இன்று அன்னையாம் திருஅவை மரியாளின் மாசற்ற இதயப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. அன்னையின் இதயம் மாசற்றது, அது எப்போதும் அன்பினால் நிரம்பி வழிந்ததோடு மட்டுமல்லாமல், இறைத்திருவுளம் எதுவென அறிந்து, அதை நிறைவேற்றுவதிலே கண்ணும் கருத்துமாய் இருந்தது. எனவே, இப்பெருவிழாவில் மரியாளின் மாசற்ற இதயம் நமக்கு எத்தகைய பாடத்தைக் கற்றுத்தருகிறது என்று சிந்தித்துப் பார்த்து மரியாளைப் போன்று, இறைத்திருவுளம் எதுவென அறிந்து, அதை நிறைவேற்ற நாம் முயல்வோம்.
மரியாளின் மாசற்ற இதயத்திற்கான பக்திமுயற்சிகள் கி.பி.பதினேழாம் நூற்றாண்டிலேயே தொடங்கப்பட்டதற்கான வரலாறு இருக்கிறது. ஜான் யூட்ஸ் என்ற குருவானவர்தான் மரியாளின் மாசற்ற இதயத்திற்காக முதல்முறை திருப்பலி மற்றும் பூசைக்கருத்துகள் ஒப்புக்கொடுத்தவர். அவர்தான் இப்பக்தி முயற்சி உலகெங்கும் பரவ அடித்தளமிட்டவர். அதன்பின்னர் அன்னை மரியாள் பாத்திமா நகரில் லூசியா, ஜெசிந்தா, பிரான்சிஸ் என்ற மூன்று சிறுவர்களுக்குக் காட்சிகொடுத்தபோது இந்த பக்திமுயற்சி இன்னும் பரவத் தொடங்கியது.
1917 ஆம் ஆண்டு, ஜூன் 13 ஆம் தேதி புதன்கிழமை காட்சியில், மரியன்னையின் தூய இதயம் முட்களால் ஊடுருவப்பட்டு இருப்பதை லூசியா கண்டாள். ஜெசிந்தா, பிரான்ஸிஸ் மற்றும் மக்களோடு ஜெபமாலை செபித்தபின் லூசியாவிடம் அன்னை மரியா, “நீ இன்னும் கொஞ்சகாலம் இங்கு இருக்கவேண்டும். என்னை மக்கள் அறிந்து நேசிக்கும்படி உன்னை பயன்படுத்த இயேசு விரும்புகிறார்; உலகில் என் மாசற்ற இதய பக்தியை ஏற்படுத்தி, இப்பக்தியைக் கைக்கொள்ளும் அனைவருக்கும் நான் மீட்பை வாக்களிக்கிறேன்; என் மாசற்ற இதயம் உன் அடைக்கலமாகவும், கடவுளிடம் உன்னை அழைத்து செல்லும் வழியாகவும் இருக்கும்’ என்று கூறினார்.
அப்போது பேரொளியின் பிரதிபலிப்பு அவர்கள் மேல் பாய்ந்தது. மாதாவின் வலது உள்ளங்கையில் முட்களால் குத்தித் துளைக்கப்படுவதாகத் தோன்றிய ஓர் இதயம் இருந்தது. மனுக்குலத்தின பாவங்களால் நிந்திக்கப்பட்டு, நம்மிடம் பரிகாரம் கேட்கிற மரியன்னையின் தூய இதயம் தான் அது.
அன்னை மீண்டும் அவர்களிடம் “ஏதாவது சிறுசிறு ஒறுத்தல்கள் செய்யுபோது, ‘ஓ! இயேசுவே’ உமது அன்பிற்காகவும், பாவிகள் மனந்திரும்புவதற்காகவும், மரியன்னையின் தூய இதயத்திற்கு எதிராகக் கட்டிக் கொள்ளப்படும் பாவங்களுக்குப் பரிகாரமாகவும், இதைச் செய்கிறேன்” என்று சொல்லும்படிக் கூறினார்; ரஷ்யாவை என்மாசற்ற இதயத்திற்கு ஒப்புக்கொடுக்கவும் கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்வு நடந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு அருட்திரு ஸ்தெபனோ கோபியிடம் அன்னை மரியாள் பேசும்போது, “தன் மாசற்ற இதயத்தின் ஒளி, திருத்தந்தை, குருக்களை ஆசீர்வதிப்பதையும், அடைக்கலமாகவும், பாதுகாப்பாகவும் தன் இதயம் எப்போதும் இருப்பதாகவும், தங்களையே அர்ப்பணிக்கவும்” கூறினார்.
இந்த நிகழ்வுகளை எல்லாம் அறிந்த திருத்தந்தை பனிரெண்டாம் பத்திநாதர் 1944 ஆம் மரியாளின் மாசற்ற இதயப் பெருவிழாவை உலகம் முழுவதும் கொண்டாடப் பணித்தார். தொடக்கத்தில் இவ்விழா ஆகஸ்ட் 22 ஆம் தேதிதான் கொண்டாடப்பட்டு வந்தது. அதன்பிறகு இவ்விழா இயேசுவின் திரு இருதயப் பெருவிழாவிற்கு அடுத்த நாள் கொண்டாடப் பணிக்கப்பட்டது.
மரியாளின் மாசற்ற இதயத்தைப் பற்றி திருவிவிலியம் சொல்லாமலில்லை. அதற்குத் தெளிவான விவிலியச் சான்றுகள் இருக்கின்றன. லூக்கா நற்செய்தி 2 ஆம் அதிகாரம் 19& 51(இன்றைய நற்செய்தி வாசகம்) ஆகிய வாசங்களில், “மரியாள் நிகழ்ந்தவற்றை எல்லாம் தன்னுடைய உள்ளத்தில் இருத்தி, சிந்தித்துக் கொண்டிருந்தாள் என்று படிக்கின்றோம். அதேபோன்று லூக்கா நற்செய்தி 2 ஆம் 35 ஆம் வசனத்தில் எருசலேம் திருக்கோவிலில் சிமியோன் குழந்தை இயேசுவைக் கையில் தாங்கி, “இக்குழந்தை இஸ்ரயேல் மக்களின் பலரது வீழ்ச்சிக்கும், எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்.... உம்முடைய உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவிப்பாயும்” என்று மரியாளைப் பார்த்துக் குறிப்பிடுவார். இதன்மூலம் மரியாள் ஆண்டவர் இயேசுவைப் பற்றியே தன்னுடைய உள்ளத்தில் சிந்தித்துக் கொண்டிருந்தார் என்று உறுதி செய்துகொள்ளலாம்.
மரியாள் எப்போதும் மீட்பின் திட்டத்தை தன்னுடைய உள்ளத்தில் இருத்தி சிந்தித்துப் பார்த்தவள். அதோடு மட்டுமல்லாமல், அந்த மீட்புத் திட்டம் நிறைவேற தன்னுடைய திருமகன் இயேசுவோடு துன்பங்களையும், வேதனைகளையும், அவமானங்களையும் சந்தித்தவள்; உள்ளத்தில் தூய அன்பை வைத்துக்கொண்டு, துன்புற்ற மானிட சமுதாயத்திற்கு இரங்கியவள்.
ஆகவே, இத்தகைய ஒரு தூய, இரக்கமிக்க அன்னையைக் கொடையாகப் பெற்றிருக்கும் நாம், அந்த அன்னை வாழ்ந்து காட்டிய நெறியின்படி வாழ்வதுதான், நான் அன்னைக்குச் செய்யக்கூடிய மிகச் சிறந்த கைமாறாக இருக்கும்.
No comments:
Post a Comment