புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

13 April 2013

பாஸ்கா - 3ஆம் வாரம்


திங்கள்



முதல் வாசகம்

ஸ்தேவானின் ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தைகளையும் எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 6: 8-15

அந்நாள்களில் ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்தவராய் மக்களிடையே பெரும் அருஞ்செயல்களையும் அரும் அடையாளங்களையும் செய்து வந்தார். அப்பொழுது உரிமையடைந்தோர் எனப்படுவோரின் தொழுகைக் கூடத்தைச் சேர்ந்த சிலரும் சிரேன், அலக்சாந்திரியா நகரினரும் சிலிசியா, ஆசியா மாநிலத்தவரும் ஸ்தேவானோடு வாதாடத் தொடங்கினர். ஆனால் அவரது ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தை களையும் எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை.

பின்பு அவர்கள், ``இவன் மோசேக்கும் கடவுளுக்கும் எதிராகப் பழிச்சொற்கள் சொன்னதை நாங்கள் கேட்டிருக்கிறோம்'' என்று கூறச் சிலரைத் தூண்டிவிட்டனர். அவ்வாறே அவர்கள் மக்களையும் மூப்பர்களையும் மறைநூல் அறிஞர்களையும் அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழச் செய்தார்கள். உடனே அவர்கள் எழுந்துவந்து அவரைப் பிடித்துத் தலைமைச் சங்கத்துக்கு இழுத்துச் சென்றார்கள்; மேலும் பொய்ச் சாட்சிகளைக் கொண்டுவந்து நிறுத்தினார்கள். அவர்கள், ``இந்த மனிதன் இத்தூய இடத்தையும் திருச்சட்டத்தையும் எதிர்த்து ஓயாமல் பேசிவருகிறான்'' என்று கூறினார்கள்.

மேலும் அவர்கள், ``நசரேயராகிய இயேசு இந்த இடத்தை அழித்துவிடுவார் என்றும், மோசே நமக்குக் கொடுத்திருக்கிற முறைமைகளை மாற்றிவிடுவார் என்றும் இவன் கூறக் கேட்டோம்'' என்றார்கள். தலைமைச் சங்கத்தில் அமர்ந்திருந்த அனைவரும் அவரை உற்றுப்பார்த்தபோது அவரது முகம் வானதூதரின் முகம்போல் இருக்கக் கண்டனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 119: 23-24. 26-27. 29-30 (பல்லவி: 1b)

பல்லவி: ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர். அல்லது: அல்லேலூயா.

23 தலைவர்கள் ஒன்றுகூடி எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தாலும், உம் ஊழியன் உம்முடைய விதிமுறைகளைக் குறித்தே சிந்திக்கின்றேன். 24 ஏனெனில், உம் ஒழுங்குமுறைகள் எனக்கு இன்பம் தருகின்றன; அவையே எனக்கு அறிவுரையாளர். பல்லவி

26 என் வழிமுறைகளை உமக்கு எடுத்துச் சொன்னேன்; நீர் என் மன்றாட்டைக் கேட்டருளினீர்; உம் விதிமுறைகளை எனக்குக் கற்றுத்தாரும். 27 உம் நியமங்கள் காட்டும் வழியை என்றும் உணர்த்தியருளும்; உம் வியத்தகு செயல்கள்பற்றி நான் சிந்தனை செய்வேன். பல்லவி

29 பொய் வழியை என்னைவிட்டு விலக்கியருளும்; உமது திருச்சட்டத்தை எனக்குக் கற்றுத்தாரும். 30 உண்மையின் பாதையை நான் தேர்ந்துகொண்டேன்; உம் நீதிநெறிகளை என் கண்முன் நிறுத்தியுள்ளேன். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 4: 4b

அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

அழிந்து போகும் உணவுக்காக அல்ல; நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 22-29

இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவு அளித்த பின், சீடர்கள் புறப்பட்ட கரையிலேயே மறுநாளும் மக்கள் கூட்டமாய் நின்றுகொண்டிருந்தார்கள். முந்தின நாள் ஒரு படகைத் தவிர வேறு படகு எதுவும் அங்கு இல்லை என்பதையும் அதில் இயேசுவின் சீடர்கள் மட்டும் போனார்களே அன்றி இயேசு அவர்களோடு அப்படகில் ஏறவில்லை என்பதையும் அவர்கள் கண்கூடாகப் பார்த்திருந்தார்கள்.

அப்போது, ஆண்டவர் கடவுளுக்கு நன்றி செலுத்திக் கொடுத்த உணவை மக்கள் உண்ட இடத்திற்கு அருகில், திபேரியாவிலிருந்து படகுகள் வந்து சேர்ந்தன. இயேசுவும் அவருடைய சீடரும் அங்கு இல்லை என்பதைக் கண்ட மக்கள் கூட்டமாய் அப்படகுகளில் ஏறி இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்றனர். அங்கு கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, ``ரபி, எப்போது இங்கு வந்தீர்?'' என்று கேட்டார்கள்.

இயேசு மறுமொழியாக, ``நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிட மகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்'' என்றார். அவர்கள் அவரை நோக்கி, ``எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்?'' என்று கேட்டார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்து, ``கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கு ஏற்ற செயல்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

பாஸ்கா - 3ஆம் வாரம் ஞாயிறு


பாஸ்கா - 3ஆம் வாரம்

ஞாயிறு

மூன்றாம் ஆண்டு



முதல் வாசகம்

 இவற்றுக்கு நாங்களும் தூய ஆவியும் சாட்சிகள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 27b-32. 40b-41

அந்நாள்களில் தலைமைக் குரு திருத்தூதர்களை நோக்கி, ``நீங்கள் இந்த இயேசு பற்றிக் கற்பிக்கக்கூடாது என்று நாங்கள் கண்டிப்பாய்க் கட்டளையிடவில்லையா? என்றாலும் எருசலேம் முழுவதும் நீங்கள் கற்பித்து வருகிறீர்கள். மேலும் இந்த மனிதருடைய இரத்தப் பழியையும் எங்கள்மீது சுமத்தப் பார்க்கிறீர்களே!'' என்றார்.

