இன்றைய புனிதர் :
(23-03-2020)
தூய தூரியியுஸ் (மார்ச் 23)
ஆண்டவரின் ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவரின் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார் (லூக் 4: 18-19)
வாழ்க்கை வரலாறு
தூரியியுஸ், 1538 ஆம் ஆண்டு, நவம்பர் திங்கள் 16 ஆம் நாள், ஸ்பெயின் நாட்டில் உள்ள மயோர்க்கா என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய குடும்பம் செல்வச் செழிப்பான குடும்பம். அப்படியிருந்தாலும் இவர் சிறுவயதிலே மிகவும் பக்தியாக வளர்ந்து வந்தார். குறிப்பாக மரியன்னையின் மீது எப்போதும் ஆழமான பக்தி கொண்டு வாழ்ந்துவந்தார். அது மட்டுமல்லாமல், பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது தன்னுடைய மதிய உணவை ஏழை மாணவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்து தான் பசியோடு இருந்தார்.
தொடக்கக் கல்வியை வல்லாடோலிட் பள்ளிக்கூடத்தில் கற்ற தூரியியுஸ், உயர்கல்வியை சல்மான்கா பல்கலைக்கழகத்தில் கற்றார் அங்கு கற்ற கல்வியின் பயனாக அவர் வழக்குரைஞர் ஆனார். வழக்குரைஞராக உயர்ந்த பின்பு தூரியியுஸ் மிகச் சிறப்பான முறையில் பணிகளைச் செய்துவந்தார். தூரியியுசிடம் இருந்த திறமையைப் பார்த்துவிட்டு மன்னர் இரண்டாம் பிலிப் அவரை க்ரானடா பகுதியில் நீதிபதியாக நியமித்தார். நீதிபதியாக உயர்ந்த பின்பும் தூரியியுஸ் தன்னுடைய பணியினைச் செவ்வனே செய்து வந்தார்.
இதற்கிடையில் தூரியியுசுக்கு குருவாக மாறவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எனவே அதற்கான கல்வியைக் கற்று 1578 ஆம் ஆண்டு குருவாக மாறினார். குருவாக மாறிய பின்பு, இவர் ஆற்றி வந்த பணிகளைப் பார்த்துவிட்டு இவரை இரண்டு ஆண்டுகள் கழித்து பெருவின் ஆயராக உயர்த்தினார்கள். எனவே, இவர் தன்னுடைய சொந்த மண்ணைவிட்டு பெருவிற்கு வந்தார். பெருவிற்கு வந்த சமயத்தில் மக்கள் கிறிஸ்துவை அறியாதவர்களாக இருந்தார்கள். எனவே இவர் முழு மூச்சுடன் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கினார். ஏறக்குறைய 50 ஆயிரம் மைல்களுக்கு கால்நடையாகவே பயணம் செய்து ஆண்டவரின் நற்செய்தியை அறிவித்து வந்தார். இவர் ஆற்றிய நற்செய்திப் பணியின் வழியாக நிறையப் பேர் திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவ மறையைத் தழுவினார்கள். தூய லீமா ரோஸ், தூய மார்டின் தி போரஸ் போன்றோர் எல்லாம் இவர் ஆற்றிய நற்செய்திப் பணியினால் கிறிஸ்துவ மறையைத் தழுவி புனிதர்கள் ஆனார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
தூரியியுசின் பணிகள் இதோடு நின்றுவிடவில்லை, நிறையப் பள்ளிக்கூடங்களையும் மருத்துவ மனைகளையும் ஏன் குருமடத்தையும் கட்டி எழுப்பினார். இதனால் ஏரளாமான மக்கள் பயன் அடைந்தார்கள்.
தூரியியுஸ் இடையராது பணிகள் செய்து வந்ததால், அவருடைய உடல் நலம் குன்றியது. எனவே, அவர் 1606 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 23 ஆம் நாள் இறையடி சேர்ந்தார். இவருக்கு 1726 ஆம் ஆண்டு, திருத்தந்தை 13 ஆம் ஆசிர்வாதப்பரால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய தூரியியுசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
1. பகிர்ந்துண்டு வாழ்தல்
தூய தூரியியுசிடமிருந்து நாம் பல்வேறு பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். இருந்தாலும் இவர் பகிர்ந்து வாழ்தலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றார். தன்னுடைய மாணவப் பருவத்தில் தன்னுடைய உணவினை ஏழை மாணவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்து, பகிர்ந்து வாழவேண்டும் என்னும் நெறியை நமக்கு சொல்லாமல் சொல்லித் தருகின்றார். நாம் நம்மிடமிருகின்ற உணவை, உடைமைகளை இன்ன பிறதை பிறரோடு பகிர்ந்துகொள்ள முன்வருகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்று. (மத் 14: 16). ஆம், தேவையில், பசியோடு இருக்கின்ற மக்களுக்கு உணவு கொடுப்பது நம்முடைய கடமையாகும்.
ஒரு சமயம் கையில் காசில்லாமல் ஓரிரு நாட்களாக உணவு உட்கொள்ளாமல் அலைந்து திரிந்த ஒரு பெரியவருக்கு ஐம்பது ருபாய் கிடைத்தது (சாலையில் கீழே கிடந்தது). அதை எடுத்துக்கொண்டு, கடையில் கொடுத்து, உணவு வாங்கி, அதனை ஒரு மரத்தடியில் உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கினார். அந்நேரம் பார்த்து மூன்று சிறுவர்கள் அவரிடத்தில், “ஐயா! நாங்கள் சாப்பிட்டு நான்கு நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது, எங்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்” என்றார்கள். அவர் வேறொன்றும் பேசாமல், தன்னிடம் இருந்த உணவுப் பொட்டலத்தை எடுத்து அவர்களிடத்தில் கொடுத்தார். அவர்களும் மிகவும் நன்றியுணர்வோடு பெற்றுக்கொண்டு உண்டார்கள். பின்னர் அவர்கள் போகின்றபோது ஒரு பழங்காலத்து நாணயத்தைப் அன்பளிப்பாக அவரிடம் கொடுத்துச் சென்றார்கள். பெரியவர் அந்த பழங்காலத்து நாணயத்தை அகழ்வாராய்ச்சி துறையினரிடம் கொடுக்க ,அவர்கள் அவரிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை சன்மானமாகக் கொடுத்தார்கள். பெரியவர் அதைப் பெற்றுக்கொண்டு மிகவும் சந்தோசமாக வாழ்ந்து வந்தார்.
பெரியவர் தன்னிடம் இருந்த உணவை சிறுவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தார். அதனால் அவர் வேறொரு விதத்தில் ஆசிர்வதிக்கப்பட்டார். நாமும் நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்து வாழும்போது நாமும் இறைவனால் ஆசிர்வதிக்கப்படுவோம் என்பது உறுதி.
ஆகவே, தூய தூரியியுசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம், நம்மிடம் இருப்பதை இல்லாதவர்களோடு பகிர்ந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
No comments:
Post a Comment