ஜூன் 9
அருளாளர் அன்னமேரி தெய்கி (1769-1837)
இவர் இத்தாலியில் உள்ள சியன்னாவில் பிறந்தவர்.
இவருடைய தந்தை ஒரு பெரிய தொழில் அதிபர். தொழிலில் அவருக்கு பெரிய தோல்வி ஏற்படவே குடிக்கு அடிமையாகி, தன்னுடைய வாழ்க்கையையும் குடும்பத்தையும் சீரழிக்கத் தொடங்கினார். இதனால் குடும்பம் வறுமையில் வாடத் தொடங்கியது. ஆதலால் அன்னமேரி வீடுகளில் சிறுசிறு வேலைகளை பார்த்துக் குடும்பத்தைக் கரையேற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
சில காலத்திற்குப் பிறகு இவர் உரோமைக்குச் சென்று, அங்கு கிடைத்த சிறு சிறு வேலைகளைச் செய்து வந்தார். அப்பொழுது தோமினிக் என்பவருடைய அறிமுகம் கிடைத்தது. அவர் இவர்மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். இதையறிந்த இவரும் அவர்மீது அன்பு கொண்டார். இதைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.
இல்லற வாழ்வில் இவர்களுக்கு இறைவன் 7 குழந்தைகளைக் கொடுத்து ஆசி வழங்கினார். இதன் பின் இவர் தன்னுடைய குழந்தைகளை இறைநம்பிக்கையிலும் பிறரன்பிலும் வளர்த்து வந்தார்.
இறைவன் இவருக்குப் பின்னர் நடப்பதை முன்கூட்டியே சொல்லக்கூடிய ஆற்றலை வழங்கி இருந்தார். இதன் மூலம் இவர் பின்னர் வரவிருந்த ஆபத்துக்களைச் சொல்லி பலரையும் ஆபத்திலிருந்து மீட்டார்.
இறைவனுக்கு இவருக்கு மிகுந்த ஞானத்தைக் கொடுத்திருந்தார். அதனால் இவரிடம் ஆலோசனை கேட்க திருத்தந்தை, கர்தினால்கள், ஆயர்கள், மக்கள் என பலரும் வந்தார்கள்.
இப்படி ஒரு சாதாரண பெண்மணியாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய இவர், இறைவன் தனக்கு கொடுத்த ஞானத்தைக் கொண்டு பலருக்கும் ஆலோசனைகளைச் சொல்லி, அவர்களுடைய வாழ்வில் ஒளியேற்றி வைத்தார்.
இவருக்கு 1920 ஆம் ஆண்டு அருளாளர் பட்டம் கொடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment