புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

05 April 2013


பாஸ்கா - 2ஆம் வாரம்

ஞாயிறு

மூன்றாம் ஆண்டு

முதல் வாசகம்

 ஆண்டவரில் நம்பிக்கைக் கொண்டவரின் கூட்டம் வளர்ந்துள்ளது.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 12-16

அந்நாள்களில் மக்களிடையே பல அரும் அடையாளங்களும் அருஞ்செயல்களும் திருத்தூதர் வழியாய்ச் செய்யப்பட்டன. அனைவரும் சாலமோன் மண்டபத்தில் ஒருமனத்தவராய்க் கூடிவந்தனர். மற்றவர் யாரும் இவர்களோடு சேர்ந்துகொள்ளத் துணியவில்லை.

ஆயினும் மக்கள் இவர்களைப் பற்றிப் பெருமையாகப் பேசினர். ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட திரளான ஆண்களும் பெண்களும் இவர்களோடு சேர்க்கப்பட்டார்கள்.

பேதுரு நடந்து செல்லும்போது அவர் நிழல் சிலர் மேலாவது படுமாறு மக்கள் உடல் நலமற்றோரைக் கட்டில்களிலும் படுக்கைகளிலும் கிடத்திச் சுமந்துகொண்டுவந்து வீதிகளில் வைத்தார்கள்; எருசலேமைச் சுற்றியிருந்த நகரங்களிலிருந்து மக்கள் உடல் நலமற்றோரையும் தீய ஆவிகளால் இன்னலுற்றோரையும் சுமந்து கொண்டு திரளாகக் கூடிவந்தார்கள். அவர்கள் அனைவரும் நலம் பெற்றனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 118: 2-4. 22-24. 25-27ய (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!

2 `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! 3 `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக! 4 `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக. பல்லவி

22 கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! 23 ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! 24 ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். பல்லவி

25 ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றி தாரும்! 26 ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம். 27ய ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார். பல்லவி



இரண்டாம் வாசகம்

 சாவுக்கு உட்பட்டேனாயினும், இதோ நான் என்றென்றும் வாழ்கிறேன்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 1: 9-11ய, 12-13, 17-19

உங்கள் சகோதரனும், இயேசுவோடு இணைந்த நிலையில் உங்கள் வேதனையிலும் ஆட்சியுரிமையிலும் மனவுறுதியிலும் பங்கு கொள்பவனுமான யோவான் என்னும் நான் கடவுளின் வாக்கை அறிவித்து இயேசுவுக்குச் சான்று பகர்ந்ததால் பத்மு தீவுக்கு வர நேர்ந்தது.

ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று தூய ஆவி என்னை ஆட்கொள்ளவே எனக்குப் பின்னால் பெரும் குரல் ஒன்று எக்காளம் போல முழங்கக் கேட்டேன். ``நீ காண்பதை ஒரு சுருளேட்டில் எழுதி ஏழு இடங்களிலும் உள்ள திருச்சபைகளுக்கு அதை அனுப்பி வை'' என்று அக்குரல் கூறியது. என்னோடு பேசியவர் யார் என்று பார்க்கத் திரும்பினேன்.

அப்பொழுது ஏழு பொன் விளக்குத் தண்டுகளைக் கண்டேன். அவற்றின் நடுவே மானிடமகனைப் போன்ற ஒருவரைப் பார்த்தேன். அவர் நீண்ட அங்கியும் மார்பில் பொன் பட்டையும் அணிந்திருந்தார். நான் அவரைக் கண்டபொழுது செத்தவனைப்போல் அவரது காலில் விழுந்தேன்.

அவர் தமது வலக் கையை என் மீது வைத்துச் சொன்னது: ``அஞ்சாதே! முதலும் முடிவும் நானே. வாழ்பவரும் நானே. இறந்தேன்; ஆயினும் இதோ என்றென்றும் வாழ்கின்றேன். சாவின் மீதும் பாதாளத்தின் மீதும் எனக்கு அதிகாரம் உண்டு. எனவே நீ காண்பவற்றை, அதாவது இப்பொழுது நிகழ்கின்றவற்றையும் இனி நிகழ இருப்பவற்றையும் எழுதிவை.''

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 20: 29

அல்லேலூயா, அல்லேலூயா! ``தோமா, என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்,'' என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

 எட்டு நாள்களுக்குப் பின் இயேசு சீடர்களுக்குத் தோன்றினார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 19-31

அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள்.

அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ``உங்களுக்கு அமைதி உரித்தாகுக!'' என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லியபின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.

இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ``உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்'' என்றார். இதைச் சொன்னபின் அவர் அவர்கள்மேல் ஊதி, ``தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா'' என்றார்.

பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. மற்றச் சீடர்கள் அவரிடம், ``ஆண்டவரைக் கண்டோம்'' என்றார்கள்.

தோமா அவர்களிடம், ``அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்'' என்றார். எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள்.

அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, ``உங்களுக்கு அமைதி உரித்தாகுக!'' என்று வாழ்த்தினார்.

பின்னர் அவர் தோமாவிடம், ``இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்'' என்றார். தோமா அவரைப் பார்த்து, ``நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!'' என்றார்.

இயேசு அவரிடம், ``நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்'' என்றார். வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை.

இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



2013 Apr 7 SUN: SECOND SUNDAY OF EASTER

Acts 5: 12-16/ Ps 118: 2-4. 13-15. 22-24/ Rv 1: 9-11a. 12-13. 17-19/ Jn 20: 19-31

‘என் ஆண்டவரே, என் தேவனே’ என்று துணிவுடன் அறிக்கையிட்டார் திருத்தூதர் தோமா. உயிர்த்த ஆண்டவரை சந்தித்த சீடர்கள் விசுவாசத்தில் உறுதிபெற்றனர். இயேசுவின் பெயரால் அருஞ்செய்லகளும், புதுமைகள் பல செய்யவும் ஆற்றல் பெற்றனர். உயிர்த்த இயேசுவை நம் ஊனக்கண்களால் காணாவிட்டாலும் நம்புவோம். பேறுபெற்றவர்களாவோம். புனித தோமாவின் விசுவாச அறிக்கைநம் ஒவ்வொருவரின் விசுவாச வாழ்வுக்கு முன்னோட்டமாகட்டும். உயிர்த்த ஆண்டவரின் மகிழ்ச்சி நமதாகட்டும். யானையின் பலம் தும்பிக்கையில் மனிதரின் பலமோ நம்பிக்கையில் என்பது அனுபவமாகட்டும்.



முன்னுரை:

            பாஸ்கா கால இரண்டாம் வாரத்திற்கு வந்துள்ளோம். இறைஇரக்க ஞாயிறு என்றும் இன்று அழைக்கப்படுகின்றது. பேதுருவின் நிழல் பட்டாலேயே குணம் பெற்றார்கள் என்று லூக்கா பதிவு செய்துள்ளார்.

அதே வேளையில் தோமாவின் விருப்பத்தை புரிந்து இரக்கத்துடனே அவரிடம் காயங்களை காட்டி நம்ப அழைக்கின்றார். துன்பங்கள் துயரங்கள் வழி நம்முடைய நம்பிக்கையை உறதிப்படுத்திட முடியும் என்பதனை உணர்த்துகின்றார்.

குணம் பெற விரும்பியும், வாழ்விலே நாம் படும் துயரங்கள் நம்மை நம்பிக்கையிலே வளர்த்திட விழையும் என்று நம்பியும் பலியிலே பங்கேற்று பயன்பெறுவோம்.

மன்றாட்டுக்கள்:

            திருச்சபையின் பொறுப்பாளர்கள் தங்களை பக்குவப்படுத்தி, தங்களது பணியினால் குணம் கொடுக்கின்ற அன்பர்களாக உருவெடுக்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

            நாட்டின் நலனிலே உண்மை அக்கரை கொண்டு பணி செய்யும் அன்பர்களுக்கு, நீரே பாதுகாப்பாக இருந்து அவர்கள் முன்னெடுக்கும் காரியங்களால் நாட்டின் வளமை பாதுகாக்கப்பட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

            வாழ்விலே சந்திக்கின்ற துன்பதுயரங்களை நம்பிக்கையின் வித்துக்களாக கொண்டு நம்பிக்கையில் நாளும் வளர்ந்திட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

            போருக்கான அபாயச்சூழல் தணிந்து, பேச்சு வார்த்தைகளின் வழியாக அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்பட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

            வெப்பமிகுதியால் பரவும் தொற்று நோய்களில் இருந்து எம்மை காப்பாற்ற, நல்ல மழையை தந்து எம்மை காக்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment