாட்டு மக்கள், மன்னர் நான்காம் கசிமிரை அணுகி வந்து அவருடைய மகனான கசிமிரை தங்களுக்குத் தலைமை தாங்குமாறு கேட்டுக்கொண்டார்கள். மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க மன்னர் தன் மகன் கசிமிரை அவர்களுக்குத் தலைமை தாங்கப் பணித்தார். சில ஆண்டுகள் கசிமிர் ஹங்கேரி நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்று சீரும் சிறப்புமாக மக்களை வழிநடத்தி வந்தார். அப்போது அவருக்கு வயது வெறும் 13 தான். அந்த சிறிய வயதிலும் ஒரு நாட்டை தலைமை தாங்கி வழிநடத்தக்கூடிய திறமையை இறைவன் கசிமிருக்குக் கொடுத்திருந்தார்.

ஒருசில ஆண்டுகள் ஹங்கேரியில் இருந்து பணியாற்றிவிட்டு, கசிமிர் தன்னுடைய சொந்த நாட்டிற்குத் திரும்பினார். ஹங்கேரிக்கு வந்த சமயத்தில் அவருடைய தந்தை, லித்துவேனியாவில் இருக்கின்ற பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக, அரச பதவியை கசிமிரிடம் கொடுத்துவிட்டு அங்கு சென்றார். அவர் திரும்பி வரும்வரை கசிமிர் மக்களை நல்லமுறையில் வழி நடத்திச் சென்றார். தன் மகனுக்கு இருக்கின்ற இந்த அசாதாரண திறமையைப் பார்த்துவிட்டு மன்னர், அவரை ஜெர்மன் நாட்டு மன்னரின் மகளுக்கு மணமுடித்துக் கொடுக்கத் திட்டமிட்டார். ஆனால், அவரோ அதற்கு இசையாது, ஆண்டவருக்கு தன்னை முழுமையாய் அர்ப்பணித்து வாழத் தொடங்கினார்.

கசிமிர், ஜெப வாழ்க்கையிலும் மேலோங்கி விளங்கினார். குறிப்பாக மரியன்னையிடம் மிகுந்த பக்திகொண்டு விளங்கினார். ‘தினமும் வாழ்த்துவோம், ஓ அன்னையே’ என்ற பாடலை அவர் எப்போதும் பாடி ஜெபித்துக்கொண்டே இருந்தார். சில நேரங்களில் அவர் இரவில் தூங்காமல் ஜெபித்துவந்தார். இப்படி இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்து வந்த கசிமிர், மிகக் குறைந்த வயதிலே, அதாவது அவருக்கு 24 வயது நடந்துகொண்டிருக்கும்போதே இறைவனடி சேர்ந்தார். கசிமிர் இறந்து 122 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய கல்லறையைத் தோண்டிப் பார்த்தபோது அவருடைய உடல் அழியாது இருப்பது கண்டு மக்களெல்லாம் ஆச்சரியப்பட்டு நின்றார்கள். அவர் தன்னோடு வைத்திருந்த ஜெபப்புத்தகம் கூட அழியாமல் இருந்தது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய கசிமிரின் நினைவுநாளைக் கொண்டாடும் இன்று அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. மரியன்னையிடம் பக்தி

தூய கசிமிரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கின்றபோது அவர் மரியன்னையின் மீது கொண்டிருந்த பக்தி, அந்த பக்தியினால் அவர் வாழ்ந்த தூய வாழ்க்கை நம்மை வியக்க வைக்கின்றது. புனிதரைப் போன்று நாமும் மரியன்னையிடம் ஆழமான பக்தி கொண்டு வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இந்த இடத்தில் ஒரு வரலாற்று நிகழ்வை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். இடைக்காலத்தில் உரோமையில் பத்திரிசியா அருளப்பர் என்ற பெரும் செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவர் மரியன்னையிடம் மிகுந்த பக்தி கொண்டவர். அதன் பொருட்டு அவர் ஏழைகளுக்கும் பிச்சைகாரர்களுக்கும் நிறைய தான தர்மங்களைச் செய்து வந்தார். அப்படிப்பட்டவர் ஒருசில தீய பழக்க வழக்கங்களுக்கும் அடிமையாய் இருந்தார். சில ஆண்டுகள் கழித்து அவர் மூப்பெய்தி இறந்துபோனார்.

இதற்கிடையில் உரோமையில் இருந்த செசிலியம்மாள் ஆலயத்தில் குருவானவர் ஒருவர் ஜெபித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் ஒரு காட்சி கண்டார். அந்தக் காட்சியில், விண்ணகத்தில் மரியன்னை வானதூதர்கள் புடைசூழ அரியணையில் வீற்றிருக்க, அவருக்கு முன்பாக ஒரு பிச்சைக்காரி அழுது புரண்டு மன்றாடினாள். “அன்னையே! உன் அடியாராகிய பத்திரிசியா அருளப்பர், மண்ணுலகில் செய்த ஒருசில தீயச் செயல்களுக்காக இப்போது உத்தரிக்க தளத்தில் வேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார். அவர் நிறைய தான தர்மங்களைச் செய்தவர். இதோ நான் போர்த்தியிருக்கின்றனே இந்த போர்வை, இதுகூட அவர் போர்த்தியதுதான்” என்றார். உடனே மரியன்னை அவரிடம், “பத்திரிசிய அருளப்பரை எனக்குக் காட்டும்” என்றார். அந்தப் பிச்சைக்காரியும் அவரை மரியன்னையிடம் காட்ட, மரியன்னை அவர்மீது இரக்கம்கொண்டு அவருக்கு விண்ணகத்தில் இடமளிக்க தன் மகனை வேண்ட, அவரும் அவருக்கு விண்ணகத்தில் இடமளித்தார்.

மரியன்னையிடம் வேண்டுவோருக்கும் அவரிடம் உண்மையான பக்தி கொண்டு வாழ்வோருக்கும் இறைவன் அளப்பெரிய காரியங்களைச் செய்வார் என்பதை இந்த நிகழ்வின் வழியாக அறிந்துகொள்ளலாம். இன்று நாம் நினைவுகூரும் கசிமிர், மரியன்னையியம் மிகுந்த பக்தி கொண்டிருந்ததால்தான் என்னவோ அவருடைய உடல் நீண்ட நாட்கள் அழியாமல் இருக்க மரியா துணைபுரிந்தார் என்று நம்பத் தோன்றுகின்றது.

ஆகவே, தூய கசிமிரின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று மரியன்னையிடமும் அவர் மகன் இயேசுவிடமும் மிகுந்த பக்தி கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day : (04-03-2020)

St. Casimir

St. Casimir was born on October 3, 1458 in Krakow, Poland. He was the crown prince of the Kingdom of Poland and of the Grand Duchy of Lithuania. He was the second son of King Casimir-IV of Poland and Grand Duke of Lithuania and Queen Elizabeth Habsburg of Hungary. He was educated by the Polish priest Jan Dlugosz. His father tried to arrange the marriage of Casimir with Kunigunde of Austria but Casimir refused to marry to live a life of celibacy. In October 1471 prince Casimir with his father king Casimir-IV invaded Hungary to install Casimir as the king of Hungary. But due to unforeseen circumstances the campaign failed. This defeat pushed Casimir to religious life. As a prince Casimir rejected comforts, slept little and spend nights in prayers. He used to sleep on floor and not on royal bed. He died on March 4, 1484 of tuberculosis at the young age of 25 years.

His first miracle was his appearance before the Lithuanian Army during the siege of Polotsk in 1518, where St. Casimir showed where the Lithuanian troops could safely cross the Daugava River and relieve the city besieged by the army of Grand Duchy of Moscow. This miracle was reported to the pope by King Sigismund-I the Old, of Poland and the pope Adrian-VI canonized Casimir in the year 1522. Pope Pius-XII named saint Casimir the special patron of all youth on June 11, 1948.

---JDH---Jesus the Divine Healer---

03 March 2020

மறைசாட்சி லிபெராட் வைஸ் Liberat march3

இன்றைய புனிதர்
2020-03-03
மறைசாட்சி லிபெராட் வைஸ் Liberat Weiß OFM
பிறப்பு
4 ஜனவரி 1675,
கோனெர்ஸ்ராய்த் Konnersreuth, பவேரியா
இறப்பு
3 மார்ச் 1716,
கொண்டர் Gondar, எத்தியோப்பியா
முத்திபேறுபட்டம்: 20 நவம்பர் 1988 திருத்தந்தை 2 ஆம் ஜான் பால்

இவர் பிறந்த ஊர் மக்களால், அப்போஸ்தலர் என்று அழைக்கப்பட்டார். சிறுவயதிலிருந்தே மறைப்பணியாற்றுவதில் அக்கறை காட்டி வந்தார். இவர் குருவான பிறகு 3 அருட்தந்தையர்களுடன் இணைந்து மறைப்பணியாற்றினார். மறைப்பணியாற்றும்போது பல இன்னல்களை எதிர்கொண்டார். இவர் அரசர் ஒருவர் சிறைப்பிடித்து செல்லப்பட்டார். அப்போது அவ்வரசன் இவரை கற்களால் அடித்துக் கொல்லும்படி ஆணையிட்டான்.

அச்சமயத்தில் இவர் இறைவனின் அருளால் எத்தியோப்பிய நாட்டில் ஒருநாள் நடந்த திருப்பலியில் பங்கெடுக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது இவர் திருப்பலி நிறைவேற்றும்போது அரசரின் படைவீரர்களால் பிடிக்கப்பட்டு, அந்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றாக கூடியிருந்த சமயத்தில் அனைவராலும் கற்களால் அடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.


செபம்:
அற்புதங்களை செய்து வரும் எம் இறைவா! உம்மீது கொண்ட அன்பால் ஆர்வமுடன் இறைப்பணியை செய்ய நீர் சிலரை மட்டுமே தேர்ந்தெடுக்கின்றீர். இறையழைத்தல் குறைந்து வரும் இந்நாட்களில், உம் அறுவடைக்குத் தேவையான மிகுதியான ஆட்களை நீர் தேர்வு செய்து, உம் பணியை வளர்த்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

மறைசாட்சி பேதுரு ரெனாட்டூஸ் ரோகுவே Petrus Renatus Rogue CM
பிறப்பு : 11 ஜூன் 1758 வானெஸ் Vannes, பிரான்ஸ்
இறப்பு : 3 மார்ச் 1796, பிரான்ஸ்
முத்திபேறுபட்டம்: 10,மே 1934


பெர்சோ நகர் குரு இன்னொசென்ஸ் Innozenz von Berzo OFM
பிறப்பு : 19 மார்ச் 1844 நியார்டோ Niardo, இத்தாலி
இறப்பு : 3 மார்ச் 1890, பெர்காமோ Bergamo, இத்தாலி

தூய குணகுந்தஸ் (மார்ச் 03

இன்றைய புனிதர் :
(03-03-2020) 

தூய குணகுந்தஸ் (மார்ச் 03)
நிகழ்வு

உரோமையின் அரசியாக இருந்த குணகுந்தஸ், ஹெஸ்ஸே என்னும் பகுதியில் இருந்தபோது கடுமையாக நோயுற்றார். மக்களெல்லாம் அவர் இறந்துவிடுவார் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் குணகுந்தஸோ இறைவனிடத்தில் தளரா நம்பிக்கையுடன் ஜெபித்தார். “இறைவா நீர் மட்டும் எனக்கு உயிர்பிச்சை அளித்தால், நான் கபன்ஜெனின் பகுதியில் ஒரு துறவற மடத்தை கட்டி எழுப்புவேன்” என்று சொல்லி ஜெபித்துவந்தார். அரசியினுடைய ஜெபம் வீண்போகவில்லை. ஆம், ஆண்டவர் அவருக்கு நோயிலிருந்து விடுதலை அளித்து, பல ஆண்டுகள் வாழ்வதற்கான ஆசீர்வாதத்தைத் வழங்கினார்.

அரசியோ தான் சொன்னதற்கேற்ப கபன்ஜெனினினில் ஒரு துறவற மடத்தைக் கட்டி எழுப்பி, திருச்சபையின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்காற்றினார்.

வாழ்க்கை வரலாறு

குணகுந்தஸ், 999 ஆம் ஆண்டு லக்சம்பர்க்கில் பிறந்தார், இப்பகுதியானது பிரான்ஸ் மட்டும் ஜெர்மனி இவற்றின் எல்லைப் பகுதியில் உள்ளது. இவர் சிறுவயதிலே மிகுந்த பக்தியோடு வளர்ந்து வந்தார். வளர்ந்து பெரிய பெண்ணாக ஆனபின்பு, இவர் உரோமை மன்னர் ஹென்றி என்பவருக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டார்.

குணகுந்தஸ், ஹென்றியை மணந்துகொண்டபோதும் கற்பு நெறியில் மேலோங்கி வளர்ந்து வந்தார். “தனது உடலை ஆண்டவருக்கு அர்ப்பணித்துவிட்டேன். ஆதலால், தாம்பத்திய உறவு வேண்டாமே” என்று குணகுந்தஸ், கணவர் ஹென்றியிடம் சொன்னபோது அதனை அவர் மனமுவந்து ஏற்றுக்கொண்டார். மட்டுமல்லாமல் குணகுந்தஸ்மீது அவர் முன்பைவிட மிகுந்த அன்பைக் காட்டி வந்தார். இதனால் இரண்டுபேருமே முன்மாதிரியான தம்பதியராக வாழ்ந்து வந்தார்கள்.

