புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

19 March 2013

5ஆம் வாரம்

புதன்



முதல் வாசகம்

 தம் தூதரை அனுப்பி, தம்முடைய ஊழியர்களை மீட்டார்.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 3: 14-20, 24-25, 28

              அந்நாள்களில் நெபுகத்னேசர் அவர்களை நோக்கி, ``சாத்ராக்கு! மேசாக்கு! ஆபேத்நெகோ! நீங்கள் மூவரும் என் தெய்வங்களை வணங்கவில்லை என்பதும், நான் நிறுவிய பொற்சிலையைப் பணிந்து தொழவில்லை என்பதும் உண்மைதானா? இப்பொழுதாவது எக்காளம், நாதசுரம், யாழ், கின்னரம், வீணை, பைக்குழல் முதலிய எல்லா வகை இசைக் கருவிகளும் ஒலிக்கக் கேட்டவுடன், நீங்கள் தாழவீழ்ந்து நான் செய்துவைத்துள்ள சிலையைப் பணிந்து தொழத் தயாராய் இருக்கிறீர்களா? தொழாவிட்டால் அந்த நொடியிலேயே எரிகிற தீச்சூளையில் தூக்கிப் போடப்படுவீர்கள். உங்களை என் கைகளிலிருந்து தப்புவிக்கக்கூடிய தெய்வம் ஒன்று உண்டோ?" என்றான்.

சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ என்பவர்கள் நெபுகத்னேசர் அரசனை நோக்கிப் பதில்மொழியாக, ``இதைக் குறித்து நாங்கள் உமக்கு மறுமொழி கூறத் தேவையில்லை. அப்படியே எது நிகழ்ந்தாலும், நாங்கள் வழிபடுகின்ற எங்கள் கடவுள், எரிகின்ற தீச்சூளையினின்று எங்களை மீட்க வல்லவர். அவரே எங்களை உம் கையினின்றும் விடுவிப்பார். அப்படியே அவருக்கு மனமில்லாமல் போனாலும், அரசரே! நாங்கள் உம்முடைய தெய்வங்களை வழிபடமாட்டோம்; நீர் நிறுவிய பொற்சிலையையும் நாங்கள் தொழப்போவதில்லை. இது உமக்குத் தெரிந்திருக்கட்டும்'' என்றார்கள்.

இதைக் கேட்ட நெபுகத்னேசர் அரசன் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோர்மீது வெகுண்டெழ, அவனது முகம் சினத்தால் சிவந்தது. வழக்கத்தைவிட ஏழு மடங்கு மிகுதியாகத் தீச்சூளையைச் சூடாக்கும்படி அரசன் கட்டளையிட்டான்.

பின்னர் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரைக் கட்டி, எரியும் தீச்சூளைக்குள் தூக்கிப் போடுமாறு தன் படைவீரர்களுள் வலியவர் சிலருக்குக் கட்டளையிட்டான்.

அப்பொழுது நெபுகத்னேசர் அரசன் வியப்புற்று விரைந்தெழுந்து தன் அமைச்சரை நோக்கி, ``மூன்று பேரைத்தானே கட்டி நெருப்பினுள் எறிந்தோம்!'' என்றான். ``ஆம் அரசரே'' என்று அவர்கள் விடையளித்தனர்.

அதற்கு அவன், ``கட்டவிழ்க்கப்பட்டவர்களாய் நெருப்பின் நடுவில் நான்கு பேர் உலவுகிறதை நான் காண்கிறேன்! அவர்களுக்கோ ஒரு தீங்கும் நேரவில்லையே! மேலும் நான்காவது ஆள் தெய்வ மகன் ஒருவன் போல் தோன்றுகிறானே!" என்றான்.

அப்பொழுது நெபுகத்னேசர், ``சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரின் கடவுள் புகழப்படுவாராக! தங்கள் கடவுளைத் தவிர வேறெந்த தெய்வத்தையும் பணிந்து தொழ மறுத்து, அரசனது கட்டளையையும் பொருட்படுத்தாமல், அவர்மேல் நம்பிக்கை வைத்துத் தங்கள் உடலைக் கையளித்த அவருடைய ஊழியர்களை அவர் தம் தூதரை அனுப்பி மீட்டருளினார்'' என்றான்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

தானி (இ) 1: 29. 30-31. 32-33 (பல்லவி: 34)

பல்லவி: என்றென்றும் அவரைப் புகழ்ந்து போற்றுங்கள்.

