புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

19 April 2013

உயிர்ப்பின் காலத்தில் 4 ஆம் வாரம் - ஞாயிறு திருவழிப்பாட்டு ஆண்டு C (21-04-2013)

திருப்பலி முன்னுரை
இறைமகன் இயேசுவில் இனிமையானவர்களே! உயிர்ப்பின் காலத்தில் இந்த 4 ஆம் வாரத்தில் ஞாயிறு திருவழிபாட்டில் பங்கேற்க அணியமாகியிருக்கும் உங்கள் ஒவ்வோருவரையும் அன்புடன் வாழ்த்துவதில் பெரிதும் மகிழ்வடைகிறேன்.

நல்ல ஆயனாம் இயேசுவின் குரல் கேட்டு அதன் வழி நடக்கும் மக்கள் நாம் என்றால் அதைவிட பெருமைக்குரிய நற்செயல் வேறு ஒன்றும் இல்லை. இந்த மேலான உணர்வு நமக்கு இன்று ஊட்டப்படுகிறது.

ஓரு நல்ல ஆயர்; தன் ஆடுகளை அவற்றின் தேவைகளை மிக நன்றாக அறிந்திருப்பார். அந்த ஆடுகளிடமிருந்து அவர் பெற்ற பட்டறிவு அவைகளின் அவசியத் தேவை, அவைகளின் இயல்புகள், குறைபாடுகள் போன்றவை அனைத்தையும் அறிந்து, அவற்றின் மேல் அவர் அன்பு கொண்டிருப்பதால், அதற்கேற்றவாறு வழிநடத்தி அவற்றின் தேவைக்கு ஏற்ப வாழ்வு தருபவராக அவர் இருப்பார். நல்ல ஆயனின் மந்தை நாம் என்று சொல்லிக் கொள்வதானால் ஆயனின் குரல் கேட்டு நடக்கும் ஆடுகளாயிருக்கிறோமா என நம்மையே சற்று ஆய்வு செய்து பார்ப்போம். ஆயனின் குரல் கேட்போம் எனும் தீர்மானங்களுடன் திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம்
உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னை வேற்றினத்தார்க்கு ஒளியாக ஏற்படுத்துவேன்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13:14.43-52
அவர்கள் பெருகையிலிருந்து புறப்பட்டுச் சென்று பிசிதியாவிலுள்ள அந்தியோக்கியாவை அடைந்தார்கள். ஓய்வு நாளன்று அவர்கள் தொழுகைக்கூடத்திற்குச் சென்று அங்கு அமர்ந்திருந்தார்கள். 43 தொழுகைக் கூடத்தில் இருந்தோர் கலைந்து சென்றபோது பல யூதர்களும் யூதம் தழுவிக் கடவுளை வழிபட்டவர்களும் பவுலையும், பர்னபாவையும் பின் தொடர்ந்தார்கள். இவ்விருவரும் அவர்களோடு பேசிக் கடவுளின் அருளில் நிலைத்திருக்கும்படி அவர்களைத் தூண்டினர். 44 அடுத்து வந்த ஓய்வு நாளில் ஆண்டவரின் வார்த்தையைக் கேட்க ஏறக்குறைய நகரத்தார் அனைவரும் கூடி வந்தனர். 45 மக்கள் திரளைக் கண்ட யூதர்கள் பொறாமையால் நிறைந்து, பவுல் கூறியதை எதிர்த்துப் பேசி அவரைப் பழித்துரைத்தார்கள். 46 பவுலும் பர்னபாவும் துணிவுடன், "கடவுளின் வார்த்தையை உங்களுக்குத் தான் முதலில் அறிவிக்க வேண்டியிருந்தது. ஆனால் நீங்கள் அதனை உதறித் தள்ளி நிலை வாழ்வுக்குத் தகுதியற்றவர்கள் என்று உங்களுக்கு நீங்களே தீர்ப்பளித்துக் கொண்டீர்கள். எனவே நாங்கள் பிற இனத்தாரிடம் செல்லுகிறோம். 47 ஏனென்றால், "உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னை வேற்றினத்தார்க்கு ஒளியாக ஏற்படுத்துவேன்" என்று ஆண்;டவர் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்" என்று எடுத்துக் கூறினார்கள். 48 இதைக் கேட்ட பிற இனத்தார் மகிழ்ச்சியடைந்தனர்; ஆண்டவரின் வார்த்தையைப் போற்றிப் புகழ்ந்தனர். நிலைவாழ்வுக்காகக் குறிக்கப்பட்டோர் அனைவரும் நம்பிக்கை கொண்டனர். 49 அப்பகுதியெங்கும் ஆண்டவரின் வார்த்தை பரவியது. 50 ஆனால் யூதர்கள் கடவுளை வழிபட்டு வந்த மதிப்புக்குரிய பெண்களையும் நகரின் முதன்மைக் குடிமக்களையும் தூண்டிவிட்டு, பவுலையும் பர்னபாவையும் இன்னலுக்குள்ளாக்கி, அவர்களைத் தங்களது நாட்டிலிருந்து துரத்திவிட்டார்கள். 51 அவர்கள் தங்கள் கால்களில் படிந்திருந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிவிட்டு இக்கோனியாவுக்குச் சென்றார்கள். 52 சீடர்களோ தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல்
பல்லவி: நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!
திருப்பாடல் 100:1-3,5

அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
2 ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சிநிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! பல்லவி


3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! பல்லவி

5 ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர்.பல்லவி
இரண்டாம் வாசகம்

"இவர்கள் கொடிய வேதனையிலிருந்து மீண்டவர்கள்; தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள்
திருவெளிப்பாடு நூலிலிருந்து வாசகம் 7:9, 14-17
இதன்பின் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்; வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாய்க் கையில் குருத்தோலைகளைக் பிடித்திருந்தார்கள்.14 நான் அவரிடம், "என் தலைவரே, அது உமக்குத்தான் தெரியும்" என்றேன். அதற்கு அவர் என்னிடம் கூறியது; "இவர்கள் கொடிய வேதனையிலிருந்து மீண்டவர்கள்; தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள். 15 இதனால்தான் கடவுளது அரியணைமுன் நின்றுகொண்டு அவரது கோவிலில் அல்லும் பகலும் அவரை வழிபட்டுவருகிறார்கள்; அரியணையில் வீற்றிருப்பவர் அவர்களிடையே குடிகொண்டு அவர்களைப் பாதுகாப்பார். 16 இனி அவர்களுக்குப் பசியோ தாகமோ இரா; கதிரவனோ எவ்வகை வெப்பமோ அவர்களைத் தாக்கா. 17 ஏனெனில் அரியணை நடுவில் இருக்கும் ஆட்டுக்குட்டி அவர்களை மேய்க்கும்; வாழ்வு அளிக்கும் நீரூயஅp;ற்றுகளுக்கு வழிநடத்திச் செல்லும். கடவுள் அவர்களின் கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்."
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
- இறைவா உமக்கு நன்றி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்அல்லேலூயா


நற்செய்தி வாசகம்
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10:27-30
27 என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்பின் தொடர்கின்றன. 28 நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ளமாட்டார். 29 அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாது. 30 நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்" என்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

விசுவாசிகள் மன்றாட்டுகள்:
நல்ல ஆயருக்கும் ஆடுகளுக்கும் இடையே உள்ள உறவுதான் இறைவனுக்கும் மாந்தருக்கும் இடையே உள்ள உறவாகும்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

எங்கள் நல்லாயராம் இறைவா,
உமது திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, முதலாம் பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் அனைவரும் தங்கள் நம்பிக்கையில் நிலைத்திருந்து, உமது சாட்சிகளாக வாழ வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