ஒரு சமயம் மக்களில் சிலர் குணகுந்தசை சந்தேகப்பட்டார்கள். அவர் போகிற போக்கு சரியில்லை என்றெல்லாம் அவர்மீது பழி சுமத்தினார்கள். இதைக் கேள்விப்பட்ட குணகுந்தஸ் மிகவும் வருந்தினார். தான் கடவுளுக்குப் பயந்து மிகவும் கண்ணியமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும்போது மக்கள் இப்படி தன்மீது அபாண்டமாகப் பழிபோடுகிறார்களே என்று, எல்லாரும் கூடியிருந்த ஓர் இடத்தில் தீ மூட்டி, ‘நான் கற்பில் சிறந்தவளாக இல்லையென்றால், இந்த நெருப்பு என்னைப் பற்றி எரிக்கட்டும்” என்று சொல்லி, அதில் விழுந்தாள். ஆச்சரியம் என்னவென்றால், நெருப்பு அவரை ஒன்றும் செய்யவில்லை. இதனைப் பார்த்து மக்களெல்லாம் ஆச்சரியப்பட்டு நின்றார்கள். அரசி குணகுந்தஸ் உண்மையிலே கற்பில் சிறந்தவள் என்று வாயாரப் போற்றிப் புகழ்ந்தார்கள். அரசர் இதைக் கேள்விப்பட்டு இன்னும் அதிகமாய் குணகுந்தசை அன்பு செய்து வந்தார்.

எல்லாமும் நன்றாகப் போய்க்கொண்டிருந்த தருணத்தில் மன்னர் ஹென்றி திடிரென்று இறந்துபோனார். அப்போது குணகுந்தஸ் அடைந்த துயரத்திற்கு அளவே இல்லை. தன் கணவரின் இறப்புக்குப் பிறகு அரசாங்கச் சொத்துகள் அனைத்தையும் விற்று ஏழைகளுக்குக் கொடுத்தார். இப்படி அவர் எல்லாவற்றையும் ஏழைகளுக்குக் கொடுத்த பின்பு முன்பொருமுறை தான் கட்டிக்கொடுத்த ஆசிர்வாதப்பர் துறவற சபையில் துறவியாகச் சேர்ந்து, மிகத் தூய்மையான வாழ்க்கையை வாழத் தொடங்கினார்.

குணகுந்தஸ் அரசி துறவற சபையில் சேர்ந்தபிறகு, தான் அரசியாக இருந்தவள் என்பதைச் சிறிதுகூட எண்ணாமல், மிகவும் தாழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார். மடத்தில் தனக்குக் கொடுக்கப்பட்ட சிறு சிறு வேலைகளையும் கூட மிகவும் தாச்சியோடு செய்துவந்தார்; நோயாளிகள்மீது தனிப்பட்ட செலுத்தி வந்தார். இப்படி அவர் இறைவனுக்கே தன்னை முழுவதும் அர்ப்பணமாக்கி, தூய வாழ்க்கையினை வாழ்ந்து வந்தார். இவர் மேற்கொண்ட கடுமையான ஒறுத்தல் முயற்சிகளால் இவருடைய உடல் பலவீனமானது. இதனால் இவர் 1040 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருடைய உடலானது இவருடைய கணவர் ஹென்றியின் உடலுக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது. இவருடைய தூய வாழ்வினையும் இறப்புக்குப் பின்பாக இவருடைய புதுமைகளையும் பார்த்துவிட்டு திருத்தந்தை மூன்றாம் இன்னொசென்ட் இவருக்குப் புனிதர் பட்டம் கொடுத்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய குணகுந்தஸின் நினைவு நாளைக் கொண்டாடும் இன்று, அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. கற்புநெறியில் மேலோங்கி இருத்தல்

தூய குணகுந்தசின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது அவருடைய தூய மாசற்ற வாழ்க்கைதான் நம் கண்முன்னால் வந்து நிற்கின்றது. மன்னர் ஹென்றியை மணமுடித்துக் கொண்டபோதும் இவர் கற்பு நெறியில் சிறந்து விளங்கினார். இவருடைய விழாவைக் கொண்டாடும் நாம், தூய வாழ்க்கை வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இன்றைக்கு உலகம் சிற்றின்பமே நிலையானது என எண்ணி அதன்பின்னாலே போய்க்கொண்டிருக்கின்றது. இத்தகைய பின்னணியில் ஆண்டவருக்காக தன்னை அர்ப்பணித்து, தூய வாழக்கை வாழ்ந்து வந்த தூய குணகுந்தஸ் நமக்கு ஓர் எடுத்துக்காட்டு. நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பார்கள்” என்று. ஆம், நாம் தூய உள்ளத்தோடு வாழ்கின்றபோது ஒருநாள் இறைவனை முகமுகமாகத் தரிசிக்கும் பேற்றினைப் பெறுவோம் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது.

ஆகவே, தூய குணகுந்தசின் நினைவு நாளைக் கொண்டாடும் இன்று, அவரைப் போன்று தூய மாசற்ற வாழ முயற்சிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

02 March 2020

பியோமன் நகர் ஆக்னெஸ் Agnes von Böhmen OSCI மார்ச் 2

இன்றைய புனிதர் : 
(02-03-2020) 

பியோமன் நகர் ஆக்னெஸ் Agnes von Böhmen OSCI
பிறப்பு  : 20, 1207, 
ப்ராக் Prag, செக் குடியரசு

இறப்பு :  2 மார்ச் 1282, ப்ராக் Prag, செக் குடியரசு

புனிதர்பட்டம்: 12 நவம்பர் 1989 திருத்தந்தை 2 ஆம் ஜான் பால்

இவர் பியோம் அரசர் முதலாம் ஒட்டோகர் என்பவரின் மகள். இவர் இளம் வயதிலிருக்கும்போதே 2 முறை திருமணம் செய்வதற்கு நிச்சயமானவர். முதல் முறை போலேஸ்லவ்ஸ் Boleslaus என்பவருடனும், இரண்டாம் முறை அரசர் 2 ஆம் பிரிட்ரிக் Friedrich II என்பவருக்கும் மண ஒப்பந்தமானவர். ஆனால் இரு முறையும் அரசியல் காரணமாக திருமணம் நடைபெறாமல் போனது. ஆக்னெஸ் தன் திருமணம் நடைபெறக்கூடாது என இறைவனிடம் இடைவிடாமல் வேண்டினார். அதன்படியே அவரின் விருப்பத்தை இறைவன் நிறைவேற்றினார். இதனால் ஆக்னெஸ் மிக மகிழ்ச்சியடைந்தார்.

