புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

28 May 2020

மார்கரெட் போல் (1473-1541) May 28

மே 28 

மார்கரெட் போல் (1473-1541)
இவர் இங்கிலாந்தில் பிறந்தவர். இவர் இங்கிலாந்தை ஆண்டுவந்த நான்காம் எட்வர்ட் என்பவருக்கு நெருங்கிய சொந்தம்.

இவர் ரெஜினால்ட் போல் என்பவரை மணந்தார். இறைவன் இவர்களுக்கு ஐந்து குழந்தைகளைக் கொடுத்து ஆசி வழங்கினார். இப்படி இவர்களுடைய இல்லற வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த  வேளையில், இவரது கணவர் திடீரென இறந்து போனார். இதனால் இவர் கைம்பெண் ஆனார்.

தன் கணவருடைய இறப்பிற்குப் பிறகு இவர்  தன்னுடைய குழந்தைகளை இறை நம்பிக்கையிலும் பிறர் அன்பிலும் சிறந்த விதமாய் வளர்த்து வந்தார். இதற்கு பின்பு இவர் சாலிபரி என்ற இடத்தில் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இவ்வேளையில் இங்கிலாந்தை ஆண்டு வந்த எட்டாம் ஹென்றி என்ற மன்னர் தன்னுடைய மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணந்தார். இத்தவற்றை மார்கரெட் போல் சுட்டிக் காட்டியதால், மன்னர் இவரைக் கைது செய்து இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தார். 

பின்னர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட இவர், மன்னரால் தலை வெட்டிக் கொல்லப்பட்டார். இவருக்கு திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ 1886 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுத்தார்.

.

மான்ட்ஜூக்ஸ் நகர புனிதர் பெர்னார்ட் May 28

† இன்றைய புனிதர் †
(மே 28)

✠ மான்ட்ஜூக்ஸ் நகர புனிதர் பெர்னார்ட் ✠
(St. Bernard of Montjoux)
இத்தாலிய துறவி, மறைப்பணியாளர், புகழ்பெற்ற (Hospice) எனப்படும் நல்வாழ்வு சேவை மையம் மற்றும் மடத்தின் நிறுவனர்:
(Italian monk, Religious, and the Founder of the famed Hospice and Monastery)

பிறப்பு: கி.பி 1020
சேட்டோ டி மெந்தன், சவோய் கவுண்டி, ஆர்லஸ் இராச்சியம்
(Château de Menthon, County of Savoy, Kingdom of Arles)

இறப்பு: ஜூன் 1081
நோவாரா இம்பீரியல் சுதந்திர நகரம், தூய ரோமானியப் பேரரசு
(The Imperial Free City of Novara, Holy Roman Empire)

ஏற்கும் சமயம்:
கத்தோலிக்க திருச்சபை (Catholic Church)
(புனித அகஸ்டினின் சபை உறுப்பினர்கள்) (Canons Regular of St. Augustine)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

புனிதர் பட்டம்: கி.பி 1681
திருத்தந்தை பதினோராம் இன்னசென்ட்
(Pope Innocent XI)

நினைவுத் திருநாள்: மே 28

பாதுகாவல்:
மலையேறுபவர்கள், பனிச்சறுக்கு, பனிச்சறுக்குப் பலகை, மலையேறுபவர்கள் பின்னால் சுமக்கும் சுமை மற்றும் ஆல்ப்ஸ் மலை

மான்ட்ஜூக்ஸ் நகர புனிதர் பெர்னார்ட், ஒரு இத்தாலிய துறவியும், மறைப்பணியாளருமாவார். இவர், (Hospice) எனப்படும் புகழ்பெற்ற நல்வாழ்வு மையம் மற்றும் துறவு மடத்தின் நிறுவனரும் ஆவார். இது, கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டு காலமாக, மேற்கு ஆல்ப்ஸ் மலைத்தொடரின் மிகவும் ஆபத்தான பகுதிகளில் அடைக்கலமாகும் மலையேறும் பயணிகளை மீட்கும் பணி சேவை செய்திருக்கிறது. இவர்களது மீட்புப் பணி முழுதுமே, இவர்களது சபையினராலேயே செய்யப்பட்டு வந்துள்ளது. குளிர்கால புயல்களின் போது மீட்புப் பணிக்காக இவர் வளர்த்துவந்த புகழ்பெற்ற ஒருவகை இன நாய்கள், இவற்றின் சிறப்புக்காகவே, இவரது பெயராலேயே - "புனித பெர்னார்ட் நாய்கள்" (St. Bernard dogs) என்று அழைக்கப்படுகின்றன.

அக்கால "ஆர்லெஸ்" (Kingdom of Arles) இராச்சியத்தின் ஒரு பகுதியான "கௌன்டி சவோய்" (County of Savoy) எனப்படும் தூய ரோம மாநிலத்தின் "சேட்டோ டி மெந்தன்" (Château de Menthon) எனும் நகரில் பிறந்த பெர்னார்ட், ஒரு பணக்கார மற்றும் உன்னத குடும்பத்திலிருந்து வந்தவர் ஆவார். பாரிஸ் (Paris) நகரில் தமது முழுமையான கல்வியைப் பெற்றார். அவர் இளமைப் பருவத்தை அடைந்ததும், திருச்சபையின் சேவைக்காக தன்னை அர்ப்பணிக்க முடிவுசெய்தார். தனது தந்தை ஏற்பாடு செய்த கெளரவமான திருமணத்தை மறுத்துவிட்டார்.
(பிரபலமான புராணக்கதை ஓன்று, இவருக்கு ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்திற்கு முந்தைய இரவில் அவர் கோட்டையிலிருந்து வெளியேறினார் என்றும், ஜன்னலிலிருந்து தன்னைத் தூக்கி எறிந்து, தரையிலிருந்து சுமார் 40 அடி உயரத்தில் கோட்டையிலிருந்து பறக்கும்போது, தேவதூதர்களால் பிடிக்கப்பட்டு மெதுவாக, பாதுகாப்பாக இறக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இத்தாலிய ஆல்ப்ஸ் மலைகளில் (Italian Alps) உள்ள இருமொழிப் பகுதியான "ஆஸ்டா பள்ளத்தாக்கின்" (Aosta Valley) "ஆஸ்டா" (Aosta) நகரின் தலைமை திருத்தொண்டரான (Archdeacon of Aosta) "பீட்டரின்" (Peter) வழிகாட்டுதலின் கீழ் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அவருடைய வழிகாட்டுதலின் கீழ் அவர் வேகமாக முன்னேறினார். ஒரு குருவாக அருட்பொழிவு செய்யப்பட்ட பெர்னார்ட், மலை கிராமங்களில் மிஷனரியாக பணியாற்றினார். பின்னர், அவரது கற்றல் மற்றும் நல்லொழுக்கம் காரணமாக, அவர் தனது ஆலய தலைமை திருத்தொண்டராக நியமிக்கப்பட்டார். அவருக்கு நேரடியாக ஆயரின் கீழே, மறைமாவட்டத்தின் அதிகார பொறுப்புகளை வழங்கினர்.

42 ஆண்டுகளாக, அவர் தொடர்ந்து இந்த மக்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்தார். இத்தாலியின் வடமேற்குப் பிராந்தியமான லோம்பார்டியின் பல மண்டலங்களுக்குள் கூட, ஏராளமான மாற்றங்களைச் செய்தார். மற்றும் பல அற்புதங்களையும் செய்தார். புனித பெர்னார்ட்டின் வாழ்க்கையின் கடைசி செயல் இரண்டு பிரபுக்களின் இடையே இருந்த வேற்றுமைகளை அகற்றிச் சமரச நல்லிணக்கமாகும். அவர்களிடையே இருந்த சண்டை ஒரு அபாயகரமான அச்சுறுத்தியதலை விளைவிக்கக் கூடியதாய் இருந்தது.

அவர் கி.பி. 1081ம் ஆண்டு, ஜூன் மாதம், நோவாரா இம்பீரியல் சுதந்திர நகரில் இறந்தார். புனித லாரன்ஸ் மடத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

நியூயார்க் (New York) நகர "சரனாக்" (Saranac Lake) ஏரியில் உள்ள புனித பெர்னார்ட் கத்தோலிக்க தேவாலயம் (Saint Bernard's Catholic Church) அவரது பெயரில் அர்ப்பணிக்கப்பட்டதாகும்.

தூய ஜெர்மானுஸ் (மே 28)

இன்றைய புனிதர் :
(28-05-2020)

தூய ஜெர்மானுஸ் (மே 28)
“இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவார்கள் (மத் 5: 7)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் தூய ஜெர்மானுஸ் பிரான்ஸ் நாட்டில் உள்ள ஆட்டன் என்னும் இடத்தில் 496 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் வளரும்போதே ஞானத்திலும் அறிவிலும் சிறந்து விளங்கி வந்தார்.

இவர் வளர்ந்து இளைஞனாகியபோது குருவாகப் போகவேண்டும் என்ற எண்ணம் கொண்டார். எனவே இவர் துறவுமடத்தில் சேர்ந்து தன்னுடைய முப்பத்தி நான்காம் வயதில் குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார். குருவாக மாறிய பின் இவர் சிம்போரியன்ஸ் என்ற துறவுமடத்தில் தங்கி தூய வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இயல்பிலே இரக்க குணம் கொண்ட ஜெர்மானுஸ் ஏழை எளியோருக்கு வாரி வாரி வழங்கினார். தன்னிடம் கேட்பவருக்கு முகம் கோணாமல் உதவி செய்து வந்தார். சில சமயங்களில் இவருடைய சபையில் இருந்த துறவிகள், எங்கே ஜெர்மானுஸ் துறவுமடத்தை விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிடுவாரோ என்றுகூட பயந்தார்கள். அந்தளவுக்கு இவர் தாரள உள்ளத்தினராய் வாழ்ந்து வந்தார்.

இதற்கிடையில் பாரிசில் இருந்த ஆயர் யூசேரியுஸ் இறந்துவிட, இவர் ஆயராக பதவி உயரும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆயராக உயர்ந்த ஜெர்மானுஸ் மிகச் சிறப்பான முறையில் ஆன்மீகப் பணிகளையும் மக்கள் பணியையும் ஆற்றிவந்தார்.

ஒரு சமயம் பிரான்ஸ் நாட்டு அரசர் கில்டபர்ட் நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையானர். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அனைவரும், அவர் உயிர் பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று சொல்லி, கைநழுவிவிட்டு போய்விட்டனர். விஷயம் அறிந்த ஜெர்மானுஸ் அரசர் முன்பாகச் சென்று, முழந்தாள்படியிட்டு ஜெபிக்கத் தொடங்கினார். ஆச்சரியம் என்னவென்றால், அவர் இவ்வாறு ஜெபிக்கத் தொடங்கிய சில மணிநேரத்திலே அவர் உடல்நலம் தேறி பிழைத்துக்கொண்டார். இதனால் மகிழ்ந்து போன ஜெர்மானுசை தன்னுடைய ஆலோசகராக வைத்துக்கொண்டார். அது மட்டுமல்லாமல் அரசர் ஜெர்மானுசுக்கு வேண்டிய மட்டும் உதவி செய்து வந்தார்.

ஜெர்மானுஸ் பிரான்சில் நடைபெற்ற முதலாம் மற்றும் இரண்டாம் பொது சங்கங்களில் கலந்துகொண்டு, திருச்சபையை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்வதற்கு மிகவே உழைத்தார். அதோடு திருவழிபாட்டில் இருந்த தேவையற்ற சடங்குமுறைகளை எல்லாம் அகற்றி ஒரு வழிக்குக் கொண்டு வந்தார். இப்படி ஏழைகளின் ஏந்தலாய், திருச்சபையின் வளர்ச்சியில் பெரிதும் அக்கறை கொண்டு வாழ்ந்து வந்த ஜெர்மானுஸ் 576 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ஜெர்மானுசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. நன்மை செய்யும் வாழ்க்கை வாழ்தல்

தூய ஜெர்மானுசின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது மேலே சொல்லப்பட்ட தலைப்புதான் நம்முடைய நினைவுக்கு வந்து போகிறது. அவர் எல்லாருக்கும் அதிலும் குறிப்பாக ஏழை எளியவருக்கு நன்மை செய்வதில் மிகவும் கருத்தாய் இருந்தார். இவருடைய நினைவுநாளைக் கொண்டாடும் நாம் நன்மை செய்வதில் கருத்தாய் இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

திருத்தூதர் பணிகள் நூல் 10:38 ல் வாசிக்கின்றோம், “கடவுள் நாசரேத்து இயேசுவோடு இருந்ததால் அவர் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் விடுவித்தது எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார்” என்று. ஆம், இயேசு எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார். அவர் வழியில் நடக்கும் நாம் ஒவ்வொருவரும் நன்மை செய்துகொண்டே செல்வதுதான் சிறப்பாக ஒரு காரியமாகம்.

ஒரு சமயம் பிரான்சில் ஆயராக இருந்த மாசிலோன் (Massilon) என்பவர் இறைமக்களைப் பார்த்து இவ்வாறு குறிப்பிட்டார்: “என்னுடைய மறையுரையைக் கேட்டுவிட்டு, என்ன ஒரு அருமையான மறையுரை, இவர் எவ்வளவு சிறப்பாக போதிக்கின்றார் என்று சொல்வதை விடவும் மறையுரையைக் கேட்ட பின்பு ஏதாவது நல்லது செய்வேன் என்று சொல்வதே சிறப்பானது, அதுவே நான் விரும்புவது”.

ஆம், மறையுரை நன்றாக இருக்கின்றது, குருவானவர் நன்றாக மறையுரை ஆற்றுகிறார் என்று சொல்வதை விடவும் மறையுரையில் சொல்லப்பட்ட கருத்துகளின் வாழ்வேன் என்று சொல்வதே சிறப்பானது.

