9ஆம் வாரம்
வியாழன்
முதல் ஆண்டு
என் மகள் உன்னோடு மணம் புரிவதற்கென்றே ஆண்டவர் உங்களை என்னிடம் அனுப்பியுள்ளார்.
தோபித்து நூலிலிருந்து வாசகம் 6: 10; 7: 1,9-14; 8: 4-8
அந்நாள்களில் தோபியாவும் அசரியாவும் மேதியா நாட்டினுள் சென்று எக்பத்தானாவை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எக்பத்தானாவை அடைந்த பொழுது தோபியா அசரியாவிடம், �சகோதரர் அசரியா, உடனே என்னை நம் உறவினர் இரகுவேலின் வீட்டிற்கு அழைத்துச் செல்லும்� என்றார். எனவே இரபேல் அவரை இரகுவேலின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். இரகுவேல் தம் வீட்டு முற்றத்துக் கதவு அருகே அமர்ந்திருக்க அவர்கள் கண்டு, முதலில் அவரை வாழ்த்தினார்கள். அதற்கு அவர், �இளைஞர்களே, வணக்கம். உங்களுக்கு நலம் பெருகட்டும்� என்று அவர்களை வாழ்த்தினார். பின்னர், அவர்களை அவர் வீட்டிற்குள் அழைத்துச் சென்று தம் ஆடுகளுள் ஒன்றை அடித்து அவர்களைச் சிறப்பாக உபசரித்தார். அவர்கள் குளித்தபின் கை அலம்பிவிட்டு உணவு அருந்த அமர்ந்தார்கள்.
தோபியா அசரியாவிடம், �சகோதரரே, என் உறவினளான சாராவை எனக்கு மணம் செய்து கொடுக்குமாறு இரகுவேலிடம் கேளும்� என்றார். இச்சொற்கள் இரகுவேலின் செவியில் விழுந்தன.
அவர் இளைஞரிடம், �நீ இன்று இரவு உண்டு பருகி மகிழ்வுடன் இரு. தம்பி, என் மகள் சாராவை மணந்துகொள்ள உன்னைத் தவிர உரிமை உள்ள மனிதர் வேறு எவரும் இல்லை. உன்னைத் தவிர வேறு எவருக்கும் அவளைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் இல்லை; ஏனெனில் நீ என் நெருங்கிய உறவினன். ஆயினும், தம்பி, உன்னிடம் ஓர் உண்மையைக் கூற விரும்புகிறேன். அவளை நம் உறவினர்களுள் எழுவருக்கு மணமுடித்துக் கொடுத்தேன். அவளைக் கூடுவதற்கு நெருங்கிய அன்றிரவே அவர்கள் அனைவரும் இறந்தார்கள். இப்பொழுது, தம்பி, உண்டு பருகு. ஆண்டவர் உங்கள் இருவருக்கும் நல்லது செய்வார்� என்றார்.
அதற்குத் தோபியா, �நீங்கள் இதைப் பற்றி ஒரு முடிவுக்கு வரும்வரை நான் உண்ண மாட்டேன், பருக மாட்டேன்� என்றார். இரகுவேல், �சரி, செய்கிறேன்; மோசேயின் நூலில் விதித்துள்ளபடியே அவளை உனக்கு மணமுடித்துக் கொடுப்பேன். உனக்கு அவளைக் கொடுக்கும்படி விண்ணகத்தில் உறுதி செய்யப்பட்டு விட்டது. ஆகவே உன் உறவினளை ஏற்றுக்கொள். இனி நீ அவளுக்கு உரியவன்; அவள் உனக்கு உரியவள்; இன்று முதல் என்றுமே அவள் உன்னுடையவள். தம்பி, விண்ணக ஆண்டவர் இன்று இரவு உங்களைக் காப்பாராக; உங்கள் மீது இரக்கமும் அமைதியும் பொழிவாராக� என்றார்.
இரகுவேல் தம் மகள் சாராவை அழைக்க, அவள் வந்தாள். அவளது கையைப் பிடித்துத் தோபியாவிடம் கொடுத்தார். �மோசேயின் நூலில் விதித்துள்ள சட்டங்கள், முறைமைகளின்படி இவள் உனக்கு மனைவியாகிறாள். இவளை ஏற்றுக்கொண்டு உன் தந்தையின் வீட்டுக்கு இனிதே அழைத்துச் செல். விண்ணகக் கடவுள் உங்களுக்கு அமைதி அருள்வாராக� என்றார்.
பின்பு, அவர் சாராவின் தாயை அழைத்து ஓர் ஏட்டைக் கொண்டுவரச் சொன்னார். மோசேயின் சட்டம் விதித்துள்ளபடி சாராவைத் தோபியாவின் மனைவியாக்கும் திருமண ஒப்பந்தத்தை அதில் எழுதிக் கொடுத்தார். அதன் பின் அவர்கள் உண்டு பருகத் தொடங்கினார்கள். சாராவின் பெற்றோர் வெளியில் சென்று அறையின் கதவை மூடினர்.
தோபியா படுக்கையிலிருந்து எழுந்து சாராவிடம், �அன்பே, எழுந்திரு. நம் ஆண்டவர் நம்மீது இரங்கிக் காத்தருளுமாறு பணிந்து மன்றாடுவோம்� என்றார். சாரா எழுந்து நின்றாள். அவர்கள் மன்றாடத் தொடங்கி, தங்களைக் காத்தருளுமாறு வேண்டினார்கள். தோபியா பின்வருமாறு வேண்டினார். �எங்கள் மூதாதையரின் இறைவா, போற்றி! உமது பெயர் என்றென்றும் எல்லாத் தலைமுறைகளுக்கும் போற்றி! வானங்களும் உம் படைப்பு அனைத்தும் எக்காலமும் உம்மைப் போற்றுக! நீர் ஆதாமைப் படைத்தீர்; அவருடைய மனைவி ஏவாளை அவருக்குத் துணையாகவும் ஆதரவாகவும் உண்டாக்கினீர். அவர்கள் இருவரிடமிருந்தும் மனித இனம் தோன்றியது. �மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்ததொரு துணையை உருவாக்குவோம்� என்று உரைத்தீர். இப்பொழுது என் உறவினள் இவளை நான் மனைவியாக ஏற்றுக்கொள்வது இச்சையின் பொருட்டன்று, நேர்மையான நோக்கத்தோடுதான். என்மீதும் இவள்மீதும் இரக்கம் காட்டும்; நாங்கள் இருவரும் முதுமை அடையும் வரை இணைபிரியாது வாழச் செய்யும்.� இருவரும் �ஆமென், ஆமென்� என்று கூறினர்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 128: 1-2. 3. 4-5 (பல்லவி: 1)
பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்!
1 ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! 2 உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! பல்லவி
3 உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். பல்லவி
4 ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். 5 ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ்நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
திபா 119: 34
அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருச்சட்டத்தின்படி நடக்க எனக்கு மெய்யுணர்வு தாரும். அதை நான் முழு உள்ளத்தோடு கடைப் பிடிப்பேன். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 28b-34
அக்காலத்தில் மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு சதுசேயர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, �அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?� என்று கேட்டார்.
அதற்கு இயேசு, �இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக� என்பது முதன்மையான கட்டளை. �உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக� என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை� என்றார்.
அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், �நன்று போதகரே, �கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை� என்று நீர் கூறியது உண்மையே. அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்பு கொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்துவதும் எரிபலிகளையும் வேறு பலிகளையும் விட மேலானது� என்று கூறினார்.
அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், �நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை� என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
No comments:
Post a Comment