புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

24 March 2020

தூய நிக்கோலாஸ் தே ஃப்ளூ (மார்ச் 21)

இன்றைய புனிதர்

தூய நிக்கோலாஸ் தே ஃப்ளூ (மார்ச் 21)
நிகழ்வு

ஒரு சமயம் நிக்கோலாஸ் ஒரு காட்சி கண்டார். அந்தக் காட்சியில் வெள்ளை நிறத்தில் இருந்த லில்லி மலரை குதிரை ஒன்று சாப்பிட்டு விழுங்குவதைக் கண்டார். இதனுடைய அர்த்தம் என்னவென்று அவர் நீண்ட நேரமாக யோசித்துப் பார்த்தார். கடைசியில்தான் அவருக்குப் புரிந்தது. தூய்மையான ஆன்மாவை இந்த உலக வாழ்க்கை தின்றுகொண்டிருக்கின்றது என்று. உடனே அவர் வேறெதையும் பற்றி யோசிக்காமல், எல்லாவற்றையும் துறந்து. துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்.

உலக செல்வங்களில் அல்ல, உண்மையான செல்வமும் ஒப்பற்ற செல்வமாகிய இறைவனில் பற்று கொண்டு வாழவேண்டும் என்பதை இந்த நிகழ்வின் வழியாக நாம் அறிந்துகொள்ளலாம்.

வாழ்க்கை வரலாறு

நிக்கோலாஸ், 1417 ஆம் ஆண்டு, மார்ச் திங்கள் இரண்டாம் நாள், சுவிட்சர்லாந்தில் இருந்த ஓர் உயர் குடியில் பிறந்தார். அக்காலத்தில் இளைஞர்கள் யாவரும் இராணுவத்தில் சேர்ந்து பணிபுரிய வேண்டும் என்ற கட்டாயம் இருந்ததால், நிக்கோலாஸ் சில காலத்திற்கு இராணுவத்தில் சேர்ந்து பணிபுரிந்தார். அது மட்டுமல்லாமல் இராணுவத்தில் மிக உயர்ந்த நிலையை அடைந்தார்.

குறிப்பிட்ட காலம் இராணுவத்தில் பணியாற்றிய பின்பு தன் சொந்த ஊருக்குத் திரும்பி டாரத்தி என்ற பெண்ணை மணந்துகொண்டார். இறைவன் நிக்கோலாஸ் – டாரத்தி தம்பதியருக்கு பத்துக் குழந்தைகளைக் கொடுத்து ஆசிர்வதித்தார். இல்வாழ்க்கை இப்படி மகிழ்ச்சியாகப் போய்க்கொண்டிருந்த தருணத்தில், ஒருநாள் நிக்கோலாஸ் இறைவனின் அழைப்பை உணர்ந்தார். உடனே தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளிடம் அனுமதி பெற்று துறவற வாழ்க்கையை மேற்கொண்டார்; ரான்பிட் சினே என்ற இடத்தில் ஒரு குடிசை அமைத்து அங்கேயே ஜெப தவ வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தார். நிக்கோலாஸ் அங்கு இருக்கின்றார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு நிறையப் பேர் அவரிடத்தில் ஆலோசனை கேட்பதற்காகச் சென்றார்கள். அவரும் அவர்களுக்கு நல்லவிதமாய் ஆலோசனை வழங்கி வந்தார். நிக்கோலாசிடம் ஆலோசனை கேட்பதற்காக கத்தோலிக்கர்கள் மட்டுமல்லாது, பிற சபையைச் சார்ந்தவர்களும் அவரிடத்தில் வந்தார்கள். எல்லாருக்கும் அவர் நல்ல விதமாய் ஆலோசனைகளை வழங்கி வந்தார்.

ஒருசமயம் நாட்டில் உள்நாட்டுக் கலவரம் ஏற்பட்டு நாடே இரண்டாக உடைந்துபோகக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது நிக்கோலாஸ் கொடுத்த அறிவுரையின் படி மக்கள் நடந்ததால், அப்படிப்பட்ட ஓர் அபாயம் நடைபெறாமல் நின்றுபோனது. நிக்கோலாஸ், துறவற வாழ்க்கையை மேற்கொண்டிருந்த காலகட்டத்தில் நற்கருணையைத் தவிர வேறு எதையும் உண்ணாமல் இருந்தது எல்லாருக்கும் ஆச்சரியத்தையும் வியப்பினையும் தந்தது. இப்படி ஒரு நல்ல ஆலோசகராக, இறைவன்மீது ஆழமான விசுவாசம் கொண்டவராக வாழ்ந்த வந்த நிக்கோலாஸ் 1487 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1947 ஆம் ஆண்டு திருத்தந்தை பனிரெண்டாம் பத்திநாதரால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய நிக்கோலாசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. ஆன்மாவைக் காத்துக்கொள்ள முயற்சிப்போம்

தூய நிக்கோலாசின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் ஒன்றே ஒன்றுதான். அதுதான் ஆன்மாவைக் காத்துக்கொள்வதாகும். இன்றைக்கு மனிதர்கள் உலக வாழ்க்கையில் சிக்குண்டு தூய ஆன்மாவைத் தொலைக்கும் வேளையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இப்படிப்பட்ட மனிதர்களுக்கு மத்தியில் தன்னுடைய ஆன்மாவை பாவத்திலிருந்து காப்பாற்றிய நிக்கோலாஸ் நமக்கு ஒரு முன்னுதாரணம். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு சொல்வார், “மனிதர் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தம் ஆன்மாவை இழப்பாரெனில் அதனால் வரும் பயனென்ன?” என்று. ஆம், ஆன்மாவை இழப்பதனால், உலக செல்வங்கள் அத்தனையும் நமக்கிருந்தாலும் அதனால் ஒரு பயனும் விளையப் போவதில்லை. ஆகவே, தூய நிக்கோலாசைப் போன்று ஆன்மாவைக் காத்துக்கொள்ள வேண்டிய முயற்சியில் நாம் ஈடுபடவேண்டும்.

ஆன்மாவை எப்படிக் காத்துக்கொள்வது என்று சிந்தித்துப் பார்க்கின்றபோது, ஆண்டவருக்கு உகந்த வழியில் நடப்பதுதான் நாம் ஆன்மாவைக் காத்துக்கொள்வதற்கான முதன்மையான வழி என்பது நமக்குப் புரியும். இயேசு கூறுவார், “ஆகவே, அனைத்திற்கும் மேலாக அவருடைய ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக்கொடுக்கப்படும்” என்று (மத் 6: 33). ஆண்டவருக்கு உகந்த வழியில் நடக்கின்றபோது நம்முடைய ஆன்மா காப்பாற்றப்படும், அதே நேரத்தில் நாம் கடவுளிடமிருந்து எல்லா ஆசிரியும் பெறமுடியும்.

ஆகவே, நிக்கோலாசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று, ஆன்மாவைக் காத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

No comments:

Post a Comment