அதற்குப் பேதுருவும் திருத்தூதரும் மறுமொழியாக, ``மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிடக் கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்? நீங்கள் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்ற இயேசுவை நம் மூதாதையரின் கடவுள் உயிர்த்தெழச் செய்தார். இஸ்ரயேல் மக்களுக்கு மனமாற்றத்தையும் பாவ மன்னிப்பையும் அளிப்பதற்காகக் கடவுள் அவரைத் தலைவராகவும் மீட்பராகவும் தமது வலப்பக்கத்துக்கு உயர்த்தினார். இவற்றுக்கு நாங்களும் கடவுள் தமக்குக் கீழ்ப்படிவோருக்கு அருளும் தூய ஆவியும் சாட்சிகள்'' என்றனர்.

இனி இயேசுவைப் பற்றிப் பேசக்கூடாது என்று திருத்தூதர்களுக்குக் கட்டளையிட்டு விடுதலை செய்தனர். இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால் திருத்தூதர்கள் மகிழ்ச்சியோடு தலைமைச் சங்கத்தை விட்டு வெளியே சென்றார்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 30: 1,3. 4-5. 10-11ய,12b (பல்லவி: 1ய)

பல்லவி: ஆண்டவரே, உம்மைப் புகழ்வேன்; ஏனெனில் என்னைக் கைத்தூக்கிவிட்டீர். அல்லது: அல்லேலூயா.

1 ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கிவிட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை. 3 ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக்குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். பல்லவி

4 இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள். 5 அவரது சினம் ஒரு நொடிப்பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு. பல்லவி

10 ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும். 11ய நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்; 12b என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன். பல்லவி



இரண்டாம் வாசகம்

 கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி வல்லமையும் செல்வமும் பெறத் தகுதி பெற்றது.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 5: 11-14

யோவான் நான் பார்த்துக்கொண்டிருக்கும்போது, அரியணையையும் உயிர்களையும் மூப்பர்களையும் சுற்றி நின்ற கோடிக்கணக்கான வானதூதர்களின் குரலைக் கேட்டேன்: ``கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி வல்லமையும் செல்வமும் ஞானமும் ஆற்றலும் மாண்பும் பெருமையும் புகழ்ச்சியும் பெறத் தகுதி பெற்றது'' என்று அவர்கள் உரத்த குரலில் பாடிக்கொண்டிருந்தார்கள்.

பின்பு, விண்ணுலகு, மண்ணுலகு, கீழுலகு, கடல் எங்கும் இருந்த படைப்புகள் அனைத்தும், அவற்றில் இருந்த ஒவ்வொன்றும், ``அரியணையில் வீற்றிருப்பவருக்கும் ஆட்டுக்குட்டிக்கும் புகழ்ச்சியும் மாண்பும் பெருமையும் ஆற்றலும் என்றென்றும் உரியன'' என்று பாடக் கேட்டேன். அதற்கு அந்த நான்கு உயிர்களும், `ஆமென்' என்றன. மூப்பர்கள் விழுந்து வணங்கினார்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்து உயிர்த்தெழுந்தார். அனைத்தையும் படைத்தவர் அவரே; மானிடக் குலத்தின்மீது இரக்கம் கொண்டவரும் அவரே. அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

 இயேசு அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 1-19

அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு: சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர்.

அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், ``நான் மீன்பிடிக்கப் போகிறேன்'' என்றார். அவர்கள், ``நாங்களும் உம்மோடு வருகிறோம்'' என்று கூறி, போய்ப் படகில் ஏறினார்கள்.

அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை. ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார்.

ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்துகொள்ளவில்லை. இயேசு அவர்களிடம், ``பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா?'' என்று கேட்டார்.

அதற்கு அவர்கள், ``இல்லை'' என்றார்கள். அவர், ``படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்'' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை.

இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், ``அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்'' என்றார். அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந்திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார்.

மற்ற சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகு தொலையில் இல்லை; ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள். படகை விட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது.

இயேசு அவர்களிடம், ``நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள்'' என்றார். சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.

இயேசு அவர்களிடம், ``உணவருந்த வாருங்கள்'' என்றார்.

சீடர்களுள் எவரும், ``நீர் யார்?'' என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர்தாம் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள்.

இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார்.

இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார்.

அவர்கள் உணவருந்தியபின் இயேசு சீமோன் பேதுருவிடம், ``யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?'' என்று கேட்டார்.

அவர் இயேசுவிடம், ``ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!'' என்றார். இயேசு அவரிடம், ``என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்'' என்றார்.

இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், ``யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?'' என்று கேட்டார்.

அவர் இயேசுவிடம், ``ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!'' என்றார். இயேசு அவரிடம், ``என் ஆடுகளை மேய்'' என்றார்.

மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், ``யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?'' என்று கேட்டார். `உனக்கு என்னிடம் அன்பு உண்டா?' என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், ``ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?'' என்றார்.

இயேசு அவரிடம், ``என் ஆடுகளைப் பேணி வளர். நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடி வந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்'' என்றார்.

பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார். இதைச் சொன்னபின் பேதுருவிடம், ``என்னைப் பின்தொடர்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



அல்லது

குறுகிய வாசகம்



இயேசு அருகில் வந்து அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 1-14

இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு: சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர்.

அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், ``நான் மீன்பிடிக்கப் போகிறேன்'' என்றார்.

அவர்கள் ``நாங்களும் உம்மோடு வருகிறோம்'' என்று போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை. ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்துகொள்ளவில்லை.

இயேசு அவர்களிடம், ``பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா?'' என்று கேட்டார்.

அதற்கு அவர்கள், ``இல்லை'' என்றார்கள். அவர், ``படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்'' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை.

இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், ``அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்'' என்றார். அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந் திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார்.

மற்ற சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகு தொலையில் இல்லை; ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள். படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது.

இயேசு அவர்களிடம், ``நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள்'' என்றார். சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.

இயேசு அவர்களிடம், ``உணவருந்த வாருங்கள்'' என்றார். சீடர்களுள் எவரும், ``நீர் யார்?'' என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர்தாம் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள்.

இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார். இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



2013 Apr 14 SUN: THIRD SUNDAY OF EASTER

Acts 5: 27-32. 40b-41/ Ps 30: 2. 4. 5-6. 11-12. 13 (2a)/ Rv 5: 11-14/ Jn 21: 1-19



‘உண்டிக் கொடுத்தோர் உயிர்க் கொடுத்தோன்.’

‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’.

அதிகாலை நேரம் அழகிய கடற்கரை ஓரம் நெருப்பு மூட்டி அப்பத்தையும் மீனையும் சுட்டு உணவருந்த வாருங்கள் என்று இயேசு தம் சீடரை அழைப்பது ‘வாங்க சாப்பிட வாருங்க’ என்று தாய்க் கூறிய பாசத்தோடு அழைப்பதற்கு ஒப்பாகும். இந்த அலாதி அன்பில் நனைந்த சீடர்கள் சிறிதும் அச்சமின்றி இயேசுவுக்காக உயிர் கொடுக்கவும் துணிந்தனர், சாட்சிகளாய் மரித்தனர். அன்றாடம் அவர் உடலை உண்டு, குருதியைப் பருகும் நாம் நம் சாட்சிய வாழ்வை அலசிப் பார்த்து விசுவாசத்தில் உறுதியாய் நிலைப்போம்.



முன்னுரை:

            பாஸ்கா காலத்தின் 3ஆம் வாரம் இது.

‘உணவருந்த வாருங்கள்’, என்ற அழைப்பை தன்னுடைய சீடர்களுக்கு கொடுக்கின்றார். களைத்தவரை ஊக்குவிக்க, தானே முன்நின்று உணவருந்த அழைக்கின்றார். பிடித்த சில மீன்களையும் கொண்டு வரச் சொல்லி உணவு கொடுக்கின்றார்.

திருவிருந்து வாருங்கள் என்ற அழைப்பை ஏற்று, பலியிலே பங்கேற்க வந்துள்ளோம். நம்மிடையே உள்ளவைகளையும் எடுத்துச் சென்று, பகிர்ந்து உண்ண அழைக்கப்பட்டுள்ளோம்.

அம்மையப்பனாக உள்ள இறைவனின் கருணையை புசித்துப் பார்த்து, நாமும் பசிப்போக்கும் தாய்மை உள்ளம் கொண்டவர்களாவோம். வரம் வேண்டுவோம்.



மன்றாட்டு:

            திருச்சபை, தன்னுடைய அமைப்பு ரீதியிலான போக்கை மாற்றி, இயேசுவின் தாய்மைப் பண்பினை தனதாக்கி, உணவு கொடுத்து, உயிர் கொடுத்து வாழ, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நாட்டு மக்களின் வறுமையை பயன்படுத்தி, முதலாளிகள் தங்கள் நிலையை தக்க வைத்துக் கொள்ளாமல், பகிர்ந்து கொடுத்து வாழும் மனதினை தந்திட, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

விலைவாசி ஏற்றத்தின் பாதிப்பினை உணர்ந்து ஆள்வோர், தங்களது பொருளாதார கொள்கைகளை மாற்றியமைத்துக் கொள்ள அறிவை, ஞானத்தை தந்திட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

முயற்சிக்காமல், உழைக்காமல் உண்ணுகின்ற நிலையை மாற்றி உழைத்து, கடினப்பட்டு உழைத்து உண்ண, நல்மனம் அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

புதிய தமிழ் புத்தாண்டில், தமிழர்கள் ஒன்றுபட்டு, தன்மானத்தோடும், தன்சக தமிழனின் நல்வாழ்வில் அக்கரையும் கொண்டு, தனிமனித துதி, சின்ன, வெள்ளை திரைகளுக்கு அடிமைப்பட்டு போகாமல் வாழ அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

11 April 2013

பாஸ்கா - 2ஆம் வாரம்


சனி



முதல் வாசகம்

நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி நிறைந்தவர்களுமான எழுவரைத் தெரிந்தெடுத்தார்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 6: 1-7

அந்நாள்களில் சீடர்களின் எண்ணிக்கை பெருகி வந்தது. அப்போது, கிரேக்க மொழி பேசுவோர் தங்களுடைய கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில் முறையாகக் கவனிக்கப்படவில்லை என்று எபிரேய மொழி பேசுவோருக்கு எதிராக முணுமுணுத்தனர்.

எனவே பன்னிரு திருத்தூதரும் சீடர்களை ஒருங்கே வரவழைத்து, ``நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டுப் பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறை அல்ல. ஆதலால் அன்பர்களே, உங்களிடமிருந்து, நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்தவர்களுமான எழுவரைக் கவனமாய்த் தெரிந்தெடுங்கள். அவர்களை நாம் இந்தப் பணியில் நியமிப்போம். நாங்களோ இறைவேண்டலிலும், இறைவார்த்தைப் பணியிலும் உறுதியாய் நிலைத்திருப்போம்'' என்று கூறினர்.

திரளாய்க் கூடியிருந்த சீடர் அனைவரும் இக் கருத்தை ஏற்றுக் கொண்டனர். அதன்படியே அவர்கள் நம்பிக்கையும் தூய ஆவியும் நிறைந்த ஸ்தேவான், பிலிப்பு, பிரக்கோர், நிக்கானோர், தீமோன், பர்மனா, யூதம் தழுவிய அந்தியோக்கிய நகரத்து நிக்கொலா என்பவர்களைத் தெரிந்தெடுத்து அவர்களைத் திருத்தூதர் முன்னால் நிறுத்தினார்கள். திருத்தூதர் தங்கள் கைகளை அவர்கள்மீது வைத்து இறைவனிடம் வேண்டினர். கடவுளது வார்த்தை மேன்மேலும் பரவி வந்தது.

சீடர்களின் எண்ணிக்கை எருசலேம் நகரில் மிகுதியாகப் பெருகிக்கொண்டே சென்றது. குருக்களுள் பெருங்கூட்டத்தினரும் இவ்வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நம்பிக்கை கொண்டனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

பதிலுரைப் பாடல் 

திபா 33: 1-2. 4-5. 18-19 (பல்லவி: 22)

பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! அல்லது: அல்லேலூயா.

1 நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே. 2 யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள். பல்லவி

4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. 5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. பல்லவி

18 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். 19 அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். பல்லவி

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்; அனைத்தையும் படைத்தவர் அவரே; மானிடக்குலத்தின்மீது இரக்கம் கொண்டவரும் அவரே. அல்லேலூயா.

