புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

11 February 2020

தூய லூர்தன்னை விழா (பிப்ரவரி 11)

தூய லூர்தன்னை விழா (பிப்ரவரி 11)

வரலாற்றுப் பின்னணி

1850 ஆம் ஆண்டு வரை பிரான்சில் இருக்கும் லூர்து நகர் ஒரு சாதாரண நகர்தான். அங்கே வாழ்ந்த மக்கள் அனைவரும் ஏழை எளியவர்கள்தான். லூர்தன்னை காட்சி கொடுத்த பெர்னதத் என்ற சிறுமியும்கூட ஒரு சாதாரண ஆடுமேய்க்கும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணிதான். அப்படிப்பட்ட ஒரு சாதாரண 14 வயது மதிக்கத்தக்க சிறுமிக்குத்தான் 1858 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதியிலிருந்து ஜூலை 16 ஆம் தேதி வரை பிரனீஸ் என்ற மலையில் உள்ள மசபெல் குகையில் பதினெட்டு முறை மரியன்னை காட்சி கொடுத்தார்.

முதல் மூன்று காட்களில் மரியன்னை, பெர்னதத் என்ற அந்த சிறுமியிடம் எதுவும் பேசவில்லை. வானத்திலிருந்து ஒளிமயமான பெண் ஒருத்தி வெள்ளைநிற உடையில் நீலநிற இடைக்கச்சையுடன் அந்த சிறுமிக்குக் காட்சி அளித்தார். இக்காட்சியானது பெர்னதத்தோடு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுமிகளுக்குக் கிடைக்கவில்லை, அவர்கள் ஏதோ ஓர் ஒளி தோன்றி மறைவதைத் தான் பார்த்தார்கள். பெர்னதத்தான் அந்த அற்புதக் காட்சியைக் கண்டாள்.

ஒன்பதாம் முறையாக மரியன்னை பெர்னதத்துக்கு காட்சி கொடுக்கும்போது, அவளிடம் மசபெல் குகைக்கு முன்பாக ஓரிடத்தில் கைகளை வைத்துத் தோண்டுமாறு கேட்டுக்கொண்டார். பெர்னதத்தும் அங்கே தோண்டியபோது தண்ணீர் மெதுவாக வந்தது. ஆனால் அது தெளிவில்லாமல் இருந்தது. அடுத்த இருபத்து நான்கு நேரத்திற்குள் அத்தண்ணீர் வற்றாத ஜீவ நதியாகப் பிறப்பெடுத்தது. ஏறக்குறைய 160 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த ஜீவ ஊற்று வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. 13 ஆம் முறையாக மரியன்னை பெர்னத்துக்குத் தோன்றியபோது, அவ்விடத்தில் தனக்கு ஓர் ஆலயம் கட்டுமாறு கேட்டுக்கொண்டார். உடனே சிறுமி தன்னுடைய பங்குத் தந்தையாம் பெயர்மேல் (Peyermale) என்பவரைச் சந்தித்து, இச்செய்தியைச் சொன்னார். தொடக்கத்தில் சிறுமி இச்செய்தியைச் சொன்னபோது, அவர் நம்பவில்லை. பின்னர் அதனை நம்பினார்.

பதினாறாம் முறையாக அதாவது மார்ச் 25 ஆம் நாள் (கபிரியேல் அதிதூதர் மரியாளுக்கு மங்கள வார்த்தை சொன்னதினம்), மரியன்னை காட்சி கொடுத்தபோது அவ்விடத்தில் ஊரே கூடியிருந்தது. அப்போது அங்கே கூடியிருந்தவர்கள் பெர்னதத்திடம், அவருடைய பெயர் என்ன என்று கேட்கச் சொன்னார்கள். அச்சிறுமி அப்படியே கேட்க, “நாமே அமல உற்பவம்” என்று பதிலுரைத்தார். உடனே மக்கள் அனைவரும் மகிழ்ந்து ஆரவாரம் செய்தார்கள். ஏனென்றால் அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் அதாவது 1854 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் நாள்தான், திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் ‘மரியாள் அமல உற்பவி’ என்ற விசுவாசப் பிரகடனத்தை அறிவித்திருந்தார். இப்போது மரியாளே தன்னை ‘நாமே அமல உற்பவம்’ என்று சொல்லியதால், திருச்சபையின் விசுவாச சத்தியத்தை மரியாளின் கூற்று உறுதி செய்துவிட்டது என்பதை நினைத்து அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

மரியன்னை பெர்னதத் என்ற அந்த சிறுமிக்கு அதன்பிறகும் காட்சியளித்தார். அப்போதெல்லாம் மரியாள் அவளிடம், “குருக்களுக்காக ஜெபியுங்கள், பாவத்திற்கு பொருத்தனைகள் செய்யுங்கள்” என்று கேட்டுக்கொண்டார். மேலும் பெர்னதத்திடம், “நான் உனக்குக் உனக்குக் காட்சி தந்ததனால், உனக்குத் துன்பங்கள் இல்லாமல் இருக்கப்போவதில்லை. இந்த மண்ணுலக வாழ்வில் உனக்குத் துன்பங்கள் உண்டு. ஆனால் விண்ணுலகில் உனக்கு பேரானந்தம் உண்டு” என்று சொல்வார். பெர்னதத் என்ற அந்தச் சிறுமி, அருட்சகோதரியாக மாறி, இறக்கும்வரைக்கும் அவர் துன்பங்களைச் சந்தித்தார் என்று அவருடைய வாழ்க்கை வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம் .

இன்றைக்கு லூர்து நகரில் எத்தனையோ புதுமைகள், அதிசயங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. லூயிஸ் பிரிட்டோ என்பவருக்கு கண்பார்வை கிடைத்திருக்கிறது, அதே போன்று மூன்றாம் நெப்போலியனின் மகனுக்கு நோயிலிருந்து நலம் கிடைத்திருக்கிறது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அன்னையின் அருளால் லூர்து நகரில் நடக்கும் அதிசயங்கள் ஏராளம். அவற்றைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.


No comments:

Post a Comment