ஜனவரி - 12
புனித பெனடிக்ட் பிஸ்கோப்
ஓவியர்களின் பாதுகாவலர்
மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டு கொண்டன (லூக்.2:31)
திருப்பயணங்களின் வழியாக திருச்சபையின் தவிர்க்க முடியாத நபராக மாறியிருக்கிறவர் பெனடிக்ட். 628ஆம் ஆண்டு, வடக்கு இங்கிலாந்தில் உள்ள நார்த்தம்பிரியா என்னும் இடத்தில் உயர்குடிமகனாக உதித்தவர். இவரின் இயற்பெயர் பிஸ்கோப் பாடூசிங். அதிகாரத் தோரணையுடன் வலம் வந்தவர் இவர். இளமையில் அரசர் ஓஸ்வே-யின் அரண்மனையில் அமைச்சராக அலுவலாற்றினார். இதற்காகத் தரப்பட்ட பெருதோட்டத்தில் மரியாதையுடனும், பெரும்புகழுடனும் வாழ்ந்தார்.
இந்நிலையில், எருசலேம் நோக்கி தமது முதலாவது திருப்பயணத்தைத் தொடங்கினார். எருசலேமில் இருந்து திரும்பி வந்தவுடன் தான் எருசலேமில் கண்ட வழிபாட்டு முறைகளையும், அவைகளைக் கொண்டாடிய முறைகளையும் நினைத்தபடியே இருந்தார். வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் அதனை நடைமுறைப்படுத்தவும் செய்தார். அரசர் ஓஸ்வே-யிடம் பேசினார். அவரும் தமது ஐரிஸ் பேரரசு முழுவதும் உரோமை வழிபாட்டு முறைமைகளை நடைமுறைப்படுத்த அரசாணை பிறப்பித்தார்.
இரண்டாவது திருப்பயணம் மேற்கொண்ட பெனடிக்ட் திரும்பி வரும் வழியில் 666இல், பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள லெரின்ஸ் தீவில் இறங்கினார். இங்குள்ள துறவு மடத்தில் தனது பெயரை பெனடிக்ட் என்று மாற்றிக்கொண்டார்.துறவு மடத்தைப் பற்றியும், உரோமை வழிபாட்டு முறைகள் பற்றியும் மேலதிக விபரங்களைச் சேகரிக்க விரும்பினார். எனவே இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் உரோமை சென்றார். அப்போது, திருத்தந்தை விட்டாலியன், தார்சுஸ் பேராயர் தியோடோருக்கு உறுதுணையாக இருக்க அட்ரியானுடன் இங்கிலாந்துக்கு அனுப்பினார். தம்மிடம் வந்துசேர்ந்த பெனடிக்ட்டை 669இல் புனித பேதுரு மற்றும் பவுல் துறவுமடத்திற்கு மடாதிபராக தியோடோர் நியமித்தார்.
இரண்டு ஆண்டுகளில் அப்பொறுப்பை உதறிவிட்டு மீண்டும் எருசலேமிற்கு திருப்பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்திலும் இதன் பிறகு மேற்கொண்ட இரண்டு பயணத்திற்குப் பிறகும் திரும்பி வரும்போது, எண்ணிலடங்கா புனிதப் பொருள்கள், புகழ்பெற்ற புத்தகங்கள், வரலாற்று ஆவணங்கள் மற்றும் விலைமதிக்க முடியாத ஓவியங்களுடன் வந்தார். திருச்சபையின் பொக்கிசங்களால் இங்கிலாந்துக்குப் பெருமை சேர்த்தார்.
புதிதாக துறவு மடம் ஆரம்பிக்க ஆவல் கொண்ட பெனடிக்ட் அரசர் ஓஸ்வே-க்குப் பிறகு அரியணைக்கு வந்த அரசர் இக்ஃபிரித்திடம் அனுமதி வேண்டினார். அரசரின் அனுமதியுடன் தமது முதல் துறவு மடத்தைப் புனித பேதுருவின் பெயரில் 674இல் வேர்மத் என்னும் இடத்தில் ஆரம்பித்தார். பிறகு 681ஆம் ஆண்டு இதே இடத்திலும் மற்றும் ஜாரோ-விலும் புனித பவுலின் பெயரில் இரண்டு துறவுமடங்களைத் தொடங்கினார்.
தமது துறவு மடத்தில் பல புதிய முயற்சிகளை மேற்கொண்ட பெனடிக்ட் புனித பேதுரு திருப்பேராலயத்தின் தலைமைப் பாடகரும் மடாதிபதியுமான யோவான் என்பவரை அழைத்து வந்து தமது மடத்தில் பாடல்கள் கற்றுக்கொடுக்கச் செய்தார். முதன் முதலில் இங்கிலாந்தில் அழகுமிளிரும் கற்களால் உரோமை அமைப்பில் ஆலயம் எழுப்பியதும், வண்ண வேலைப்பாடுடைய கண்ணாடிகளால் ஜன்னல்கள் அமைத்ததுவும் இவர்தான்.
தமது திருப்பயணங்களால் திருச்சபையின் பாரம்பரியங்களையும், வழிபாடுகளையும் நற்செய்தியாகப் பரப்பிய பெனடிக்ட், வேர்மத்தில் உள்ள தமது துறவு மடத்தில் 690, ஜனவரி, 12ஆம் நாளில் இறந்தார்.
மகிழ்ச்சிச் சுற்றுப்பயணமாக, வருடாந்திரக் கடமையாக இல்லாது
திருப்பயணங்கள் அமையுமானால் திருத்தலங்களின் தூய்மையும்,
தூயகமும் இறைவனின் இல்லமாவதைக் காணமுடியும்
No comments:
Post a Comment