 

நற்செய்தி வாசகம்

இயேசு கடல்மீது நடந்து வருவதைச் சீடர்கள் கண்டனர்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 16-21

மாலை வேளையானதும் இயேசுவின் சீடர்கள் கடற்கரைக்கு வந்து, படகேறி மறுகரையிலுள்ள கப்பர்நாகுமுக்குப் புறப்பட்டார்கள், ஏற்கெனவே இருட்டிவிட்டது. இயேசுவும் அவர்களிடம் அதுவரை வந்து சேரவில்லை. அப்போது பெருங்காற்று வீசிற்று; கடல் பொங்கி எழுந்தது. அவர்கள் ஐந்து அல்லது ஆறு கிலோ மீட்டர் தொலை படகு ஓட்டியபின் இயேசு கடல்மீது நடந்து படகருகில் வருவதைக் கண்டு அஞ்சினார்கள்.

இயேசு அவர்களிடம், ``நான்தான், அஞ்சாதீர்கள்'' என்றார். அவர்கள் அவரைப் படகில் ஏற்றிக்கொள்ள விரும்பினார்கள். ஆனால் படகு உடனே அவர்கள் சேரவேண்டிய இடம் போய்ச் சேர்ந்துவிட்டது.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
பாஸ்கா - 2ஆம் வாரம்


வெள்ளி


முதல் வாசகம்

இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால், மகிழ்ச்சியோடு வெளியே சென்றார்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 34-42

அந்நாள்களில் கமாலியேல் என்னும் பெயருடைய பரிசேயர் ஒருவர் தலைமைச் சங்கத்தில் எழுந்து நின்றார். இவர் மக்கள் அனைவராலும் மதிக்கப்பட்ட திருச்சட்ட ஆசிரியர். திருத்தூதரைச் சிறிது நேரம் வெளியே போகும்படி ஆணையிட்டு, அவர் சங்கத்தாரை நோக்கிக் கூறியது: ``இஸ்ரயேல் மக்களே, இந்த மனிதர்களுக்கு நீங்கள் செய்ய எண்ணியுள்ளதைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். சிறிது காலத்திற்கு முன்பு தெயுதா என்பவன் தோன்றி, தான் பெரியவன் என்று கூறிக்கொண்டு, ஏறத்தாழ நானூறு பேரைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டான்.

ஆனால், அவன் கொல்லப்பட்டான். அவனைப் பின்பற்றிய அனைவரும் சிதறிப் போகவே, அந்த இயக்கம் ஒன்றுமில்லாமல் போயிற்று. இவற்றுக்குப் பின்பு மக்கள் தொகை கணக்கிடப்பட்ட நாள்களில் கலிலேயனான யூதா என்பவன் தோன்றித் தன்னோடு சேர்ந்து கிளர்ச்சி செய்யும்படி மக்களைத் தூண்டினான். அவனும் அழிந்தான்; அவனைப் பின்பற்றிய மக்கள் அனைவரும் சிதறிப்போயினர்.

ஆகவே இப்போது நீங்கள் இம்மனிதர்களை விட்டுவிடுங்கள் என நான் உங்களுக்குக் கூறுகிறேன். இவர்கள் காரியத்தில் நீங்கள் தலையிட வேண்டாம். இவர்கள் திட்டமும் செயலும் மனிதரிடத்திலிருந்து வந்தவை என்றால் அவை ஒழிந்து போகும். அவை கடவுளைச் சார்ந்தவை என்றால் நீங்கள் அவற்றை ஒழிக்க முடியாது; நீங்கள் கடவுளோடு போரிடுபவர்களாகவும் ஆவீர்கள்.'' அவர் கூறியதைச் சங்கத்தார் ஏற்றுக்கொண்டனர்.

பின்பு அவர்கள் திருத்தூதர்களை அழைத்து அவர்களை நையப் புடைத்து, இயேசுவைப் பற்றிப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டு விடுதலை செய்தனர். இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால் திருத்தூதர்கள் மகிழ்ச்சியோடு தலைமைச் சங்கத்தை விட்டு வெளியே சென்றார்கள். அவர்கள் நாள்தோறும் கோவிலிலும் வீடுகளிலும் தொடர்ந்து கற்பித்து, இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து வந்தார்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல் 

திபா 27: 1. 4. 13-14 (பல்லவி: 4b)

பல்லவி: ஆண்டவரின் இல்லத்தில் நான் குடியிருக்க வேண்டும். அல்லது: அல்லேலூயா.

1 ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? பல்லவி

4 நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும்; ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். பல்லவி

13 வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். 14 நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 4: 4b

அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

அப்பங்களைப் பகிர்ந்தளித்தார். மக்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-15

அக்காலத்தில் இயேசு கலிலேயக் கடலைக் கடந்து மறுகரைக்குச் சென்றார். அதற்குத் திபேரியக் கடல் என்றும் பெயர் உண்டு. உடல் நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின்தொடர்ந்தனர். இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார். யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது.

இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு, ``இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?'' என்று பிலிப்பிடம் கேட்டார். தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார்.

பிலிப்பு மறுமொழியாக, ``இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே'' என்றார். அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா, ``இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?'' என்றார்.

இயேசு, ``மக்களை அமரச் செய்யுங்கள்'' என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக் குறைய ஐயாயிரம். இயேசு அப்பங்களை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார்.

அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்டபின், ``ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்'' என்று தம் சீடரிடம் கூறினார். மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள். இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், ``உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே'' என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக்கொண்டு போய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

10 April 2013

பாஸ்கா - 2ஆம் வாரம்

வியாழன்

முதல் வாசகம்

 நாங்களும் தூய ஆவியும் சாட்சிகள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 27-33

அந்நாள்களில் காவலர்கள் திருத்தூதர்களை அழைத்துக்கொண்டுவந்து யூதத் தலைமைச் சங்கத்தின்முன் நிறுத்தினார்கள். தலைமைக் குரு அவர்களை நோக்கி, ``நீங்கள் இந்த இயேசு பற்றிக் கற்பிக்கக்கூடாது என்று நாங்கள் கண்டிப்பாய்க் கட்டளையிடவில்லையா? என்றாலும் எருசலேம் முழுவதும் நீங்கள் கற்பித்து வருகிறீர்கள். மேலும் இந்த மனிதருடைய இரத்தப் பழியையும் எங்கள்மீது சுமத்தப்பார்க்கிறீர்களே!'' என்றார்.