இவர் புனித பிரான்சிஸ் அசிசியாரின் வாழ்வை முன் மாதிரியாகக் கொண்டு வாழ்ந்தார். புனித கிளாராவின் நட்பைப் பெற்று வாழ்ந்தார் என்று அவரே எழுதிய கடிதங்கள் விளக்குகின்றது. இவர் மீண்டும் அரசர் 2 ஆம் பிரட்ரிக் அல்லது அரசர் 2 ஆம் ஹென்றி இவர்களுள் ஒருவரை திருமணம் செய்யவேண்டிய கட்டாயச் சூழ்நிலை உண்டானது. இதனால் 1234 ஆம் ஆண்டு தனது அரசிக்குரிய கிரீடத்தை பெற்றார். இக்கிரீடத்தை பெற்றபோது தான் ஓர் கிளரீசியன் துறவி என்று தனக்குள் கூறிக்கொண்டு வார்த்தைப்பாடுகளைப்பெற்றார்.

இவர் தனது அரசிக்குரிய சொத்துக்கள், உடைமைகள் அனைத்தையும் கொண்டு, தேவாலயங்களுக்கும், துறவற இல்லங்களுக்கும் உதவினார். இவர் இறந்தபிறகு ஏராளமான புதுமைகளைச் செய்தார்.


செபம்:
ஏழ்மையின் காதலனே எம் தலைவா! நீர் ஏழைகளின் மேல் அன்பு கொண்டு, ஏழைகளுக்காகவே இவ்வுலகில் மனுவுறு எடுத்தீர். எங்களிடம் பணம், பதவி, பட்டமென அனைத்து செல்வங்கள் இருக்கும்போதும் மன நிம்மதி இல்லாமல் வாடுகின்றோம். புனித ஆக்னெசின் துணையாலும், உதவியாலும் எம்மிடம் உள்ளவற்றை பிறரிடம் பகிர்ந்து, நிறைவுடன் வாழ செய்தருள வேண்டுமென்று தந்தையே உம்மை மன்றாடுகின்றோம்

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.Saint of the Day : (02-03-2020)

St. Agnes of Bohemia

She was born on June 20, 1211 in a royal family. Her father was King Ottokar-I of Bohemia and mother Constance of Hungary, the sister of King Andrew-II of Hungary. When she was three years old she was engaged to one Boleslaus but Boleslaus died. Then she was engaged to Henry, son of the Emperor Frederick-II, when she was nine years old. But Henry instead of marrying Agnes, he married the daughter of the Duke of Austria. After these failed engagements, Agnes offered herself to God and vowed to live a life of austerity and virginity. She was a descendent of St. Ludmila and St. Wenceslaus. She sought help from pope Gregory-IX for her spiritual life. She founded a hospital of St. Francis on the land donated by her brother King Wenceslaus-I of Bohemia. She also constructed a convent for the Friars Minor in Prague. She became a member of the Franciscan Poor Clares in 1236. As a nun she took care of lepers and other poor people. She even personally cooked for these poor people, even after becoming the Abbess of the Prague Clares. She organized a group of people dedicated to nursing known as knights of the Cross with a Red Star. She died on March 2, 1282.

She was beatified by pope Pius-IX in 1874 and canonized by pope John Paul-II on November 12, 1989 at Rome, a few days before the non-violent revolution in Czechoslovakia called Velvet Revolution that over threw the communist Government there.

---JDH---Jesus the Divine Healer---

01 March 2020

தூய டேவிட் (மார்ச் 01)

இன்றைய புனிதர் : 
(01-03-2020) 

தூய டேவிட் (மார்ச் 01)
நிகழ்வு

இன்று நாம் நினைவுகூரும் தூய டேவிட், பிரித்தானியாப் பகுதியில் மறைபரப்புப் பணியைச் செய்துகொண்டிருக்கும்போது, அவருடைய எதிரிகள் அவருக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொல்லத் திட்டமிட்டார்கள். இதனைக் குறிப்பால் அறிந்த குத்தூஸ் என்ற புனிதர் டேவிட்டிடம் வந்து, நிகழப்போகிற சதித்திட்டத்தை அவரிடத்தில் எடுத்துச் சொன்னார். அதன்பேரில் டேவிட், தனக்கு முன்பாக விஷம் கலந்து வைக்கப்பட்ட உணவை சிலுவை அடையாளம் வரைந்து உண்ண, அது அவரை ஒன்றும் செய்யவில்லை.

ஆண்டவரின் அடியாரை யாரும் அணுகமுடியாது, அவருக்கு எவரும் எத்தீங்கும் செய்ய முடியாது என்பதை இந்த நிகழ்வின் வழியாக நாம் அறிந்துகொள்ளலாம்.

வாழ்க்கை வரலாறு

டேவிட், கேரேசிகா இளவரசர் சாட் என்பவருக்கும் புனித நன்னா என்பவருக்கும் 495 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். இவருக்குத் திருமுழுக்குக் கொடுக்கப்பட்டபோது, திருமுழுக்குக் கொடுக்கப் பயன்படுத்தப்பட்ட தண்ணீர் பட்ட ஒரு பார்வையற்றவர் பார்வைபெற்றார். அந்தளவுக்கு இவர் சிறுவயதிலே இறைவனின் ஆசிர் பெற்றவராக விளங்கி வந்தார். தொடக்கக் கல்வியை செயார்வார்கோன் என்ற இடத்தில் பெற்ற டேவிட், அதன்பிறகு தூய பவுலினுஸ் என்பவரிடம் சென்று கல்வி கற்றார். பவுலினுஸ் என்பவரிடம் ஏறக்குறைய பத்தாண்டுகள் கல்வி கற்றபின், பிரித்தானியாப் பகுதியில் மறைபரப்ப வேண்டிய தேவை ஏற்பட்டவுடன், டேவிட் அங்கு சென்று ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை மிகத் துணிச்சலாக அறிவித்து வந்தார்.

டேவிட், பிரித்தானியாப் பகுதியில் நற்செய்தியை அறிவித்து வந்தபோது பல இடங்களில் துறவுமடங்களை நிறுவினார். ஒரு சமயம் டேவிட்டும் அவருடைய நண்பர்களும் எருசலேம் சென்றபோது அங்கே பெலேஜியனிசம் என்ற தப்பறைக் கொள்கையானது திருச்சபைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதை உணர்ந்தார். இந்த பெலேஜியனிசம் ‘ஆதாம் ஏவாள் வழியாக வரக்கூடிய ஜென்மப் பாவத்தை மறுத்துவந்தது. மேலும் திருமுழுக்குப் பெறாமல் இறக்கக்கூடிய குழந்தைகள் எந்தவொரு தடையும் இல்லாமல் விண்ணகத்திற்குச் சென்றுவிடும் எனச் சொல்லிவந்தது. இப்படிப்பட்ட கொள்கை, இறைவனின் மீட்புத் திட்டத்தையே கேள்விக்குள்ளாக்குகின்றது என்பதால் டேவிட் அதனை மிகக் கடுமையாக எதிர்த்தார். அத்தப்பறைக் கொள்கையை மிகக் கடுமையாக எதிர்த்து வாதிட்டார். டேவிட்டிடம் இருந்த இத்தகைய திறமையைப் பார்த்துவிட்டு எருசலேமில் ஆயராக இருந்த டுப்ரிக் என்பவர் தன்னுடைய ஆயர் பதவியை டேவிட்டுக்குக் கொடுத்தார். அதுமுதல் டேவிட் மிக வல்லமையோடு தப்பறைக் கொள்கைகளை எதிர்த்து வந்தார்.