ஆகவே, தூய ஜெர்மானுசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஏழை எளியவரிடம் உண்மையான அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்வோம், நன்மை செய்வதில் கருத்தாய் இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

இன்றைய புனிதர்

2020-05-28

புனித கெர்மானூஸ் (St.Germanus)

ஆயர் (Bishop)


பிறப்பு
496
அவுடன்(Autun), பிரான்சு

இறப்பு
28 மே 576


தனது இளமைப்பருவத்திலிருந்தே பலவற்றை படித்து தெரிந்துகொள்வதிலும், அவற்றை மக்களுக்காக பயன்படுத்துவதிலும் இவர் தனது நாட்களை கழித்தார். 530 ஆம் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 540 ஆம் ஆண்டு அவுடன் என்ற ஊரில் புனித சிம்போரிஸ் (Symphorian) என்றழைக்கப்பட்ட ஓர் துறவற மடத்தைக் கட்டினார். 550 ல் பாரிஸ் நகரின் ஆயர் இறந்துவிடவே, அரசர் முதலாம் சில்டேபெர்ட் (Childebert I) அவர்களால் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது கெர்மானூஸ், அரசர் குடும்பத்தின் ஆலோசகராக அமர்த்தப்பட்டார். அவர் ஓர் உயர்ந்த அரசரிடம் பணியாற்றியபோதும், ஏழ்மையான வாழ்வை ஒரு போதும், எக்காரணத்தை முன்னிட்டும் கைவிடவில்லை. தன்னுடைய ஒறுத்தல் வாழ்வினால் ஏராளமான ஏழைகளின் கண்ணீரைத் துடைத்தார். தனது அருமையான, எளிமையான மறையுரையால் மக்களை இறைவன்பால் ஈர்த்தார். இவரின் மறையுரையைக் கேட்கவே ஆங்காங்கே இருந்தவர்கள் அனைவரும் கூடி வந்து, பலமணி நேரம் காத்திருந்து, ஆயரின் மறையுரையைக் கேட்டு சென்றார்கள். இவர் வாழும் போதே பாரிஸ் மக்களால் புனிதராக போற்றப்பட்டது. இதனால் போலந்து நாட்டு அரசர் 5 ஆம் யோவான் கஸ்மீர் (Johann Kasmir) அவர்களாலும், மக்களாலும் கெர்மானூஸ் என்று, இவர் பெயராலேயே ஓர் ஆலயம் கட்டினர். இவ்வாலயத்தில் அவர் தனது இறுதிநாட்கள் வரை, வாழ வேண்டுமென்று மக்களால் அன்போடு கேட்டுக் கொள்ளப்பட்ட்டார். அவ்வாலயம் கட்டும்போதே அதன் அருகில், அவருக்கென்று ஓர் தங்கும் அறையையும் கட்டிக்கொடுத்தனர். அதில், அவர் தங்கும் அறையில், தனது தலைவைத்து படுக்குமிடத்தில் "28" என்ற எண்ணை எழுதிவைத்தார். அப்போது அவ்வெண்ணின் அர்த்தம் என்னவென்று யாவராலும் அறியமுடியவில்லை. அவர் இறந்தபோதுதான், அவ்வெண், அவரது இறப்பின் நாள் என்பதை அனைவரும் உணர்ந்தனர். இவ்வாறு இவர் வாழும் போதே தனது இறப்பிற்கான நாளை குறித்து, அதன்படியே இறந்தார்.

இவர் இறக்கும் வரை 6 ஆம் நூற்றாண்டில் தூனிக்கா (Tunika) நாட்டிலிருந்த புனித வின்செண்ட் அவர்களின் நம்பிக்கைக்குரிய மக்களுக்காக இவர் பெரிதும் பாடுபட்டார். அரசன் முதலாம் சில்டேபெர்ட் அவர்களின் உதவியுடன் மிகக் குறைந்த ஆண்டுகளிலேயே ஏராளமான பணிகளை செய்து, பிரான்சு நாட்டு திருச்சபையில் , ஓர் பெரிய தொண்டாற்றும் ஆயராக திகழ்ந்தார்.

இவர் மெய்யியலையும் கரைத்து குடித்தவராக இருந்தார். படித்தவைகளை தன் வாழ்வாக வாழ்ந்தார். இவர் ஓர் "மெய்யியல் அறிஞர்" என்றே மக்களால் அழைக்கப்பட்டார்.


செபம்:

ஏழைகளின் நண்பனே எம் இயேசுவே! செப, தவ முயற்சியினால் புனித கெர்மானூஸ், ஏழை மக்களுக்கு உதவினார். ஆனால் பல சமயங்களில் நாங்கள் ஆடம்பர வாழ்வை வாழ்ந்து, ஏழைகளுக்கு உதவி செய்ய மனம் இல்லாமல் இருந்திருக்கின்றோம். இப்புனிதரின் வழியாக நாங்கள் எங்களின் தவற்றை உணர உதவியிருக்கின்றீர். உமது உதவியினால் ஏழைமக்களை நாங்கள் நண்பர்களாக ஏற்று, உதவி செய்து, வாழ உமதருளை தந்தருளும்.



இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்


காண்டர்பரி பேராயர் லான்பிரான்சு Lanfranc von Canterbury

பிறப்பு:1005, பவியா Pavia, இத்தாலி
இறப்பு:28 மே 1089, காண்டர்பரி, இங்கிலாந்து


ரூத்ஹார்டு Ruthhard

பிறப்பு:11 ஆம் நூற்றாண்டு, பவேரியா
இறப்பு:1150, அவ் Au, பவேரியா


† இன்றைய புனிதர் †
(மே 28)

✠ பாரிஸ் நகர் புனிதர் ஜெர்மாய்ன் ✠
(St. Germain of Paris)

பாரிஸ் மறைமாவட்ட ஆயர்/ ஏழைகளின் தந்தை:
(Bishop of Paris/ Father of the Poor)

பிறப்பு: கி.பி. 496
அவுடன், ஃபிரான்ஸ்
(Autun, France) 

இறப்பு: மே 28, 576
பாரிஸ், ஃபிரான்ஸ்
(Paris, France)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

புனிதர் பட்டம்: கி.பி. 754
திருத்தந்தை இரண்டாம் ஸ்டீஃபன்
(Pope Stephen II)

நினைவுத் திருநாள்: மே 28

புனிதர் ஜெர்மாய்ன், பாரிஸ் மறை மாவட்ட ஆயரும் (Bishop of Paris) "ஏழைகளின் தந்தை" (Father of the Poor) என அறியப்படுபவரும் ஆவார்.

ஃபிரான்ஸ் நாட்டின் "அவுடன்" (Autun) என்ற இடத்தினருகே வசதியுள்ள "கல்லோ-ரோமன்" (Gallo-Roman) இன பெற்றோருக்குப் பிறந்த ஜெர்மாய்ன், "பர்கண்டியிலுள்ள" "அவல்லான்" (Avallon in Burgundy) என்ற இடத்தில் கல்வி கற்றார்.

தமது 35 வயதில் புனிதர் "அக்ரிப்பினா" (Saint Agrippina of Autun) என்பவரால் குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்பட்டார். பின்னர், அருகாமையிலுள்ள "புனிதர் சிம்போரியன்" (Abbey of St. Symphorian) துறவு மடத்தின் மடாதிபதியானார். 

கி.பி. 555ம் ஆண்டு, பாரிஸ் நகரின் ஆயர் "சிபெலியஸ்" (Sibelius, the Bishop of Paris) இறந்துவிடவே, அரசர் "முதலாம் சில்டேபர்ட்" (Childebert I) ஜெர்மாய்னை ஆயராக தேர்ந்தெடுத்து அருட்பொழிவு செய்வித்தார்.

ஆயர் ஜெர்மாய்ன் அவர்களின் ஆலோசனைகளாலும், செல்வாக்கினாலும் அரச குடும்பமே ஒரு சிறப்பான சீர்திருத்த வாழ்க்கை வாழ்ந்தது. அரசவையில் பணியாற்றியபோதும், எளிமையையும், துறவு வாழ்வையும் ஒருபோதும் எக்காரணத்தை முன்னிட்டும் கைவிடவில்லை. தன்னுடைய ஒறுத்தல் வாழ்வினாலும், அருமையான, எளிமையான மறையுரையாலும் மக்களை இறைவன்பால் ஈர்த்தார். இவரது மறையுரையைக் கேட்கவே மக்கள் கூடி வந்து, காத்திருந்தனர்.

566ம் ஆண்டு, "டூர்ஸ்" நகரில் நடந்த கிறிஸ்தவ மாநாட்டில் (Second Council of Tours) பங்குபெற்றார். கி.பி. 557ம் ஆண்டு முதல் கி.பி. 573ம் ஆண்டு வரை பாரிஸ் நகரில் நடந்த மூன்றாம் மற்றும் நான்காம் மாநாடுகளிலும் (Third and Fourth Councils of Paris) கலந்துகொண்டார். "கௌல்" (Gaul) மாநிலத்தில் வழக்கத்திலிருந்த பாகனிய பழக்கங்களை முறித்துக் கொள்ளும்படி அரசனை அவர் தூண்டினார். பெரும்பாலான கிறிஸ்தவ திருவிழாக்களுடன் பாகன் கொண்டாட்டங்களைச் சேர்த்துக் கொள்ளும் அதிகாரம் தடைசெய்யப்பட்டது.

ஆயர் ஜெர்மாய்ன் கி.பி. 576ம் ஆண்டு, பாரிஸ் நகரில் மரித்தார்.

27 May 2020

காண்டர்பரி நகர் புனிதர் அகஸ்டின் May 27

† இன்றைய புனிதர் †
(மே 27)

✠ காண்டர்பரி நகர் புனிதர் அகஸ்டின் ✠
(St. Augustine of Canterbury)

காண்டர்பரி பேராயர்:
(Archbishop of Canterbury)
பிறப்பு: ஆறாம் நூற்றாண்டு
இத்தாலி (Italy)

இறப்பு: மே 26, 604
காண்டர்பரி, கென்ட், இங்கிலாந்து 
(Canterbury, Kent, England)

ஏற்கும் சமயம்: 
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் திருச்சபை
(Anglican Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

நினைவுத் திருநாள்: மே 27

புனிதர் அகஸ்டின் ஒரு “பெனடிக்டைன்” சபைத் (Benedictine monk) துறவி ஆவார். இவர், கி.பி. 597ம் ஆண்டு, காண்டர்பரி உயர்மறை மாவட்டத்தின் முதல் பேராயர் (Archbishop of Canterbury) ஆனார். இவர் ஆங்கிலேயர்களின் அப்போஸ்தலர் (Apostle to the English) என்றும், ஆங்கிலத் திருச்சபையை தோற்றுவித்தவர் (Founder of the English Church) என்றும் கருதப்படுகின்றார்.

அகஸ்டின் இங்கிலாந்து நாட்டின் பாதுகாவலர் ஆவார். 596ம் ஆண்டு, ரோம் நகரின் துறவு மடத்திலிருந்து, இவரது தலைமையில் திருத்தந்தை பெரிய கிரகோரியார் (Pope Gregory the Great) 40 துறவிகளை இங்கிலாந்து நாட்டின் "ஆங்கிலோ-சாக்ஸன்" (Anglo-Saxons) பிரஜைகளை கிறிஸ்தவத்திற்கு மனம் மாற்றுவதற்காக மறைபரப்பு பணிக்காக அனுப்பிவைத்தார்.

மிகவும் கடினமாகப் பயணித்து "கௌல்" (Gaul) சென்றடைந்த அவர்கள், "ஆங்கிலோ-சாக்ஸன்" (Anglo-Saxons) மக்களின் முரட்டுத்தனம் பற்றிய கதைகள் அவர்களை பயமுறுத்தின. "ஆங்கிலேய கால்வாயை" (English Channel) தாண்டிச் செல்வதும் அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. திருத்தந்தையின் அறிவுறுத்தல்களை அறிந்துகொள்வதற்காக, அகஸ்டின் ரோம் நகருக்கு திரும்பிச் சென்றார். தங்களுக்கு மறைபோதக பணியை ஆற்றுவதற்கு 'சாக்சென்' மொழி தெரியாதென்பதையும் சுட்டிக்காட்டினர். இதனால் இங்கிலாந்தில் மறைபரப்பு பணி செய்ய வேண்டாமென்றும் தெளிவுப்படுத்தி சொன்னார்கள்.

வதந்திகளையும் பயமுறுத்தல்களையும் கண்டு அஞ்சவேண்டாம் என அறிவுறுத்திய திருத்தந்தை, இறைவனில் முழு நம்பிக்கைகொள்ளுமாறும், தியாகங்கள் செய்யுமாறும், என்ன நடந்தாலும் அவற்றை இறைவன் கொடுத்த கொடை என்று ஏற்றுக் கொள்ளுமாறும் அறிவுரை கூறி அனுப்பினார். திருத்தந்தை கொடுத்த அறிவுரையின்படி, அவர்கள் தைரியம் கொண்டு, மறைபோதக பணியை செய்யத் தயாரானார்கள். 

இம்முறை "ஆங்கிலேய கால்வாயை" (English Channel) கடந்த அவர்கள், கென்ட் பிரதேசத்தில் (Territory of Kent) இறங்கினார்கள். கென்ட் (Kent) பிரதேசம், "பாகனிய" (Pagan) மதத்தைச் சேர்ந்த அரசன் "ஈதல்பெர்ட்" (King Ethelbert) என்பவனின் ஆட்சியின் கீழ் இருந்தது. அவனது மனைவி, கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த பெண்ணாவார். அவரது பெயர், "பெர்தா" (Bertha) ஆகும். அவர்களை அன்புடன் வரவேற்ற அரசன் "ஈதல்பெர்ட்" (King Ethelbert) காண்டர்பரி (Canterbury) நகரில் அவர்கள் தங்குவதற்கான வசதிகளையும் செய்து கொடுத்தான்.

ஒரு வருட காலத்திலேயே, (597ம் ஆண்டு) தூய ஆவியின் திருநாளன்று (Pentecost Sunday) அரசன் "ஈதல்பெர்ட்" திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவனாக மெய்மறையில் மனம் மாறினான். அங்கிருந்தோரும், அரசனுடன் இருந்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கிறிஸ்து பிறப்பு விழாவன்று மனம்திரும்பி புதிதாய் திருமுழுக்கு பெற்றனர். 

ஃபிரான்ஸ் (France) நாட்டில் ஆயர் ஒருவருக்கு அருட்பொழிவு செய்வித்துவிட்டு காண்டர்பரி (Canterbury) திரும்பிய அகஸ்டின், 1070ம் ஆண்டு, புதிதாய் தொடங்கப்பட்ட பேராலயத்தின் அருகே, அப்போதைய ஆலயம் ஒன்றையும், துறவு மடம் ஒன்றினையும் கட்டினார்.

மக்களிடையே கிறிஸ்தவ விசுவாசம் அதிசயிக்கத்தக்க வகையில் பரவியது. ஆகவே, "லண்டன் மற்றும் ரோச்செஸ்டர்" (London and Rochester) ஆகிய இடங்களிலும் புதிய மறை மாவட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

அதேபோல, அகஸ்டினின் பணிகள் சில நேரம் மெதுவாக ஊர்ந்தன. அதேபோல, அவர் எப்போதுமே வெற்றியையே சந்திக்கவுமில்லை. ஒரு காலத்தில், ஆங்கிலோ-சாக்சன் படையெடுப்பாளர்களால் மேற்கத்திய இங்கிலாந்து (Western England) நோக்கி விரட்டப்பட்ட அசல் பிரிட்டன் கிறிஸ்தவர்கள் (Original Briton Christians) ஆகிய இரு பிரிவினரையும் சமாதானப்படுத்த முயன்ற இவரது பிரயத்தனங்கள் மோசமான தோல்வியைச் சந்தித்தன.

சில செல்டிக் பழக்கங்களை (Celtic customs) கைவிடுமாறும், ரோம் நகருடனான வேறுபாடுகளை களையவும், பழைய கசப்பான அனுபவங்களை மறக்கவும், பிரிட்டன் கிறிஸ்தவர்களை சமாதானப்படுத்த முயன்ற அவரது முயற்சிகள் அனைத்தும் வீணாயின.