அதற்குப் பேதுருவும் திருத்தூதரும் மறுமொழியாக, ``மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிடக் கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்? நீங்கள் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்ற இயேசுவை நம் மூதாதையரின் கடவுள் உயிர்த்தெழச் செய்தார். இஸ்ரயேல் மக்களுக்கு மனமாற்றத்தையும் பாவ மன்னிப்பையும் அளிப்பதற்காகக் கடவுள் அவரைத் தலைவராகவும் மீட்பராகவும் தமது வலப்பக்கத்துக்கு உயர்த்தினார். இவற்றுக்கு நாங்களும் கடவுள் தமக்குக் கீழ்ப்படிவோருக்கு அருளும் தூய ஆவியும் சாட்சிகள்'' என்றனர். இவற்றைக் கேட்ட தலைமைச் சங்கத்தார் கொதித்தெழுந்து, திருத் தூதர்களைக் கொல்லத் திட்டமிட்டனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 34: 1,8. 16-17. 18-19 (பல்லவி: 6ய)

பல்லவி: ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார். அல்லது: அல்லேலூயா.

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 8 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். பல்லவி

16 ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். 17 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். பல்லவி

18 உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். 19 நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல; அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 20: 29

அல்லேலூயா, அல்லேலூயா! ``தோமா, என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர்,'' பேறுபெற்றோர். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

 தந்தை மகன்மேல் அன்புகூர்ந்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 31-36

அக்காலத்தில் இயேசு நிக்கதேமிடம் கூறியது: மேலிருந்து வருபவர், அனைவரையும்விட மேலானவர். மண்ணுலகிலிருந்து உண்டானவர் மண்ணுலகைச் சேர்ந்தவர். மண்ணுலகு சார்ந்தவை பற்றியே அவர் பேசுகிறார். விண்ணுலகிலிருந்து வருபவர், அனைவருக்கும் மேலானவர். தாம் கண்டதையும் கேட்டதையும் பற்றியே அவர் சான்று பகர்கிறார். எனினும் அவர் தரும் சான்றை எவரும் ஏற்றுக்கொள்வதில்லை. அவர் தரும் சான்றை ஏற்றுக்கொள்பவர் கடவுள் உண்மையானவர் என்பதை உறுதிப்படுத்துகிறார். கடவுளால் அனுப்பப்பெற்றவர் கடவுளின் வார்த்தைகளைப் பேசுகிறார். கடவுள் அவருக்குத் தம் ஆவிக்குரிய கொடைகளை அளவின்றிக் கொடுக்கிறார். தந்தை மகன்மேல் அன்புகூர்ந்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார். மகனிடம் நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெறுவர். நம்பிக்கை கொள்ளாதோர் வாழ்வைக் காணமாட்டார். மாறாகக் கடவுளின் சினம் அவர்கள்மேல் வந்து சேரும்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை

மனிதர்களுக்கு கீழ்ப்படிவதைவிட கடவுளுக்கு கீழ்படிவது மேலானது என்று உரைக்கின்றார்.

சிறிது கூட தயக்கமின்றி சொல்லப்படும் கூற்று.

நன்றாகத் தெரியும் அரசனுக்கு பணிவது தான், உலகப் போக்கிலான உடனடி பலன் என்பது. கடவுள் பற்றில்லாத, அச்சமில்லாத  அரசர்கள் இத்தகைய பேச்சுக்களை விட்டு வைக்கமாட்டார்கள் எனப்தனை அறிந்திருந்த போதிலும், உண்மையிலேயே உயிர்ப்பு தந்த தெம்புத் தான் இத்தகைய துணிச்சலான வார்த்தைகளை ஆள்வோரிடம் உரைக்க வைக்கின்றது.

நம்பிக்கை கொள்வோம். கடவுளுக்கு பணிவதே பிரதானமாக கொள்வோம்.

09 April 2013

பாஸ்கா - 2ஆம் வாரம்

புதன்



முதல் வாசகம்

 நீங்கள் சிறையில் அடைத்து வைத்திருந்த மனிதர்கள், அதோ! கோவிலில் நின்று மக்களுக்குக் கற்பிக்கின்றனர்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 17-26

அந்நாள்களில் தலைமைக் குருவும் அவரைச் சேர்ந்த சதுசேயக் கட்சியினர் அனைவரும் பொறாமையால் நிறைந்து திருத்தூதரைக் கைது செய்து பொதுச் சிறையில் காவலில் வைத்தனர்.

ஆனால் இரவில் ஆண்டவரின் தூதர் சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து அவர்களை வெளியே அழைத்துச் சென்று, ``நீங்கள் போய்க் கோவிலில் நின்று வாழ்வு பற்றிய வார்த்தைகளை யெல்லாம் மக்களுக்கு எடுத்துக் கூறுங்கள்'' என்றார். இதைக் கேட்ட அவர்கள் பொழுது விடிந்ததும் கோவிலுக்குச் சென்று கற்பித்தார்கள். தலைமைக் குருவும் அவரைச் சேர்ந்தவர்களும் அனைத்து இஸ்ரயேல் மக்களின் ஆட்சிப் பேரவையாகிய தலைமைச் சங்கத்தைக் கூட்டித் திருத்தூதர்களைச் சிறையிலிருந்து கொண்டுவருமாறு ஆள் அனுப்பினார்கள்.

அந்த ஏவலர்கள் அங்கு வந்தபோது சிறையில் அவர்களைக் காணவில்லை. எனவே அவர்கள் திரும்பி வந்து, ``நாங்கள் சிறைச்சாலை உறுதியாய்ப் பூட்டப்பட்டிருப்பதையும், காவலர் வாயிலருகில் நின்றுகொண்டு இருப்பதையும் கண்டோம். ஆனால் கதவைத் திறந்தபோது உள்ளே எவரையும் காணவில்லை'' என்று அறிவித்தார்கள். இவ்வார்த்தைகளைக் கேட்ட கோவில் காவல் தலைவரும், தலைமைக் குருக்களும் அவர்களுக்கு என்னதான் நேர்ந்திருக்கும் என்று மனங்குழம்பி நின்றனர்.

அப்பொழுது ஒருவர் வந்து, ``நீங்கள் சிறையில் அடைத்து வைத்திருந்த மனிதர்கள், அதோ! கோவிலில் நின்று மக்களுக்குக் கற்பிக்கின்றனர்'' என்று அவர்களிடம் அறிவித்தார். உடனே காவல் தலைவர் ஏவலர்களுடன் கோவிலுக்குச் சென்று அவர்களை அழைத்துச் சென்றார். மக்கள் கல்லெறிவார்கள் என்று அவர் அஞ்சியதால் வன்முறை எதுவும் கையாளவில்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8 (பல்லவி: 6ய)

பல்லவி: ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார். அல்லது: அல்லேலூயா.