இறைவனின் ஆசிரை நிறைவாகப் பெற்றுக்கொண்ட டேவிட், ஒருசமயம் இறந்த கைம்பெண்ணின் மகனை உயிர்த்தெழச் செய்தார். இதைப் பார்த்துவிட்டு மக்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டுப் போய் நின்றார்கள். டேவிட் எப்போதுமே ஜெபத்திற்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்துவந்தார். இரவு நேரங்களில் நீண்ட நேரம் ஆலயத்தில் ஜெபித்து வந்தார். அவருடைய இந்த ஜெப வாழ்வைப் பார்த்துவிட்டு மக்கள் எல்லாரும், இவரால் ஏராளமான புதுமைகளை செய்ய முடிகின்றதென்றால், அதற்குக் காரணம் இவருடைய ஜெப வாழ்வே என்று வியந்து பாராட்டினார்கள். டேவிட் தன்னுடைய 147 ஆம் ஆண்டில் இறையடி சேர்ந்தார். இவருக்கு 1120 ஆம் ஆண்டு, திருத்தந்தை இரண்டாம் கலிஸ்துஸ் என்பவரால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

இறைவனின் கைகளில் வல்லமையுள்ள கருவியாய் இருந்து செயல்பட்ட தூய டேவிட்டின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. ஜெபத்தில் வேரூன்றி இருத்தல்

தூய டேவிட்டின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது அவர் எந்தளவுக்கு ஜெப மனிதராக இருந்திருக்கின்றார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. அவர் ஜெபத்தில் வேரூன்றி இருந்தார் அதனால்தான் அவரால் நிறைய புதுமைகளை செய்ய முடிந்தது. நாமும் ஜெபத்தில் வேரூன்றி இருக்கும்போது நம்மாலும் நிறைய அற்புதங்களைச் செய்ய முடியும் என்பது உண்மையாகின்றது.

நற்செய்தி நூல்களைப் படித்துப் பார்க்கும்போது ஆண்டவர் இயேசு கருக்கலில் தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று ஜெபித்தார் சென்று பார்க்கின்றோம். அதுபோன்று தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு முக்கியமான கட்டத்திலும் இயேசு தந்தைக் கடவுளிடம் ஜெபித்தார் என்று நற்செய்தி நூல்கள் எடுத்துரைக்கின்றன. இயேசு இறைமகனாக இருந்தும் ஜெபித்தார். அதன்வழியாக வல்லமையைப் பெற்றார். நாமும் நம்பிக்கையோடு ஜெபிக்கின்றபோது இறைவனிடம் நிறைவான ஆசிரைப் பெறுவது உறுதி.

ஆகவே, தூய டேவிட்டின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஜெபத்திலும் வேரூன்றி இருப்போம். இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

29 February 2020

சீனாவின் மறைசாட்சி அகஸ்ட் சேப்டெல்லைன் (Auguste Chapdelaine. பெப்ரவரி 29

சீனாவின் மறைசாட்சி அகஸ்ட் சேப்டெல்லைன் (Auguste Chapdelaine
2020-02-29
சீனாவின் மறைசாட்சி அகஸ்ட் சேப்டெல்லைன் (Auguste Chapdelaine)
பிறப்பு
06.01.1814
பிரான்ஸ்
இறப்பு
29.02. 1856
Kwang-si, சீனா
முத்திபேறுபட்டம்: 27.05.1900 திருத்தந்தை 13 ஆம் லியோ
புனிதர்பட்டம்: 01.10.2000 திருத்தந்தை இரண்டாம் ஜான்பால்

இவரின் தந்தை பெயர் நிக்கோலஸ் சேப்டெல்லைன். இவரின் தாயின் பெயர் மதலீன் டோட்மன். இவர்களுக்கு ஒன்பது குழந்தைகள். அகஸ்ட் இவர்களின் கடைசி குழந்தை. பள்ளிப்படிப்பு அவருக்கு சுமையாக இருந்ததால் அவர் வீட்டுவேலை மற்றும் வயல் வேலை செய்ய பணிக்கப்பட்டார். அப்போது இறையழைத்தலை உணர்ந்தார். இந்நிலையில் தனது இரண்டு சகோதரர்களின் அகால மரணம் அவரை பாதித்தது. அதனால் குருவாக வேண்டும் என்ற எண்ணத்தை தள்ளிவைத்தார். பிறகு மீண்டும் மீண்டும் இறையழைத்தலை உணர்ந்ததால் பெற்றோரின் ஒப்புதலோடு அக்டோபர் 1 ஆம் தேதி 1834 ஆம் ஆண்டு குருமடத்திற்கு சென்றார். குருமடத்தில் தன்னை விட இரண்டு மடங்கு வயது குறைந்தவர்கள் அவரோடு படித்தார்கள். அதனால் மற்றவர்கள் அப்பா என்றே அவரை அழைத்தனர். 10.06.1843 அன்று தனது 29 ஆம் வயதில் குருப்பட்டம் பெற்றார். 1844 முதல் 1851 வரை உதவி பங்குத்தந்தையாக பணியாற்றினார். பிறகு தனது ஆயரால் வெளிநாடுகளில் நற்செய்தி பணியாற்ற பணிக்கப்பட்டார்.

30.04.1852 அன்று பாரீசை விட்டு புறப்பட்டு சீனாவிற்கு சென்றார். செல்லும் வழியில் பல துன்பங்களை அனுபவித்தார். அவரின் பொருள் கொள்ளையடிக்கப்பட்டது. சிலரால் தாக்கப்பட்டார். இறுதியாக 1854 ஆம் ஆண்டு சீனாவின் Kwang-si என்ற இடத்தில் இருக்கும் துறவற சபையை அடைந்தார். பிறகு 20 நாட்கள் அரசாங்கத்தால் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையைவிட்டு வெளியேறிய பிறகு, நற்செய்தியை பணியை தீவிரமாக ஆற்றினார். நூற்றுக்கணக்கான மக்களை மனமாற்றினார். மீண்டும் 26.02.1856 அன்று அரசாங்கத்தால் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் பலவிதமான வேதனைகளை அனுபவித்தார். பிறகு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.


செபம்:
எங்கும் நிறைந்திருக்கும் இறைவா, சீனாவில் நற்செய்தி பணியாற்ற அகஸ்ட் என்பவரைத் தேர்ந்தெடுத்தீர். அவரும் உமக்காக நற்செய்தி பணியாற்றி மறைசாட்சியாக மரித்தார். அதைப்போலவே எங்களோடும் நீர் பேசும். எங்கள் அழைத்தலை உணரச் செய்யும். நற்செய்தி பணியாற்ற எங்களுக்கும் வாய்ப்பு தாரும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

முத்திபேறு பெற்ற ஃபிளாரன்ஸ் நகர் அண்டோனியோ Antonio
பிறப்பு: 1400, ஃபிளாரன்ஸ், இத்தாலி
இறப்பு: 29.02.1472
முத்திபேறுபட்டம்: 1847 திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்
வரலாறு: இவர் திருமணமாகி இளம்வயதிலேயே கைம்பெண் ஆனார். இவருக்கு ஓர் குழந்தையும் உண்டு. இவர் பிற்காலத்தில் பிரான்சிஸ்கன் சபை நான்காம் பிரிவில் சேர்ந்து துறவியானார். இவர் தனது வாழ்நாளில் இறுதி 15 ஆண்டுகள் மிகக்கொடிய நோயால் துன்பப்பட்டவர். வேதனையிலும் இறுதிவரை கடவுளின் அன்பை பரப்பியவர்.

பொதுவாக லீப் ஆண்டுகளில் மட்டுமே பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் வருகின்றன. ஆகவே பிப்ரவரி 29 ஆம் நாள் நினைவு கூறப்படும் புனிதர்கள். மற்ற ஆண்டுகளில் பிப்ரவரி 28 ஆம் நாள் நினைவு கூறப்படுகிறார்கள்.

28 February 2020

2020-02-28குரு தானியேல் புரோட்டியர் Daniel Brottier CSSP

இன்றைய புனிதர்
2020-02-28
குரு தானியேல் புரோட்டியர் Daniel Brottier CSSP
பிறப்பு
7 செப்டம்பர் 1876,
பிரான்சு
இறப்பு
28 பிப்ரவரி 1936,
அவ்டேயுல் Auteuil, பிரான்சு
முத்திபேறுபட்டம் : 25 நவம்பர் 1984 திருத்தந்தை 2 ஆம் ஜான்பால்

இவர் அவ்டேயுஸ் என்ற நகரில் கைவிடப்பட்டவர்களுக்கென இல்லம் ஒன்றை நிறுவினார். உலகின் எப்பகுதியிலும் இருந்த ஆயிரக்கணக்கான கைவிடப்பட்ட இளைஞர்களை ஒன்று சேர்ந்து வாழ்விற்கு வழிகாட்டினார். பல்வேறு நிறுவனங்களில் வாழ்ந்த இளைஞர்களுக்கு தன் இரத்தத்தை ஈந்து வழிகாட்டி அவர்களின் ஆன்மீக குருவாகத் திகழ்ந்தார். இவர் கடுமையான நோயால் தாக்கப்பட்டதால் 1911 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டிற்குச் சென்று அங்கும் பல்வேறு இளைஞர்களின் குழுவை ஏற்படுத்தினார். இவர் தான் இறக்கும் வரை ஏழைக்குழந்தைகளுக்காகவும் இளைஞர்களுக்காகவுமே வாழ்ந்தார்.


செபம்:
நோயாளர்களின் ஆரோக்கியமே எம் தந்தாய்! இவ்வுலகில் பல்வேறு நோய்களினால் தாக்கப்படுகின்ற எம் சகோதர சகோதரிகளை குணமாக்கியருளும். அவர்கள் தங்களின் நோய்களைத் தாங்கும் உடல் வலிமையையும் உள்ள பலத்தையும் தந்து, வாழ்வில் நம்பிக்கையுடன் வாழ செய்தருள நீர் உதவிட வேண்டுமென்று அருள்தந்தை தானியேல் புரோட்டியர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

1. மறைசாட்சியாளர் சில்வானா Silvana
பிறப்பு : 3 ஆம் நூற்றாண்டு
இறப்பு : 304


2. மறைசாட்சி சிரீன் அல்லது சீரா Sirin or Sira
பிறப்பு : 520, ஈரான்
இறப்பு : 28 பிப்ரவரி 559 ஈரான்

தூய ஹிலாரியஸ் (பிப்ரவரி 28

இன்றைய புனிதர் :
(28-02-2020) 

தூய ஹிலாரியஸ் (பிப்ரவரி 28)
நிகழ்வு

திருத்தந்தை முதலாம் சிங்கராயரின் ஆட்சிக்காலத்தில், அவருக்குக் கீழ் தலைமைத் திருத்தொண்டராகப் பணிபுரிந்தவர் ஹிலாரியஸ். ஒருசமயம் எபேசு நகரில் முறைகேடாகக் கூட்டப்பட்ட பொதுச்சங்கத்தில் சிங்கராயரின் பதிலாளாக ஹிலாரியஸ் கலந்துகொண்டார். அதில் ஹிலாரியஸ் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்த அந்தக் கருத்து பலருக்கு பிடிக்கவில்லை. எனவே அவர்கள் ஹிலாரியசைப் பிடிக்கத் திட்டம் தீட்டினார்கள். இதை அறிந்த ஹிலாரியஸ் அவர்களின் கைகளிலிருந்து தப்பியோடி, எபேசு நகருக்கு வெளியே அமைந்திருந்த தூய யோவானின் கல்லறைப் பகுதியில் ஒளிந்துகொண்டு உயிர் தப்பினார். இவ்வாறு அவர் தாம் உயிர் பிழைத்ததற்கு புனித யோவானின் அருளே காரணம் என்றுணர்ந்தது தூய யோவானுக்குத் தம் வணக்கத்தைத் தெரிவிக்கும் பொருட்டு பின்னாளில் சிறுகோவிலைக் கட்டியெழுப்பினார். .

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் ஹிலாரியஸ் ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில், சார்தீனியாவில் பிறந்தார். திருத்தந்தை முதலாம் சிங்கராயரின் ஆட்சிக் காலத்தில் ஹிலாரியஸ் அவருக்கு தலைமைத் திருத்தொண்டராகப் பணிபுரிந்துவந்தார். 449 ஆம் ஆண்டு இரண்டாம் எபேசு பொதுச் சங்கம் கூட்டப்பட்டது. அப்போது ஹிலாரியஸும், புடேயோலி ஆயரான ஜூலியசும் திருத்தந்தை சிங்கராயரின் பிரதிநிதிகளாக செயல்பட்டனர். அப்பொதுச்சங்கம் காண்ஸ்டாண்டிநோபிள் பேராயரான “ஃபிளேவியனைக் கண்டித்தது. அதனை ஹிலாரியஸ் வன்மையாக எதிர்த்தார்.

ஹிலாரியஸுக்கு முன் திருத்தந்தையாகப் பணியாற்றிய முதலாம் சிங்கராயர் திருச்சபையின் அதிகாரத்தை உறுதியாக நிலைநாட்டி புகழ்பெற்றிருந்தார். அவருக்குப் பின் திருத்தந்தையாக உயர்ந்த ஹிலாரியசும் திருத்தந்தை லியோவின் அடியொற்றி பணிபுரிந்தார். ஹிலாரியஸ் திருச்சபைப் போதனைகளுக்கு எதிராக ஆங்காங்கே எழுந்த தப்பறைக் கொள்கைகளைக் கண்டித்தார். உரோமைத் திருப்பீடத்தின் அதிகாரத்தை நிலைநாட்டினார். இத்தாலியில் ஆரியபதம் என்று அழைக்கப்பட்ட ஒரு தப்பறைக் கொள்கை பரவாமல் இருக்க முயற்சி மேற்கொண்டார். ஆரியபதமோ "இயேசு கிறிஸ்து கடவுளின் மகன் அல்ல" அவர் என்றும், "கடவுளால் உருவாக்கப்பட்ட அனைத்துப் படைப்புகளுள் ஒரு முதன்மையான படைப்பு” என்று கூறி வந்தது. இதனை அவர் கடுமையாக எதிர்த்தார். மட்டுமல்லாமல், அவர் உரோமின் புதிய பேரரசனாயிருந்த அந்தேமியுஸ் என்பவரை அணுகி, அவர் ஆரியபதத்திற்கு உரோமில் இடம் கொடுத்தல் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், ஸ்பெயின், கால் போன்ற போன்ற முக்கிய நாடுகளில் திருச்சபைச் செயல்பாடுகள் குறித்து வழிமுறைகள் நல்கினார். அங்கு நடந்த திருச்சபை ஆட்சிமுறையில் ஹிலாரியஸ் பல முறை தலையிட்டு தம் அதிகாரத்தை நிலைநாட்டினார். ஹிலாரியஸ் 465ம் ஆண்டில் ரோம் நகரின் புனித மரியா பெருங்கோவிலில் ஒரு சங்கத்தைக் கூட்டினார். அதில் இறக்கும் தருவாயில் இருக்கும் ஓர் ஆயர் தமக்குப் பின் யார் ஆயர் ஆவார் என்று யாரையும் குறித்துக் கூறுதல் முறைகேடானது என்று அறிவித்ததார். இவ்வாறு அவர் திருச்சபையில் கண்ணியத்தையும் ஒழுங்குமுறையையும் நிறுவினார். இதோடு கூட திருத்தந்தை ஹிலாரியஸ் உரோம் நகரில் பல கோவில் கட்டடங்களை எழுப்பியும், புதுப்பித்து அழகுபடுத்தியும் பணிகள் புரிந்தார். தூய யோவான் பெருங்கோவிலில் மூன்று சிறுகோவில்களைக் கட்ட அவர் ஏற்பாடு செய்தார். அவற்றுள் ஒன்றை அவர் நற்செய்தியாளரான தூய யோவானுக்கு அர்ப்பணித்தார். அக்கோவில்தான் முன்னர் நாம் சொன்ன கோவிலாகும். :

455 ஆம் ஆண்டு நிகழ்ந்த வாண்டல் படையெடுப்பின் போது உரோமைக் கோவில்கள் பலவற்றிலிருந்து பொன்னும் பிற செல்வங்களும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. அக்கோவில்கள் மீண்டும் தலைதூக்கி எழும் வண்ணம் ஹிலாரியஸ் பல நன்கொடைகளை வழங்கினார். மேலும், புனித லாரன்ஸ் பெருங்கோவிலை அடுத்து ஒரு துறவற இல்லத்தை நிறுவினார். இப்படி பல்வேறு பணிகளை பாங்குடனே செய்துவந்த திருத்தந்தை ஹிலாரியஸ் 468 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 28ம் நாள் இறையடி சேர்ந்தார். அவர் அழகுபடுத்திய புனித லாரன்ஸ் பேராலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ஹிலாரியசின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரிடத்தில் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. அஞ்சா நெஞ்சத்தோடு ஆண்டவரின் பணிசெய்தல்

தூய ஹிலாரியசின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது அவர் எந்தளவுக்கு அஞ்சா நெஞ்சத்தோடு ஆண்டவருடைய பணியைச் செய்து வந்தார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர் வழியில் நடக்கும் அதே மன உறுதியுடன், அஞ்சா நெஞ்சத்துடன் ஆண்டவரின் பணியைச் செய்கின்றோமா என்று சிந்துத்துப் பார்க்கவேண்டும். எரேமியா இறைவாக்கினரைப் பார்த்து கடவுள், “நீயோ உன் இடையை வரிந்து கட்டிக்கொள். புறப்படு, நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல். அவர்கள் முன் கலக்கமுறாதே. அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள். எனினும், உன்மேல் வெற்றிகொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில், உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்” என்றார். எரேமியாவும் கடவுளின் வார்த்தையைக் கேட்டு, அஞ்சா நெஞ்சத்தோடு பணி செய்தார். அதனால் கடவுளும் அவரோடு இருந்து அவரை வழிநடத்துவார்.

ஆகவே, தூய ஹிலாரியசைப் போன்று, இறைவாக்கினர் எரேமியாவைப் போன்று அஞ்சா நெஞ்சத்தோடு ஆண்டவருடைய பணியைச் செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

27 February 2020

வியாகுல அன்னையின் தூய கபிரியேல் (பிப்ரவரி 27)

இன்றைய புனிதர் : 
(27-02-2020) 

