கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழா
முதல் வாசகம்
இதோ, கருவுற்றிருக்கும் அந்த கன்னிப் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 7: 10-14; 8: 10b
அந்நாள்களில் ஆண்டவர் ஆகாசுக்கு மீண்டும் தம் திருவாக்கை அருளிச் சொல்லியது: ``உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு ஓர் அடையாளத்தை அருளுமாறு கேளும்; அது கீழே பாதாளத்திலோ, மேலே வானத்திலோ தோன்றுமாறு கேட்டுக்கொள்ளும்'' என்றார்.
அதற்கு ஆகாசு, ``நான் கேட்க மாட்டேன். ஆண்டவரைச் சோதிக்க மாட்டேன்'' என்றார். அதற்கு எசாயா: ``தாவீதின் குடும்பத்தாரே! நான் சொல்வதைக் கேளுங்கள்; மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதோ? என் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களோ?
ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த கன்னிப் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவர் `இம்மானுவேல்' என்று பெயரிடுவார். ஏனெனில் கடவுள் எங்களோடு இருக்கிறார்'' என்று கூறினார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 40: 6-7ய. 7b-8. 9. 10 (பல்லவி: 7ய,8ய காண்க)
பல்லவி: இறைவா, இதோ உம் திருவுளம் நிறைவேற்ற நான் வருகின்றேன்.
6 பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர். 7ய எனவே, `இதோ வருகின்றேன்.' பல்லவி 7b என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது; 8 என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது என்றேன் நான். பல்லவி
9 என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை;ஆண்டவரே! நீர் இதை அறிவீர். பல்லவி
10 உமது நீதியை நான் என் உள்ளத்தின் ஆழத்தில் மறைத்து வைக்கவில்லை; உம் வாக்குப்பிறழாமையைப் பற்றியும் நீர் அருளும் மீட்பைப் பற்றியும் கூறியிருக்கின்றேன்; உம் பேரன்பையும் உண்மையையும் மாபெரும் சபைக்கு நான் ஒளிக்கவில்லை. பல்லவி
இரண்டாம் வாசகம்
என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 4-10
சகோதரர் சகோதரிகளே, காளைகள், வெள்ளாட்டுக் கிடாய்கள் இவற்றின் இரத்தம் பாவங்களைப் போக்க முடியாது. அதனால்தான் கிறிஸ்து உலகிற்கு வந்தபோது, ``பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஆனால் ஓர் உடலை எனக்கு அமைத்துத் தந்தீர். எரிபலிகளும் பாவம் போக்கும் பலிகளும் உமக்கு உகந்தவையல்ல.
எனவே நான் கூறியது: என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற, `இதோ வருகின்றேன்.' என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது'' என்கிறார். திருச்சட்டப்படி செலுத்தப்பட்ட போதிலும், ``நீர் பலிகளையும் காணிக்கைகளையும் எரிபலிகளையும் பாவம்போக்கும் பலிகளையும் விரும்பவில்லை; இவை உமக்கு உகந்தவையல்ல'' என்று அவர் முதலில் கூறுகிறார்.
பின்னர் ``உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்'' என்கிறார். பின்னையதை நிலைக்கச் செய்ய முன்னையதை நீக்கி விடுகிறார். இந்தத் திருவுளத்தால்தான் இயேசு கிறிஸ்து ஒரே ஒரு முறை தம் உடலைப் பலியாகச் செலுத்தியதன் மூலம் நாம் தூயவராக்கப்பட்டிருக்கிறோம்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 1: 14யb
அல்லேலூயா, அல்லேலூயா! வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்.
+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38
ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, ``அருள் நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்'' என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.
வானதூதர் அவரைப் பார்த்து, ``மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்.
அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின்மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது'' என்றார். அதற்கு மரியா வானதூதரிடம், ``இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!'' என்றார்.
வானதூதர் அவரிடம், ``தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை'' என்றார். பின்னர் மரியா, ``நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்'' என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை
யாருடைய சித்தம் நிறைவேற்ற உள்ளோம்.
நம்முடைய விருப்பு வெறுப்புக்கு ஆளாகி நாம் நம்முடைய தேவைகளை நிறைவு செய்து மண்ணுலக மாந்தர்களைப் போல வாழ்ந்து வருவேமானால், நாம் நம்முடைய பாவத்திலேயே மடிந்து போவோம் என்பது தான் உண்மை.
அவருடைய சித்தம் நிறைவேற்றவே நாம் படைக்கப்பட்டு உள்ளோம். தேர்வு செய்யப்பட்டு இருக்கிறோம்.
அன்னை மரியாள் நமக்கு இதனைத் தான் உணர்த்தி நிற்கின்றார்கள்.
தன் வாழ்வில் இதனை தெளிவுற அறிவுறுத்தினார்கள். உம் திருவுளம் நிறைவேற்ற இதோ வருகின்றேன் என்று சொல்லி, இறுதி வரை சென்று மகனையே பலியாக்கி கொடுக்கின்றார்கள்.
இறுதி வரை நின்று மீட்பை தேடிக் கொள்வோம்.
No comments:
Post a Comment