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். பல்லவி

3 என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம். 4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். பல்லவி

5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. 6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். பல்லவி

7 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர். 8 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 3: 16

அல்லேலூயா, அல்லேலூயா! தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

 தம் மகன் வழியாக உலகை மீட்கவே, கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 16-21

அக்காலத்தில் இயேசு நிக்கதேமிடம் கூறியது: தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை. ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது. தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
பாஸ்கா - 2ஆம் வாரம்

செவ்வாய்



முதல் வாசகம்

 ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 32-37

அந்நாள்களில் நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். அவர்களுள் எவரும் தமது உடைமைகளைத் தம்முடையதாகக் கருதவில்லை; எல்லாம் அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது.

திருத்தூதர் அனைவரும் ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார் என மிகுந்த வல்லமையோடு சான்று பகர்ந்து வந்தனர். அவர்கள் அனைவரும் மக்களின் நல்லெண்ணத்தை மிகுதியாகப் பெற்றிருந்தனர். தேவையில் உழல்வோர் எவரும் அவர்களுள் காணப்படவில்லை. நிலபுலங்களை அல்லது வீடுகளை உடையோர் அவற்றை விற்று அந்தத் தொகையைக் கொண்டுவந்து திருத்தூதருடைய காலடியில் வைப்பர்; அது அவரவர் தேவைக்குத் தக்கவாறு பகிர்ந்து கொடுக்கப்படும்.

சைப்பிரசு தீவைச் சேர்ந்த யோசேப்பு எனும் லேவியர் ஒருவர் இருந்தார். இவருக்குத் திருத்தூதர்கள், `ஊக்குவிக்கும் பண்பு கொண்டவர்' என்று பொருள்படும் பர்னபா என்னும் பெயரைக் கொடுத்திருந்தார்கள். அவர் தமது நிலத்தை விற்று அந்தப் பணத்தைக் கொண்டுவந்து திருத்தூதர்களது காலடியில் வைத்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 93: 1யb. 1உ-2. 5 (பல்லவி: 1ய)

பல்லவி: ஆண்டவர் ஆட்சிசெய்கின்றார்; மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார். அல்லது: அல்லேலூயா.

1யb ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்; ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார். பல்லவி

1உ பூவுலகை அவர் நிலைப்படுத்தினார்; அது அசைவுறாது. 2 உமது அரியணை தொடக்கத்திலிருந்தே நிலைபெற்றுள்ளது; நீர் தொன்றுதொட்டே நிலைத்துள்ளீர். பல்லவி

5 உம்முடைய ஒழுங்குமுறைகள் மிகவும் உறுதியானவை; ஆண்டவரே! என்றென்றும் தூய்மையே உமது இல்லத்தை அழகு செய்யும். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 3: 15

அல்லேலூயா, அல்லேலூயா! மானிடமகனில் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறும்பொருட்டு அவர் உயர்த்தப்பட வேண்டும். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

 விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர, வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 7-15

அக்காலத்தில் இயேசு நிக்கதேமிடம் கூறியது: ``நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உமக்குக் கூறியது பற்றி நீர் வியப்படைய வேண்டாம். காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக் கேட்கிறது. ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்றும் எங்குச் செல்கிறது என்றும் உமக்குத் தெரியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்'' என்றார்.

நிக்கதேம் அவரைப் பார்த்து, ``இது எப்படி நிகழ முடியும்?'' என்று கேட்டார்.

அதற்கு இயேசு கூறியது: ``நீர் இஸ்ரயேல் மக்களிடையே போதகராய் இருந்தும் உமக்கு இது தெரியவில்லையே! எங்களுக்குத் தெரிந்ததைப்பற்றியே பேசுகிறோம்; நாங்கள் கண்டதைப்பற்றியே சான்று பகர்கிறோம். எனினும் எங்கள் சான்றை நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லை என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்.

மண்ணுலகு சார்ந்தவை பற்றி நான் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் நம்பவில்லை என்றால் விண்ணுலகு சார்ந்தவை பற்றிச் சொல்லும்போது எப்படி நம்பப்போகிறீர்கள்? விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை. பாலை நிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டதுபோல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை

ஆதிக் கிறிஸ்தவர்களின் வாழ்க்கை முறை அற்புதமான இலக்கணம். கடைபிடிக்கப்பட்டால் இந்த வாழ்வு முறை ஒரு புதிய புரட்சியையே ஏற்படுத்தும். புதிய சகாப்தத்தை தோற்றுவிக்கும்.

வாழ்வின் யதார்த்தத்தில் இது தோற்றுப் போன ஒன்றாகவே உள்ளது. மனிதர்களின் பரந்த இதயம், கடினப்பட்டுப் போனதாலும், பொதுநலப் போக்கு, சுயநலமாக மாறிப் போனதாலும், மனிதர்களால் இது தோற்றுப் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

08 April 2013

கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழா
முதல் வாசகம்
 இதோகருவுற்றிருக்கும் அந்த கன்னிப் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 7: 10-14; 8: 10b
அந்நாள்களில் ஆண்டவர் ஆகாசுக்கு மீண்டும் தம் திருவாக்கை அருளிச் சொல்லியது: ``உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு ஓர் அடையாளத்தை அருளுமாறு கேளும்அது கீழே பாதாளத்திலோமேலே வானத்திலோ தோன்றுமாறு கேட்டுக்கொள்ளும்'' என்றார்.
அதற்கு ஆகாசு, ``நான் கேட்க மாட்டேன். ஆண்டவரைச் சோதிக்க மாட்டேன்'' என்றார். அதற்கு எசாயா: ``தாவீதின் குடும்பத்தாரே! நான் சொல்வதைக் கேளுங்கள்மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதோஎன் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களோ?
ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோகருவுற்றிருக்கும் அந்த கன்னிப் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்அக்குழந்தைக்கு அவர் `இம்மானுவேல்என்று பெயரிடுவார். ஏனெனில் கடவுள் எங்களோடு இருக்கிறார்'' என்று கூறினார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
 திபா 40: 6-7ய. 7b-8. 9. 10 (பல்லவி: 7,8ய காண்க)
பல்லவி: இறைவாஇதோ உம் திருவுளம் நிறைவேற்ற நான் வருகின்றேன்.
பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லைஎரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லைஆனால்என் செவிகள் திறக்கும்படி செய்தீர். 7ய எனவே, `இதோ வருகின்றேன்.பல்லவி 7b என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது; 8 என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது என்றேன் நான். பல்லவி
என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை;ஆண்டவரே! நீர் இதை அறிவீர். பல்லவி
10 உமது நீதியை நான் என் உள்ளத்தின் ஆழத்தில் மறைத்து வைக்கவில்லைஉம் வாக்குப்பிறழாமையைப் பற்றியும் நீர் அருளும் மீட்பைப் பற்றியும் கூறியிருக்கின்றேன்உம் பேரன்பையும் உண்மையையும் மாபெரும் சபைக்கு நான் ஒளிக்கவில்லை. பல்லவி