பொறுமையாக போராடியதாலும், கடின உழைப்பாலும், மிஷனரி கொள்கைகளை ஞானமுடன் செவிமடுத்ததாலும், திருத்தந்தை கிரகோரி அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட சில மாற்று நடவடிக்கைகளாலும், குறிப்பாக - பாகன் ஆலயங்களையும் அவர்களது சடங்குகளையும் இடிப்பதைத் தவிர்த்து அவற்றை கிறிஸ்தவ ஆலயங்களாக மாற்றவும், பாகனிய விழாக்களை நிறுத்துவதை விடுத்து, அவற்றை கிறிஸ்தவ விழாக்களாக கொண்டாடவும் ஆரம்பித்தனர். இதன் காரணங்களால், இங்கிலாந்து வந்து குறுகிய எட்டு வருடங்களிலேயே சிறிதளவேயானாலும் பெரும் வெற்றியை அடைந்தார். ஆகவே, அவரை இங்கிலாந்தின் அப்போஸ்தலர் என அழைப்பது சாலச் சிறந்ததுவேயாகும்.

கி.பி. 604ம் ஆண்டு மரித்த அகஸ்டின், “காண்டர்பரியிலுள்ள” புனித அகஸ்டின் துறவு மடத்தில் (St Augustine's Abbey, Canterbury) அடக்கம் செய்யப்பட்டார்.

இன்றைய புனிதர் :
(27-05-2020)

கண்டற்பெரி நகர தூய அகஸ்டின் (மே 27)

இயேசு அவர்களை நோக்கி, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்” என்று கூறினார். (மாற் 16:15 - 18)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூறும் தூய அகஸ்டின் பிறந்து வளர்ந்தது எல்லாம் உரோமையில்தான். இவர் எப்போது பிறந்தார், இவருடைய குழந்தைப் பருவம் எப்படி இருந்தது என்பது பற்றிய தகவல்கள் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் இவர் ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்தார் என மிக உறுதியாகச் சொல்லலாம்.

இவர் உரோமையில் உள்ள தூய ஆன்ட்ரு துறவுமடத்தில் தலைவராக இருந்து பணிகளைச் செய்துகொண்டிருந்த தருணத்தில், திருத்தந்தை முதலாம் கிரகோரியார் இவரை அழைத்து, “நீங்கள் இங்கிலாந்து சென்று நற்செய்திப் பணியாற்ற வேண்டும்” என்று கேட்டார். தொடக்கத்தில் திருத்தந்தை சொன்னதற்கு மறுப்புச் சொன்ன, அகஸ்டின் அதன்பின் அதனை இறைத் திருவுளமாக நினைத்துக்கொண்டு நாற்பதுக்கும் மேற்பட்ட அருட்பணியாளர்களை தன்னோடு சேர்த்துக்கொண்டு இங்கிலாந்து நாட்டிற்கு நற்செய்தி அறிவிக்கச் சென்றார்.

அவர் சென்ற நேரம் கெண்டில் எதல்பர்ட் அரசராக இருந்தார். அவரிடத்தில் சென்ற அகஸ்டின் தான் வந்ததன் நோக்கத்தை எடுத்துச் சொன்னார். தொடக்கத்தில் தயங்கிய அரசர், அரசியின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க அகஸ்டினையும் அவரோடு வந்த அருட்பணியாளர்களையும் நற்செய்தி அறிவிக்க முழுமையான சம்மதத்தைத் தெரிவித்தார். இதனால் அகஸ்டின் தன்னோடு வந்த அருட்பணியாளர்களின் உதவியோடு இங்கிலாந்து நாடு முழுக்க நற்செய்தி அறிவிக்கத் தொடங்கினார். அவர் அறிவித்த நற்செய்தியினால் அரசர் உட்பட ஏராளமான பேர் மனமாற்றம் அடைந்தார்கள். அரசரும் தாமாகவே முன்வந்து ஓர் ஆலயத்தை திருச்சபைக்காகத் தந்தார்.

அகஸ்டின் இங்கிலாந்து நாட்டில் நற்செய்தி அறிவித்த சமயங்களில் நிறைய பிறமதக் கோவில்களை அர்ச்சித்து கிறிஸ்தவக் கோவில்களாக மாற்றினார். பலரை கிறிஸ்தவ மதத்தில் இணைக்க அரும்பாடு பட்டார். அவருடைய அயராத உழைப்பு வீண்போகவில்லை. ஏராளமான பேர் கிறிஸ்தவத்தை தழுவினார்கள். இதற்கிடையில் அவர் கண்டர்பெறி ஆயராகவும் உயர்த்தப்பட்டார். இப்படி இங்கிலாந்து மக்களுக்கு நற்செய்தி அறிவிக்க தன் உடல் பொருள் ஆவி அத்தனையயும் கொடுத்த அகஸ்டின் 604 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவர் ‘இங்கிலாந்து நாட்டின் பாதுகாவலர்’ எனவும் அழைக்கப்படுகின்றார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய அகஸ்டினின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. நற்செய்தி அறிவிப்பதில் ஆர்வம்

தூய அகஸ்டினிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடம், நாம் அனைவரும் நற்செய்தி அறிவிப்பில் ஆர்வமுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்பதுதான்.

தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய மடலில் கூறுவார், “நற்செய்தி அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு” என்று. ஆம், நற்செய்தி அறிவிப்பது நம் ஒவ்வொரின் கடமை, அந்தக் கடமையை நாம் நிறைவேற்றவில்லையென்றால் அது நமக்குக் கேடுதான்.

இன்றைக்குப் பலர் தங்களுடைய வாழ்க்கையை ஏனோதானோ என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். கிறிஸ்துவின் போதனையின் மீதும், அவர் நமக்கு விடுத்த அழைப்பான, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கவேண்டும்’ என்பதின் மீதும் ஆர்வமில்லாமல் இருக்கின்றார்கள். அன்றைக்கு எத்தனையோ புனிதர்கள், மறைசாட்சிகள் கடல்கடந்து வந்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை நம் முன்னோர்களுகுக் அறிவித்தார்கள். அதனாலேயே நாம் கிறிஸ்தவர்களாக, நம்முடைய வாழ்க்கையில் பல படி உயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதற்கு நன்றிக் கடனாக நாம் கிறிஸ்தவை அறியாத மக்களுக்கு அறிவிக்க வேண்டும். அப்போதுதான் நமது கிறிஸ்தவ வாழ்வானது முழுமை பெறும். இல்லையென்றால் நாம் நன்றி மறந்தவர்கள் என்றே அழைக்கப்படுவார்கள் ஆவோம்.

ஆகவே, தூய அகஸ்டினின் நினைவு நாளில் அவரைப் போன்று மிக ஆர்வத்தோடு அதே நேரத்தில் மனவுறுதியோடு ஆண்டவரின் நற்செய்தி அறிவிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.Next

26 May 2020

தூய பிலிப்புநேரி (மே 26)

இன்றைய புனிதர் :
(26-05-2020)

தூய பிலிப்புநேரி (மே 26)

நிகழ்வு


பிலிப்புநேரி வாழ்ந்த காலத்தில் அடுத்தவரைப் பற்றி இழிவாக, தரக்குறைவாகப் பேசும் பெண்மணி ஒருவர் இருந்தார். அவருக்கு சரியான பாடம் புகட்டவேண்டும் என பிலிப்புநேரி நினைத்தார். எனவே ஒருநாள் அவர் அந்த பெண்மணி இருந்த இடத்திற்குச் சென்று, வாத்தின் இரண்டு இறக்கைகளைக் கொடுத்து, அதனை கொஞ்சம் கொஞ்சமாக பிய்த்து காற்றில் பறக்கவிடச் சொன்னார். அவரும் மிகவும் குஷியாக இறக்கைகளைக் பிய்த்து அவற்றை காற்றில் பறக்கவிட்டார். சிறுது நேரம் கழித்து பிலிப்பு நேரி அந்தப் பெண்மணியிடம், “இப்போது நீ காற்றில் பறக்கவிட்ட இறக்கைகளை ஒன்றாக சேகரித்துக் கொண்டுவா” என்றார். அதற்கு அந்தப் பெண்மணி, “காற்றில் பறந்து போன எல்லாவற்றையும் எப்படிக் கொண்டுவருவது? அது போனது போனதுதான்” என்றார். அதற்கு அவர், “எப்படி காற்றில் பறக்கவிட்ட இறக்கைகளை மீண்டுமாக சேகரித்துக் கொண்டுவர முடியாதோ, அதுபோன்றுதான் நீ மற்றவர்களைப் பற்றி பரப்பிய பொய் குற்றச்சாட்டுகளும், தவறான கருத்துகளும். ஆகையால் இனிமேலாவது நீ பிறரைப் பற்றி தப்பான கருத்துகளைப் பரப்புவதை நிறுத்து” என்றார். அதன்பிறகு அந்தப் பெண்மணி தான் செய்து வந்த தவறை செய்யாமல் மனம்திரும்பி வாழ்ந்து வந்தார்.

வாழ்க்கை வரலாறு

கி.பி 1515 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் நாள் இத்தாலியில் உள்ள பிளாரன்ஸ் என்ற நகரில் பிலிப்புநேரி பிறந்தார். இவருடைய தந்தை பிரான்சிஸ்கோ, தாய் லூக்ரெஸ்னா என்பவராகும். இவருடைய குடும்பம் செல்வச் செழிப்பான குடும்பம். இவர் தன்னுடைய பதினெட்டாவது வயதில் தான் செய்துவந்த வணிகத் தொழிலை விட்டுவிட்டு உரோமை நகருக்குச் சென்றார். உரோமை நகரில் இருந்த ஏழு ஆலயங்களுக்கும் கால்நடையாகச் சென்று, இரவில் தூய செபஸ்தியார் புதைகுழியில் போய் படுத்துக்கொள்வார்.

ஒருநாள் உரோமை நகரில் இருந்த ஒரு பணக்காரர் தன்னுடைய மகனுக்கு பாடம் சொல்லிக்கொடுத்தால், தன்னுடைய வீட்டில் தங்கிக்கொள்ளலாம் என்று சொன்னார். அதற்கு பிலிப்புநேரி சரி எனச் சொல்லிவிட்டு, அந்த பணக்காரரின் மகனுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்துவிட்டு, அவருடைய வீட்டில் தங்கியிருந்தார். பிலிப்புநேரி இயல்பிலே கலகலப்பானவராக, மக்களை ஆற்றுப் படுத்துவதில் வல்லவராக இருந்தார். அதனால் அவர் தான் இருக்கக்கூடிய இடத்தை எப்போதும் கலகலப்பாக வைத்துக்கொண்டார், அதோடு தன்னை நாடிவரும் மக்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி, அவர்களுடைய வாழ்வில் ஒளியேற்றி வைத்தார். பிலிப்புநேரி நோயாளிகளைச் சந்தித்து, அவர்களை திடப்படுத்துவதில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டு வாழ்ந்தார். 1538 – 39 ஆம் ஆண்டுகளில் உரோமை நகரில் ஏற்பட்ட கடும்பஞ்சத்தில் ஏழை எளியவருக்கு உதவிசெய்து பெருந்தொண்டாற்றினார்.

இவருடைய பணிகளைப் பார்த்த அருட்தந்தை பெர்சியோனா ரோசா என்பவர் இவரை குருவாக படிக்கச் சொன்னார். அந்த குருவின் வார்த்தைகளுக்கு இணங்கி இவர் குருவாகப் படித்து, 1551 ஆம் ஆண்டு மே 26 ஆம் நாள் குருவாக உயர்ந்தார். இவர் குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட பிறகு செய்த பணிகள் ஏராளம். குறிப்பாக இவர் இளைஞர்களை ஒன்று திரட்டினார். அவர்களுக்கு கதைகள், மறைக்கல்வி வழியாக நல்லறிவு புகட்டினார். மேலும் இவர் ஜெபக்குழுக்களை ஏற்படுத்தி மக்களை இறைநம்பிக்கையில் வளர்த்தெடுத்தார்.

இவர் ஒப்புரவு அருட்சாதனத்திற்கும் திவ்ய நற்கருணைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்துவந்தார். அதில் மக்களை சிறப்பாக பயிற்றுவித்து வந்தார். இவர் நிறைவேற்றும் திருப்பலியில் கலந்துகொள்ளும் ஒருவர் திவ்ய நற்கருணையை உட்கொண்ட உடனேயே தன்னுடைய அலுவலகத்திற்கு ஓடிவிடுவார். சிறுதுநேரம் கூட நற்கருணை நாதருக்கு முன்பாக உட்கார்ந்து ஜெபிக்க மாட்டார். இதனைக் கவனித்த பிலிப்புநேரி அவருக்கு சரியான பாடம் புகட்ட நினைத்தார். எனவே ஒருநாள் அந்த இளைஞர் திவ்ய நற்கருணையை வாங்கி உட்கொண்டு உடனே ஓடியபோது, பிலிப்புநேரி பீடச் சிறுவர்களை அழைத்து, மெழுகுதிரிகளை ஏந்திக்கொண்டு அவர் பின்னால் ஓடிச் சொன்னார். இதைப் பார்த்த அந்த இளைஞர் தன்னுடைய குற்றத்தை உணர்ந்து, அதன்பிறகு நற்கருணை நாதருக்கு முன்பாக அதிக நேரம் உட்கார்ந்து ஜெபிக்கத் தொடங்கினர்.

இவர் மக்களுக்கு ஆலோசனை கூறும் திறமையைப் பார்த்து ஆயர்கள், கர்தினால்கள் முதற்கொண்டு இவரிடம் ஆலோசனை கேட்கவந்தார்கள், அதன்மூலமாக இவருக்கு நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். அப்படி நண்பர்கள் ஆனவர்கள்தான் தூய லயோலா இஞ்ஞாசியாரும் தூய சார்லஸ் பொரோமேயுவும். பிலிப்புநேரி தனக்குக் கிடைத்த நட்பை ஒருபோதும் தவறாகப் பயன்படுத்தியதில்லை, அதன்வழியாக அவர் ஆதாயம் அடையவும் நினைக்கவில்லை. அவர் கடவுள் தனக்குக் கொடுத்த திறமைகளை கடவுளுடைய மகிமைக்காகவே பயன்படுத்தினார். அடிக்கடி காட்சிகளைக் கண்டார். அதன்வழியாக அவர் இறைவனோடு உள்ள உறவில் மேலும் மேலும் வந்தார். பிலிப்புநேரி மக்களைப் பார்த்து அடிக்கடி கேட்கக்கூடிய வார்த்தை, “இன்று ஏதாவது நன்மை செய்தீர்களா?” என்பதுதான். இப்படிக் கேட்பதன் வழியாக அவர் மக்களை பிறருக்கு நன்மை செய்யத் தூண்டினார்.

பிலிப்பு நேரியின் பணிகளைப் பார்த்த திருத்தந்தை பதிமூன்றாம் கிரகோரியார் இவரை ஒருசபையின் தலைவராக ஏற்படுத்தினார். இவரும் இவரோடு இருந்து பயிற்சி பெற்ற இளைஞர்களும் சேர்ந்து உருவாக்கிய சபையின் பெயர்தான் ‘ஆரட்டரியன்’ என்பவர். இதை அவர் மற்ற துறவற சபைகளைப் போன்று அல்லாமல், ஒரு ஜெபக் குழுவாக பயன்படுத்தி மக்களுடைய விசுவாச வாழ்விற்கு பேருதவியாக இருக்கச் செய்தார். இப்படி பல்வேறு பணிகளைச் செய்த பிலிப்புநேரி 1595 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். 1622 ஆம் ஆண்டு இவர் புனிதராக திருநிலை படுத்தப்பட்டார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்


தூய பிலிப்புநேரியின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. நற்செய்தி அறிவிப்பில் ஆர்வம்


தூய பிலிப்புநேரி நற்செய்தி அறிவிப்பதில் ஆர்வமுள்ள பணியாளராக இருந்து செயல்பட்டார் என்று சொன்னால் அது மிகையாகாது. இவருடைய சம காலத்தவரான தூய பிரான்சிஸ் சவேரியார் இந்தியாவில் நற்செய்தி அறிவிக்கும்போது, அங்கிருந்து அவர் அனுப்பும் மடல்களைப் படித்துவிட்டு, தானும் கீழை நாடுகளுக்குச் சென்று, நற்செய்தி அறிவித்து மறைசாட்சியாக உயிர்துறக்கவேண்டும் என்று ஆர்வம் கொண்டார். ஆனால் அருட்தந்தை பெர்சியோனா ரோசா ன்பவரின் அறிவுறுத்தலின் பேரில் உரோமை நகரிலேயே நற்செய்தி அறிவிக்கத் தொடங்கினார். அதனால் இவர் உரோமை நகரின் இரண்டாவது திருத்தூதர் என்று அழைக்கப்படுகின்றார். இவர் தூய சவேரியார் மீது அதிகமான பற்றும் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்ததனால் என்னவோ சவேரியார் புனிதர் பட்டம் பெற்ற அதே ஆண்டில் இவரும் பெற்றார்.

இவருடைய விழாவைக் கொண்டாடும் நமக்கு நற்செய்தி அறிவிப்பின் மீது ஆர்வம் இருக்கின்றதா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். நாம் உலகெங்கும் சென்று, எல்லாருக்கும் நற்செய்தி அறிவிக்கத் தேவையில்லை. இருக்கும் இடத்தில் நற்செய்தி அறிவித்தாலே போதும். அதுவே சிறந்ததாக இருக்கும். ஆகவே, தூய பிலிப்பு நெறியைப் போன்று நாமும் நற்செய்தி அறிவிப்பின்பால் ஆர்வமுள்ள பணியாளர்களாக விளங்குவோம்.

2. நாம் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியை விதைப்பவர்களாக


தூய பிலிப்புநேரியார் தான் இருந்த இடத்தை எப்போதும் மகிழ்ச்சியாகும், கலகலப்பாகவும் வைத்திருப்பார். அத்தகைய வரத்தை இறைவனிடமிருந்து அவர் பெற்றிருந்தார். அவரைப் போன்று நாம் வாழும் இடத்தில், குழுமத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துபவர்களாக நாம் இருக்கின்றோமா? என்பது நமது சிந்தனைக்கு உரியதாக இருக்கின்றது.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்” (யோவா 15:11). ஆம், நாம் அனைவரும் மகிழ்ந்திருக்கவேண்டும் என்பதுதான் இறைவனின் திருவுளமாக இருக்கின்றது. எப்போதும் நாம் துக்கப்பட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்பது அல்ல இறைவனின் விரும்பம். ஆகவே, நாம் முதலில் மகிழ்ச்சியாக இருக்கின்றோமா?, நாம் வாழும் சமுதாயத்தில் நம்முடைய அன்பான வார்த்தைகளால் மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடியவர்களாக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்ப்போம்.

ஒரு கிராமத்தில் இருந்த இளைஞர்கள் சிலர் அவ்வூரில் இருந்த ஆலமரத்தின் அடியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களுடைய பேச்சு ‘ஊரில் யாராரெல்லாம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்’ என்பது தொடர்பாக வந்தது. அப்போது ஓர் இளைஞன் “நம்மூரில் இருக்கும் ஜமின்தார்தான் மிகவும் மகிழ்ச்சியான மனிதர் என்று எனக்குத் தெரிகிறது” என்றான். அதற்கு இன்னொரு இளைஞன் அவனை இடைமறித்து, “இல்லை இல்லை, அவருக்கு பணம் எந்தளவுக்கு இருக்கிறதோ அந்தளவுக்கு அவருக்குப் பிரச்சனை இருக்கின்றது” என்றான். அதன்பிறகு இன்னும் ஒருசிலரை அவர்கள் சொல்லிப்பார்த்தார்கள். அவர்களும் ஏதோ ஒருவிதத்தில் கவலைப்பட்டு வாழ்வதால் அவர்களை விட்டுவிட்டார்கள்.

அப்போது அந்த வழியாக ஒரு விவசாயி வந்தார். அவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது போன்று தெரிந்தது. உடனே இளைஞர்கள் அவரிடம், “உங்களால் மட்டும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கமுடிகிறதே, அது எப்படி என்று கேட்டார்கள். அதற்கு அவர், “நான் சம்பாதிப்பதில் மனநிறைவு கொள்கிறேன். தேவைக்கு மேல் ஆசைபட்டது கிடையாது. என்னால் இயன்ற அளவு ஏழைகளுக்குக் கொடுக்கிறேன். அதனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்றார். நாம் நம்மிடம் இருப்பதை பிறருக்குக் கொடுக்கும்போது எப்போதும் மகிழ்ச்சிதான். அதைதான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

ஆகவே, தூய பிலிப்பு நேரியின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் நாமும் அவரைப் ஒன்று ஆர்வமுள்ள நற்செய்திப் பணியாளராவோம், நாம் வாழும் இடத்தில் நம்முடைய சொல்லால், செயலால் மகிழ்ச்சியை ஏற்படுத்துவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

25 May 2020

✠ புனிதர் மரிய மகதலின் டி பஸ்ஸிMay 24

† இன்றைய புனிதர் †
(மே 24)

✠ புனிதர் மரிய மகதலின் டி பஸ்ஸி ✠
(St. Mary Magdalene de' Pazzi)
கன்னியர்:
(Virgin)

பிறப்பு: ஏப்ரல் 2, 1566
ஃப்ளாரன்ஸ், இத்தாலி
(Florence, Duchy of Florence)

இறப்பு: மே 25, 1607 (வயது 41)
ஃப்ளாரன்ஸ், இத்தாலி
(Florence, Grand Duchy of Tuscany)

ஏற்கும் சமயம்: 
ரோமன் கத்தோலிக்கம்
(Roman Catholic Church)

அருளாளர் பட்டம்: கி.பி. 1626
திருத்தந்தை எட்டாம் அர்பன்
(Pope Urban VIII)

புனிதர் பட்டம்: ஏப்ரல் 28, 1669 
திருத்தந்தை பத்தாம் கிளமெண்ட்
(Pope Clement X)

முக்கிய திருத்தலம்:
புனிதர் மரிய மகதலின் டி பஸ்ஸி துறவு மடம், கரேக்கி, ஃப்ளாரன்ஸ், இத்தாலி
(Monastery of Santa Maria Maddalena de' Pazzi, Careggi, Florence, Italy)

நினைவுத் திருவிழா: மே 24

பாதுகாவல்: 
நேப்பிள்ஸ் (துணை பாதுகாவலர்) (Naples (co-patron), நோய்களுக்கெதிராக (Against bodily ills), பாலின தூண்டுதளுக்கே எதிராக (Against sexual temptation), நோயாளிகள் (Sick people)

புனிதர் மரிய மகதலின் டி பஸ்ஸி, ஒரு இத்தாலிய ரோமன் கத்தோலிக்க புனிதரும், கார்மேல் சபை துறவியும், கிறிஸ்தவ சித்தரும் ஆவார்.

“கதெரீனா” (Caterina) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் மரிய மகதலின் டி பஸ்ஸி, கி.பி. 1566ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 2ம் நாளன்று, ஃப்ளாரென்ஸ் நகரில் பிறந்தார். இவரது தந்தை நகரின் புகழ்பெற்ற செல்வந்தர் ஆவார். அவரது பெயர், “கமிலோ டி கெரி டே பஸ்ஸி” (Camillo di Geri de' Pazzi) ஆகும். இவரது தாயாரின் பெயர், “மரிய பௌன்டெல்மொன்டி” (Maria Buondelmonti) ஆகும். பஸ்ஸி சிறுமியாக இருக்கையிலேயே ஆன்மீக மற்றும் பக்தி மார்க்கத்தின்பால் ஈர்க்கப்பட்டிருந்தார். ஒன்பது வயதிலேயே பஸ்ஸி இறைவனின் திருப்பாடுகளை தியானிக்கக் கற்றுக்கொண்டார். தமது பத்து வயதிலேயே புது நன்மை பெற்றுக்கொண்ட அவர், தமது கன்னிமைக்காக பிரமாணம் செய்துகொண்டார்.

அவரது பன்னிரண்டு வயதில் தமது தாயாரின் முன்னிலையிலேயே இறைவனின் திருக்காட்சியைக் காணும் பேறு பெற்றார். அதுமுதலே பலவித அற்புத திருக்காட்சிகளைக் கண்டார்.

கி.பி. 1580ம் ஆண்டு, பஸ்ஸி “மால்டா சபையினர்” (Order of Malta) நடத்தும் பெண் துறவியரின் மடத்தில் கல்வி கற்க அவரது தந்தையால் அனுப்பப்பட்டார். ஆனால் விரைவிலேயே திரும்ப அழைத்துக்கொள்ளப்பட்ட பஸ்ஸி, ஒரு பிரபுக் குடும்ப இளைஞனை திருமணம் செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டார். ஆனால், தாம் தமது கன்னிமைக்காக இறைவனிடம் பிரமாணம் எடுத்துக்கொண்டதை தந்தையிடம் எடுத்துக்கூறினார். இறுதியில், தமது சம்மதத்தை தெரிவித்த தந்தையார், பஸ்ஸியின் துறவு வாழ்க்கைக்கு சம்மதம் தெரிவித்தார். பஸ்ஸி, “தூய மரியாளின் கார்மேல் துறவு மடத்தை” (Carmelite Monastery of St. Mary) தேர்ந்துகொண்டார். கி.பி. 1583ம் ஆண்டு, புகுமுக (Novice) துறவறம் பெற்ற பஸ்ஸி, “அருட்சகோதரி மேரி மகதலின்” (Sister Mary Magdalene) என்ற துறவற பெயரை ஏற்றுக்கொண்டார்.

புகுமுக (Novice) துறவறத்தில் ஒருவருட காலம் இருந்த பஸ்ஸி, ஒருமுறை மிகவும் மோசமாக நோயால் பாதிக்கப்பட்டார். வேதனைகளை வெளிக்காட்டாத பஸ்ஸியின் இருதயம் கிறிஸ்துவின் அன்பில் நிறைந்திருந்தது. இதனைக் கண்ட மடத்தின் அருட்சகோதரி ஒருவர் பஸ்ஸியிடம், “சிறு முணுமுணுத்தல் கூட இல்லாமல் எப்படி உங்களால் வேதனைகளை பொறுத்துக்கொள்ள முடிகிறது” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த பஸ்ஸி, இறைவனின் பாடுபட்ட சொரூபத்தைச் சுட்டிக்காட்டியபடி, “கிறிஸ்துவின் பாடுகளை அனுபவிக்க அழைக்கப்பட்ட எவருக்குமே வலிகளும் வேதனைகளும் இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்” என்றார்.

இதுபோன்ற இவரது எண்ணங்களும் கிறிஸ்துவுக்குள்ளான இவரது அன்பும் இவருக்கு தொடர்ந்த இறைவனின் திருப்பாடுகளின் திருக்காட்சிகளை காண கிட்டியது. இறைவனின் பெயரால் இவர் நிகழ்த்திய அற்புதங்கள் எண்ணிலடங்காதவை ஆகும். பிறரின் எண்ணங்களைக் கூட அறிந்து கூறும் வல்லமை பெற்றவராக இவர் திகழ்ந்தார் என்பர். அதுபோலவே, எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தியும் இவர் பெற்றிருந்தார். உதாரணத்துக்கு, “கர்தினால் அலெஸ்ஸான்ட்ரோ டே மெடிசி” (Cardinal Alessandro de' Medici) அடுத்த திருத்தந்தை ஆவார் என்றார். அதுபோலவே அவர் திருத்தந்தையாக தேர்வு செய்யப்பட்டு, “பதினோராம் லியோ” (Pope Leo XI) ஆனார்.

அவரது வாழ்நாளில், தூர தொலைவு நாடுகளிலிருந்த பலருக்கு நேரில் காட்சியளித்து அவர்களது நோய்களை குணமாக்கியதாக கூறப்படுகிறது.

கி.பி. 1607ம் ஆண்டு, தமது 41 வயதில் மரித்த இப்புனிதரின் உடல், கெட்டுப்போகாத நிலையிலேயே இருப்பதாக கூறப்படுகிறது.

புனிதர் பட்டமளிப்பு:
இவரின் இறப்புக்குப் பின், பல புதுமைகள் நிகழ்ந்ததால், இவருக்கு முக்திபேறு பட்டம் அளிப்பதற்கான முயற்சிகள் திருத்தந்தை ஐந்தாம் பவுலின் (Pope Paul V) ஆட்சியில் தொடங்கி திருத்தந்தை எட்டாம் அர்பனின் (Pope Urbun VIII) ஆட்சியில் கி.பி. 1626ம் ஆண்டு, வழங்கப்பட்டது. எனினும் 62 ஆண்டுகளுக்குப் பின்னரே திருத்தந்தை பத்தாம் கிளமெண்டால் (Pope Clement VIII), கி.பி. 1669ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 28ம் நாளன்று, புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது. 

நினைவுத் திருவிழா நாள்:
இவரின் புனிதர் பட்டமளிப்பின் போது, இவரது விழா நாள், இவரின் இறந்த நாள் ஆகிய, மே மாதம், 25ம் நாள் எனக் குறிக்கப்பட்டது. ஆனால் கி.பி. 1725ம் ஆண்டு, அந்நாள் புனித திருத்தந்தை ஏழாம் கிரகோரிக்கு (Pope Gregory VII) ஒதுக்கப்பட்டதால், மே மாதம், 29ம் தேதிக்கு நகர்த்தப்பட்டது. கி.பி. 1969ம் ஆண்டு நடந்த மாற்றத்தில் மீண்டும் மே மாதம், 24ம் தேதிக்கு நகர்த்தப்பட்டது.

புனிதர் ஏழாம் கிரெகோரி May 25

† இன்றைய புனிதர் †
(மே 25)

✠ புனிதர் ஏழாம் கிரெகோரி ✠
(St. Gregory VII)
157ம் திருத்தந்தை:
(157th Pope)

பிறப்பு: கி.பி. 1015
சொவானா, டுஸ்கனி, தூய ரோமப் பேரரசு
(Sovana, Tuscany, Holy Roman Empire)

இறப்பு: மே 25, 1085
சலேர்னோ, அபுலியா
(Salerno, Duchy of Apulia)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திப்பேறு பட்டம்: கி.பி. 1584
திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரி
(Pope Gregory XIII)

புனிதர் பட்டம்: மே 24, 1728
திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட்
(Pope Benedict XIII)

நினைவுத் திருவிழா: மே 25

"ஹில்டப்ராண்ட்" (Hildebrand of Sovana) எனும் இயற்பெயர் கொண்ட திருத்தந்தை ஏழாம் கிரகோரி, கத்தோலிக்கத் திருச்சபையின் 157ம் திருத்தந்தையாக 1073ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 2ம் நாள்முதல் 1085ம் ஆண்டு, தனது மரணம் வரை ஆட்சி புரிந்தவராவார்.

தற்போதைய "மத்திய இத்தாலியின்" (Central Italy), "தென் டுஸ்கனி" (Southern Tuscany) பிராந்தியமான – அன்றைய தூய ரோமப் பேரரசின் “சொவானா” எனுமிடத்தில் பிறந்த ஹில்டப்ராண்ட், கொல்லர் (Blacksmith) ஒருவரின் மகனாவார். சிறு வயதில், ரோம் நகரிலுள்ள புனித மரியாளின் மடாலயத்தில் (Monastery of St. Mary) கல்வி கற்க அனுப்பப்பட்டார். அங்கே, “அவன்டைன் மலை” (Aventine Hill) மேலுள்ள மடாலயமொன்றில் இவரது மாமன் ஒருவர் மடாதிபதியாக இருந்தார்.

கத்தோலிக்கத் திருச்சபையினை சீர்திருத்த முயன்றவர்களில் இவர் மிகவும் குறிப்பிடத்தக்கவர் ஆவார். தூய ரோமப் பேரரசர் நான்காம் ஹென்றி (Holy Roman Emperor Henry IV) மற்றும் இவருக்கும் இடையே நிகழ்ந்த ஆயர்நிலை திருப்பொழிவுக்கு ஆட்களை தேர்வுசெய்யும் அதிகாரம் குறித்த சச்சரவில் (Investiture Controversy) திருத்தந்தைக்கு இருந்த அதிகாரத்தை இவர் நிலைநாட்டினார். இதை ஏற்காத நான்காம் ஹென்றி'யை திருச்சபையின் முழு உறவு ஒன்றிப்பிலிருந்து இருமுறை நீக்கினார். இதனால் மூன்றாம் கிளமெண்ட்'டை, எதிர்-திருத்தந்தையாக (Antipope Clement III) ஹென்றி நியமித்தார். திருத்தந்தைத் தேர்தலுக்கான புதிய வழிமுறைகளை சட்டமாக்கினார்.

திருப்பட்டங்களைக் காசுக்கு விற்றதை கடுமையாக இவர் எதிர்த்தார். குருக்கள் கற்பு நிலை வாக்கு அளித்து திருமணமாகாமல் வாழ வேண்டும் என்று இருந்த சட்டத்தை இவர் கடுமையாக நடைமுறைப்படுத்தினார். இவர் தனது அதிகாரத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தியதால் பலரின் வெறுப்புக்கு ஆளானார்.

திருத்தந்தை ஏழாம் கிரகோரிக்கு, திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரி (Pope Gregory XIII), 1584ம் ஆண்டில், முக்திபேறு பட்டமும், 1728ம் ஆண்டில், திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் (Pope Benedict XIII) புனிதர் பட்டமும் அளித்தனர்.

தூய பீத் (மே 25)

இன்றைய புனிதர் :
(25-05-2020)

தூய பீத் (மே 25)
இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார். (லூக் 2:52)

வாழ்க்கை வரலாறு

பீத், இங்கிலாந்து நாட்டில் உள்ள மங்டன் என்னும் இடத்தில் 672 ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு ஏழு வயது நடக்கும்போது தூய பேதுரு மற்றும் தூய பவுல் துறவுமடத்தில் சேர்ந்து கல்வி கற்றார். இயல்பிலே திறமைசாலியாக விளங்கிய பீத் கல்வி கேள்வியில் சிறந்து விளங்கினார்.

686 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில், இவர் இருந்த பகுதியில் பயங்கரக் கொள்ளை ஏற்பட்டது. அதில் ஏராளமான பேர் இறந்துபோனார்கள். இவர் மட்டும் எப்படியோ அதிஸ்டவசமாக பிழைத்துக்கொண்டார். இதனை இறைவனின் அருட்பெரும் செயல் என உணர்ந்த இவர், இறைவனுக்காக தன் வாழ்வு முழுவதையும் அர்ப்பணிக்கத் தொடங்கினார். அதனால் இவர் தூய ஆசிர்வாதப்பர் சபையில் சேர்ந்து துறவியாக வாழ விரும்பினார். அதன்படி இவர் தூய ஆசிர்வாதப்பர் சபையில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார். பெனடிக்ட் பிஸ்காப் என்பவர் இவரை சிறந்த விதமாய் வழி நடத்தினார். இவ்வாறு பீத் தன்னுடைய 19 வது வயதில் திருத்தொண்டராகவும் அதற்கு அடுத்த ஆண்டில் குருவானவராகவும் உயர்ந்தார்.

பீத் தான் வாழ்ந்த காலத்திலேயே மக்களால் ‘வணக்கத்திற்கு உரியவர்’ என்று அன்போடு அழைக்கப்பட்டார். காரணம் இவருடைய எளிய மற்றும் தாழ்ச்சி நிறைந்த வாழ்க்கை. மட்டுமல்லாமல் இவர் விவிலியத்தில் ஆழமான புலமை பெற்றிருந்தார். அந்தப் புலமை இவரை பல நூல்களை எழுதச் செய்தது. குறிப்பாக இவர் எழுதிய 45 நூல்களில் 30 நூல்கள் விவிலியம் தொடர்பானது என்பது குறிப்பிடத் தக்கது.

735 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் நாள் இவர் தன்னுடைய சாவு நெருங்கி வந்துவிட்டது என்பதை உணர்ந்தார். எனவே இவர் வானத்தை அண்ணார்ந்து பார்த்து, “தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாகுக” என்று சொல்லி தன்னுடைய ஆவியை இறைவனிடத்தில் ஒப்படைத்தார். இவருக்கு 1899 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த பதிமூன்றாம் சிங்கராயர் அவர்களால் மறைவல்லுநர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தூய பீத்தின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. கடவுள் கொடுத்த திறமைகளை கடவுளின் திருப்பெயர் விளங்கப் பயன்படுத்துவோம்

தூய பீத்தின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடமே, அவர் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட திறமையை கடவுளின் பெயர் விளங்கச் செய்ததுதான். அவர் ஒருபோதும் தன்னுடைய விளங்கச் செய்யவில்லை. தூய பீத்தின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று கடவுள் நமக்குக் கொடுத்த திறமையை கடவுளின் பெயர் விளங்கச் செய்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஓர் ஊரில் ஒரு கடுமையான உழைப்பாளி இருந்தார். அவர் எப்போதுமே ஏதாவது ஓர் ஆராய்ச்சியை செய்துகொண்டே இருப்பார். அதுவும் அவரது அறையை தாழிட்டு செய்து கொண்டிருப்பார். காரணம் அவர் ஆராய்ச்சி செய்யும் சமயத்தில் யாரும் அவரை தொந்தரவு செய்வது அவருக்கு பிடிக்காது. எனவே அவர் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் சமயங்களில் அவரது கதவுகள் அடைக்கப்பட்டு இருக்கும்.

அவ்வாறு இருக்க அவரை இடையுறு செய்யவும் இரண்டு ஜீவன் அந்த வீட்டில் இருந்தன. அவை அவரது செல்ல பிராணிகளான இரு பூனைகள். அதில் ஒன்று பெரியது மற்றொன்று சிறியது. இவர் ஏதாவது ஓர் ஆராய்ச்சியில் முழ்கி இருக்கும் அந்த சமயம் அந்த இரு பூனைகளும் வெளியே செல்ல நினைத்து கத்தி கூப்பாடு போடும். இதனால் அவர் பல ஆராய்ச்சிகளில் சிந்தனைகளை தவறவிடும் நிலை ஏற்பட்டது. எனவே அவர் தமது வேலையாளை மிக ஆணவத்தோடு அழைத்து, இந்த கதவில் இரு துளைகளை இடு, ஒன்று பெரியது, மற்றொன்று சிறியது. இந்த இரு ஓட்டைகளைப் பயன்படுத்தி அந்த இரு பூனைகளும் வெளியில் சென்றுவிடும். அதன்பிறகு என்னுடைய ஆராய்ச்சிக்கு எவ்வித பங்கமும் வந்து சேராது என கூறினார்.

இதைக் கேட்ட அவரது வேலையாள், “ஐயா, ஒரு பெரிய துளை இட்டாலே இரண்டும் வரும், போகும். அப்படி இருக்க மற்றொரு துளை அவசியமா? என்றார். இப்படி ஒரு கேள்வியை அவரிடம் இருந்து அவர் எதிர்பார்க்கவில்லை. அன்றோடு அவரின் ஆணவம், மமதை அனைத்தும் பொடி பொடியாகின. பிறகு அவர் கூறியதை நினைத்து அவரே வருத்தப்பட்டார். அவர் தான் E=mc2 என்ற சமன்பாட்டை கண்டு பிடித்த ஐன்ஸ்டீன்.

எல்லாம் என்னால்தான், எல்லாரையும் விட நான் பெரியவன் என்ற ஆணவத்தில் சிலர், சமயங்களில் இப்படி மூக்கு அறுபடுவது உண்டு.

நாமும்கூட பல நேரங்கில், எல்லாமே கடவுள் கொடுத்தது என்பதை உணராமல், எல்லாமே என்னால்தான் நடக்கிறது என்ற மமதையும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இத்தகையதொரு மனப்பான்மை நம்மிடத்தில் இருந்து மறைந்து கடவுளுடைய கையில் நான் ஒரு கருவி என்ற மனப்பான்மையோடு வாழவேண்டும்.

ஆகவே, தூய பீத்தின் நினைவு நாளைக் கொண்டாம் நாம், அவரைப் போன்று கடவுள் கொடுத்த திறமையை கடவுளின் திருப்பெயர் விளங்கப் பயன்படுத்துவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

24 May 2020

சாலையோர மாதா May 24

இன்றைய புனிதர்
2020-05-24
சாலையோர மாதா

இத்தாலி மொழியில் "மடோநாடெல்லா ஸ்ட்ராடா" என்று அழைக்கப்படும். சாலையோர மாதாவின்மீது இயேசு சபையினருக்கு என்றுமே ஒரு தனி பக்தி உண்டு. இவ்வாலயம் இயேசு சபையினருக்கு என்றுமே ஒரு தனி பக்தி உண்டு. இவ்வாலயம் இயேசு சபையின் முதல் ஆலயம். இவ்வாலயத்தை மையமாக வைத்தே புனித இஞ்ஞாசியாரும், அவர் தம் தோழர்களும் தங்களது ஆன்மீக பணிகளில் ஈடுபட்டனர். இவ்வாலயத்தில் மன்றாடிவிட்டு சென்றபோது செய்த காரியங்கள் அனைத்தையும் வெற்றிப்பெற்றது. இதனால் இந்த சிற்றாலயத்திற்கு இன்று வரை தனிச்சிறப்பு பெற்று வருகின்றது.

கி.பி. 1538 ஆம் ஆண்டின் இறுதியில் புனித இனிகோ தம் தோழர்களுடன் இந்த ஆலயத்திற்கு அருகில் கிடைத்த ஓர் வீட்டில் தங்கிருந்து தங்களின் பணிகளில் ஈடுபட்டனர். இந்த ஆலயத்தில் அடிக்கடி திருப்பலி நிறைவேற்றுவது, மறையுரை ஆற்றுவது, ஒப்புரவு அருட்சாதனம் அளிப்பது, மறைக்கல்வி போதிப்பது என பல பணிகள் இவர்களின் முதன்மை பணிகளாக அமைந்தது. அவ்வாலயத்தின் பங்குத்தந்தையாக இருந்த பீட்டர் கொடாசியோவுக்கு (Peter Codasio) இயேசு சபையினர் ஆற்றிய பணிகள் மிகவும் பிடித்திருந்தது. அப்போது 1538 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 1539 மே வரை உரோமையிலும், சுற்றுவட்டாரங்களிலும் கடுங்குளிரும், உணவுப்பற்றாக்குறையும் மக்களை வாட்டி வதைத்தது. புனித இனிகோ தம் சகோதரர்களுடன் 3000 மக்களின் துயர்நீக்கி, உணவும், உடையும் கொடுத்து வந்தார். இத்தொண்டு பங்கு குரு பீட்டர் கொடாசியோவின் நெஞ்சை நெகிழ வைத்தது. அவர்களின் தொண்டால் பங்கு குரு பெரிதும் ஈர்க்கப்பட்டார். இதனால் அச்சபையில் சேரவிரும்பி, ஒருமாத தியானத்தில் ஈடுபட்டு, இறுதியில் 1539 ஆம் ஆண்டு இயேசு சபையில் சேர்ந்தார். இவர்தான் இயேசு சபையின் முதல் இத்தாலியர் ஆவார். அதன்பின் இவர் வழியாக சட்டரீதியாக சாலையோர மாதா ஆலயம் இயேசு சபைக்கு கிடைத்தது.

இந்த ஆலயம் மிகவும் சிறியதாகவும், குறுகலாகவும் இருந்ததால் பல மக்கள், பல ஆண்டுகளாக, ஆலயத்தின் வெளியே நின்றவாறே திருப்பலியில் பங்குக்கொண்டனர். இதனால் இயேசு சபையினர் அனைவரின் உழைப்பால் இவ்வாலயத்தின் முன்னால் திருப்பலிக்கென்று இடம் ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் இயேசு சபையினர், தங்குவதற்கும், பணிபுரிவதற்கும் வசதியாக தந்தை பீட்டர் தம் தந்தையின் சொத்துக்களை விற்றுப்பெரிய வீடு ஒன்றை அமைத்து கொடுத்தார். அச்சமயத்தில் இயேசு சபையில் இறந்தவர்கள் இவ்வாலயத்தில்தான் அடக்கம் செய்யப்பட்டார்கள். புனித பீட்டர், இவரின் தந்தை கொடாசியோ, புனித இனிகோ அனைவரும் இவ்வாலயத்தில் தான் அடக்கம் செய்யப்பட்டார்கள்.

இவர்களின் இறப்பிற்கு பின் 1565-ல் பிரான்சிஸ் போர்ஜியா(Francis Borgiya) என்பவர் இயேசு சபையின் தலைவராக பொறுப்பேற்றார். இவரது காலத்தில் ஜேசு என்ற பெயரில் பேராலயம் ஒன்று கட்டுவதற்காக முன்னிருந்த சிற்றாலயத்தை இடித்துவிட்டு, இன்று ஜேசு என்றழைக்கப்படும் பேராலயத்தைக் கட்டினார். இவ்வாலயம் உரோம் நகரில் உள்ள ஆலயங்களில் மிகவும் கவர்ச்சிகரமானமாக காணப்படுகின்றது. இன்றுவரை உலகின் எப்பகுதியிலிருந்தும் இயேசு குருக்கள் உரோம் வந்தாலும் இவ்வாலயத்தில், சிற்றாலயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட மாதா உருவத்தின் முன், திருப்பலி நிறைவேற்றுவதில் தனி ஆர்வம் காட்டுகின்றனர்.


செபம்:
புனித.கன்னி மரியாளே எமக்காக இயேசுவை மன்றாடும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

மறைப்பணியாளர், துறவி, சபைநிறுவுநர் பிரான்சு ப்ஃபானர் Franz Pfanner
பிறப்பு: 21 செப்டம்பர் 1825, லாங்கன் Langen, ஆஸ்திரியா
இறப்பு: 24 மே 1909, எம்மாவுஸ், தென் ஆப்ரிக்கா


பிராடோ நகர், மாநிலத்தலைவர், மறைசாட்சி யோஹானஸ் Johannes von Prado OFM
பிறப்பு: 1563, மோர்கோவேஜோ Morgovejo, ஸ்பெயின்
இறப்பு: 24 மே 1631 மராக்கேஷ் Marraksesch, மொராக்கோ Marokko
முத்திபேறுபட்டம்: 1728

† இன்றைய திருவிழா †
(மே 24)

✠ சாலையோர மாதா ✠
(Madonna Della Strada)

திருவிழா நாள்: மே 24

“மடோன்னா டெல்லா ஸ்ட்ரடா” (Madonna Della Strada), “ஸான்டா மரியா டெல்லா ஸ்ட்ரடா” (Santa Maria Della Strada), “பாதையோர அன்னை” (Our Lady of the Way) மற்றும் “சாலையோர மாதா” (Our Lady of the Road) என்ற பெயர்களிலெல்லாம்  அழைக்கப்படும் மரியன்னையின் ஒரு திருச்சொரூப படம் ரோம் நகரிலுள்ள “கேசு தேவாலயத்தில்” (Church of the Gesu in Rome) போற்றிப் பாதுகாக்கப்படுகின்றது. இத்தேவாலயம், இயேசு சபையினரின் “தாய் தேவாலயம்” (Mother Church of the Society of Jesus) என்று அறியப்படுகின்றது.

“சாலையோர மாதா” இயேசு சபையினரின் பாதுகாவலியாவார்.

மாதாவின் மீது இயேசு சபையினருக்கு என்றுமே ஒரு தனி பக்தி உண்டு. இவ்வாலயம் இயேசு சபையின் முதல் ஆலயம் ஆகும். இவ்வாலயத்தை மையமாக வைத்தே புனித இஞ்ஞாசியாரும், அவர் தம் தோழர்களும் தங்களது ஆன்மீக பணிகளில் ஈடுபட்டனர். இவ்வாலயத்தில் மன்றாடிவிட்டு சென்றபோது செய்த காரியங்கள் அனைத்துமே வெற்றி பெற்றது. இதனால் இந்த சிற்றாலயத்திற்கு இன்று வரை தனிச்சிறப்பு உள்ளது.

கி.பி. 1538ம் ஆண்டின் இறுதியில் புனித இனிகோ தம் தோழர்களுடன் இந்த ஆலயத்திற்கு அருகில் கிடைத்த ஓர் வீட்டில் தங்கிருந்து தங்களின் பணிகளில் ஈடுபட்டனர். இந்த ஆலயத்தில் அடிக்கடி திருப்பலி நிறைவேற்றுவது, மறையுரை ஆற்றுவது, ஒப்புரவு அருட்சாதனம் அளிப்பது, மறைக்கல்வி போதிப்பது என பல பணிகள் இவர்களின் முதன்மை பணிகளாக அமைந்தது. அவ்வாலயத்தின் பங்குத்தந்தையாக இருந்த பீட்டர் கொடாசியோவுக்கு (Peter Codasio) இயேசு சபையினர் ஆற்றிய பணிகள் மிகவும் பிடித்திருந்தது. அப்போது கி.பி. 1538ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல், 1539 மே மாதம் வரை ரோமிலும், சுற்றுவட்டாரங்களிலும் கடுங்குளிரும், உணவுப் பற்றாக்குறையும் மக்களை வாட்டி வதைத்தது. புனிதர் இனிகோ தம் சகோதரர்களுடன் 3000 மக்களின் துயர் நீக்கி, உணவும், உடையும் கொடுத்து வந்தார். இத்தொண்டு பங்கு குரு பீட்டர் கொடாசியோவின் நெஞ்சை நெகிழ வைத்தது. அவர்களின் தொண்டால் பங்கு குரு பெரிதும் ஈர்க்கப்பட்டார். இதனால் அச்சபையில் சேரவிரும்பி, ஒருமாத தியானத்தில் ஈடுபட்டு, இறுதியில் கி.பி. 1539ம் ஆண்டு, இயேசு சபையில் சேர்ந்தார். இவர்தான் இயேசு சபையின் முதல் இத்தாலியர் ஆவார். அதன்பின் இவர் வழியாக சட்டரீதியாக சாலையோர மாதா ஆலயம் இயேசு சபைக்கு கிடைத்தது.

இந்த ஆலயம் மிகவும் சிறியதாகவும், குறுகலாகவும் இருந்ததால் பல மக்கள், பல ஆண்டுகளாக, ஆலயத்தின் வெளியே நின்றவாறே திருப்பலியில் பங்குக்கொண்டனர். இதனால் இயேசு சபையினர் அனைவரின் உழைப்பால் இவ்வாலயத்தின் முன்னால் திருப்பலிக்கென்று இடம் ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் இயேசு சபையினர், தங்குவதற்கும், பணிபுரிவதற்கும் வசதியாக தந்தை பீட்டர் தம் தந்தையின் சொத்துக்களை விற்றுப்பெரிய வீடு ஒன்றை அமைத்து கொடுத்தார். அச்சமயத்தில் இயேசு சபையில் இறந்தவர்கள் இவ்வாலயத்தில்தான் அடக்கம் செய்யப்பட்டார்கள். புனித பீட்டர், இவரின் தந்தை கொடாசியோ, புனித இனிகோ அனைவரும் இவ்வாலயத்தில் தான் அடக்கம் செய்யப்பட்டார்கள்.

இவர்களின் இறப்பிற்கு பின் கி.பி. 1565-ல் பிரான்சிஸ் போர்ஜியா (Francis Borgiya) என்பவர் இயேசு சபையின் தலைவராக பொறுப்பேற்றார். இவரது காலத்தில் ஜேசு என்ற பெயரில் பேராலயம் ஒன்று கட்டுவதற்காக முன்னிருந்த சிற்றாலயத்தை இடித்துவிட்டு, இன்று ஜேசு என்றழைக்கப்படும் பேராலயத்தைக் கட்டினார். இவ்வாலயம் ரோம் நகரில் உள்ள ஆலயங்களில் மிகவும் கவர்ச்சிகரமானமாக காணப்படுகின்றது. இன்றுவரை உலகின் எப்பகுதியிலிருந்தும் இயேசு சபை குருக்கள் ரோம் வந்தாலும் இவ்வாலயத்தில், சிற்றாலயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட மாதா திருச்சொரூபத்தின் முன், திருப்பலி நிறைவேற்றுவதில் தனி ஆர்வம் காட்டுகின்றனர்.

கிறிஸ்தவர்களின் சகாய அன்னை (மே 24)

(24-05-2020) 

கிறிஸ்தவர்களின் சகாய அன்னை (மே 24)
“சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்றுகொண்டிருந்தனர். இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவளித்து வந்தார் (யோவா 19: 25-27)

வரலாறு

திருச்சபை ஒவ்வொரு கால கட்டத்திலும் பல்வேறு விதமான நெருக்கடிகளையும் சவால்களையும் சந்தித்தது என்பது யாவரும் அறிந்த ஒரு விஷயம். திருத்தந்தை ஏழாம் பத்திநாதர் திருச்சபையின் தலைவராக, திருத்தந்தையாக இருந்த சமயத்தில் திருச்சபை புதுவிதமான பிரச்சனை ஒன்றைச் சந்தித்தது. அது என்னவெனில் மாவீரன் (?) நெப்போலியன் திருத்தந்தை ஏழாம் பத்திநாதரைப் பிடித்து சவானா என்ற இடத்தில் சிறை வைத்தான். 1808 ஆம் ஆண்டிலிருந்து 1814 ஆம் ஆண்டு வரை ஏறக்குறைய 6 ஆம் ஆண்டுகள் சிறையில் இருந்த திருத்தந்தை பலவிதமான சித்ரவதைகளை அனுபவித்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் 1814 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 17 ஆம் நாள் திருத்தந்தை ஏழாம் பத்திநாதர் விடுதலையாகி உரோமை நகருக்கு வந்தார். அவர் உரோமை நகருக்கு வரும் வழியில் இருந்த அனைத்து அன்னையின் ஆலயங்களுக்கும் சென்று தான் விடுதலையானதற்கு அன்னைக்கு நன்றி செலுத்தினார். மட்டுமல்லாமல் இதன் பொருட்டு செப்டம்பர் 18 ஆம் வியாகுல அன்னையின் விழாவைக் கொண்டாடப் பணித்தார். இதற்கிடையில் திருத்தந்தை அவர்களை சிறைப்பிடித்து வைத்து பலவிதங்களில் அவரைச் சித்ரவதை செய்த நெப்போலியன் வாட்டர்லூப் என்ற இடத்தில் வீழ்ச்சி அடைத்தான்.

இதைத் தொடர்ந்து 1815 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் நாளில் ‘கிறிஸ்தவர்களின் சகாய அன்னை’ என்று இந்த விழாவை திருத்தந்தை அவர்கள் உலகம் முழுவதும் கொண்டாடப் பணித்தார். திருத்தந்தையைத் தொடர்ந்து தூய தொன் போஸ்கோ கிறிஸ்தவர்களின் சகாய அன்னை பக்தி முயற்சி பல இடங்களிலும் பரவுவதற்குக் காரணமாக இருந்தார். அது மட்டுமல்லாமல், அந்த அன்னையின் பேரில் அருட்சகோதரிகளுக்கு என்று ஒரு துறவற சபையையும் ஏற்படுத்தினார். இவ்வாறு கிறிஸ்தவர்களின் சகாய அன்னை பக்தி முயற்சி எங்கும் பரவியது.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

கிறிஸ்தவர்களின் சகாய அன்னை நினைவு நாளைக் கொண்டாடும் நாம், இந்நாள் நமக்குச் சொல்லும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

அபயம் தர அன்னையை வேண்டுவோம்!

இந்த நாள் நமக்குச் சொல்லக்கூடிய மிக முக்கியமான செய்தி, நாம் நம்முடைய இன்னல் இக்கட்டுகளில் நமக்கு சகாயம் தரும் (சகாய) அன்னையின் உதவியை நாட வேண்டும் என்பதாகும்.

அபயம் வேண்டி அன்னையை நாடியவருக்கு அன்னை பலமுறை அபயம் தந்திருக்கின்றாள். அதில் மிகச் சிறப்பான ஒரு நிகழ்வு இது.

பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் துருக்கிய படையானது மேல்திசை நாடுகள்மீது அதாவது கிறிஸ்தவ நாடுகளின்மீது படையெடுத்து வந்தது. இதனால் கிறிஸ்தவ நாடுகள் அனைத்தும் நடுங்கி ஒடுங்கிக் கொண்டிருந்தன. மக்கள் அழிவின் வாசலிலே தாங்கள் நிற்பதாக எண்ணி கொலை நடுக்கம் கொண்டனர். கிறிஸ்தவ நகரங்கள் ஆட்டங்கண்டன. துருக்கியரின் படையெடுப்பாலும் அவர்களது போர் திறமையாலும் வெற்றிமேல் வெற்றிச்சூடி நாடுகளையெல்லாம் சூறையாடி தன் ஆதிக்கத்தைப் பெருக்கிக்கொண்டு ஐரோப்பிய நாடுகளை நோக்கி முன்னேறிக் கொண்டு வந்ததால் அவைகளை கண்டவர்கள் நிலைகுலைந்து விட்டனர். கடலிலே கப்பலோடு கப்பல் மோதின. கடும் போர் ஏற்பட்டது.

இதற்கு மத்தியில் லெப்பாந்தோ கடலில் தொன் ஜூவான் தளபதியின் படைகளுக்கும் துருக்கியப் படைகளுக்கும் இடையே பெரும் போர் மூளவே யாருக்கு வெற்றி என்ற தவிப்பும், எதிரியின் எண்ணற்ற வீரர்களையும் அவர்களின் பலத்தையும் கண்ட கிறிஸ்துவ உலகத்தினர் சொல்லொண்ணா துன்பம் அடைய கண்ணீர் கண்களிலே மல்க கன்னிமரியின் அபயம் தேடி கைவிரித்து வேண்டினர். அந்த அவல நேரத்தில் கன்னிமரி அபயம் அளித்தாள். ஆம், எதிரிகளுக்கு சாதகமாக வீசிய காற்று திடீரென அற்புதவிதமாக கிறிஸ்தவ போர் வீரர்களுக்குத் துணையாக திசைமாறி வீச கப்பல்கள் மோதி சிதறின. தீப்பற்றியெரிந்தன. இதனால் கிறிஸ்துவ படை துருக்கியரை துரத்தி முறியடித்து வெற்றி வாகை சூடியது.

அன்னையானவள் தன்னை அபயம் எனத் தேடும் தன் மக்களுக்கு எந்நாளும் அபயம் தருவாள் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.

ஆகவே, கிறிஸ்தவர்களின் சகாயமாக இருக்கும் அன்னையிடம் அடைக்கலம் புகுவோம். அவருக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

23 May 2020

கோர்ஸிகாவின் புனிதர் ஜூலியா May 23

† இன்றைய புனிதர் †
(மே 23)

✠ கோர்ஸிகாவின் புனிதர் ஜூலியா ✠
(St. Julia of Corsica)
கன்னியர்/ மறைசாட்சி:
(Virgin, Martyr)

பிறப்பு: ஜூலை 25
கர்தாஜ், மேற்கத்திய ரோமப் பேரரசு
(Carthage, Western Roman Empire)

இறப்பு: கி.பி. 5ம் நூற்றாண்டு (439)
கோர்ஸிகா, மேற்கத்திய ரோமப் பேரரசு
(Corsica, Western Roman Empire)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை 
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

புனிதர் பட்டம்: ஃபெப்ரவரி 14

நினைவுத் திருவிழா: மே 23

பாதுகாவல்:
கோர்ஸிகா (Corsica), லிவோர்னோ (Livorno), 
சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்கள் (Torture victims)
கைகள் மற்றும் கால்களின் நோய்க்குறிகள் (Pathologies of the hands and the feet)

புனிதர் “கோர்சிகாவின் ஜூலியா” (Saint Julia of Corsica) என்றும், புனிதர் “கார்தாஜ்’ன் ஜூலியா” (Saint Julia of Carthage) என்றும், புனிதர் நோன்ஸா’வின் ஜூலியா (Saint Julia of Nonza) என்றும் அறியப்படும் புனிதர் ஜூலியா, கன்னியரும், மறைசாட்சியும் ஆவார். இவரும் புனிதர் “டெவோட்டா’வும் (Saint Devota) கோர்ஸிகா’வின் (Corsica) பாதுகாவலர்களாக திருச்சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ரோமானிய ஆட்சியின் கீழே “கோர்சிகா” கிறிஸ்தவ மறையை தழுவியதன் முன்னர் (Pre-Christian Corsica under Roman rule) நடந்த கிறிஸ்தவர்களின் துன்புருத்தல்களின்போது இவர்கள் மறைசாட்சிகளாக கொல்லப்பட்டதாக சரித்திரம் இயம்புகின்றது.

“விக்டர் விட்டேன்சிஸ்” (Victor Vitensis) எனும் ஒரு ஆபிரிக்க ஆயர் (Bishop of Africa), ரோம சாம்ராஜ்ஜியத்தின் ஆபிரிக்க பிராந்திய நாடான “வண்டல்ஸ்” (Vandals) நாட்டின் அரசர்கள் “ஜீஸெரிக்” (Geiserici) மற்றும் “ஹனுரிக்” (Hunirici) ஆகியோரின் காலத்தில் நடைபெற்ற கிறிஸ்தவ துன்புறுத்தல்கள் பற்றிய சரித்திர பதிவுகளை எழுதினார்.

கி,பி, 429ம் ஆண்டு, அரசன் “ஜீஸெரிக்” (Geiseric) சுமார் 80,000 பழங்குடியினருடன் ஸ்பெயின் நாட்டிலிருந்து ஆபிரிக்கா நோக்கி படையெடுத்தான். கி.பி. சுமார் 439ம் ஆண்டு, “கார்தாஜ்” (Carthage) நாட்டை கைப்பற்றினான். அதன் பின்னர் அவன் அங்குள்ள கிறிஸ்தவ மக்களை “ஆரியனிஸ” (Arianism) மதத்திற்கு மாற்ற எடுத்துக்கொண்ட கொடுங்கோல் துன்புறுத்தல் நடவடிக்கைகள் அப்போதிருந்த கிறிஸ்தவ ஆயர்கள் எவராலும் மறக்கவோ, பொறுத்துக்கொள்ளவோ இயலாததாகும்.

ஜூலியா, ஒரு “கார்தாஜ்” (Carthaginian girl) பெண்ணாவார். அவர் “யூசேபியஸ்” (Eusebius) என்பவனால் அவரது நகரிலிருந்து பிடித்து கொண்டுவரப்பட்டார். பின்னர் அவரை அடிமையாக விற்றான். இதுபோலவே கீழ்படியாத கிறிஸ்தவர்கள் பலரை அவர்கள் அகற்றினார்கள். “யூசேபியஸ்” (Eusebius) ஒரு பாலஸ்தீனிய நாட்டின் சிரிய (Citizen of Syria in Palestine) பிரஜை ஆவான். “கேப் கோர்ஸ்” (Cap Corse) துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த சரக்குக் கப்பலில் போதையின் கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருந்தனர். அவர்களின் பாவச் செயல்களுக்காக ஜூலியா மிகவும் மன வருத்தத்தில் இருந்தார். கப்பலிலுள்ள ஒரு பெண், பாகனிய கடவுளர்களை பூஜிக்க மறுப்பதாகவும், ஏளனம் செய்வதாகவும் “ஃபெலிக்ஸ் சாக்சோ” (Felix Saxo) என்பவனிடம் கூறினர். ஃபெலிக்ஸ், அப்பெண்ணை நமது வழிக்கு கொண்டுவாருங்கள்; அல்லது அவளை என்னிடம் கொண்டுவாருங்கள் என்று யூசேபியஸிடம் சொன்னான். யூசேபியஸோ, நான் “எவ்வளவோ முயற்சித்தும் எனக்கு வெற்றி கிடைக்கவில்லை. உங்களால் முடிந்தால் முயற்சி செய்யுங்கள்” என்றான்.

“ஃபெலிக்ஸ் சாக்சோ” (Felix Saxo) நயமாகவும் பயமுறுத்தியும் முயன்று பார்த்தான். ஆனால், ஜூலியா கிறிஸ்துவின் விசுவாசத்தை கைவிட மறுத்துவிட்டார். ஆகவே, சிறிதும் இரக்கமற்ற முறையில் துன்புறுத்தப்பட்டு ஜூலியா மறைசாட்சியாக கொல்லப்பட்டார்.

பெர்த் நகர் புனிதர் வில்லியம் May 23

† இன்றைய புனிதர் †
(மே 23)

✠ பெர்த் நகர் புனிதர் வில்லியம் ✠✠
(St. William of Rochester)
மறைசாட்சி:
(Martyr)

பிறப்பு: கி.பி 12ம் நூற்றாண்டு
பெர்த், ஸ்காட்லாந்து
(Perth, Scotland)

இறப்பு: கி.பி 1201
ரோச்செஸ்டர், இங்கிலாந்து
(Rochester, England)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

புனிதர் பட்டம்: கி.பி 1256
திருத்தந்தை நான்காம் அலெக்சாண்டர்
(Pope Alexander IV)

நினைவுத் திருநாள்: மே 23

பாதுகாவல்: தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள்

ரோச்செஸ்டர் நகர் வில்லியம் (Saint William of Rochester) என்றும் அழைக்கப்படும் பெர்த் நகர் புனிதர் வில்லியம் (Saint William of Perth), இங்கிலாந்தில் மறைசாட்சியாக மறைந்த ஒரு ஸ்காட்டிஷ் துறவி ஆவார். அவர் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாவலர் ஆவார்.

அக்காலத்தில், ஸ்காட்லாந்து (Scotland) நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான பெர்த் (Perth) நகரில் பிறந்த இவர், இளமையில், ஓரளவு முரட்டுத்தனமாக இருந்தார். ஆனால், வளர வளர, அவர் கடவுளின் சேவைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். வர்த்தக ரீதியாக ஒரு ரொட்டி தயாரிக்கும் (Baker) தொழில் செய்து வந்த இவர், (சில ஆதாரங்கள் அவர் ஒரு மீனவர் என்று கூறுகிறார்கள்), தாம் உற்பத்தி செய்யும் ஒவ்வொரு பத்தாவது ரொட்டியையும் ஏழைகளுக்காக ஒதுக்குவது அவருக்குப் பழக்கமாக இருந்தது.

வில்லியம் தினம்தோறும் காலை திருப்பலி காண ஆலயம் செல்லும் வழக்கம் கொண்டிருந்தார். ஒரு நாள், வெளிச்சம் கூட சரியாக விடிகாலை வேளை, தேவாலயத்தின் வாசலில் ஒரு கைவிடப்பட்ட குழந்தையைக் கண்டு, அதனை தத்தெடுத்தார்.  குழந்தைக்கு டேவிட் எனும் பெயர் சூட்டிய அவர், தமது தொழிலான ரொட்டி தயாரிக்கும் பணியையும், வர்த்தகத்தை கற்பித்தார். சில காலத்தின் பின்னர், அவர் புனித திருத்தலங்களைப் பார்வையிட திட்டமிட்டார். மேலும், புனிதப்படுத்தப்பட்ட பணப்பையையும் (உண்டியல் பணம்), தமது வளர்ப்புப் பிள்ளையான டேவிட்டையும், ஊழியர்களையும்  அழைத்துக்கொண்டு, திருயாத்திரை புறப்பட்டார்.

அவர்கள் ரோச்செஸ்டர் (Rochester) நகரில் மூன்று நாட்கள் தங்கியிருந்தனர். அடுத்த நாள் கேன்டர்பரி (Canterbury) நகருக்கு எண்ணினர். அங்கிருந்து ஜெருசலேம் (Jerusalem) நகருக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதற்கு பதிலாக, டேவிட் வேண்டுமென்றே தனது வரர்ப்புத் தந்தையை வேண்டுமென்றே ஒரு குறுக்கு வழியில் தவறாக வழிநடத்தினான். வழியில், அவர்கள் வழிச்செலவுக்கும், காணிக்கைகளுக்குமாக சேமித்து வைத்திருந்த உண்டியல் பணம் முழுதையும் கொள்ளையடித்தான். தமது வளர்ப்புத் தந்தையான வில்லியமை தலையில் அடித்து கீழே தரையில் வீழ்த்திய அவன், அவரது தொண்டையை அறுத்து அவரை கொலை செய்தான்.

அவரது உடல், மனநோயாளி பெண்மணி ஒருத்தியால் கண்டெடுக்கப்பட்டது. அப்பெண்மணி, "ஹனிசக்கிள்" (Honeysuckle) என்றழைக்கப்படும் மலர்களாலான ஒரு மலர்மாலை பின்னி, அதனை வில்லியமின் உடலின் தலையருகே வைத்தாள். (இந்த "ஹனிசக்கிள்" வகை மலர்கள், வட அமெரிக்கா (North America) மற்றும் யூரேசியா  (Eurasia) நாடுகளில் காணப்படுகிறது.) ஒரு மலர்மாலையை தனது தலையிலும் சூடிக்கொண்டாள். அக்கணமே, அவளை பிடித்திருந்த மனநோய் அவளை விட்டகன்றது.

நடந்த சம்பவங்களை கேட்டறிந்த ரோச்செஸ்டர் நகர (Monks of Rochester) துறவிகள், வில்லியமின் உடலை ஆலயத்திற்கு கொண்டு சென்று அங்கேயே அடக்கம் செய்தனர். அவர் புனித ஸ்தலங்களுக்கு யாத்திரை சென்ற காலத்தில் மரித்ததாலும், மனநோயாளி பெண்மணி குணமான காரணத்தினாலும், அவர் மறைசாட்சியாக கௌரவிக்கப்பட்டார். மனநோயாளி பெண்மணி குணமான அதிசயத்தின் விளைவாகவும், அவரது மரணத்திற்குப் பிறகு அவரது பரிந்துரையில் செய்யப்பட்ட மற்ற அற்புதங்களின் விளைவாகவும், அவர் மக்களால் ஒரு புனிதர் என்று வணங்கப்பட்டார்.

ரோச்செஸ்டர் (Rochester) நகரில் இவரது பெயரில் அர்ப்பணிக்கப்பட்ட ஆலயமும் (The shrine of St William of Perth), இவரது பெயரால் நிறுவப்பட்ட தொடக்கப்பள்ளியும் (St William of Perth Primary School) உள்ளன.

ஜான் பாப்டிஸ்ட் தே ரோச்சி (மே 23)

இன்றைய புனிதர் :
(23-05-2020)

ஜான் பாப்டிஸ்ட் தே ரோச்சி (மே 23)
“ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னை கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்” (மத் 25: 36 -37)

வாழ்க்கை வரலாறு

ஜான் பாப்டிஸ்ட், 1698 ஆம் ஆண்டு இத்தாலியில் உள்ள வல்டாஜியோ என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய குடும்பம் மிக சாதாரண குடும்பம். ஆதலால் இவருடைய படிப்புச் செலவை இவருடைய குடும்பத்தாரால் பார்க்க முடியாமல் போய், நல்லுள்ளம் கொண்ட ஒருவர்தான் ஏற்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இவருக்குக் 13 வயது நடக்கும்போது இயேசு சபையினர் நடத்தி வந்த கல்லூரியில் சேர்ந்து படித்தார். அதன்பின்னர் சாமிநாதர் சபையில் சேர்ந்து 1721 ஆம் ஆண்டு குருவாக அருட்பொழிவு செய்யப்பட்டார். குருவாக அருட்பொழிவு செய்யப்பட்ட பின்பு பற்பல பணிகளை மிகச் சிறப்பாக செய்து வந்தார். குறிப்பாக மருத்துவ மனைகளில் இருந்த நோயாளிகளைச் சந்தித்து அவர்களைத் தேற்றினார்; கைவிடப்பட்டோரையும் அனாதைகளையும் மிகச் சிறப்பான முறையில் பராமரித்து வந்தார். அவர்களுக்காகப் புதிதாக ஒரு மருத்துவ மனையையும் கட்டித் தந்து உதவினார். இதனால் இவர் எல்லாருடைய நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றார்.

ஜான் பாப்டிஸ்டுக்கு அடிக்கடி வலிப்பு நோய் வந்தது. அது அவருடைய உடல் நலத்தை நிறையவே பாதித்தது. அத்தகைய சூழ்நிலையிலும் அவர் ஏழை எளிய மக்கள்மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி அவர்களை நல்ல விதமாய் பராமரித்து வந்தார்.

சில காலத்திற்குப் பின் இவர் சிவித்தா காஸ்தலேனே என்னும் இடத்திற்கு மாற்றலாகிச் சென்றார். அங்கிருந்த ஆயர் இவரைக் குறித்து கேள்விப்பட்டு இவரை மக்கள் ஒப்புரவு அருட்சாதனத்தை செய்வதற்கென்று முழுநேரப் பணியாளராக நியமித்தார். அந்தப் பணியையும் இவர் சிறந்த விதத்திலே செய்து வந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவருடைய நோய் முற்றியது. இதனால் இவர் 1764 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி இறையடி சேர்ந்தார். இவருக்கு 1881 ஆம் ஆண்டு திருத்தந்தை பதிமூன்றாம் சிங்கராயர் அவர்களால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தூய ஜான் பாப்டிஸ்ட் தே ரோச்சியின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. சமூகத்தின் மீதான அக்கறை

தூய ஜான் பாப்டிஸ்டின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது அவர் அடுத்தவர்மீதும் இந்த சமூகத்தின் மீதும் கொண்டிருந்த அன்பும் அக்கறையும்தான் நம்முடைய நினைவுக்கு வருகின்றது. இவரைப் போன்று நாம் அடுத்தவர் மீதும் இந்த சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டு வாழ்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பல நேரங்களில் நாம், என்னுடைய குடும்பம், என்னுடைய உறவுகள் என்றே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இத்தகைய சூழ்நிலையில் அடுத்தவர் மீதும் இந்த சமூகத்தின் மீது அக்கறைகொண்ட மக்களாக வாழ்ந்து காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.

ஓர் ஊரில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் யாரைப் பற்றியும் அக்கறையும் இல்லாமல் தானுண்டு தன்னுடைய வேலை உண்டு என்றே வாழ்ந்து வந்தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவனுடைய தந்தை அவனிடம் பிறர் நலம் பேணும்படி அறிவுரை கூறிக்கொண்டே இருந்தார். இதனால் கடுப்பான மகன் தந்தைக்கு சரியான பாடம் புகட்ட நினைத்தான். எனவே அவன் ஒரு காலிக்குவளையை எடுத்து தந்தையின் முன்பாகக் காட்டி, அதில் பாலை நிரப்பினான். “இந்தக் குவளை நான். இதிலுள்ள பால் என் வாழ்க்கை” என்றான். உடனே அவனுடைய தந்தை சிறிது சக்கரையை அதில் கலந்தார்.

பின்னர் அவர் அவனிடத்தில் சொன்னார், “சமூக அக்கறை என்னும் சக்கரையை இல்லாமல் உன் கசக்கும்”. இதைக் கேட்டு உள்ளம் குத்தப்பட்ட அவன் தன் வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டான்.

ஆம், அடுத்தவர் மீதான அக்கறையும் இந்த சமூகத்தின் மீதான அக்கறையும் நமக்கு இல்லையென்றால் நமது வாழ்வு கசக்கத்தான் செய்யும்.

ஆகவே, தூய ஜான் பாப்டிஸ்ட்டின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று அடுத்தவர் மீதான அக்கறை கொண்டு வாழ்வோம், நம்மிடத்தில் இருக்கும் சுயநலப் போக்கைத் தவிர்ப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

22 May 2020

தூய ரீட்டா (மே 22)

இன்றைய புனிதர் :
(22-05-2020)

தூய ரீட்டா (மே 22)
நிகழ்வு

திருமணத்திற்கு முன்பே ரீட்டாவிற்கு அகுஸ்தினாருடைய மடத்தில் சேர்ந்து துறவியாக வாழவேண்டும் என்று ஆசை. ஆனால் அவருடைய பெற்றோர்களுடைய கட்டாயத்தின் பேரில் அவர் மணந்துகொண்டார். தன்னுடைய கணவர் மற்றும் பிள்ளைகள் இறந்தபிறகும் தனித்துவிடப்பட்ட சூழ்நிலையில் துறவியாக மடத்தில் சேரவேண்டும் என்று விரும்பினார். ஆனால் துறவு மடத்தில் இருந்தவர்கள் திருமணமான ஒருவரை துறவுமடத்தில் சேர்ப்பது நல்லதல்ல என்று சொல்லி மறுத்துவிட்டனர். இப்படிப்பட்ட நிலையில் அவர் தன்னுடைய இஷ்டப் புனிதர்களான தூய அகுஸ்தினார், தூய திருமுழுக்கு யோவான், தூய நிக்கோலாஸ் ஆகியோரிடம் இடைவிடாது மன்றாடினார் எப்படியாவது தான் துறவுமடத்தில் சேரவேண்டும் என்று.ஒருநாள் அவர் தனக்கு விருப்பமான அந்த மூன்று தூயவர்களிடம் மன்றாடிக்கொண்டிருக்கும்போது அவர்கள் மூவரும் இவரை கைபிடித்து அழைத்துக்கொண்டு போய் அகுஸ்தினாருடைய திருவுமடத்தில் இருந்த சிற்றாலயத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டு, கதவை அடைத்துவிட்டுச் அங்கிருந்து போய்விட்டனர்.

அடுத்தநாள் துறவு மடத்தில் இருந்தவர்கள் சிற்றாலத்திற்கு வந்தபோது அது அடைக்கப்பட்டுக் கிடந்தது. ஒருவழியாக மடத்தில் இருந்தவர்கள் கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனபோது அங்கே ரீட்டா முழந்தாள் படியிட்டு இறைவனிடம் உருக்கமாக வேண்டிக்கொண்டிருந்தார். “எப்படி இங்கே வந்தாய்?” என்று அவர்கள் அவரிடம் கேட்க அகுஸ்தினாரும் திருமுழுக்கு யோவானும் தூய நிக்கோலாசம் தன்னை இங்கு வந்து விட்டுச்சென்றதாக கூறினார். உடனே அங்கிருந்த அனைவரும் இறையருளால்தான் அவர் இங்கு வந்திருக்கிறார் என்பதை உணர்ந்து அவரை துறவுமடத்தில் துறவியாக சேர்த்துக்கொண்டார்கள்.

வாழ்க்கை வரலாறு

ரீட்டா 1381 ஆம் ஆண்டு இத்தாலில் உள்ள ஸ்போலேடோ என்ற ஊரில் இருந்த ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோருக்கு நீண்டநாட்களாக குழந்தையே இல்லை. இடைவிடாத ஜெபத்தினால்தான் இவர்கள் ரீட்டாவைப் பெற்றெடுத்தார்கள். இவருடைய தாய் இறைபக்தியில் சிறந்து விளங்கினார். அதனால் இவர் தன்னுடைய மகளான ரீட்டாவை இறைபக்தியில் சிறப்பாக வளர்த்தெடுத்தார். ரீட்டா சிறுவயது முதற்கொண்டே ஜெபத்திலும் ஏழைகளுக்கு உதவும் நல்ல பண்பிலும் சிறந்து விளங்கினாள்.

இவருக்கு பதினெட்டு வயது நடந்துகொண்டிருந்தபோது இவர் தூய அகுஸ்தினாருடைய சபையில் துறவியாகச் சேரவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். ஆனால் இவருடைய பெற்றோர் வயதானவர்கள் என்பதாலும் இவர்களைப் பராமரிக்க ஆள் இல்லை என்பதாலும் இவர் பெற்றோருடைய கட்டாயத்தில் பேரில் பெர்டினான்ட் என்ற மனிதனை மணந்துகொண்டார். அவர் சாதாரண மனிதாக இல்லை. முரடனாகவும் ரீட்டாவை எப்போதும் அடித்துத் துன்புறுத்துபவனாகவும் இருந்தான். ரீட்டா மிகவும் பொறுமையாக தன்னுடைய கணவர் மனந்திரும்பும்படியாக இறைவனிடம் எப்போதும் வேண்டிக்கொண்டே இருந்தார். இந்த நேரத்தில் ரீட்டாவிற்கு ஜான், பால் என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தார்கள். குழந்தைகள் பிறந்த பின்பாவது தன்னுடைய கணவர் திருந்துவார் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால் அவரோ ரீட்டாவை மேலும் மேலும் அடித்துத் துன்புறுத்திக்கொண்டே இருந்தார்.

நாட்கள் செல்ல செல்ல ரீட்டா தன்னுடைய கணவருக்காக தொடர்ந்து இறைவனிடம் வேண்டிக்கொண்டே இருந்தார். அவர் செய்த ஜெபம் வீண்போகவில்லை. ஆம், அவருடைய கணவர் மனம்மாறினார், புதிய வாழ்க்கை வாழத் தொடங்கினார். எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில் திடிரென்று ஒருநாள் அவருடைய கணவரை மர்ம நபர்கள் சிலர் கொன்றுபோட்டார்கள். அப்போது ரீட்டா அடைந்த துன்பத்திற்கு அளவே இல்லை. ஆனாலும் அவர் ஆண்டவர் இயேசு சிலுவையில் தொங்கியபோது தன்னுடைய பகைவர்களை மன்னித்ததுபோன்று தன்னுடைய கணவரைக் கொன்றவர்களை மன்னித்தார். அவர் மன்னித்தாலும் அவருடைய பிள்ளைகளான ஜானும் பாலும் தங்களுடைய தந்தையைக் கொன்றுபோட்ட கயவர்களைக் கொன்றுபோட துடித்துக்கொண்டிருந்தார்கள். இதை நினைத்து ரீட்டா பெரிதும் கவலைப்பட்டார். அப்போது அவர் கடவுளிடம், “இறைவா! என்னுடைய இரண்டு பிள்ளைகளையும் மனமாறச் செய்யும்.
இல்லையென்றால் அவர்களை உம்மிடத்தில் எடுத்துக்கொள்ளும்” என்று உருக்கமாக மன்றாடினார். அடுத்த ஓராண்டில் ரீட்டாவின் இரண்டு மகன்களும் இறையடி சேர்ந்தார்கள்.

இப்படி கணவரும் பெற்ற பிள்ளைகளும் தன்னைவிட்டுப் போன அவர் தனிமைச் சிறையில் வாடினார். அப்போது அவருக்கு துறவுமடத்தில் சேர்ந்து வாழ்நாளெல்லாம் துறவியாகவே வாழலாம் என்ற எண்ணம் தோன்றியது. அதற்காக அவர் அகுஸ்தினாருடைய துறவுமடத்தை அணுகியபோது, திருமணமான யாரையும் உள்ளே சேர்த்துக்கொள்வது கிடையாது என்று சொல்லி மறுத்துவிட்டனர். இதனால் அவர் மன வருத்தத்திற்கு உள்ளானார். இத்தகைய வேளைகளில் அவர் இறைவனிடமும் தன்னுடைய இஷ்ட புனிதர்களிடம் ஜெபிக்கத் தவறியதில்லை. அப்போதுதான் அவர் அவருடைய இஷ்ட புனிதர்களால் அழைத்துச்செல்லப்பட்டு அகுஸ்தினாருடைய துறவுமடத்தில் கொண்டுபோய் விடப்பட்டார். இதைப் பார்த்த துறவுமடத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் இவரை துறவுமடத்தில் துறவியாக ஏற்றுக்கொண்டார்கள்.

துறவுமடத்தில் சேர்ந்தபிறகு இவர் ஜெபத்திலும் கீழ்ப்படிதலிலும் நற்கருணை பக்தியிலும் சிறந்து விளங்கினார். குறிப்பாக இவர் இயேசுவின் பாடுபட்ட சிரூபத்தை பார்த்து அதிகமாக தியானித்தார். அத்தகைய தருணத்தில்தான் 1441 ஆம் ஆண்டு இயேசுவின் தலையில் இருந்த முள்முடியில் இருந்த ஒரு முள்ளானது அவரது நெற்றியில் பதிந்து அவருக்கு மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தியது. அவர் இறைவனிடத்தில் தன்னுடைய நெற்றியில் பதிந்து வேதனையை ஏற்படுத்தும் முள்ளை நீக்குமாறு எவ்வளவோ கேட்டார். ஆனால் இறைவனோ அது அவருடைய நெற்றியில் என்றைக்கும் இருக்குமாறு செய்தார். நெற்றியில் ஏற்பட்ட காயத்திலிருந்து வழிந்த இரத்தம் சில நேரம் நாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் துறவுமடத்தில் இருந்தவர்கள் அவரை அவருடைய அறையிலிருந்தே ஜெபிக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். இதனால் அவர் தன்னுடைய அறையிலே தங்கி இறைவனிடம் ஜெபித்து வந்தார். அந்த நாட்களில் எல்லாம் (ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு மேல்) அவர் நற்கருணையை மட்டுமே உண்டு வந்தார்.

இப்படி ஜெபத்திலும் தவத்திலும் தன்னுடைய வாழ்வைச் செலவழித்த ரீட்டா 1457 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். 1900 ஆம் ஆண்டு திருத்தந்தை பனிரெண்டாம் சிங்கராயரால் இவர் புனிதையாக உயர்த்தப்பட்டார். திருமணம் செய்துகொள்ள இருக்கும் பெண்கள் தூய ரீட்டாவிடம் ஜெபித்தால் நல்ல கணவர் கிடைப்பார் என்பது ஒரு நம்பிக்கை.


கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ரீட்டாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. விடாமுயற்சி

தூய ரீட்டாவை விடாமுயற்சிக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு என்று சொன்னால் அது மிகையாகது. ஏனென்றால் அவர் இளமைப் பருவத்தில் இருந்தபோது துறவுமடத்தில் சேரவேண்டும் என்று விருப்பம் கொண்டார். அது அவருடைய பெற்றோரால் மறுக்கப்பட்டது. பின்னர் அவர் தன்னுடைய கணவர் மற்றும் பிள்ளைகளை இழந்துநின்றபோதும் துறவறமடத்தில் சேர விரும்பினார். அப்போதும் துறவு மடத்தில் இருந்தவர்களால் அது மறுக்கப்பட்டது. இப்படியாக துறவியாக மாறவேண்டும் என்ற எண்ணம் அவருக்குப் பலமுறை மறுக்கப்பட்டபோதும் அவர் விடாமுயற்சியோடு போராடிக்கொண்டிருந்தார். இறுதியாக அது இறையருளால் நிறைவேறியது. மத்தேயு நற்செய்தி 7:7 ல் ஆண்டவர் இயேசு கூறுவார், “கேளுங்கள் உங்களுகுக் கொடுக்கப்பட்டும், தேடுங்கள் நீங்கள் கண்டைவீர்கள், தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும்” என்று. ஆம், நாம் தொடர்ந்து விடாமுயற்சியோடு ஒரு காரியத்திற்காக போராடும்போது அது நிச்சயமாகக் கிடைக்கும். அதைத் தான் தூய ரீட்டா அவருடைய அவருடைய வாழ்க்கை நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

ஒரு நகரில் இருந்த மிக முக்கியான கடையின் வாசலில் ஜோடி புறாக்கள் கூடிகட்டு இருந்தன. இதைப் பார்த்த அந்த கடையில் இருந்த பணியாளர் புறக்கூண்டை அகற்றி அந்த ஜோடிப் புறாக்களை விரட்டியடித்தார். ஆனால் அந்த புறாக்கள் மீண்டும் மீண்டுமாக அதே இடத்தில் வந்து கூடுகட்டின. இதைப் பார்த்த அந்தக். கடையின் முதலாளி பணியாளிடம், “மீண்டும் மீண்டுமாக அந்தப் பறவைகள் இங்கேயே வந்து கூடுகட்டுவதால் அது இங்கேயே இருந்துவிட்டுப் போகட்டும்” என்று சொல்லி, அவற்றை அங்கேயே தங்க அனுமதித்தார். விடாமுயற்சியோடு ஒரு காரியத்தை செய்தால், அது இப்போது இல்லாவிட்டாலும் ஒருநாள் கைகூடும் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது. தூய ரீட்டாவின் வாழ்வும் நமக்கு அதைத்தான் நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

2. துன்பத்தை ஏற்றுக்கொண்டு வாழ்தல்

தூய ரீட்டா தனக்கு ஏற்பட்ட துன்பத்தை (முள்ளால் ஏற்பட்ட காயத்தை) நினைத்து வருந்தவில்லை. தொடக்கத்தில் அவர் வருந்தினாலும் பின்னாளில் அதனை இறை விருப்பமாக ஏற்றுக்கொண்டார். நம்முடைய வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் துன்பங்களை எப்படிப் பார்க்கிறோம் என சிந்தித்துப் பார்க்கவேண்டும். துன்பத்தை நினைத்து வருந்துகின்றோமா? அல்லது அந்தத் துன்பம் இன்பத்திற்கான நுழைவாயில் என ஏற்றுக்கொள்கிறோமா என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
தூய பவுல் தன்னுடைய உள்ளத்தைத் தைக்கும் முள்ளை நீக்குமாறு இறைவனிடம் கேட்டார். ஆனால் இறைவனோ என் அருள் உனக்குப் போதும், வலுவின்மையில் வல்லமை சிறந்தோங்கும் என சொல்லி அதனை ஏற்றுக்கொள்ளப் பணித்தார். (2 கொரி 12:9) பவுலும் அதனை அப்படியே ஏற்றுக்கொண்டார். தூய ரீட்டாவின் விழாவைக் கொண்டாடும் நாம் துன்பத்தைக் குறித்த நமது பார்வை எப்படிப்பட்டதாக இருக்கின்றது என நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

American Anthem என்ற சிறுகதையில் வரும் நிகழ்ச்சி. இரண்டு நண்பர்கள் வாகனத்தில் போய்க்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் எதிர்பாராத விதமாக விபத்துக்கு உள்ளானார்கள். இரண்டு பேருக்குமே காலில் சரியான அடி. அதனால் அவர்கள் தங்களுடைய காலை இழக்க வேண்டிய சூழல். இந்த விபத்துக்குப் பிறகு ஒரு நண்பன் தன்னை வீட்டுக்குள்ளே அடைத்துக்கொண்டு தனக்கு ஏற்பட்ட இழப்பை நினைத்து வாழ்நாள் முழுவதும் அழுதுகொண்டே இருந்தான். ஆனால் இன்னொரு நண்பனோ தன்னுடைய கால் போனாலும் சக்கர நாற்காலில் உட்கார்ந்துகொண்டு மக்கள் அதிகமாகக் கூடும் தெருக்களில் பாடிக்கொண்டே சென்று மக்களை மகிழ்ச்சிப் படுத்தினான். அவனும் தனக்கு ஏற்பட்ட இழப்பை ஒரு பொருட்டாக நினைக்காமல் மகிழ்ச்சியோடு வாழ்நான்.

நமக்கு வரும் துன்பத்தை நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதில் நம்முடைய வாழக்கை அடங்கி இருக்கிறது என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

ஆகவே, தூய ரீட்டாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் நாம் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழத் துணிவோம், விடாமுயற்சியோடு எதையும் செய்வோம். துன்பத்தை துணிவோடு ஏற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.