நல்ல ஆயனான ஆண்டவரே,
உம்மைப் போற்றுகிறோம். எங்களை உமது ஆடுகளாகத் தேர்ந்துகொண்டதற்காக நன்றி! நாங்கள் உமது குரலை அடையாளம் கண்டு, செவிமடுத்து, உம்மைப் பின்பற்றும் வரம் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எங்கள் வழிகாட்டியாம் இறைவா,
உம்மைப் பற்றிய உண்மையைப் புறக்கணித்து, தவறான கொள்கைகளையும் சமயங்களையும் பின்பற்றி வாழும் மக்கள், உண்மை கடவுளாகிய உம்மை ஏற்றுக்கொள்ளவும் உமது அரசில் ஒன்றிணையவும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

உதவிசெய்ய அழைப்பவராம் இறைவா,
ஏழ்மை, தனிமை, வன்முறை, நோய் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் அன்பை இழந்து வாடும் மக்களிடையே, உமது அன்பின் கருவிகளாக செயலாற்றும் வரத்தினை கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

அன்புத் தந்தையே இறைவா,
உமது வார்த்தையை தாம் விரும்பியவாறு விளக்கியுரைத்துக்கொண்டு விசுவாசிகளிடையே பிளவை ஏற்படுத்துவோர் அதிகமாகிவிட்ட இன்றைய நாட்களிலே நீரே உண்மையை வெளிப்படுத்தி உண்மை விசுவாசத்தை நோக்கி மக்களை வழிநடாத்தவும், பிளவுபட்டுக்கிடக்கும் அத்தனை விசுவாசிகளையும் ஒன்று சேர்த்து உமது தலைமைத்துவத்தின் கீழ் அவர்களை வைத்துக் காத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே!
நோயினால் வாடுவோர், தனிமையில் இருப்போர், கவலையினாலும் துன்பங்களினாலும் கலங்குவோர், தேவையில் உழல்வோர், அடிமைத்தனத்துள் வாழ்வோர் அனைவரையும் உமது கருணையினாலும், இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும், நிம்மதியையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இன்றைய சிந்தனை
மந்தையைச் சேர்ந்த ஆடுகள் !

ஆயன் - ஆடுகள் உவமையை இன்றைய வாசகத்திலும் தொடர்ந்து வாசிக்கிறோம். தனது மந்தையைச் சேர்ந்த ஆடுகளுக்கும், பிற ஆடுகளுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்குகிறார் ஆண்டவர். அவரது ஆடுகள் அவரது குரலை அடையாளம் கண்டுகொள்கின்றன. அவரது குரலுக்கு செவி கொடுக்கின்றன. அவரைப் பின் தொடர்கின்றன. நாம் இயேசுவை நமது ஆயனாக ஏற்றுக்கொண்டால், நாம் இந்த மூன்று செயல்களையும் செய்ய வேண்டும். 1. அவரது குரலை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். இறைவன் நம்மிடம் பல வகைகளில் பேசுகிறார். திருநுhல் வழியாக, இயற்கையின் வழியாக, நம்மோடு வாழும் மனிதர்கள் வழியாகப் பேசுகிறார். நாம் அவரது ஆடுகளாக இருந்தால், அவரது அன்பின் குரலை அடையாளம் காண முடியும். 2. அவரது குரலுக்கு செவி மடுக்க வேண்டும். அவரது சொற்களின்படி நாம் வாழ வேண்டும். 3. அவரைப் பின் தொடர வேண்டும். நம் வாழ்வு முழுவதுமே இயேசுவைப் பின்பற்றும் ஒரு பயணம்தான். இந்த மூன்றின் வழியாக நாம் அவரது அன்பின் ஆடுகள் என்பதை எண்பிப்போமா!
மன்றாட்டு:
நல்ல ஆயனான ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். எங்களை உமது ஆடுகளாகத் தேர்ந்துகொண்டதற்காக நன்றி! நாங்கள் உமது குரலை அடையாளம் கண்டு, செவிமடுத்து, உம்மைப் பின்பற்றும் வரம் தாரும்.

No comments:

Post a Comment