இரண்டாம் வாசகம்
 என் கடவுளேஉமது திருவுளத்தை நிறைவேற்றஇதோ வருகின்றேன்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 4-10
சகோதரர் சகோதரிகளேகாளைகள்வெள்ளாட்டுக் கிடாய்கள் இவற்றின் இரத்தம் பாவங்களைப் போக்க முடியாது. அதனால்தான் கிறிஸ்து உலகிற்கு வந்தபோது, ``பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லைஆனால் ஓர் உடலை எனக்கு அமைத்துத் தந்தீர். எரிபலிகளும் பாவம் போக்கும் பலிகளும் உமக்கு உகந்தவையல்ல.
எனவே நான் கூறியது: என் கடவுளேஉமது திருவுளத்தை நிறைவேற்ற, `இதோ வருகின்றேன்.என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது'' என்கிறார். திருச்சட்டப்படி செலுத்தப்பட்ட போதிலும், ``நீர் பலிகளையும் காணிக்கைகளையும் எரிபலிகளையும் பாவம்போக்கும் பலிகளையும் விரும்பவில்லைஇவை உமக்கு உகந்தவையல்ல'' என்று அவர் முதலில் கூறுகிறார்.
பின்னர் ``உமது திருவுளத்தை நிறைவேற்றஇதோ வருகின்றேன்'' என்கிறார். பின்னையதை நிலைக்கச் செய்ய முன்னையதை நீக்கி விடுகிறார். இந்தத் திருவுளத்தால்தான் இயேசு கிறிஸ்து ஒரே ஒரு முறை தம் உடலைப் பலியாகச் செலுத்தியதன் மூலம் நாம் தூயவராக்கப்பட்டிருக்கிறோம்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 1: 14b
அல்லேலூயாஅல்லேலூயா! வாக்கு மனிதர் ஆனார்நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்
 இதோகருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்.
+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38
ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, ``அருள் நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்'' என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கிஇந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.
வானதூதர் அவரைப் பார்த்து, ``மரியாஅஞ்சவேண்டாம்கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோகருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்.
அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின்மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது'' என்றார். அதற்கு மரியா வானதூதரிடம், ``இது எப்படி நிகழும்நான் கன்னி ஆயிற்றே!'' என்றார்.
வானதூதர் அவரிடம், ``தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில்கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை'' என்றார். பின்னர் மரியா, ``நான் ஆண்டவரின் அடிமைஉம் சொற்படியே எனக்கு நிகழட்டும்'' என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை
யாருடைய சித்தம் நிறைவேற்ற உள்ளோம்.
நம்முடைய விருப்பு வெறுப்புக்கு ஆளாகி நாம் நம்முடைய தேவைகளை நிறைவு செய்து மண்ணுலக மாந்தர்களைப் போல வாழ்ந்து வருவேமானால்நாம் நம்முடைய பாவத்திலேயே மடிந்து போவோம் என்பது தான் உண்மை.
அவருடைய சித்தம் நிறைவேற்றவே நாம் படைக்கப்பட்டு உள்ளோம். தேர்வு செய்யப்பட்டு இருக்கிறோம்.
அன்னை மரியாள் நமக்கு இதனைத் தான் உணர்த்தி நிற்கின்றார்கள்.
தன் வாழ்வில் இதனை தெளிவுற அறிவுறுத்தினார்கள். உம் திருவுளம் நிறைவேற்ற இதோ வருகின்றேன் என்று சொல்லிஇறுதி வரை சென்று மகனையே பலியாக்கி கொடுக்கின்றார்கள்.
இறுதி வரை நின்று மீட்பை தேடிக் கொள்வோம்.

05 April 2013


பாஸ்கா - 2ஆம் வாரம்

ஞாயிறு

மூன்றாம் ஆண்டு

முதல் வாசகம்

 ஆண்டவரில் நம்பிக்கைக் கொண்டவரின் கூட்டம் வளர்ந்துள்ளது.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 12-16

அந்நாள்களில் மக்களிடையே பல அரும் அடையாளங்களும் அருஞ்செயல்களும் திருத்தூதர் வழியாய்ச் செய்யப்பட்டன. அனைவரும் சாலமோன் மண்டபத்தில் ஒருமனத்தவராய்க் கூடிவந்தனர். மற்றவர் யாரும் இவர்களோடு சேர்ந்துகொள்ளத் துணியவில்லை.

ஆயினும் மக்கள் இவர்களைப் பற்றிப் பெருமையாகப் பேசினர். ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட திரளான ஆண்களும் பெண்களும் இவர்களோடு சேர்க்கப்பட்டார்கள்.

பேதுரு நடந்து செல்லும்போது அவர் நிழல் சிலர் மேலாவது படுமாறு மக்கள் உடல் நலமற்றோரைக் கட்டில்களிலும் படுக்கைகளிலும் கிடத்திச் சுமந்துகொண்டுவந்து வீதிகளில் வைத்தார்கள்; எருசலேமைச் சுற்றியிருந்த நகரங்களிலிருந்து மக்கள் உடல் நலமற்றோரையும் தீய ஆவிகளால் இன்னலுற்றோரையும் சுமந்து கொண்டு திரளாகக் கூடிவந்தார்கள். அவர்கள் அனைவரும் நலம் பெற்றனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 118: 2-4. 22-24. 25-27ய (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!

2 `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! 3 `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக! 4 `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக. பல்லவி

22 கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! 23 ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! 24 ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். பல்லவி

25 ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றி தாரும்! 26 ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம். 27ய ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார். பல்லவி



இரண்டாம் வாசகம்

 சாவுக்கு உட்பட்டேனாயினும், இதோ நான் என்றென்றும் வாழ்கிறேன்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 1: 9-11ய, 12-13, 17-19

உங்கள் சகோதரனும், இயேசுவோடு இணைந்த நிலையில் உங்கள் வேதனையிலும் ஆட்சியுரிமையிலும் மனவுறுதியிலும் பங்கு கொள்பவனுமான யோவான் என்னும் நான் கடவுளின் வாக்கை அறிவித்து இயேசுவுக்குச் சான்று பகர்ந்ததால் பத்மு தீவுக்கு வர நேர்ந்தது.

ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று தூய ஆவி என்னை ஆட்கொள்ளவே எனக்குப் பின்னால் பெரும் குரல் ஒன்று எக்காளம் போல முழங்கக் கேட்டேன். ``நீ காண்பதை ஒரு சுருளேட்டில் எழுதி ஏழு இடங்களிலும் உள்ள திருச்சபைகளுக்கு அதை அனுப்பி வை'' என்று அக்குரல் கூறியது. என்னோடு பேசியவர் யார் என்று பார்க்கத் திரும்பினேன்.

அப்பொழுது ஏழு பொன் விளக்குத் தண்டுகளைக் கண்டேன். அவற்றின் நடுவே மானிடமகனைப் போன்ற ஒருவரைப் பார்த்தேன். அவர் நீண்ட அங்கியும் மார்பில் பொன் பட்டையும் அணிந்திருந்தார். நான் அவரைக் கண்டபொழுது செத்தவனைப்போல் அவரது காலில் விழுந்தேன்.

அவர் தமது வலக் கையை என் மீது வைத்துச் சொன்னது: ``அஞ்சாதே! முதலும் முடிவும் நானே. வாழ்பவரும் நானே. இறந்தேன்; ஆயினும் இதோ என்றென்றும் வாழ்கின்றேன். சாவின் மீதும் பாதாளத்தின் மீதும் எனக்கு அதிகாரம் உண்டு. எனவே நீ காண்பவற்றை, அதாவது இப்பொழுது நிகழ்கின்றவற்றையும் இனி நிகழ இருப்பவற்றையும் எழுதிவை.''

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 20: 29

அல்லேலூயா, அல்லேலூயா! ``தோமா, என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்,'' என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

 எட்டு நாள்களுக்குப் பின் இயேசு சீடர்களுக்குத் தோன்றினார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 19-31

அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள்.

அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ``உங்களுக்கு அமைதி உரித்தாகுக!'' என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லியபின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.

இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ``உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்'' என்றார். இதைச் சொன்னபின் அவர் அவர்கள்மேல் ஊதி, ``தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா'' என்றார்.

பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. மற்றச் சீடர்கள் அவரிடம், ``ஆண்டவரைக் கண்டோம்'' என்றார்கள்.

தோமா அவர்களிடம், ``அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்'' என்றார். எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள்.

அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, ``உங்களுக்கு அமைதி உரித்தாகுக!'' என்று வாழ்த்தினார்.

பின்னர் அவர் தோமாவிடம், ``இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்'' என்றார். தோமா அவரைப் பார்த்து, ``நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!'' என்றார்.

இயேசு அவரிடம், ``நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்'' என்றார். வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை.

இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



2013 Apr 7 SUN: SECOND SUNDAY OF EASTER

Acts 5: 12-16/ Ps 118: 2-4. 13-15. 22-24/ Rv 1: 9-11a. 12-13. 17-19/ Jn 20: 19-31

‘என் ஆண்டவரே, என் தேவனே’ என்று துணிவுடன் அறிக்கையிட்டார் திருத்தூதர் தோமா. உயிர்த்த ஆண்டவரை சந்தித்த சீடர்கள் விசுவாசத்தில் உறுதிபெற்றனர். இயேசுவின் பெயரால் அருஞ்செய்லகளும், புதுமைகள் பல செய்யவும் ஆற்றல் பெற்றனர். உயிர்த்த இயேசுவை நம் ஊனக்கண்களால் காணாவிட்டாலும் நம்புவோம். பேறுபெற்றவர்களாவோம். புனித தோமாவின் விசுவாச அறிக்கைநம் ஒவ்வொருவரின் விசுவாச வாழ்வுக்கு முன்னோட்டமாகட்டும். உயிர்த்த ஆண்டவரின் மகிழ்ச்சி நமதாகட்டும். யானையின் பலம் தும்பிக்கையில் மனிதரின் பலமோ நம்பிக்கையில் என்பது அனுபவமாகட்டும்.



முன்னுரை:

            பாஸ்கா கால இரண்டாம் வாரத்திற்கு வந்துள்ளோம். இறைஇரக்க ஞாயிறு என்றும் இன்று அழைக்கப்படுகின்றது. பேதுருவின் நிழல் பட்டாலேயே குணம் பெற்றார்கள் என்று லூக்கா பதிவு செய்துள்ளார்.

அதே வேளையில் தோமாவின் விருப்பத்தை புரிந்து இரக்கத்துடனே அவரிடம் காயங்களை காட்டி நம்ப அழைக்கின்றார். துன்பங்கள் துயரங்கள் வழி நம்முடைய நம்பிக்கையை உறதிப்படுத்திட முடியும் என்பதனை உணர்த்துகின்றார்.

குணம் பெற விரும்பியும், வாழ்விலே நாம் படும் துயரங்கள் நம்மை நம்பிக்கையிலே வளர்த்திட விழையும் என்று நம்பியும் பலியிலே பங்கேற்று பயன்பெறுவோம்.

மன்றாட்டுக்கள்:

            திருச்சபையின் பொறுப்பாளர்கள் தங்களை பக்குவப்படுத்தி, தங்களது பணியினால் குணம் கொடுக்கின்ற அன்பர்களாக உருவெடுக்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

            நாட்டின் நலனிலே உண்மை அக்கரை கொண்டு பணி செய்யும் அன்பர்களுக்கு, நீரே பாதுகாப்பாக இருந்து அவர்கள் முன்னெடுக்கும் காரியங்களால் நாட்டின் வளமை பாதுகாக்கப்பட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

            வாழ்விலே சந்திக்கின்ற துன்பதுயரங்களை நம்பிக்கையின் வித்துக்களாக கொண்டு நம்பிக்கையில் நாளும் வளர்ந்திட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

            போருக்கான அபாயச்சூழல் தணிந்து, பேச்சு வார்த்தைகளின் வழியாக அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்பட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

            வெப்பமிகுதியால் பரவும் தொற்று நோய்களில் இருந்து எம்மை காப்பாற்ற, நல்ல மழையை தந்து எம்மை காக்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.