29 எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக; என்றென்றும் நீர் புகழப்பெறவும் ஏத்திப் போற்றப் பெறவும் தகுதியுள்ளவர். மாட்சியும் தூய்மையும் நிறைந்த உம் பெயர் வாழ்த்துக்குரியது. பல்லவி

30 உமது தூய மாட்சி விளங்கும் கோவிலில் நீர் வாழ்த்தப் பெறுவீராக; உயர் புகழ்ச்சிக்கும் மிகு மாட்சிக்கும் நீர் உரியவர். 31 கெருபுகள் மேல் வீற்றிருந்து படுகுழியை நோக்குபவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக; நீர் என்றென்றும் புகழப்படவும் ஏத்திப் போற்றப்படவும் தகுதியுள்ளவர். பல்லவி

32 உமது ஆட்சிக்குரிய அரியணைமீது நீர் வாழ்த்தப் பெறுவீராக; என்றென்றும் நீர் புகழ்ந்தேத்தப் பெறுவீராக, ஏத்திப் போற்றப் பெறுவீராக. 33 உயர் வானகத்தில் நீர் வாழ்த்தப் பெறுவீராக; என்றென்றும் நீர் பாடல் பெறவும், மாட்சி அடையவும் தகுதியுள்ளவர். பல்லவி



நற்செய்திக்கு முன் வசனம்

லூக் 8: 15 சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மனஉறுதியுடன் பலன் தருபவர் பேறுபெற்றோர்.



நற்செய்தி வாசகம்

 மகன் உங்களுக்கு விடுதலை அளித்தால், நீங்கள் உண்மையிலேயே விடுதலை பெற்றவர்கள்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 31-42

அக்காலத்தில் இயேசு தம்மை நம்பிய யூதர்களை நோக்கி, ``என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்'' என்றார்.

யூதர்கள் அவரைப் பார்த்து, `` `உங்களுக்கு விடுதலை கிடைக்கும்' என நீர் எப்படிச் சொல்லலாம்? நாங்கள் யாருக்கும் ஒருபோதும் அடிமைகளாய் இருந்ததில்லை. நாங்கள் ஆபிரகாமின் வழிமரபினர் ஆயிற்றே!'' என்றார்கள்.

அதற்கு இயேசு, ``பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். வீட்டில் அடிமைக்கு நிலையான இடம் இல்லை; மகனுக்கு அங்கு என்றென்றும் இடம் உண்டு. மகன் உங்களுக்கு விடுதலை அளித்தால் நீங்கள் உண்மையிலே விடுதலை பெற்றவர்களாய் இருப்பீர்கள். நீங்கள் ஆபிரகாமின் வழிமரபினர் என்பது எனக்குத் தெரியும். ஆனால் என் வார்த்தை உங்கள் உள்ளத்தில் இடம் பெறாததால் நீங்கள் என்னைக் கொல்ல முயலுகிறீர்கள். நான் என் தந்தையிடம் கண்டதைச் சொல்கிறேன். நீங்கள் உங்கள் தந்தையிடமிருந்து கேட்டதைச் செய்கிறீர்கள்'' என்றார்.

அவர்கள் அவரைப் பார்த்து, ``ஆபிரகாமே எங்கள் தந்தை'' என்றார்கள். இயேசு அவர்களிடம், ``நீங்கள் ஆபிரகாமின் மக்கள் என்றால் அவரைப் போலச் செயல்படுவீர்கள். ஆனால் கடவுளிடமிருந்து கேட்டறிந்த உண்மையை உங்களுக்கு எடுத்துரைத்த என்னை நீங்கள் கொல்ல முயலுகிறீர்கள். ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே! நீங்கள் உங்கள் தந்தையைப்போலச் செயல்படுகிறீர்கள்'' என்றார்.

அவர்கள், ``நாங்கள் பரத்தைமையால் பிறந்தவர்கள் அல்ல; எங்களுக்கு ஒரே தந்தை உண்டு; கடவுளே அவர்'' என்றார்கள்.

இயேசு அவர்களிடம் கூறியது: ``கடவுள் உங்கள் தந்தையெனில் நீங்கள் என்மேல் அன்பு கொள்வீர்கள். நான் கடவுளிடமிருந்தே இங்கு வந்துள்ளேன். நானாக வரவில்லை; அவரே என்னை அனுப்பினார்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை

உண்மை விடுவிக்கும் என்பது உண்மையா?

பொய்யான உலகில் இன்று உண்மையா அதுவென்ன என்று கேட்கும் உலகமாகவே இருக்கின்றது. பொய் பேசுவோரின் எண்ணி;க்கையே இன்று அதிகமாக இருந்து வருகின்றது. இதிலே உண்மை விடுவிக்கும் என்பது எப்படி உண்மையாகிட முடியும். உண்மையை பேசுவோர் இன்று மதிக்கப்படுவதில்லை. பொய் பேசுவோர் உண்மையின் முகமூடி அணிந்தவர்களாய் காட்சியளிக்கின்றார்கள்.

இதிலே உண்மை விடுவிக்கும் என்று சொல்லுவது பைத்தியகாரத்தனமாக தெரிகின்றது.

பொய் தன் நிறத்தை என்றாவது வெளிக்காட்டும். உண்மைக்கு சான்று பகர்வோர் என்றாவது ஒருநாள் விடுவிக்கப்படுவார்கள். வாழும் உலகம் ஒரு வேளை இதை உணராது போகலாம். உணர்ந்தவாகள் உண்மையாய் வாழ்ந்து சான்று பகரும் போது, மனவிடுதவையை பெற்று புவியினிலே யாருக்கும் அஞ்சாதவர்களாய் வாழ்வார்கள் என்பதுவே உண்மை.

No comments:

Post a Comment