புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

07 June 2013

தூய ஆவி விழாவுக்குப் பின்வரும் 2ஆம் ஞாயிறை அடுத்த சனி

 

தூய கன்னி மரியாவின் மாசற்ற இதயம்



இன்றைய நற்செய்தி வாசகம்

இந்த நினைவுக்கு உரியது. தூய கன்னி மரியா - பொது (பக்கம் 527).



முதல் வாசகம்

ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 61: 9-11

எருசலேமின் வழிமரபினர் பிற இனத்தாரிடையேயும், அவர்கள் வழித் தோன்றல்கள் மக்களினங்கள் நடுவிலும் புகழ் அடைவார்கள்; அவர்களைக் காண்பவர் யாவரும் அவர்களை ஆண்டவரின் ஆசிபெற்ற வழிமரபினர் என ஏற்றுக்கொள்வார்கள். ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்; என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்; மலர் மாலை அணிந்த மணமகன் போலும், நகைகளால் அழகுபடுத்தப்பட்ட மணமகள் போலும், விடுதலை என்னும் உடைகளை அவர் எனக்கு உடுத்தினார்; நேர்மை என்னும் ஆடையை எனக்கு அணிவித்தார். நிலம் முளைகளைத் துளிர்க்கச் செய்வது போன்றும், தோட்டம் விதைகளை முளைக்கச் செய்வது போன்றும் ஆண்டவராகிய என் தலைவர் பிற இனத்தார் பார்வையில் நேர்மையும் புகழ்ச்சியும் துளிர்த்தெழச் செய்வார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல் 

1 சாமு 2: 1. 4-5. 6-7. 8 (பல்லவி: 1ய)

பல்லவி: ஆண்டவரை முன்னிட்டு என் இதயம் மகிழ்கின்றது!

1 ஆண்டவரை முன்னிட்டு என் இதயம் மகிழ்கின்றது! ஆண்டவரில் என் ஆற்றல் உயர்கின்றது! என் வாய் என் எதிரிகளைப் பழிக்கின்றது! ஏனெனில் நான் நீர் அளிக்கும் மீட்பில் களிப்படைகிறேன். பல்லவி

4 வலியோரின் வில்கள் உடைபடுகின்றன! தடுமாறினோர் வலிமை பெறுகின்றனர்! 5 நிறைவுடன் வாழ்ந்தோர் கூலிக்கு உணவு பெறுகின்றனர்; பசியுடன் இருந்தோர் பசி தீர்ந்தார் ஆகியுள்ளனர்! மலடி எழுவரைப் பெற்றெடுத்துள்ளாள், பல புதல்வரைப் பெற்றவளோ தனியள் ஆகின்றாள்! பல்லவி

6 ஆண்டவர் கொல்கிறார்; உயிரும் தருகின்றார்; பாதாளத்தில் தள்ளுகிறார்; உயர்த்துகின்றார்; 7 ஆண்டவர் ஏழையாக்குகின்றார்; செல்வராக்குகின்றார்; தாழ்த்துகின்றார்; மேன்மைப்படுத்துகின்றார். பல்லவி

8 புழுதியினின்று அவர் ஏழைகளை உயர்த்துகின்றார்! குப்பையினின்று வறியவரைத் தூக்கிவிடுகின்றார்! உயர் குடியினரோடு அவர்களை அமர்த்துகின்றார்! மாண்புறு அரியணையை அவர்களுக்கு உரிமையாக்குகின்றார்! பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

லூக் 2: 19 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவனின் வார்த்தையைத் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்து வந்த மரியா பேறுபெற்றவர். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

இந்நிகழ்ச்சிகளை எல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்.

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 41-51

ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்; இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர். விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது; பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர். ஒரு நாள் பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர் களிடையேயும் அவரைத் தேடினர்; அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.

மூன்று நாள்களுக்குப் பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டும் இருந்தார். அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்துகொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர். அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்.

அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, ``மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே'' என்றார். அவர் அவர்களிடம், ``நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?'' என்றார்.

அவர் சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளை எல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

No comments:

Post a Comment