பிப்ரவரி - 13
இயேசு தம் தாயையும், அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம். "அம்மா, இவரே உம் மகன் "என்றார் (யோவா 19:26)
1522, ஏப்ரல் 23 அன்று இத்தாலி நாட்டில், பிளாரன்ஸ் நகர் அருகில் ரொமோலா என்னும் இடத்தில் பிறந்தவர் கேத்தரின் தே ரிச்சி . இவருடைய பெற்றோர்கள் பியர் பிரான்செஸ்கொ தே ரிச்சி மற்றும் கேத்தரின் ஆவர். இவருக்கு இவரின் பெற்றோர் அலெக்ஸான்ட்ரா லக்ரசியா என்று பெயர் வைத்தார்கள் .நடக்க ஆரம்பிக்கும் முன்பே தாய் இறந்தார் .எனவே ஃபியமெத்தா தே டைய செட்டோ என்ற வளர்ப்புத்தாய் இவரை வளர்த்தெடுத்தார்.
சிறுவயது முதலே செபம் செய்வதில் அதிக விருப்பம் கொண்டிருந்த அலெக்ஸான்ட்ரா தெய்வக் குழந்தை போலவே வாழ்ந்தார் . இதை அறிந்த வளர்ப்புத்தாய் இன்னும் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு அலெக்ஸான்ட்ராவை வளர்த்தார்.
அலெக்ஸான்ட்ராவிற்கு 13 வயது நடந்த போது, வீட்டிற்கு அருகில் இருந்த மடத்தில் இவருடைய தந்தை இவரைக் கொண்டு போய் விட்டார் .அந்த மடத்தில் அலெக்ஸான்ட்ராவின் அத்தை அருள் சகோதரியாக இருந்தார். மடத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த போது, இறைவன் தன்னை மேலான பணிக்கு முன் குறித்துள்ளார் என்பதை அறிந்து 14ஆம் வயதில் புனித வின்சென்டின் சாமிநாதர் மடத்தில் சேர்ந்தார்.
1536 இல் வார்த்தைப்பாடு கொடுத்தபோது கேத்தரின் என்ற தம்முடைய தாயின் பெயரைத் தமது பெயராக எடுத்துக் கொண்டார் .
இதன் பிறகு நான்கைந்து ஆண்டுகள் கேலிப் பேச்சுக் களாலும் ,துன்புறுத்துதல்களாலும் அதிகம் அவதிப்பட்டார். ஏனென்றால் காட்சி வழியாக இருப்பிரசன்னம் உணர்ந்து இவர் ,யாராலும் எளிதில் புரிந்துகொள்ள முடியாத வரங்களுடன் விளங்கினார் .இவரின் வழிகாட்டுதல்கள் தேடி அரசர்கள் ,ஆயர்கள் , கர்தினால்கள் , பொதுநிலையினர் பலர் வர ஆரம்பித்தார்கள் . அவர்களை ,"தமது ஆன்மீகக் குழந்தைகள் " என்று அன்பொழுக அழைத்து மகிழ்ந்தார். கடிதங்கள் வாயிலாகவும் அவர்களின் ஆன்ம வழிகாட்டியாக விளங்கினார்.
கேத்தரின் 1542 ,பிப்ரவரி மாதம் இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளைத் தன்னிலை மறந்த ஆனந்த வெளியில் கண்டு களித்தார். இந்திகழ்வு ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை பிற்பகல் நான்கு மணி முதல் வெள்ளிக்கிழமை பிற்பகல் அதே நேரம் வரை இருந்தது .இயேசுவின் பாடுகள் வழியாக அவரின் பாடுகளைத் தாமும் அனுபவித்து இயேசுவிற்கு ஆறுதல் சொன்னார் கேத்தரின்.
இந்நிகழ்வைப் பார்க்க ஒவ்வொரு வாரமும் கூட்டம் அலை மோதியதால் உடனிருந்து மற்ற அருள்சகோதரிகளால் மீண்டும் வேதனைக்குள்ளானார். கடைசியில் இந்நிகழ்வை நிறுத்திடுமாறு இறைவனிடம் கேத்தரின் வேண்டினார் .அதன்படி தொடர்ந்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆனந்து வெள்ளி அனுபவம் நின்றது.
இந்தக்கால இடைவெளியில், நவ துறவிகளுக்குப் பயிற்றுனராக ,சபையின் துணைத்தலைவராக இருந்து பிறகு 25 வயதிலேயே சபையின் தலைவியாகவும் நியமிக்கப்பட்டார் .தமது சிறப்பான ஆளுமைத் திறத்தால் சபையைப் பாநங்குற வழிநடத்தினார். இவர் வாழ்ந்த காலத்தில் பல முக்கியப் புனிதர்கள் வாழ்ந்தனர் .அவர்களுள் பிலிப்பு நேரி மற்றும் மக்தலன் இவரிடமும் நேரில் இல்லாமலேயே காட்சி வழியாக முகமுகமாய் பேசி ஆன்மீக அருளைப் பகிர்ந்தார்.
உத்தத்தரிக்கிற நிலையில் இருக்கிற ஆன்மாக்கள் ஈடேற்றம் பெறவும், இறைவனை அடையவும், தொடர்ந்து ஒறுத்தல் முயற்சிகள் செய்ததுடன் கழுத்தில் இரும்புச் சங்கிலியும் அணிந்து செபித்தார்.
கேத்தரின் நோயுற்று 1590, பிப்ரவரி முதல் தேதி இறந்தார் . திருத்தந்தை 12ஆம் கிளமண்ட் 1732 இல் அருளாளராக அறிவித்தார் .திருத்தந்தை 14 ஆம் ஆசிர்வாதப்பர் 1746 ஆம் ஆண்டு இவரை புனித நிலைக்கு உயர்த்தினார்
குழந்தைகளின் உண்மையான எதிர்நோக்குகளை உணர்ந்து அதனை மெருகூட்ட வளர்ப்புப் பெற்றோர் உழைக்கும்போது இறைவன் வரைந்த ஓவியமாக குழந்தைகள் மிளிர்வார்கள்.
No comments:
Post a Comment