வியாகுல அன்னையின் தூய கபிரியேல் (பிப்ரவரி 27)
நிகழ்வு

பிரான்சிஸ் பொசன்ட்ரி (தூய கபிரியேலின் இயற்பெயர் அதுதான்) சிறுவயதிலிருந்தே வியாகுல அன்னையிடம் மிகுந்த பக்திகொண்டிருந்தார். ஒரு சமயம் தனியாய் அமர்ந்து ஜெபித்துக்கொண்டிருந்தபோது அன்னை மரியா அவரிடத்தில் பேசினார், “பிரான்சிஸ்! நீ உலக வாழ்க்கையின்மீது பற்றுக் கொள்ளாமல், உண்மையான இறைவனில் பற்றுகொண்டு, அவர் வழியில் நடக்க முயற்சி செய்”. அன்னை மரியா அவரிடத்தில் இவ்வாறு சொல்லிவிட்டு மறைந்துபோனார். பிரான்சிஸ் பொசன்ட்ரிக்கு அப்போது திருமணம் ஏற்பாடாகி இருந்தது. உடனே அவர் தன்னுடைய பெற்றோரிடம் சென்று, அன்னை மரியா தன்னிடத்தில் சொன்னதையும் துறவியாகத் தான் மாற இருப்பதையும் எடுத்துச் சொன்னார். தொடக்கத்தில் அவருடைய பெற்றோர்கள் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனால், பிரான்சிஸ் பொசன்ட்ரி தன்னுடைய பிடியில் மிக உறுதியாக இருந்ததால், அவரை அவருடைய விருப்பம் போல் துறவு வாழ்க்கை வாழ விட்டுவிட்டனர். பிரான்சிஸ் பொசன்ட்ரி, தனது விருப்பம் போல் திருப்பாடுகளின் சபையில் சேர்ந்து பின்னாளில் பெரிய புனிதரானார்.

வாழ்க்கை வரலாறு

பிரான்சிஸ் பொசன்ட்ரி, 1838 ஆம் ஆண்டு, சாந்தே, ஆக்னஸ் என்ற தம்பதியருக்கு 11 வது மகனாகப் பிறந்தார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதைப் போல் பிரான்சிஸ் பொசன்ட்ரி, சிறுவயதிலேயே பக்தியில், அதிலும் குறிப்பாக வியாகுல அன்னையிடம் அளவு கடந்த பக்திகொண்டு விளங்கினார். இப்படி அவர் வியாகுல அன்னையிடம் மிகுந்த பக்திகொண்டு ஜெபிக்கின்றபோதுதான், அன்னை மரியா அவருக்குத் தோன்றி, அவரை இறைப்பணி செய்ய அழைத்தார். உடனே அவர் தன் சொந்த பந்தங்கள், சொத்து சுகங்கள் அனைத்தையும் துறந்துவிட்டு, திருப்பாடுகளின் சபையில் சேர்ந்து உன்னதத் துறவியாக விளங்கி வந்தார்.

திருப்பாடுகளின் சபையின் சேர்ந்த பின்பும்கூட அவர் வியாகுல அன்னையிடம் கொண்டிருந்த அன்பில் மாறவில்லை, அன்னை மரியாவிற்கு பாடல் இயற்றுவதும் அவர் புகழை எங்கும் பரப்புவதுமாய் இருந்தார். பிரான்சிஸ் பொசன்ட்ரி சபையில் சேர்ந்தபிறகு வியாகுல அன்னையின் மீது கொண்ட அன்பினால், அவர்மீது கொண்ட அளவு கடந்த பக்தியினால் தனது பெயரை வியாகுல அன்னையின் கபிரியேல் என்று மாற்றிக்கொண்டார். பிரான்சிஸ் பொசன்ட்ரி அடிக்கடி சொல்லக்கூடிய வார்த்தைகள், “அன்னை மரியாவிடம் நம்பிக்கை கொண்டு வாழ்வோருக்கு, அன்னை ஏராளமான நன்மைகள் செய்வார்” என்பதாகும்.

பிரான்சிஸ் பொசன்ட்ரிக்கு 24 வயது ஆகும்போது காச நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். அதனால் படுத்த படுக்கையாகி அப்படியே இறந்து போனார். இவருடைய புண்ணிய, எடுத்துகாட்டான வாழ்க்கையைப் பார்த்துவிட்டு இவருக்கு 1920 ஆம் ஆண்டு, திருத்தந்தை பதினைந்தாம் ஆசிர்வாதப்பரால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

வியாகுல அன்னையின் தூய கபிரியேலின் விழாவை கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. அன்னை மரியாவிடம் பக்தி

வியாகுல அன்னையின் தூய கபிரியேலின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது அவர் அன்னை மரியிடம் கொண்டிருந்த பக்தி நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றது. அவர் அன்னை மரியாவிடம் ஆழமான பக்தி கொண்டிருந்தார், அது அவருக்கு நிறைய நன்மைகளைப் பெற்றுத்தந்தது. நாமும் அன்னை மரியாவின் துணையை நாடி அவர் வழியில் நடக்கும்போது நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது உறுதி.

ஓர் ஊரில் இசைக் கச்சேரி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. இசைக் கச்சரியை நிகழ்த்துவதற்காக பாடகர்கள், இசைக் கலைஞர்கள் எல்லாம் அந்த ஊருக்கு வந்திருந்தார்கள். நிகழ்ச்சி தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக, ஆர்மோனியம் வாசிக்ககூடியவர், இசைக் கச்சேரியைத் தொகுத்து வழங்கும் இசைமேதையிடம் சென்று, “ஐயா! திடிரென்று ஆர்மோனியத்தில் இருக்கின்ற E flat கட்டை சரியாக இயங்கமாட்டேன் என்கின்றது” என்றார். அதற்கு அந்த தொகுப்பாளர் – இசைமேதை, “E flat கட்டையில் பாடல் வராதவாறு நான் பார்த்துக்கொள்கின்றேன், நீங்கள் கவலைப்படாமல், இங்கே பாடப்படப்படும் பாடல்களுக்கு ஆர்மோனியத்தை வாசியுங்கள்” என்றார்.


இசைக் கச்சேரி தொடங்கியது. அந்தக் கச்சேரி முழுவதும் ஒரு பாடல் கூட E flat கட்டையில் வராதவாறு இசைமேதையும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான அவர் சிறப்பாக இசைக் கச்சேரியை வழங்கினார். இதைப் பார்த்து ஆர்மோனியம் வாசிப்பவர் மிரண்டு போனார். எப்படி இவரால் இந்த இக்கட்டான சூழ்நிலையை இவ்வளவு அற்புதமாக மாற்ற முடிந்தது என்று.

மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் இசைமேதையை போன்று, கடவுளுக்கு நம்முடைய கஷ்டங்களும் துன்பங்களும் தெரியும். எப்படி அந்த ஆர்மோனியம் வாசித்தவர், இசைமேதையை தன்னுடைய துணைக்கு அழைத்தாரோ அதுபோன்று நாம் நம்பிக்கையோடு அவரை, அன்னை மரியாவைத் துணைக்கு அழைத்தால், அவருடைய உதவியை வேண்டினால் நம்முடைய துன்பங்கள் இன்பமாகவும், சோதனைகள் சாதனைகளாக மாறும் என்பது உண்மை.

ஆகவே, வியாகுல அன்னையின் தூய கபிரியேலின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று அன்னை மரியாவிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்வோம், அதன்வழியாக இறையருளை அன்னை மரியா வழியாகப் பெற்று மகிழ்வோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.