புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

24 March 2020

தூய மரிய ஜோசப்பா (மார்ச் 22)

இன்றைய புனிதர்

தூய மரிய ஜோசப்பா (மார்ச் 22)
“நான் நோயுற்றிருந்தேன், நீங்கள் என்னை கவனித்துக் கொண்டீர்கள்” - இயேசு.

வாழ்க்கை வரலாறு

ஸ்பெயின் நாட்டில் உள்ள விக்டோரியா என்னும் ஊரில், 1843 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 7 ஆம் நாள் மரியா ஜோசப்பா பிறந்தார். இவர் சிறு வயதிலே மிகுந்த பக்தியும் எளியவர் பால் அன்பும் இரக்கமும் கொண்டு வாழ்ந்து வந்தார்.

தன்னுடைய தொடக்கக் கல்வியை மாட்ரிட் என்னும் இடத்தில் முடித்த மரிய ஜோசப்பா, தனது பெற்றோரிடத்தில் வந்து துறவியாகப் போகப்போகிறேன் என்ற தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தினார். பெற்றோரும் அதற்கு மறுப்பேதும் சொல்லாமல், அவருடைய விருப்பத்தின்படி போக அனுமதித்தார்கள். எனவே மரிய ஜோசப்பா, கன்செப்சனலிஸ்ட் என்னும் சபையில் சேர்ந்தார். அங்கு அவர் சேர்ந்த சில நாட்களிலே கடுமையான நோய் ஒன்று அவரைத் தாக்கவே, அவர் அந்த சபையிலிருந்து வெளியேறினார். சிறுது நாட்களில் உடல்நலம் தேறிய மரிய ஜோசப்பா, ‘சர்வெண்ட்ஸ் ஆப் மேரி’ என்னும் சபையில் சேர்ந்தார். அந்த சபையிலும் அவரால் நீண்ட நாட்கள் நீடிக்க முடியவில்லை. இதனால் அவர் அச்சபையிலிருந்து வெளியேறினார்.

சர்வெண்ட்ஸ் ஆப் மேரி என்ற சபையிலிருந்து வெளியேறிய மரிய ஜோசப்பா, 1871 ஆம் ஆண்டு ‘சர்வெண்ட்ஸ் ஆப் ஜீசஸ்’ என்ற சபையைத் தொடங்கினார். இந்தச் சபையினுடைய பிரதான நோக்கமே நோயாளிகளைக் கவனித்துக் கொள்வதுதான். மரிய ஜோசப்பா, பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முகம் சுழிக்காமல் பணிவிடை செய்தார். ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு மேல் நோயாளிகளுக்கு மத்தியில் பணி செய்த மரிய ஜோசப்பா, 1912 ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு, படுத்த படுக்கையாகி இறந்து போனார். அவர் இறந்தபோது ஸ்பெயின் நாட்டில் அழாதவர் யாருமே இல்லை என்று சொல்லலாம். அந்தளவுக்கு அவர் எல்லாருடைய அன்பையும் நன்மதிப்பையும் பெற்றிருந்தார்.

மரிய ஜோசப்பா இறந்த பிறகு, அவருடைய பெயரில் நிறைய அற்புதங்கள் நடைபெற்றன. இவற்றையெல்லாம் பார்த்து 2000 ஆம் ஆண்டு, அப்போது திருத்தந்தையாக இருந்த திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அவருக்குப் புனிதர் பட்டம் கொடுத்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

ஏழைகள் வாழ்வு உயர வேண்டும், நோயாளிகள் நலம்பெற வேண்டும் என்று அவர்களுக்காகத் தன்னுடைய வாழ்வினை அர்ப்பணித்த தூய மரிய ஜோசப்பாவிடமிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. நோயாளிகளிடத்தில் அன்பு

தூய மரிய ஜோசப்பாவின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கின்றப்போது அவர் நோயாளிடத்தில் கொண்டிருந்த அன்பும் இரக்கமும்தான் நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றது. நோயாளிகளிடத்தில் மரிய ஜோசப்பாவிற்கு இருந்த அன்பைப் போன்று நமக்கு இருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நற்செய்தியின் பல இடங்களில் ஆண்டவர் இயேசு நோயாளிகள் மீது பரிவுகொண்டு அவர்களுடைய நோய்களைக் குணப்படுத்தினார் என்றது பார்க்கின்றோம். இயேசுவைப் போன்று நோயாளிகளைக் குணப்படுத்துகின்ற வல்லமை நமக்கு இல்லாவிட்டாலும், நோயாளிகளை நம்மால் அன்புடன் கவனித்துக்கொள்ள முடியும்; அவர்களுக்குச் சேவை செய்வதன் வழியாக ஆண்டவருக்குச் சேவை செய்ய முடியும் (மத் 25: 40).

இந்த இடத்தில் அன்னை தெரசாவின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று தோன்றுகின்றது.

1980-ஆம் ஆண்டு! ஹவுராவின் ஒரு சாலை! மூன்று வயது போலியோவால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை பரிதாபமாக அழுது நின்று கொண்டிருந்தது. அதைக் கண்ட அன்னை தெரசா அந்தக் குழந்தையை தனது காப்பகத்திற்கு கொண்டு வந்து ஆதரவு அளித்தார். இன்று அந்தக் குழந்தை 39- வயது வாலிபனாக வளர்ந்துள்ளார். கவுதம் லெவிஸ் எனும் பெயருடைய அவர் இன்று விமான ஓட்டி, புகைப்படக் கலைஞர், இசை அமைப்பாளர் என பன்முகத் தன்மையுள்ள மனிதனாக உருவாகியுள்ளார். அவர் இசை அமைத்து வடிவமைத்த அன்னை தெரசா பற்றிய பாடல் 2016 ஆம் ஆண்டு, செப்டம்பர் 4-ஆம் தேதி 200 நாடுகளில் வெளியிடப்பட்டது. “அன்னை தெரசா இல்லை எனில் நான் இன்று உயிருடன் இருந்திருக்க மட்டேன்” என்கிறார் கவுதம்! கவுதமைப் போல பல ஆயிரக்கணக்கான ஆதரவற்ற குழந்தைகளையும் நோயாளிகளையும் பெண்களையும் தமது கருணை இல்லத்திற்குக் கொண்டு வந்து அவர்களுக்கு மறுவாழ்வும் ஆதரவும் அளித்தவர் அன்னை தெரசா! என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் தொடங்கி வைத்த இந்தப் புனிதப் பணியை நாமும் தொடர்ந்து செய்வதுதான் இறைவனுக்கு ஏற்ற செயலாகும்.

ஆகவே, தூய ஜோசப்பாவின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று நோயாளிகள்மீது அன்பும் இரக்கமும் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

No comments:

Post a Comment