*ஜூலை மாதம் 11-ம் தேதி*
*St. James, B.*
*அர்ச். ஜேம்ஸ்*
*ஆயர் - (கி.பி. 350).*
யாகப்பர் எனப்படும் ஜேம்ஸ், மெசபொத்தேமியாவில் பிறந்து, கல்வி கற்றபின், இவ்வுலக நன்மைகள் அழிவுக்குரியவையென்று எண்ணி, உலகத்தை வெறுத்து தேவ ஊழியத்தில் தன் ஜீவிய காலத்தைச் செலவிட்டார். உயர்ந்த மலையில் வசித்து அருந்தவம் புரிந்து, கிழங்கு கனிகளைப் புசித்து புண்ணிய வாழ்வில் உயர்ந்து புதுமை வரமும் தீர்க்கதரிசன வரமும் பெற்றார். இதனால் அவரைப் பார்க்கும்படி அநேகர் அவ்விடஞ் சென்றார்கள். இவருடைய நல்ல புத்திமதிகளைக் கேட்ட அநேக பாவிகள் மனந்திரும்பினார்கள். பிற மதத்தினர் அநேகர் சத்திய வேதத்தில் சேர்ந்து, வேதசாட்சி முடி பெற்றார்கள். இவரும் வேதத்திற்காகப் பாடுபட்டார். இவர் ஒருநாள் காட்டில் நடந்து போகும்போது திருடர் அவருக்கு எதிர்பட்டு, தாங்கள் வழிப்போக்கர் என்றும் தங்களுக்குள் ஒருவன் இறந்து போனானென்றும் அவனை அடக்கம் செய்ய தங்களிடத்தில் பணம் இல்லையென்றும் கபடமாய்க் கூறியதினால், ஜேம்ஸ் தம்மிடமிருந்த பணத்தை அவர்களுக்குக் கொடுத்தார். இவர்கள் படுக்க வைத்திருந்த மனிதன் மெய்யாகவே இறந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த திருடர்கள், அர்ச்சியசிஷ்டவருக்குப் பின்னால் ஓடிப்போய், உண்மையைக் கூறி மரித்தவனை உயிர்ப்பிக்கும்படி மன்றாடியதினால், இவர் அவனுக்கு உயிர் கொடுத்தார். தமது ஊரை பெர்சியர் முற்றுகையிட்டு அதைப் பிடிக்கும் தருவாயில், ஆண்டவரை உருக்கத்துடன் மன்றாடவே, நொடிப்பொழுதில் பிரமாண்டமான சிறு ஈக்கூட்டம் எழும்பி சத்துருக்களின் குதிரை, யானைகளின் மூக்கிலும் செவிகளிலும் சென்றதினால் அவைகள் மாவுத்தர்களைக் கீழே விழத்தாட்டி அங்குமிங்கும் ஓடவே, பெர்சிய படை உடைந்து கிறீஸ்தவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள்.
No comments:
Post a Comment