பாஸ்கா - 3ஆம் வாரம்
சனி
முதல் வாசகம்
திருச்சபை வளர்ச்சியுற்று தூய ஆவியாரின் துணையால் பெருகிவந்தது.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 9: 31-42
அந்நாள்களில் யூதேயா, கலிலேயா, சமாரியா ஆகிய பகுதிகளில் எல்லாம் திருச்சபை வளர்ச்சியுற்று, ஆண்டவருக்கு அஞ்சி நடந்து, அமைதியில் திளைத்து, தூய ஆவியாரின் துணையால் பெருகிவந்தது. பேதுரு எல்லா இடங்களுக்கும் சென்று வந்தார்; ஒரு நாள் லித்தாவில் வாழ்ந்த இறைமக்களிடம் வந்து சேர்ந்தார்.
அங்கே அவர் எட்டு ஆண்டுகள் முடக்குவாதத்தால் படுக்கையில் கிடந்த ஐனேயா என்னும் பெயருடைய ஒருவரைக் கண்டார்; அவரிடம், "ஐனேயா, இயேசு கிறிஸ்து உம் பிணியைப் போக்குகிறார்; எழுந்து உம் படுக்கையை நீரே சரிப்படுத்தும்'' என்று பேதுரு கூறினார். உடனே அவர் எழுந்தார். லித்தாவிலும் சாரோனிலும் வாழ்ந்து வந்தவர்கள் அனைவரும் அதைக் கண்டு ஆண்டவரிடம் திரும்பினார்கள்.
யோப்பா நகரில் தபித்தா என்னும் பெயருடைய பெண் சீடர் ஒருவர் இருந்தார். அவர் தொற்கா என்றும் அழைக்கப்பட்டார்; நன்மை செய்வதிலும் இரக்கச் செயல்கள் புரிவதிலும் அவர் முற்றிலும் ஈடுபட்டிருந்தார். உடல்நலம் குன்றி ஒரு நாள் அவர் இறந்துவிட்டார். அங்கிருந்தோர் அவரது உடலைக் குளிப்பாட்டி மேல்மாடியில் கிடத்தியிருந்தனர். யோப்பாவிற்கு அருகிலுள்ள லித்தாவுக்குப் பேதுரு வந்திருப்பதைச் சீடர்கள் கேள்விப்பட்டு இருவரை அவரிடம் அனுப்பி, ``எங்களிடம் உடனே வாருங்கள்'' என்று கெஞ்சிக் கேட்டார்கள்.
பேதுரு புறப்பட்டு அவர்களோடு வந்தார். வந்ததும் அவர்கள் அவரை மேல்மாடிக்கு அழைத்துச் சென்றார்கள். கைம்பெண்கள் அவரருகில் வந்து நின்று, தொற்கா தங்களோடு இருந்தபோது செய்துகொடுத்த எல்லா அங்கிகளையும் ஆடைகளையும் காண்பித்தவாறே அழுதார்கள். பேதுரு அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு, முழந்தாள்படியிட்டு இறைவனிடம் வேண்டினார்; அவரது உடலின் பக்கமாகத் திரும்பி, ``தபித்தா, எழுந்திடு'' என்றார்.
உடனே அவர் கண்களைத் திறந்து பேதுருவைக் கண்டு, எழுந்து உட்கார்ந்தார். பேதுரு அவருடைய கையைப் பிடித்து எழுந்து நிற்கச் செய்தார்.
இறைமக்களையும் கைம்பெண்களையும் கூப்பிட்டு, அவர்கள்முன் அவரை உயிருடன் நிறுத்தினார். இது யோப்பா நகர் முழுவதும் தெரிய வரவே, ஆண்டவர்மீது பலர் நம்பிக்கை கொண்டனர்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 116: 12-13. 14-15. 16-17 (பல்லவி:12)
பல்லவி: ஆண்டவர் செய்த நன்மைகளுக்காக என்ன கைம்மாறு செய்வேன்? அல்லது: அல்லேலூயா.
12 ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்? 13 மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன். பல்லவி
14 இதோ! ஆண்டவருடைய மக்கள் அனைவரின் முன்னிலையில் அவருக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். 15 ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. பல்லவி
16 ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர். 17 நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன். பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 6: 63b. 68b
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 60-69
அக்காலத்தில் இயேசு நிலைவாழ்வு அளிக்கும் உணவு பற்றி கற்பித்துக்கொண்டிருந்த பொழுது, சீடர் பலர் இதைக் கேட்டு, ``இதை ஏற்றுக்கொள்வது மிகக் கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?'' என்று பேசிக்கொண்டனர்.
இதுபற்றித் தம் சீடர் முணுமுணுப்பதை இயேசு உணர்ந்து அவர்களிடம், ``நீங்கள் நம்புவதற்கு இது தடையாய் இருக்கிறதா? அப்படியானால் மானிடமகன் தாம் முன்பு இருந்த இடத்திற்கு ஏறிச் செல்வதை நீங்கள் கண்டால் அது உங்களுக்கு எப்படி இருக்கும்? வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. அப்படியிருந்தும் உங்களுள் சிலர் என்னை நம்பவில்லை'' என்றார்.
நம்பாதோர் யார் யார் என்பதும், தம்மைக் காட்டிக்கொடுக்க இருப்பவன் யார் என்பதும் இயேசுவுக்குத் தொடக்கத்திலிருந்தே தெரிந்திருந்தது. மேலும் அவர், ``இதன் காரணமாகத்தான் `என் தந்தை அருள்கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது' என்று உங்களுக்குக் கூறினேன்'' என்றார்.
அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரைவிட்டு விலகினர். அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை.
இயேசு பன்னிரு சீடரிடம், ``நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?'' என்று கேட்டார்.
சீமோன் பேதுரு மறுமொழியாக, ``ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். அதை நம்புகிறோம்'' என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
No comments:
Post a Comment