ஜூன் 01
ஸ்பொலேட்டோ நகர்ப் புனித போர்டினாடூஸ்
இவர் இத்தாலியில் உள்ள ஸ்பொலேட்டோ நகரில் பங்குப் பணியாளராகப் பணியாற்றியவர்.
தன்னுடைய பங்கில் இருந்த நோயாளர்கள், ஏழைகள்மீது மிகுந்த அன்பும் கரிசனையும் கொண்டவர் இவர். எந்தளவுக்கு என்றால், தன்னிடமிருந்த எல்லாவற்றையும் ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் கொடுக்கக்கூடியவராக இருந்தார்.
இவர் தனக்கு ஓய்வுநேரம் கிடைத்தபோது விவசாயம் செய்துவந்தார். அதிலிருந்து கிடைத்த வருமானத்தையும்கூட இவர் ஏழைகளுக்குக் கொடுத்து வந்தார்.
ஒருநாள் இவர் நிலத்தை உழுது கொண்டிருக்கும்பொழுது, இரண்டு செப்புக் காசுகளைக் கண்டெடுத்தார். அந்தச் செப்புக்காசுகள் அவ்வளவு மதிப்பு இல்லாதவையாக இருந்தாலும், எதற்கும் பயன்படும் என்று அவற்றைத் தன்னுடைய ஆடையில் முடிந்துகொண்டார்.
மாலைவேளையில் இவர் தன்னுடைய வேலையை முடித்துக்கொண்டு திரும்பி வந்தபோது, பிச்சைக்காரர் ஒருவரைக் கண்டார்.
அவர் இவரிடம் பிச்சை கேட்டபொழுது இவர் 'என்னிடம் நிலத்தில் கண்டெடுத்த இரண்டு செப்புக் காசுகளைதானே இருக்கின்றன...! இவற்றையா கொடுப்பது...?'என்று யோசித்துகொண்டு அந்தச் செப்புக் காசுகளை எடுத்தபொழுது, அவை இரண்டும் தங்கக் காசுகளாக மாறியிருந்தன.
அதைக்கண்டு மிகவும் வியப்படைந்த இவர், தங்கக்காசுகளாக மாறியிருந்த அந்த இரண்டு செப்புக்காசுகளையும் பிச்சைக்காரரிடம் கொடுத்துவிட்டு வீடு திரும்பினார்.
இப்படித் தன்னிடம் இருந்ததைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளக்கூடியவராகவும் ஏழைகள், வறியவர்கள்மீது மிகுந்த அக்கறைகொண்டவராகவும் வாழ்ந்த இவர் கிபி 400 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.
சிந்தனை
"ஏழைகளுக்கு இரங்கி உதவி செய்கிறவர், ஆண்டவருக்குக் கடன் கொடுக்கிறார்" நீதிமொழிகள் நூல்.
"இவ்வுலகம் ஒரு வாடகை வீடு; நம்முடைய நற்செயல்கள் நாம் இந்த உலகத்திற்குச் செலுத்தும் வாடகை"
- கொல்கொத்தா நகர் புனித தெரசா
"கொடுப்பதில் இன்பம் பெறுவதில் இல்லை" இயேசு
- மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
No comments:
Post a Comment