ஜூன் 22
புனித ஆல்பன் (மூன்றாம் நூற்றாண்டு)
இவர் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்தவர். இவர் வாழ்ந்த காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக வேத கலாபனை நடைபெற்றது. அப்பொழுது இவர் ஓர் அருள்பணியாளருக்குத் தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்தார்.
தான் அடைக்கலம் கொடுத்த அருள்பணியாளரின் எடுத்துக்காட்டான வாழ்வால் தூண்டப்பட்ட இவர் கிறிஸ்தவராக மனம் மாறினார்.
இந்நிலையில் இவர் ஓர் அருள்பணியாளருக்கு அடைக்கலம் கொடுத்த செய்தி, எப்படியோ அங்கிருந்த ஆளுநருக்குத் தெரியவரவே, ஆளுநர் படைவீரர்களை அனுப்பி, இவருடைய வீட்டில் இருந்த அருள்பணியாளரைக் கைது செய்துவரச் சொன்னார்.
இவரோ அருள்பணியாளரைத் தப்பிக்க வைத்துவிட்டு, அவர் அணிந்திருந்த உடையை வாங்கி அணிந்து கொண்டார். அருள்பணியாளரைக் கைதுசெய்ய வந்த படைவீரர், அவர் தப்பித்துபோன செய்தியை அறிந்து, அருள்பணியாளரின் உடையில் இருந்த இவரைக் கைதுசெய்து ஆளுநருக்கு முன்பாக நிறுத்தினார்.
ஆளுநர் இவரைக் கிறிஸ்துவை மறுதலித்து விட்டுத் தன்னுடைய தெய்வத்திற்குப் பலிசெலுத்தச் சொன்னபோது, இவர் கிறிஸ்துவைத் தவிர வேறு யாரையும் வணங்குவதில்லை; யாருக்கும் பலிசெலுத்துவதும் இல்லை என்று சொல்லி, தன்னுடைய நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்தார்.
இதனால் சீற்றங்கொண்ட ஆளுநர், இவரைத் தன்னுடைய படைவீரர்களிடம் தற்போதைய ஆல்பன்ஸ் என்ற இடத்தில், தலைவெட்டி கொல்லச் சொன்னார். படைவீரர்களும் ஆளுநருடைய உத்தரவின்படி, இவரைத் தலைவெட்டி கொல்லச் சென்றபோது, அதிலிருந்த படைவீரர் ஒருவர் இவருடைய வாழ்வால் தொடப்பட்டு, மனம்மாறிக் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்.
இதற்குப்பின் வேறு ஒரு படைவீரர்தான் இவரைத் தலைவெட்டிக் கொன்றுபோட்டார்.
இவர் புதிதாக மனம் மாறியவர்களுக்கும், புலம்பெயர்ந்தவர்களுக்கும், அநியாயமாகச் சித்திரவதை செய்யப்படுபவர்களுக்கும் பாதுகாவலராக இருக்கிறார்.
No comments:
Post a Comment