புனித_லூயிஸ்_குவனெல்லா
(1842-1925)
அக்டோபர் 24
இவர் (#St_Louis_Guenella) இத்தாலியைச் சார்ந்தவர். இவரது குடும்பம் எளிய குடும்பமாக இருந்தாலும், இறை நம்பிக்கையில் சிறந்ததொரு குடும்பமாக இருந்தது.
இவர் தனது பன்னிரண்டாவது வயதில் குடுமடத்தில் சேர்ந்து, இருபத்து நான்காம் வயதில் குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார்.
குருவான பின்பு இவர், சாவோக்னோ (Savogno) என்ற இடத்தில் பங்குப் பணியாளராகப் பணியாற்றினார். பின்னர் இவர் புனித ஜான் போஸ்கோவோடு சேர்ந்து தெருவோரச் சிறுவர்களின் நல்வாழ்விற்காகப் பணி செய்தார்.
மீண்டுமாகப் பங்குப் பணியாளராகப் பணியாற்றத் தொடங்கிய இவர் இளைஞர்கள், ஏழைகள், அனாதைகள், சிறப்புக் குழந்தைகள் ஆகியோரின் வாழ்வு ஏற்றம்காண உழைத்தார். இவரால் பயன்பெறுவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் பெருகிக்கொண்டே போனது. அவர்களுக்கெல்லாம் சிறந்தவிதமாய்ப் பணிபுரிய இவர் ஆண், பெண் என இருபாலருக்கும் துறவு மடத்தைத் தொடங்கினார்.
இவர் மிகப்பெரிய எழுத்தாளராகவும் மறைப்போதகராகவும் விளங்கினார். கடவுள் தனக்குக் கொடுத்த இந்தத் தாலந்துகளைக் கொண்டு இவர் பல ஆன்மாக்களை மீட்டார்.
1912 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்குச் சென்ற இவர், அங்கிருந்த புலம்பெயர்ந்த மக்கள் நடுவில் பணிசெய்தார்.
இப்படி அயராது ஆண்டவருடைய பணியையும், மக்கள் பணியையும் செய்த இவர் 1925 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1964 ஆம் ஆண்டு அருளாளர் பட்டமும், 2011 ஆம் ஆண்டு திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களால் புனிதர் பட்டமும் கொடுக்கப்பட்டன.
No comments:
Post a Comment